புதன், 13 ஜூலை, 2016

உயிர்களிடம் அன்பு

விலங்கியல் தோட்டத்தில்
குரங்கிற்குத் தனியிடம்;
அரங்கொன்றில் அமர்ந்து
மரங்களிடை இலையுணவு.

குரங்கெனப் பிறந்தனவே;
வரங்கள்பல பெறுந்தகைமை
இருந்ததனால் உயர்ந்தனவே;
சிறந்தஇடம் நிரந்தரமே.

நீர்த்தேக்கம் அருகினிலே;
பார்த்தயரும் நல்லழகே'
கூர்த்தவிழிக் குட்டிகளால்
கூடிவரும் மகிழ்வெல்லை.

உயிர்களிடம் அன்புவைப்பாய்;
ஓங்கிவள ரும்வாழ்வே!
பயிர்கள்போல் பசுமைபெறும்
பைந்தமிழின் இனிமைவரும்.




திங்கள், 11 ஜூலை, 2016

விலங்குகள் சொல்லாத‌ வெற்றுரை

மனிதன் உயர்வென் றவனே மதிப்பின்
இனிது மதுவாமோ இவ்வுலகில் தோழரே
நாய்பூனை சொன்னாலே நல்ல திலையேலோ 
காய்பழம் காணல் அரிது.  1

நாய்பூனை நல்லுரை தாரா நிலையாலே
வாய்திறந் தானே வழங்கிக்கொள் சான்றிதழைக் 
கூயுரைத்துக் கும்மாளம் கொட்டுகிறான் அங்கினிப்
போய்மறுக்க உள்ளார் எவர்.  2


விலங்குகள் சொல்லாத‌ வெற்றுரை கேட்டுக்
கலங்குதல் மற்றும் களித்தலும் வீணே
நிலங்கவர் நெஞ்சத்தான் நில்லாத் திருடன்
நலம்பிதற்றல் நாணுத் தரும்.  3

பொருள்:


1.  இனிது மதுவாமோ   -   இனிமையானதும்   அதுவாகுமா ?
    நல்ல திலையேலோ -   நல்லது  இல்லையேல்;    ஓ -  அசை .
    காய்பழம் காணல்  -  ஏற்கத்  தக்கது ,  தகாதது  வேறுபிரித்து  அறிதல்.

2   தாரா -  தராத .
      கூய்  -  கூவி . 

3     நலம்பிதற்றல் - தன்னைத் தான் புகzந்து கொள்ளல்.  
      நாணுத்தரும்  -  வெட்கத் தக்கது . 


அகர ககர வருக்கத் திரிபுகள்

பல சொற்களில் 0கிரகம் என்றே முடிதலைக் கண்ட புலவர்கள்,, இவர்கள் எம்மொழிப் புலவர் ஆயினும், இறுதியில்  கிரகம் என்பதைத் தனிச்சொல்லாகப் பெயர்த்து எடுப்பதை ஒரு குற்றமாகக் கருதலாகாது. 

கின்று என்று ஓர் இடை நிலை இலது எனினும், அதற்கு ஒரு தனித்தன்மையை வழங்கி இடைநிலை என்று பவணந்தியார் அறிவித்திருத்தலைக் காண்கையில், இது தெள்ளிதின் போதரும்.  

இம்மேதைகளைப் பின்பற்றி நாமும் கிரகம் என்பதைத் தனிச்சொல் ஆக்குவோம்.

இரு + கு+ அம் =  இருகம் >  கிருகம்.   இருப்பிடம்.

பேச்சிலும் உலக வழக்கிலும் கிரகம்.

எமது சில இடுகைகளையாவது படித்தபின் இது புரியும் .

எனவே அகர வருக்க முதலாயின சகர வருக்கங்களாய்த் திரிதல்
போலுமே, ககர வருக்கங்களாகவும் திரியும் என்று வைத்துக்கொள்வோம். இதில் மோசம் போய்விடாது. இவ் வுத்தியையே சங்கத மேனிலையரும் பின்பற்றினரென்பது தெள்ளத் தெளிவாகிறது.

அகர  ககர  வருக்கத் திரிபுகள்  :  அகரம்  சகரமாதல்  இயல்பு.   சகரம்  ககரம்  ஆதலும்  இயல்பு.  அங்ஙனமாயின்  அகரம்  ககரம்  ஆதலும் உரித்தே ஆம்   

ஞாயிறு, 10 ஜூலை, 2016

நன்றி Gratitude

பலருக்கும் பாத்தூண் வழங்கிப் பயன்தரினும்
உலரும் பசியும்நீர் உற்றுழலும் பிற்பொழுதில்
நலம்பழ நாளெண்ணி நன்மனமே கொண்டுவந்து
நிலம்போலும் பேணஉமை நின்றிடு நன்றியர்யார்?

உரை:

பாத்தூண் : பகுத்து அளிக்கும் உணவு.
உலரும் பசி:  வயிறு உதடு முதலிய உலர்ந்துபோகும் பசி.
நீர் : நீங்கள்        பிற்பொழுதில் : பின்னாளில்/
நலம் பழ நாள் எண்ணி : முன்னாளில் செயத நன்மைகளை எண்ணிப்பார்த்து.
கொண்டுவந்து :  கொண்டு உவந்து;
நிலம்போலும்:  பூமியைப் போல் 
பேண உமை : உம்மைப் பேண ; உங்களைப் பாதுகாக்க‌
நின்றிடு நன்றியர்:  இருக்கின்ற நன்றியுள்ளவர் யார்,  யாருமில்லை

சனி, 9 ஜூலை, 2016

ஆசையும் ஆசத்தியும்.



மனம் என்று ஒன்று எங்கே இருக்கிறது என்று கேட்கலாம். "ஹார்ட்" என்று ஒன்று உள்ளது.  ஆனால் அங்கிருந்துதான் மனவுணர்வுகளெல்லாம் வருகின்றனவா ?  ஆதாரம் எதுவுமில்லை.  எல்லாம் மூளையிலிருந்து வருகின்றன என்கின்றனர்  மருத்துவ அறிவியலார். "ஹார்ட்" என்பது குருதியை உள்ளிழுத்தும் வெளிக்கொணர்ந்தும் தரும் ஒரு குழாயுறுப்பு.  ஈர்த்தல் அடிப்படையில் எழுந்த ஈரல், ஈருள் என்பனவும்  அதே அடிப்படை "ஈர்+து+ அ+ய்+ அம்" (ஈர்தயம் ? இருதயம்) என்பதும் இதைத் தெளிவிக்கும்.  அ= அது. ஈர் து = ஈர்ப்பது. அம் = விகுதி. யகரம் = உடம்படுமெய். ஈரலும் இருதயமும்  அக்கை தங்கைச் சொற்கள். ஈ > இ குறுக்கம். சாவு+ அம் = சவம் என்பதும் குறுக்கமே. சா> ச.

ஒன்றை நோக்கி மனம் அசைவது  ஆசை.  அசை > ஆசை.  முதனிலை  திரிந்த தொ.பெயர்.

ஆசத்தி:  அசை+ அத்து + இ = ஆசத்தி.  ஆசை.

இனி ஆசு + அத்து + இ  எனினுமாம்.

ஆக்கிரகம் -

பழ மூலங்களைக் கொண்டு ஒரு புதுமையைப் படைக்குங்கால் அதன் பழமை வெளிப்படாமல் அப்புதுமை முன்னிறுத்தப்படுமானால், இதனின் வேறு திறன் யாதே இருத்தல் கூடும்?  இது கூறினோம் .

இப்போது ஆக்கிரகம் என்ற சொல் அமைப்பினைக் கவனிப்போம்.

நாம் சொல்லுக்குப் பொருள் சொல்வதை நோக்கமாகக் கொள்ளவில்லை.
அகரமுதலி சொல்லும் பொருள் ஏற்கத் தக்கதாக இல்லாவிடின், அதையும் தூக்கி எறிந்துவிட்டு, உண்மையான பொருளைக் கண்டுகொள்ள வேண்டியது இன்றியமையாதது ஆகும். ஆக்கிரகம் என்பது எந்த மொழிக்குரிய சொல் என்பதும் நமக்குத் தேவையில்லை. அது எனது உனது என்று சொந்தம் கொண்டாடுவோனை நாம் கண்டுகொள்ள முனையமாட்டோம்.

இந்தச் சொல்லில் இறுதியில் நிற்கும் சொல் அகம் என்பது.  அகம்
என்பது உள்  என்று பொருள்படும். மனம் எனினும்  அமையும்.

அடுத்து முன் நிற்கும் துண்டுச் சொல் இரு என்பது. ஆகவே இரண்டையும் புணர்த்தினால் இரகம் என்று ஆகிறது. இரு+ அகம் = இரகம்.   இருவகம் என்று புணர்த்தினும் அமையும் ஆயினும், இந்தப் புணர்ச்சியில் வகர உடம்படு மெய் வரவில்லை. அறம் பொருள் இன்பம் என்ற சொற்களில் அறம் என்பதில் அறு+ அம் = அறம் என்று வகர உட்ம்படுமெய் எப்படி வரவில்லையோ, அப்படியே இங்கும் இரகம் என்பதில் வரவில்லை. அறு+ அம் = அற்றம் என்றும் வரும் ஆனால் அது இன்னொரு சொல். அங்கு இரட்டித்தது. அதை இங்கு மேற்கொண்டு குழப்ப வேண்டியதில்லை.  இரகம் என்பதில் இரட்டிக்க வழியில்லை. இவற்றை தெளிவின் பொருட்டுக் கூறினோம். இவை நிற்க.

இப்போது ஆக்கிரகம் என்பதன் முதல் துண்டுக்கு வந்துவிட்டோம். அது
ஆக்கு என்பது.

ஆக்கு + இரு + அகம். =  ஆக்கிரகம்.

இரண்டு வினைச்சொற்களை அடுத்தடுத்துப் போட்டான்;   இறுதியில்  அகம்  வைத்தான்.

ஆக்கிரகம் என்பதற்கு 1 உறுதி,    2.சினம்,    3.விடாப்பிடி,    4.  வீரம், 5  மேற்கொள்ளுதல் என்பன வா(ய்)த்தியார்கள் கூறும் பொருள். இவை எல்லாமும் மனவுணர்ச்சி வகைகள் என்பர். மனிதன் ஆக்கிக்கொள்ளும் இவ் வுணர்ச்சிகள் அகத்தில் இருப்பவை.  ஆகவே ஆக்கு இரு அகம் என்பதைக் கண்டுபிடித்து இன்புற்றீர்.

தமிழா? ...... இது தமிழில் பெரும்பாலும்  வழங்க‌வில்லை போலும்.

---------------------------------------------------------------------------------------------------------
குறிப்புகள் 
நம் ஆய்வின்படி இரு என்ற சொல் பல புனைவுகளில் பயன்பாடு கண்டுள்ளது.  இரு+அக(ம்)+சி+அம்;  இரு+ அவி (ழ்) + க் + கை;  இரு+ ஆசு + இ; இவ்வாறு பல எண்ணிக்கை உள்ளன. பழைய இடுகைகள் பார்க்க .



பராக்கிரமம்

பரத்தல் என்ற‌ சொல்லை நாம் இங்கு பார்ப்பது இது முதல்முறை அன்று. பர என்ப‌திலிருந்து பரமன் என்ற அழகான சொல் வருகிறது.

பர > பரத்தல்.
பர > பரமன் (பர+அம் = பரம்; பரம்+அன் > பரமன்.)
பரம் > பரம்பொருள் 


பரம் என்றாலே எங்கும் பரந்தது என்று பொருள். இறைவன் எங்கும் இருப்பவன் என்று சொல்லப்படுவதால், பரத்தல் என்ற அடியிலிருந்து அவனுக்குப் பெயரமைத்தது அறிவுடைமை ஆகும்.

"பரந்த" நீர்ப்பரப்பு எனப்படும் கடலும் பரவை எனப்படும். பறவை வேறு.

பர என்பதன் தொடர்பில் இன்னொரு சொல்லைப் பார்ப்போம்.

அது பராக்கிரமம் என்ற சொல்.

ஒரு மனிதனின் வலிமை  எங்கும் விரிந்து யாவராலும் உணரப்படுமாயின் அது பராக்கிரமம் ஆகும். இதை:

பர+ ஆக்கு+ உரம் + அம் என்று பிரிக்கவேண்டும்.

உரம் என்பது வலிமை. அது எங்கும் விரிய உணரப்படுதல் பர என்ற‌
அடியாலும் ஆக்கு என்ற வினையாலும் கொணரப்படுகிறது. அம் என்பது சொல்லாக்க விகுதி.

பராக்கு உரமம் என்ற சொல்லை அமைத்தபின், அதில் ஒரு சிறிய மாற்றம் செய்யவேண்டும். அதுதான், பராக்கு+ உரமம் = பராக்குரமம்
என்பதை பராக்கிரமம் என்று "எளிதாக்குவது". இது உரம் என்ற சொல் உள்ளிருப்பதை மறைத்துப்  பொருளை ஒருவழிச் செல்லச் செய்கிறது.
பராக்கிரமம் என்ற சொல்லைப் பயன்படுத்துவோன், உரம் என்ற சொல்லை நினைவு கூர வேண்டியதில்லை. நினைவு, பொருட் சிதறாமை ஆயவற்றை இது உறுதிப்படுத்துகிறது. இது ஒரு மூல மறை திறமை ஆகும்.

இது நாளடைவில் திரிந்ததா அல்லது புனைவுபெற்றதா என்பது கால இடைவெளியால்  திட்டவட்டமாகச் சொல்லற்கில்லை. எனினும் உகரத்திற்கு இகரம் போலியாக அல்லது மறுதலையாக (vice versa) வருதலுண்டு. எடுத்துக்காட்டுகள்  பழைய இடுகைகளில் காண்க. எளிய காட்டாக,  இதழ் <> உதழ் என்ப  காண்க.

எனவே இந்தச் சொல்லை நோக்குந்தோறும் அதன் தமிழ் மூலங்கள் உங்கள் சிந்தையில் வந்து தெளியும் என்பதை  இங்குக்   கண்டின்புறுவீர்.

பழ மூலங்களைக் கொண்டு ஒரு புதுமையைப் படைக்குங்கால் அதன் பழமை வெளிப்படாமல் அப்புதுமை முன்னிறுத்தப்படுமானால், இதனின் வேறு திறன் யாதே இருத்தல் கூடும்?


குறிப்பு:  பராக்குரமம்  என்பதை  பராக்ரம என்கையில்  இந்தத் தொல்லை இல்லை. இதுவே பிற மொழியிற் கையாளப் படுவது.  குகரம் களைதல் .






வெள்ளி, 8 ஜூலை, 2016

காயத்திரி திராவிடச் சொல்

Continue reading from http://sivamaalaa.blogspot.com/2016/07/blog-post_8.html

based on the word:  காய்தல்  :  ஒளி வீசுதல் .

காயத்திரி என்பது ஒரு மந்திரத்திற்கும் பெயராய் உள்ளது. காயத்திரி
என்பதற்குச்  சமஸ்கிருதப் பேரகரவரிசைகள் பல ஆழ்ந்த பொருளுரைக்கும்.

ஆனால் இச்சொல்lலை  ஏனை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் காண இயலவில்லை .இது ஒரு திராவிடச் சொல்லே என்பது இதனால் தெளிவாகிறது.

காயா என்பது வெற்றிகொண்டது, பற்றப்பட்டது என்ற பொருளில் வரும்
ஒரு சொல்லாம். காயத்திரி என்பதற்கு அல்லது அதன் தொடர்புடைய  சொல்லுக்கு  ஒரு பாடல், ஒரு பா அடியளவு என்றும் பொருள் காணப்படுகிறது.

இவை எங்ஙனமாயினும் இதை ஒரு தென்சொல்லாகக் கொண்டால், காய ‍= ஒளி வீச, திரி = மாறு  அல்லது மாற்றம் தருவது என்று கொள்ளலாம். திரிதலாவது: மாறுதல் என்பதாம். இருள் திரிந்து ஒளியாய் மாறுவது
எனல் பொருத்தமே .

காயத்தை அதாவது உடலை; திரி  =  திரியாக எரியத் தருவது என்று
கூறினாருமுளர்.


தமிழிலும் இனிய பொருளே கிட்டுகின்றது என்பதறிக.  இது எந்தமொழிச் சொல்  என்பதன்று  ஆய்வு;   தமிழில் பொருள் கூறல்  இயலுமா  என்பதும் இயலுமாயின்  யாது பொருளாம் என்பதுமேயாம் .

காய் - காய்தல் வகைகள்.

தமிழில் காய்தல் என்பது சூடாதல், ஒளிவிடுதல் என்று பொருள்படும் ;
வெயில் காய்கிறது, நிலா காய்கிறது என்ற வழக்குகளையும் நோக்குதல் வேண்டும்.

இங்ஙனம் ஒளிசெய்யும் கோள்களும் நக்கத்திரங்களும்  காணப்படும் இடம் காயம் எனப்பட்டது.  காய்+ அம் = காயம். இதில் அம் என்பது விகுதியாகும். இக்காயச்  சொல்  தொல்காப்பியத்திலும்  காணப்படும் .

வெங்காயமும் காயம் எனப்படுவதே. இதற்குக் காரணம், இதன் தோல் காய்ந்து காய்ந்து எடுபட்டுக்கொண்டிருக்கும். உரிக்க உரிக்க அதில் தோல்தான் என்பார்கள்.  தொடக்கத்தில் காயம் என்றே  சொல்லப்பட்ட வெங்காயம், பின்னர் வேறுபடுத்தும் பொருட்டு "வெம்+காயம்" வெங்காயம் எனப்பட்டது.  வெம் (வெம்மை) அதன் நெடியையும் கண்களில் நீர் வரவைக்கும் தன்மையை யும்   குறிக்க எழுந்த அடைச்சொல் ஆகிறது.


பெருங்காயம் என்பது ஒரு மரப் பிசின். அது காய்ந்து கட்டியாகுவது,
அதுவும் காயம் எனப்பட்டாலும், வேறு படுத்தப் பெருங்காயம் எனப்பட்டது.  இது ஒரு மருந்துப்பொருள் ஆதலின், பெரும் என்ற அடைமொழி பெற்று விளங்குகிறது,   இது மலையாளத்தில் காயம் என்றே இன்னும் சொல்லப்படுகிறது.

காயம் என்பது புண்ணையும் குறிக்கும். புண்    ,  மேல்  (அரத்தம் ) காயும் தன்மை உடையது   ஆதலின் காயம் எனப்பட்டது.

காயங்கள் பலவாதலின், வான் என்னும் காயம் ஆகாயம் எனப்பட்டது.
ஆகாயம் என்றால் காயம் ஆவது. வினைத்தொகை.  ஆ‍ = ஆதல்.
இது பிறமொழிகளிலும் புகுந்துள்ளது.

நேயம் என்பது நேசம் ஆனதுபோல் ஆகாயமும் ஆகாசமாகும்.   ய - ச

காச நோய் இருப்பவர்களுக்கும்  இருமலுடன் காய்ச்சலும் வரும். உடம்பும்
காய்ந்து ஒல்லி ஆகிவிடுவர். இவற்றால் அது காய நோய் >  காச நோய் ஆயிற்று. யகர சகரப் பரிமாற்றம்.

இச்சொற்கள் தமிழே  ஆகும் .

தொடர்புடைய  அடுத்த சொல்  காயத்திரி .

continue at:   http://sivamaalaa.blogspot.com/2016/07/blog-post_41.html

வியாழன், 7 ஜூலை, 2016

சுத்திகரித்தல்

meta-analysis of kariththal.
‍======================

இந்தச் சொல்லின் கரித்தல் என்பதன் பொருளையும் அச்சொல்லின் பிறப்பு அமைப்பையும் கவனித்து மகிழ்வோம்.

இப்போது கரித்தல் என்று முடியும் சொற்கள் சிலவிருப்பதாகத் தெரிகிறது. இவற்றுள் சுத்திகரித்தல் என்பது ஒரு முன்மை வாய்ந்த சொல்லாகும்.

சுத்தி என்பது சுத்தம் அல்லது தூய்மை. இது உகர முதலாகிய உத்தம் என்ற சொல்லினின்று திரிந்தது என்பது தெளிவு. = என்பது முன் உள்ளது என்றும் பொருள்படும் ஒரு முதன்மை வாய்ந்த சுட்டடி ஆகும். இதிலிருந்து உத்தம் என்ற சொல் தோன்றியது.

+ து + அம் > + த் + து + அம் = உத்தம்.

து என்பது உடையது என்று பொருள்தரும் ஒரு விகுதி.

எ - டு :  முதல் + து =  முதற்று  (முதலாக  உடையது )

இதில் இரண்டாவது நிலையில் ஒரு தகர ஒற்றுத் தோன்றியது. இது
எழுத்துக்களைப் புணர்த்தியதனால் தோன்றிய தகர ஒற்று ஆகும்.

இது இன்னும் நீண்டது. இரண்டாவது அம் விகுதி பெற்றது.

உத்தம்+ அம் = உத்தமம்.

ஒன்று மட்டும் இன்றி இரண்டாவது, மூன்றாவது நான்காவதென்று
விகுதிகள் பெற்ற சொற்களும் பல. விகுதிகளைக் கொண்டு சொற்களை மிகுத்தல் தமிழியல்பு ஆகும்.

உயிர் முதலாகிய சொற்கள் மெய் முன்னில் ஏறித் திரிதல் முன்னர் விளக்கப்பட்டுள்ளது. அவ்விடுகைகள் காண்க.

உத்தம் > சுத்தம். சுத்தம் > சுத்தி,

இச்சொல் முன்னர் விளக்கப்பட்டுள்ளது.

ஆறு நீர்நிலை முதலிய தூய்மைப் படுத்துவோர், அங்கு பிடித்துள்ள அசடுகளை அரித்தெடுத்தல் இயல்பு.

சுத்திக்கு அரித்தல் > சுத்திக்கரித்தல் > சுத்திகரித்தல்.

இங்கு ஒரு ககர ஒற்று மறைந்தது. நாளடைவில் அரித்தல் கரித்தல்
ஆயிற்று.

ஒப்பீடு: கார்+ ஆக்கு+ இரு + அகம் = காராக்கிரகம் இதிலிருந்து
கிரகம் என்ற சொல் பிறழ்பிரிப்பால் தனிச்சொல் ஆயிற்று.

அதுபோல் கரித்தல் தனிச்சொல் ஆகி, சுத்தி என்பது சுத்தம் ஆனால் கரித்தல் என்பது செய்தல் என்று உணரப்பட்டு, கரித்தல் செய்தலானது.

ஆனால் உப்புக்  கரித்தல் என்பதில்  கரித்தல்  சுவையைக்  குறிப்பதாகும் .  அது வேறு.   

இதன்பின் செய்தல் என்ற துணைவினை தேவைப்படும் சொற்களில்
கரித்தல் செய்கைப் பொருளில் சேர்க்கப்பட்டது.


‍‍‍

புதன், 6 ஜூலை, 2016

கங்கையில் முருகன் .

http://sivamaalaa.blogspot.com/2016/07/blog-post_10.html

தொடர்ந்து:


முருகன் ‍  அழகு என்று பொருள்.  எங்கெங்கு காணினும் அழகு. எங்கெங்கு நோக்கினும் அவன் அருள். அவனில்லாத இடமே இல்லை.
அவன் பழனியில் மட்டுமா இருக்கின்றான்.பரந்த உலகெங்கும் உள்ளான்.
கங்கையிலும் இருப்பான், காவிரியிலும் இருப்பான். இப்படிப் பார்த்தால்,
அவன் கங்கைக்கும் உரியவனே. சிவன் வேறு, முருகன் வேறு அல்லனென்று அருணகிரியார் அறைந்திடவில்லையோ  அவர் பாட்டில்?

நெஞ்சக் கன கல்லு எங்கெங்கெல்லாம் நெகிழ்ந்துருகுமோ அங்கெல்லாம்
அவன் இருப்பான்.  அண்ணாமலை அடிகளாரின் கருத்து .

கங்கை > காங்கேயன்.

இப்படி வருதலும் உரித்து. இது தந்திதாந்த நாமம் என்பர். மனு> மானவன் என்பதை விளக்குமிடத்து முன் இடுகையில் தத்திதாந்த நாமம் பற்றி எடுத்துரைத்துள்ளோம்.



குமரகுருபரரும் ஒளரங்ஜேப் மாமன்னரும்



This is reposted as half of our post was not visible when we posted it earlier on. There is some bug

causing visibility problem. Hope this appears clear.

சகலகலாவல்லிமாலை




திருப்பனந்தாள் என்ற ஊரில் குமரகுருபர அடிகள் நிறுவிய சைவமடம் உள்ளது. இவர் பாடிய நூல் சகலகலாவல்லிமாலை என்னும் வணக்கப்பாடல்கள் கொண்டது. இந்நூல் தில்லி மாமன்னர் ஒளராங்ஜேப் அவர்களின் அவையில் அரங்கேற்றம் கண்ட பெருமையை உடையது.

இதனைப் பெருமைப் படுத்தும் வண்ணம் இம்மாமன்னர் காஞ்சியில் உள்ள குமரகுருபர சுவாமி மடத்திற்கு மடம் கட்டிக்கொள்ள இடமும் அதனைப் பிற்காலத்தில் நிறுவாகம் செய்யப் பல வேலி நிலங்களும் அளித்துள்ள‌
வரலாறு இந்நூலின் பழைய ஏடுகளில் காணப்படுவது குறிப்பிடத் தக்கது.


இதை அறிந்தின்புறு இவ்வேளை அம்மாலையினின்று ஒரு பாடலைச் சுவைத்தல் பொருத்தமாகுமன்றோ :


நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும் பொற்கொடியே கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகலகலா வல்லியே.

உரை:

நாடும் ‍: இறைப்பற்றில் பயன்பெறுவோரும் கவிவாணரும் சிந்திக்கின்ற,

பொருட்சுவை, சொற்சுவை தோய் தர ‍: பொருளின் இனிமையும் சொல்லின் இனிமையும் நிறைவாகின்ற;

நாற்கவியும் ‍: நான்குவகையான ( வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய ) பாடல்களும்;

பாடும் பணியில் ‍ : இயற்றுகின்ற செயலில்,

பணித்தருள்வாய் : எம்மை அமர்த்தி அருள் செய்க;

பங்கயாசனத்தில் கூடும் பசும் பொற்கொடியே ‍: தாமரை மலராகிய இருக்கையில் அமர்ந்துள்ள வாடாத பொன்னின் வல்லியே;

கன தனக் குன்றும் ‍: சுமையான செல்வமென்னும் குன்றினையும்;

ஐம்பால் காடும் : ஐந்து நிலங்களிலும் அமைந்துள்ள வனங்களையும்;

சுமக்கும் கரும்பே ‍   -   தூக்கி வைத்திருக்கின்ற இனியவளே;

சகல கலா வல்லியே = எல்லாக் கலைகளையும் தருகின்ற கொடிபோன்றவளே.

என்றவாறு.

Further reading:

1, On Aurangzeb and his interest in Languages:   read http://www.thehindu.com/opinion/interview/scholar-audrey-truschke-aurangzeb-is-a-severely-misunderstood-fig

‘Aurangzeb is a severely misunderstood figure’


2  . பொன்முடி திரையில் குமரகுருபரர்:

இப்படத்தில் கதையில் குமரகுருபரர் கதைமாந்தர் வாழிடத்திற்கு வருகை புரிவாதாகக் காட்சி வருகின்றது.  அதில் அவர் டில்லி செல்வதாக அறிவிக்கிறார். அவருடைய நூலை அரங்கேற்றவும் மடம் கட்டுவதற்கு நிதி பெறவும் அவர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று அறிக.



செவ்வாய், 5 ஜூலை, 2016

காங்கேயன்

 இப்போதெல்லாம் சிங்கப்பூர் மலேசியா வெங்கும் ஒரே காங்கையாக இருக்கிறது.  அதைத் தணித்துக் கொள்வதற்கு  என்னால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.  குளிர்ந்த நீரை அருந்துவது ஒன்றே நான் அறிந்தவழியாகும். நிலக்கோள் வெப்பமடைந்துவிட்டது என்று அறிவியலார் சொல்வர்.

நாம் வழிபடும் தெய்வங்களிற் சில, நீருடன் இயைந்தவை.  எடுத்துக்காட்டாக விஷ்ணு,  கடல், காயம் ( ஆகாயம் )  ஆகியவை
இயைபாகக் கூறப்படும். " இங்கு வாராயோ என் கண்ணனே, மேக நீல\வண்ணனே, ஒய் ரம்பனே"   என்ற பாடல் இனிமையானதுதான். வேறு சில தெய்வங்கள் வெப்பம், எரிதல், தீ, காங்கை என்பவற்றுடன் இயைந்தவாகக் கூறப்படும். கண்ணன் அல்லது விஷ்ணு நீரின் அமைப்பு அல்லது அம்சம்  ஆனதுபோல இவை எரியின்   அம்சம் அல்லது அமைப்பு.

விஷ்ணு என்பது விண்ணு என்பதன் திரிபு. இதைப் பழைய இடுகைகளிற் காணலாம்.  அழிக்கப்பட்டனவா என்பது தெரியவில்லை.

முருகன் அல்லது அழகு எப்போதும் தீயினுடன் தொடர்புறுத்தப்படுவது.  தமிழ்க்கடவுள் என்று போற்றப்படுவது.ஒளவை இத்தெய்வத்தை " எரிதவழ் வேலோய்" என்று விளித்துப் பாடுவதிலிருந்து இதை அறிந்துகொள்ளுதல் எளிதே ஆகும்.

இவற்குக்  காங்கேயன் என்பதும் பெயராகும்.  காங்கை என்பது எரித் தொடர்பினது. காங்கை ஏயவன் காங்கேயன். இனிய தமிழ்ப் பெயர். ஏய்தல் என்பது இயைதல். ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விப்பவள்  என் அம்மை. ஆய என்பதற்கு ஏய என்பது எதுகை ஆதலால்  அது அழியாமல் தப்பித்த சொல். ஏய என்பதை உங்கள் எழுத்துக்களில் பயன்படுத்துங்கள். அப்போதுதான் தமிழ்ச் சொற்கள் மறையாமல் நம்மிடை இருக்கும். இன்னொரு தமிழச்சியிடம்  ரொம்ப பனாஸாக இருக்கிறது என்னாமல், காங்கையாக இருக்கிறது என்க. மலாய்க்காரப் பெண்ணிடம் பேசுங்கால்  மலாய் பயன்படுத்தவும்.பனாஸ் = சூடு, காங்கை.

வேய்ந்தன் என்பது வேந்தன் என்று திரிந்ததுபோல்,  அதாவது ஒரு யகர ஒற்று மறைபட்டது போல,  காய்ங்கை என்பது காங்கை ஆயிற்று. சில மாற்றங்கள் நிகழ்ந்ததனால் சிறுவன் பெரியவனாதல் போல, சில எழுத்துத் திரிபுகள் வேண்டும்.  அவற்றைப் போற்றுவோம். சொற்கள் தனித்தன்மை பெற, புதிய சொன்னீர்மை பெற இத்தகைய திரிபுகள் இன்றியமையாதவை என்றுகூடச்  சொல்லலாம். திரிபுகள் கருத்தில் வளரும் மனத்தடைகளை விலக்குபவை.  ஆனால் அதற்காக எல்லாவற்றையும் திரித்துச் சொல்லவேண்டும் என்பது பொருளன்று. பாய்ம்பு என்பது பாம்பு என்று மாறாவிட்டால், பாய், பாய்தல், பாய்‍‍ தலையணை எல்லாம் நினைவுக்கு வந்து கருத்துக்கு ஒரு மனத்தடையை உண்டாக்கும். தொடர்பற்றவைகளும் தோன்றி வருத்தும். நகைச்சுவை முகிழ்க்கலாம். ஆகவே திரிபுகள் வரவேற்கத்தக்கவை. மோர்மிளகாய் போல. வேண்டிய வேண்டியாங்கு ஏற்பது அறிஞர் கடன்.


கண்ணயரத் தெம்புவந்ததே!

இலெனோவா என்பதொரு புதுமைஎனப் பொருள்படுமே
இருந்த இடம் வேறிங்கே இணையமதிற் கிட்டவிலை
இயலவிலை எதுசெய்தும் இயைந்தவிழி உறக்கமுடன்
என்செய்வேன் உறங்கிவிட்டேன்!
கலைநாவில் கவிதையொன்று கருதியதும் விரைந்துவரக்
கலைமகளும் அருளவிலை காண்தகவுத் தொலைக்காட்சி
கண்டயர்வு கொண்டபடி கவலைஎன்ன ஒன்றுமிலை
கண்ணயரத் தெம்புவந்ததே!

ஞாயிறு, 3 ஜூலை, 2016

ஊழ்வினை உன்னை விட்டுவிடாது,

ஒரு வீட்டை வைத்துக்கொண்டு அதற்குப் பல தொகைகளையும் வரியென்றும் கட்டணங்களென்றும் கட்டிக்கொண்டு இருப்பது தொல்லை,  என்ன செய்யலாம். வீட்டை விற்றுவிட்டால் தொல்லைகள் நீங்கிவிடும், என்று ஒருவன் எண்ணினான். விற்றுப் பணமாக்கினான.  அதன்பிறகு அவனுடைய முட்டாள் மனைவி தன் தம்பிகள் தங்கைகள் எல்லோருக்கும் மறைமுக உதவிகள் செய்யலானாள். கொஞ்சம் கொஞ்சமாக இப்படிப் பெற்றுக்கொண்டிருப்பதை விட ஒரு மொத்தமாக எடுக்கலாம் என்று நினைத்த அவள் தம்பி தங்கைகள் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து அவள் நகைகளை முதலில் கொள்ளை இட்டனர்.
கொள்ளை அடிப்பவர்கள் அதனைக் கண்டுபிடிக்க இயலாதவாறு செய்து வெற்றிபெற்றனர்.   நகை போன துயரத்தில் இருந்த அவளிடம் மெதுவாகப் பேசி ஐயப்ப பூசையில் கொண்டுபோய்ச் சேர்த்தனர்,  அங்கு அவள் மன அமைதி ஒருவாறு அடைந்தாள். கொஞ்சம் தேறியவுடன் இழந்த பணத்தை மீண்டும் பெற ஒரு வழி கூறி ஓர் இலட்சத்தை வாங்கி, வட்டி வியாபாரம் நடத்துவதாகக் கூறினார்.
சிலமாதங்கள் கழித்து, இடையில் இருந்த தரகன் பணத்துடன் ஓடிவிட்டான் என்று நாடகமாடிவிட்டனர். இப்போது அவனுக்கும் அவளுக்கும் கையில் காசில்லை.

இப்போது விடயத்துக்கு வருவோம்.  வீட்டை விற்றுவிட்டால் தொல்லைகள் முற்றுப்பெறும் என்று எண்ணியது நிறைவேறியதா?

ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்றார் இளங்கோவடிகள். தொல்லைகளிலிருந்து தப்பிவிட முடியாது. இருந்தாலும் முயற்சி
திருவினை ஆக்கும் என்றார் வள்ளுவர். முயன்று கொண்டிருங்கள்.

சோவியத்தை உடைத்துவிட்டால் சடாம் உசேன் கிளம்புகிறான்; சடாமினை  ஒழித்துவிட்டால்  ஐ எஸ் கிளம்புகிறது, ஏ மனிதனே
உன் ஊழ்வினை உன்னை விட்டுவிடாது,

ஆனால் மெய்வருத்தக் கூலி ஒன்றிருக்கிறது,  அது கிடைத்தாலே போதும் என்கிறாயா?

சாம் > சாமி

சாமியை கீழே விழுந்து ( சாய்ந்து அல்லது முன்னாகத் சாய்ந்து) வணங்குவது இன்றும் உள்ளது, பிற மதத்தாரும் முன் வீழ்ந்து வணங்குதல் காண்கிறோம்.  சாதல் என்பதும் சாய் என்ற சொல்லிலிருந்து பிறந்ததே.  மொழியில் இவையெல்லாம் கருத்து வளர்ச்சியில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

சா >  சாய்,  சாய்தல்.
சா >  சாதல்.
சா >  சாம் >  சாமி >  சுவாமி >  ஸ்வாமி,

சாம் என்பதே மூலம் என்பதை பிற தமிழறிஞரும் கூறுவர்,

சாம் என்ற மூலம் தமிழில்மட்டும் காணப்படுவது. இங்கு யாம் கூறுவது சாம் என்ற மூலத்திற்கு மூலமாவது‍  அதாவது அடிமூலம் சா என்பது.  அத்துடன் அதன் பின்னணிக் கருத்தையும் விளக்கினோம்.

சாமி  : பெறப்பட்ட பொருள்:   சாவு முதலிய நடப்புகளைத் தீர்மானிப்பவன் ;
வணக்கத்திற் குரியவன் . 

தொடர்புடையன

https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_12.html

https://sivamaalaa.blogspot.sg/2016/07/blog-post_3.html




அதிகாரி பெரிய நாய்

ஒவ்வொரு மொழியிலும்  நாம் அறிந்து நினைவில் கொள்ளத்தக்க சிறப்பான சொல்லாக்கங்களும் சொல்லாக்கத் தொடர்களும் உண்டு.

அடியார் என்ற சொல்லைப் பாருங்கள்.  அடி என்பது காலின் ஒரு பகுதி. இதிலிருந்து  பரமனைப் பணியும் பற்றருக்கு ( பக்தருக்கு)ப் பெயர் அமைந்தது பொருத்தமே. இதை மனப்பதிவு முறையில் அமைந்தது என்று ஒதுக்கிவிட முடியாது.  அடிகள் என்பதை சுவாமிகளுக்கு வழங்கியதும் பொருத்தம்தான்.  சுவாமி என்பது சாம் என்ற பழந்தமிழ்ச் சொல்லிற் பிறந்தது. சாம் என்பது கடவுள், அடிகள் என்று பொருள்படினும் இது சாதல் என்பதிலிருந்து வந்ததாகத் தொடர்புபடுத்துவதில் தவறில்லை. பல மதங்களும் மதம் கடவுள் பற்றிய பதங்களும் சாவினுடன் நெருங்கிய கருத்துக்கள் கொண்டவை.
இதை முன்  இடுகை ஒன்றில் விளக்கியுள்ளோம். அவண் காண்க.  Click the link below.

https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_12.html

சா> சாம்;  ஒ. நோ.  தே >  தேம்> (  தேன். )



தேம்பாய உண்டு தெவிட்டு மனம் என்றான் கம்ப நாடன்.

மலாய் மொழியில் காக்கி தங்ஙான் என்றால்   அலுவலக ஊழியர்.  இதன் சொற்பொருள் கால்‍ கை என்பது.  ஸ்டாஃப்  (staff  -  English )  என்பது கம்பு, குச்சி
என்று பொருள்படுவது. இன்று அக அலுவலரைக் குறிக்கிறது.

சீன ஹொக்கியன் கிளைமொழியில் நாய் என்பது நாயான விலங்கையும்  அதிகாரியையும் குறிக்கும்.  அதிகாரி என்றுகுறிக்கையில் பெரிய நாய் என்று அடைமொழி தரப்படும். "துவா காவ்" என்பது அது.

அமைச்சரவை என்று பொருள்படும் கேபினட் என்பது பேழை என்று பொருள்படும்.  அவைத்தலைவரைப் பேசுநர்   speaker  ( Mr Speaker Sir )  என்றன்றோ சொல்கிறார்கள். பேரரசியிடம் அந்தக்காலத்தில் சென்று பேசும் தகுதி அவருக்குமட்டுமே இருந்தது. ( The Lords always had  been accepted for Royal Audience but the Commons could only speak through the Speaker, elected by themselves. )  He spoke for them.  இதெல்லாம் வரலாற்று வழிவந்த சொற்கள்.

அடியார், அடிகள், அடிமை என்ற சொற்கள் திறம்பட அமைக்கப்ப்ட்டுள.
அறிந்து மகிழ்வீர்.
------------------------------------------------------------------------------------------------------------------------

  நாங்கள்    மகிழ்வீர்   என்று தட்டச்சு செய்தால் இது  மக்கீஸ்விற்  என்று அடிக்கிறது.  இதைச் சிலர் நோண்டி  இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்கள் வாழ்க‌.  ( வாழ்க‌ என்பதை வாஸ்க்கா என்கிறது. )   If there are mistakes appearing after the posts are created and uploaded. these chappies are responsible, 99 percent. However we review whenever possible.

சனி, 2 ஜூலை, 2016

பெண்களுக் கெதிரான வன்முறைகள்

பெண்களுக் கெதிரான வன்முறைகள்
பேர்குறிப்   பதுவீணே எந்நிலத்தும்
கண்களுக் கெதிர்நேர்வ தென்றபோதும்
கண்டவர் விழிமூடி நின்றுபோகும்
அண்புது  நடப்பேபல் எண்படுமாம்!
ஆழ்கவன் றூர்கண்னீர் சிந்திடவே
மண்புதை கொடுமைகள் கண்டிடிலோ
மன்னுயிர் களும்வாடும் நெஞ்சுநிற்கும்.



Notes:

வன்முறை  -   violence  
எந்நிலத்தும் -   எந்த நாட்டிலும், கண்டத்திலும்
விழிமூடி நின்று போகும் ‍-  கண்னை மூடிக்கொண்டு  நின்றுவிட்டு அங்கிருந்து  அதன்பின் அகலும்.
அண்புது ‍ - அண்மையில் நடந்த புதிய‌
பல் எண்படுமாம்  :  பல எண்ணிக்கையுள் படும்; அல்லது பல‌
எண்ணிக்கையுள் அகப்படும்
ஆழ்கவன்று   -  ஆழ்ந்து கவன்று; ( கவலைப்பட்டு.)
மண்புதை ‍-  மண்ணிற் புதைக்கும்.( நரபலி முதலியவையும். கொல்லப்பட்டுப் பபுதைப்பதும் அடங்கும்)









வெள்ளி, 1 ஜூலை, 2016

அதுபின் ப்ரசங்கம்.....

ஒரு மனிதன் தன் வீட்டினுள்ளேயே இருந்துகொண்டு தனிமையில் பேசிக்கொண்டிருக்கலாம்.  அவன் பேசுவது வேறு யாருக்கும் கேட்கப்போவதில்லை. (தற்காலத் தொலைத்தொடர்புகளைக் கணக்கில் கொள்ளவேண்டாம்.)   அவனுடைய சொந்த வீட்டாருக்கே கூட அதைக் கேட்டுக்கொண்டு கைதட்டி ஆரவாரம் செய்யும் செயலுடையாராய் இருக்கவியலுமோ என்பது   ஓர்  ஐயப்பாட்டுக்குரிய கேள்வியாகும். ஏசு நாதரேகூட இவ்வாறு சில கூறி அறிவுறுத்துகையில்  இவர் நம் அடுத்த வீட்டுத் தச்சர் மகனல்லரோ ,  இவர் யாது நம்மிடம் கூறவேண்டியுள்ளது என்று பேசிக்கொண்டனர் என்ப.  எனவே  பேசுகிறவன் வெளியில் சற்றுத்  தொலைவில் போய்ப்  பேசினால் ஒருவேளை எடுபடலாம்.  சும்மா பேசாமல் ஒரு சங்கையும் கொண்டுபோய் ஊதிக்கொண்டு பேசினால் நாலு பேர் கூடி நின்று கேட்பார்கள். இதனை புறத்தே ஊதப்படும் சங்கு
என்ற பொருளில் புறசங்கம் என்றனர்.   இவ்வழக்கே நாளடைவில்  ப்ரசங்கம் என்று கொஞ்சம் திரிந்து வழங்கியது,  சங்கு என்பதும் சங்கம் என்பதும் ஒரு பொருளனவாகும்.

இதுபோலும் திரிசொற்களைச் செந்தமிழில் சேர்த்துவிடாமல் அவற்றை வேறொரு தொகுதியில் சேர்த்து வைத்ததும் ஒரு பாராட்டுக்குரிய செயலே ஆகும்.

எனினும் இவைபோல்வன தமிழ் மூலங்களை உடைய சொற்களே ஆகும், சங்கு என்பது பல்வேறு திரிபுகளுடன் பல மொழிகளிற் பரவிப் பெருமை சேர்க்கிறது. அவற்றைப் பட்டியலிடல் வேண்டாம்,

புற சங்கம் > ப்ரசங்கம்.

புறத்தே சங்கு ஊதிக் கூட்டத்தைக் கூட்டிப் பேசுவது  புறசங்கம்,  அதுபின் ப்ரசங்கம்.

குறிப்பதிற் குழப்பமே.

ஒப்புமை நோக்கில் தப்பினைச் செய்தார்
செய்தது பிழையே வைதனர் அவையோர்
அவையோர் அறிவித் தனர் அர சருக்கே
அரசர் ஆணை பதவிப் பறிப்பே.
பறிப்புக் குரியோன் குறிப்பதிற் குழப்பமே.



https://sg.news.yahoo.com/selayang-mosque-chairman-faces-axe-inviting-non-muslim-040600866.html

வியாழன், 30 ஜூன், 2016

தீதும் உளதே

இரண்டாம் தலைமுறைக் கைப்பேசி  களைக‌,
மூன்றாம் நான்காம்  தலைமுறை கொள்வாய்
திரண்ட நலம்பல தேர்ந்திடும்  உனக்கே
முரண்டு செய்யாமல் இதற்கினி இணங்கே.

என்கிற படிதொலைத் தொடர்புக் குழும்புகள்
எழுச்சிப் பரப்புரை இசைத்திடல் கண்டோம்.
நன்கிது யாமும் எண்ணிடும் பொழுதினில்
நயப்பது நாற்புறம் வினாவெனும் விழுதுகள் /

புதிய தலைமுறைப் பேசிகள் வாங்கிடப்
புரப்பவர் பணத்தினை யாரிது காண்கிலம்
நிதியே நிற்க,  கரந்துறை மென்பொருள்
நின்று குலைத்திடும் தளம்பல இவற்றுள்.

மூன்றாம் நான்காம் தலைமுறைப் பேசி
முயன்று யாம்பெற நன்மைகள் பலவே
ஆன்ற அறிவுரை:  அணிபெறு இவற்றில்
அடைதகு நலத்தொடு தீதும் உளதே .

மக்கள் தொண்டினில் மூழ்குபவர்

அரசுப் பதவியில் இருந்தாலும்
அதிலும் துன்பம் பலப்பலவாம்.
குறைச்ச விலையில் எதையாரும்
குற்றம் கொடுப்பக் கொள்வதுவாம்,

இருந்திட வீடொரு முதற்பொருளே
என்றுமே இருப்பதோ வாடகைக்கு?
தகுந்ததைப் பார்த்து வாங்குகையில்
தருவிலை தீதடி தட்டுதலே.

சந்தை விலையின் தாழ்ந்ததனை
சட்டென வாங்கிப் போட்டிடிலோ
குந்தக முய்க்கும் அதுபிறகே
குலைத்திடும் நிற்கும் நிலைதனையே.

மன்றம் முறையே பகர்கையிலே
முற்றும் விடுவித் தசத்திடினும்
இன்றும் நாளையும் நினைவகல
என்றும் துணையாய் இசைத்திடுமோ?

மக்கள் தொண்டினில் மூழ்குபவர்
மாநில மிசையே வாழ்பொழுதில்
தக்கது யாண்டும் செய்திடுக!
தயங்கா மனக்கட் டுய்வுறுவீர்.

திங்கள், 27 ஜூன், 2016

வயோதிகன்.


கிழவன் என்ற சொல் இருக்கும்போது வயோதிகன் என்னும் சொல் ஏன்
தேவைப்பட்டது என்ற கேள்வி எழலாம். கிழவன் என்பது நாளடைவில் சற்று பணிவுக்குறைவானதாகத் தென்பட்டிருக்கலாம். கிழடன், கிழம், கிழடு, என்பனவும் இவற்றினின்று விளைந்த பிற தொடர்களும் முதியோரின்
ஆளுமையை இளைஞர் வெறுத்திருக்கக் கூடுமென்று காட்டுகின்றன. நாளடைவில் மூத்தோர் தம் மேலாண்மையை இழக்கவே, அவர்களின் மதியுரைகள் புறந்தள்ளப்பட்டிருக்க்க் கூடும். கம்பனின் அறிவுரையை அம்பிகாபதி கேட்கவில்லை, அரசன்மகளை விட்டு நீங்கவும் இல்லை, அதனால் அவன் மரணதண்டனைக்கு ஆளானான் என்பது போலும் கதைகள், மூத்தோரை இளையவர்கள் புறந்தள்ளியமையைத்தான் காட்டுகின் றன . மேலும் உவச்ச்ர் குலத்தவனுக்கு அரசர் குலம் பெண் கொடுக்க ஒருப்படவில்லை என்பதும் தெளிவானது.

இதுபோலும் குமுகச் சூழல்களால் கிழவன் என்ற சொல்லுக்கு ஈடாக வயோதிகன் என்ற சொல் தேவைப்பட்டிருக்கலாம்.

காலத்தின் வயப்படுவதே வயது என்பது. கால ஓட்டத்தில் அகப்படும் நிலையே அகவை. வயம் > வய > வயது. இங்கு வய என்பது அடிச்சொல். காவலனின் கைபட்ட நிலை கைது இதில் து என்பது விகுதி. கால அளவின் வயப்பட்ட நிலை வயது இங்கும் து என்பது விகுதி.

வய + அதிகன் = வயோதிகன் ஆகிறது.
வய + அதிகம் = வயோதிகம்.

இது இங்ஙனம் விளக்கமுற்றாலும், வய + அ என்பது வயோ என்று மாறியது தமிழ் மரபன்று என்பதே இதிலுள்ள மறுப்பு.    அன்றாயினும்,
தமிழ் மூலங்களைப் பயன்படுத்தி விளைந்த சொல்லே இதுவாகும். அதிகன் என்பது ஓதிகன் என்று நீண்டது குலைவு என்பதாம். ஆயின்  சங்கதத்தில்  அது இயல்பு  ஆகும் .

இந்தோ ஐரோப்பிய மொழிகட்கும் இது இயல்பே ஆகும்,   ஆங்கிலத்தில் politico-economics என்ற பதத்தை எடுத்துக்காட்டலாம்.  முன்னொட்டாக வருங்கால் politico என்று  நீண்டுவிடுகிறது.  மனுவின் நூல் என்னாமல் மானவ ஸாகித்யம் என்றால் மனு என்ற சொல் நீட்சி பெறுகிறது. இது தத்திதாந்தம் என்ற 1சந்திமுறையுட் படும். அர அர என்பது அரோஹர என்று வருவதும் இவ்வகையே.  அர்  என்பது இறைமை குறிக்கும் ஓர்  ஒலிக்குறிப்பு,   அர்  > அரன்\. 1 அர் >  அரி  (ஹரி ).  தமிழிலும் இவை போல்வன உண்டு.  காலாகாலத்தில் திருமணம் செய்துகொள்;  வேளா வேளைக்குத் தின்றுவிட்டுத் தூங்குகிறான்  என்பன காண்க.  இவை    தமிழ்ப் பேச்சு வழக்கை ஆராய்ந்து எடுக்கப்பட்டு அதினின்று நிறைவு செய்யப்பட்டு இந்தோ ஐரோப்பியத்தில் இப்போது தனிவளர்ச்சி பெற்றுப் பெருவழக்காகி விட்டது.

ஆகாரம்  ஓகாரம் ஒன்றிற்கு ஒன்று  ஈடாக நிற்குமிடங்களும் உள .


----------------------------------------------
1  அரித்தல் என்ற வினையினின்று பிறந்ததென்பர் மறைமலையடிகள்.
அரித்தலாவது, தீவினைகளை அரித்தெடுத்து விலக்குதல்.

தரா தரம்;  பிள்ளையோ  பிள்ளை .   ஆய்க . தமிழில் பெரும்பாலும் இரட்டித்து  வரும்   சொற்றொடர்களில் சொல்லிடையில்  வரும்.



========================================================================
It appears that a third party add-on is causing some interference and disruptions resulting in  some posts to disappear and others to be duplicated/  This matter is being looked into.  Apologies/



இராமன் திராவிட பரம்பரையினன் என்பதா?

எனக்கு அளிக்கும் வரம், எம்பிராட்டி! நின்

மனக் களிக்கு மற்று உன்னை அம் மானவன் -

தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ? -

புனக் களிக் குல மா மயில் போன்றுளாய்!'  கம்பன் 9931


புனத்தில் ஆடிக் களிக்கும் அழகிய குலம்   சிறந்த   ஈடற்ற மயில்போலும் பெண்ணாய்!
உன் மனம் களிக்க உன்னை மனுவின் பின்னோன்  ஆகிய  இராமனிடம் சேர்க்கும் பணியின் மேலான வேறு பணியும் உளதோ?

இவ்விராமாயணச் செய்யுளில் இராமன் மனுவின் சந்ததி என்பபடுவதாகவும் கூறுவர்/  மனு திராவிட அரசன் என்கிறது மனு நூல்.  அப்படியானால் இராமன் திராவிட பரம்பரையினன் என்பதா?

மனு >  மனு + அவன்  =  மானவன்   :  மனுவின் பின்னோன்

மானவன்  :  மானமுடையோன்  என்றலுமாம் ,

உச்சுக் கொட்டுதல்

continued from:-

https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_27.html

சிறு குழந்தைகளைக்    கொஞ்சம்  நீண்ட தூரப் பயணமாகத் தூக்கிக்கொண்டு செல்லவேண்டுமானால் பாதிவழியில் அவை கழிவை வெளிப்படுத்திவிடாமல் இருக்கத்  தாய்மார்கள் (முன்கூட்டியே வெளிப்படுத்த) ஒரு தந்திரம் செய்வர். உச்சு உச்சு உச்சு  (அல்லது உஸ்  உஸ்  உஸ் ) என்று வாயினால் ஊதுவர். இது காதில் விழவே குழந்தைகள் தம் கழிவை வெளிப்படுத்திவிடும், இப்படிச் செய்து வழியில் உண்டாகும் இடர்களை த் தவிர்த்துக்கொள்வர்.  இந்த உச்சு உச்சுவும் "உச்சர் " என்றே சங்கதத்தில் வரும். சமஸ்கிருதப் பண்டிதர்கள் உச்சர் என்பதற்கு மலங்கழித்தல் சிறு நீர் கழித்தல் எனு ம் பொருளை அகரவரிசையில் பதிவு செய்து கொண்டனர். உச்சு உச்சு என்பது ஓர் ஒலிக்குறிப்பு. கழிவுறுத்தல் என்ற பொருளில் வரும்போது இது பலமொழிகட்கும் உரிய சொல் எனலாம்.( பொதுச் சொல்)  .தூங்குவோனை எழுப்புதலுக்கும் உசுப்புதல் என்ற சொல் வரும்போது அதுவும் ஒலிக்குறிப்பினடிப்படையில் எழுந்ததே.

உச்சுக் கொட்டுதல் என்பதும் ஒலி  எழுப்புதலே ஆகும்,

இவை உச்சரித்தல் என்பதோடு  ஒருவகையில் தொடர்புடையவை.   சுட்டொலியாகவும்  ஒப்பொலியாகவும்  இருபுடைப் பொருத்தம் உள்ளவை .

Edited.  But text may change owing to interference by 3rd party.  A review will be done later. 


உச்சரிப்பு.

‍‍‍முதலில் உச்சரிப்பு தமிழா என்போர் உண்டு. உச்சரிப்பதென்பது தொன்று தொட்டு பேச்சு மொழியில் வழங்கிவரும் சொல் என்றே தெரிகிறது. இது சங்கதமொழியிலும் இருக்கிறது. உடலிலிருந்து வெளிப்படுத்துதல் என்பதே இச்சொல்லின் பொருளாதலின், மலங்
கழித்தல் உட்பட விரிந்த பொருளுடையதாய் உள்ளது. தமிழில் இது
நாவினால் ஒலித்தல் என்ற பொருளே உடையதாய் ஆளப்படுகிறது.

இதை நுணுகி ஆய்வோம். சரிதல் என்பதன் பிறவினை சரித்தல். சரிதலாவது சாய்வாக வீழ்தல். மலை சரிந்துவிட்டது, மண்சரிவில் சிக்கி மாண்டனர் என்றெல்லாம் வழக்கு இருப்பதை அறிவோம். சரித்தல் ‍ சாய்வாய் விழும்படி செய்தல்.

உச்சரித்தல் என்பதில் முன் ஓர் உ அல்லது உகரம் உள்ளது, இந்த உகரம் ஒரு சுட்டு. முன்வந்து விழுதல் என்பது தோன்ற உகரம் வருகிறது. சமஸ்கிருதம் என்றும் பேச்சுமொழியாய் எங்கும் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆரியர் என்போரும் சிறந்தோர், அறிந்தோர் என்ற பொருளில் வருதலன்றி ஓர் இனப்பெயராய் வருவதில்லை. பேச்சில்லாத இலக்கிய மொழியில் சுட்டுதல் தோன்றியதென்பதினும் அவை பேச்சுமொழியான தமிழில் தோன்றியதென்பதே பொருத்தமுடையதாம். .இடங்களில் நடமாடுவோரே அங்குமிங்கும் சுட்டிப்பேசுவர். இதனால்தான் சுட்டுக்கருத்துகளைத் தமிழில் எடுத்துக் காட்ட முடிகிறது.

சமஸ்கிருதம் சந்த அசை மொழியாக முன் அறியப்பட்டது. அதனால் அதன் முந்துபெயர் சந்தாசா அல்லது சந்தசைவு. அதாவது சந்தம் வெளிப்பட வாயை அசைக்கப் பயன்பட்ட மொழி. மொழி என்பதைவிட அதனை அசைகளின் தொகுப்பறை எனலாம். இன்ன கூட்டத்தார் பேசிய மொழி என்றில்லை. இன்று இதில் மந்திரம் பலுக்குவோரும் பல்வேறு தாய்மொழியினர்; கூட்டத்தினர். மங்கோலியப் பரம்பரையில் வந்தோர்கூட உள்ளனர் என்று அறிக.

பிராமணருள் பல சாதியாரும் பல மொழியினரும் பல நிறச்சாயல் உடையோரும் உள்ளனர். சமஸ்கிருதம் அவர்களின் அலுவல் மொழி.

தொடக்கத்தில் இதில் இலக்கியங்கள் படைத்தோர் ‍ வால்மிகி: தாழ்ந்த சாதியினன். ( அப்போது அவர்கள் சாதி உயர்ந்ததாய் இருந்திருக்கலாம், அல்லது சாதிகள் வரையறைப் படாமல் இருந்துமிருக்கலாம்.) வேதவியாசன் ‍ ( இது இவன் இயற்பெயரன்று, காரணப் பெயரே) மீனவன்; வேதங்களில் உள்ள பல பாடல் பாடியோரும் உயர்சாதியினர் அல்லர். இவர்களைப் பிராமணர் என்பது அவர்கள் பிரம்மத்தை உணர்ந்தவர்கள் என்பதனால். பிறப்பில் வந்த சாதியால் அன்று. பாணினி என்னும் சங்கத இலக்கணம் பாடியோன் ஒரு பாணன், அவன் பெயரும் காரணப் பெயரே. பாண் என்ற சொல்லோ பாணத் தொழிலைக் குறிப்பது. இசைஞர்களான பாணர் பெரும் புலவராயிருந்தனர். சாணான் ஆகிய சாணக்கியனும் பிராமணன் அல்லன், ஆனால் பிராமணன், அது பிரம்மத்தை உணர்ந்ததனால்.

துணைக்கண்ட முழுதும் பேசப்பட்ட தமிழ், பல்வேறு திரிபுகளை அடைந்தமை சொல்லித் தெரியவேண்டாதது. சமஸ்கிருதத்தில் உள்ள மூன்றில் ஒரு பங்கு சொற்கள் தமிழ் அல்லது திராவிடத் திரிபுகள். இன்னும் ஒரு பங்கு, திராவிடச் சொற்களோ என்று ஐயுறத் தக்கவை.
இறுதி ஒரு பங்கு ஏனை இந்தோ ஐரோப்பியச் சொற்களோடு தொடர்புற்றவை. இவ்விறுதி இரு தொகுதிகளிலும் தமிழ் மூலங்கள் இல்லை என்பது இதன் பொருளன்று. சமஸ்கிருதச் சொற்றொகுதி, தமிழிலிருந்தும் ஏனைப் பாகதங்களிலிருந்தும் கல்லி எடுக்கப்பட்ட தொகுதி என்பதறிக. அப்படித்தான் அது நன்றாகச் செய்யப்பட்டது.

சமஸ்கிருதத்தில் ஏன் தாழ்த்தப்பட்டோர் எழுதியவை முந்து நூல்களாய் உள்ளன என்பதை ஆய்ந்தறிந்தால், அது ஆரிய மொழி, வெளியிலிருந்து வந்தது என்பது ஆட்டங்கண்டுவிடும். \\

அதனால்  உச்சரித்தல் என்பது  எப்படி வந்த சொல்  என்பதே கேள்வி . முன் சரிந்து வந்து  வீ ழ்ந்ததே ஒலி, அதுதான்  உச்சரிப்பு.

continued at : https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_58.html







ஞாயிறு, 26 ஜூன், 2016

duplicated error post.

இணையம் வழியாய் பணமே திருட‌
 எத்தனை எத்தனை மூயற்சி!
நினையும் பொழுதில் பனைபோல் உயரும்
 புள்ளிகள் வரைதரு நுவற்சி!

இவர்களைத் தடுக்க இயன்றிடிற் பிடிக்க‌
 இதுவரைத் திறத்தவர்  இலரோ?
"தவறுகள் தவிர்த்து விழிப்பொடும் உயர்த்து"
 தந்தசெம் மதியுரை நமக்கு.

ஏய்ப்பதும் எளிதே!   ஏய்படல் கடந்தே
 வாய்ப்பது தான்மிகக் கடினம்.
காய்ப்புறு மரத்தில் கல்லடி காக்கும்
 கலைவர வேண்டும்நம் கையில்.

இனிமேல் இருந்தென் கணக்கது கண்ணால்
 கழுகெனக் கணினியில் உழுதே
கனிபறித் தனரோ கவிழ்ந்தயர்ந் தனரோ
  கள்வர்கள் காண்பம் இல்  பழுதே!.  

இணையம் வழி பணம் திருட‌.....

இணையம் வழியாய்ப்  பணமே திருட‌
 எத்தனை எத்தனை முயற்சி!#
நினையும் பொழுதில் பனைபோல் உயரும்
 புள்ளிகள் வரைதரு நுவற்சி!

இவர்களைத் தடுக்க இயன்றிடிற் பிடிக்க‌
 இதுவரைத் திறத்தவர்  இலரோ?
:"தவறுகள் தவிர்த்து விழிப்பொடும் உயர்த்து:"
 தந்தசெம் மதியுரை நமக்கு.

ஏய்ப்பதும் எளிதே!   ஏய்படல் கடந்தே
 வாய்ப்பது தான்மிகக் கடினம்.
காய்ப்புறு மரத்தில் கல்லடி காக்கும்
 கலைவர வேண்டும்நம் கையில்.

இனிமேல் இருந்தென் கணக்கது கண்ணால்
 கழுகெனக் கணினியில் உழுதே
கனிபறித் தனரோ கவிழ்ந்தயர்ந் தனரோ
  கள்வர்கள் காண்பம் இல்  பழுதே!.


திருத்தம்: 

#மூயற்சி திருத்தம் முயற்சி.

சனி, 25 ஜூன், 2016

சிவ- போத 11ம் பாடல்

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அவன்கழல் செலுமே.

இது சிவஞான போதத்தின் பதினோராம் பாடல்.
முதலில் இப்பாடலின் பொருளினைப் புரிந்துகொள்வோம்.

காணும் கண்ணுக்கு ‍: காண்பதற்கு ஏற்ற நிலையை அடைந்துவிட்ட விழிகட்கு;

காட்டும் உளம்போல் : காணுதற்கு உரியதைக் காட்டும் ஆன்மாவைப் போல;

காண உள்ளத்தை : காண முயலும்போது காணுதற்கு என்றும் உள்ளதாகிய சிவத்தை;

கண்டு : தானேயாகக் காட்சி பெற்று;

காட்டலின் : காணும்படி காட்டின காரணத்தால்;

அயரா அன்பின் : சோர்வு இல்லாத அன்பினால் அல்லது பற்றுக்கொண்டு;

அரன்கழல் செலுமே: சிவத்தினிடம் சென்று சேர்தல் கூடும்.


இங்கு உளம் அல்லது உள்ளம் என்பது உடலின் உள் நிற்கும் ஆன்மா
என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது என்பதறிக. உள்ளம் என்பது இடைக்குறைந்து உளம் ஆயிற்று. ஆன்மா இல்லாத வெற்றுடலில் கண்கள் இருப்பினும் அவை காணும் தகுதி அற்றவை. கண் ஒன்றைக் காண, அதை அக்கண்களுக்கு விளக்கி இது இன்ன பொருள் அல்லது இத்தன்மைத்து என்று காட்டுவது உள்ளிருக்கும் ஆன்மாவே ஆகும். இதையே "காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்" என்றார் போதத்தின் ஆசிரியர்.


வீடு எதையும் அறிவதில்லை; அதனுள் வாழும் மாந்தனே வீட்டினுள் யார் வந்தார் யார் சென்றார் எது இருக்கின்றது என்று அறிவதைப் போலவே உடலும் ஆன்மாவும் ஆகும்.


காணுமுள் ளத்தைக் கண்டு காட்டலின் : இந்த அடியில், வரும் சீர்களை, கா/ணுமுள் .. ளத்/தைக்....கண்/டு.... காட்/டலின் என்று பிரித்துப் பார்த்தால், உள்ளதை என்ற சொல் உள்ளத்தை என்று வந்தாலே பாட்டின் அடி நான்கு சீர்களாய் நிறைவு பெறும் என்பதால்
உள்ளதை என்பது உள்ளத்தை என்று ஒரு தகர ஒற்று மிகுந்து வந்தது.
இதனை வகையுளி செய்து அறிந்துகொள்க. உள்ளது என்பது என்றும் எங்கும் உள்ளதாகிய சிவத்தை. சிவமில்லாத இடமொன்றில்லை. சிவம் இல்லாத காலமொன்றில்லை. ஆதலின் உள்ளது சிவம் ஆகும்.
ஐ வேற்றுமை உருபு.


இறையன்பில் தொய்வு இன்றி நிற்றல் வேண்டுமென்பார், அயரா அன்பின் என்றார். சோர்வின்றி, இடையீடின்றி சிவத்தைப் பற்றி நிற்க வேண்டும். அப்போதுதான் சிவத்தை அடைதல் சித்திக்கும் ,

அவன் கழல் ‍: இறைவன் திருவடிகள்.

செலுமே: செல்லுவான் என்பது.

இறைவன் -  அதாவது  சிவம்,  எங்கும் நிறைந்தது;  இதனை  வியாபித்திருக்கிறது என்பர். வியன் -   விரிவு.   விய >  வியாபித்தல். ஆன்மா உடையோன்  அதனைக் காணலாம்.  பற்று வளர்ந்து முற்றிட வேண்டும். முற்று >  முத்து >  முத்தி .  இது திரிந்து முக்தி ஆகும்.  முது > முத்து >  முத்தி > முக்தி  எனினுமாம் .  பற்றுமுதிர்வே  முத்தி . சீவர்கள்  அல்லது ஆன்மாவுடன்  கூடி  நிற்போர்   முத்தி    பெறுதல்  -  சீவன்முத்தி  ஆகும்.  ஜீவன்முக்தி என்றும் சொல்வர்  ஒருவன் தன்னை அதற்குத் தகுதிப் படுத்திக்  கொள்வது  பற்று முதிர்வினாலேயாம். இதன் பின்பே கண்கள் காண்பன வாகும் . 






வெள்ளி, 24 ஜூன், 2016

ராகம் என்ற சொல்

இன்னிசை  பாடுதல் ஓர் அரிய திறன் என்று பண்டை மக்கள் கருதினர் என்பதை, ராகம் என்ற சொல் நமக்குத் தெரிவிக்கிறது.இப்படிச் சொல்லமைபு 1ஆய்வறிஞர் பல உண்மைகளை அறிந்து கூறலாம்.  இதன் மூலம் பண்டைக் கருத்தமைதிகளை நாம் உணர முடியும்.

பாடறிவு2 ஓர் அரிய திறனாதலின், இக்கருத்திலிருந்தே அதற்குரிய சொல்லையும் அமைத்தது நல்லறிவே ஆகும்,

அரு + ஆகு+  அம் =  அராகம்.

அரு + இ = அரி(து)  எனல்போலவே  அரு+ ஆ = அரா (கு, அம்) ஆகுமென்பது அறிதல் வேண்டும்.

இது முற்காலத்தில் கலிப்பாவின் ஓர் உறுப்பாக இருந்தது.  கலிப்பாவின் முன் பகுதிகளை வேறு பாணியில் பாடி, அராகம் என்ற உறுப்பின் இடத்திற்கு வந்தவுடன் இன்னொரு விதமாக இனிமை தோன்றப் பாடுவர் என்று தெரிகிறது,  அவர்கள் பாடிய   பதிவுகள்  இப்போது இல்லாமல் போனது நம் பாக்கியக்குறைவே ஆகும். அதாவது கெடுபேறு ஆம்.

அரங்கன் என்ற சொல்   இடைக்குறைந்து  ரங்கள் என்று நின்றது போலவே அராகமும் ராகமாகி  இசைவிதம் குறிக்க வழங்கப்படுகிறது.

முத்தமிழில் இசைக்கலை ஒழிந்து, அதன் சிதறல்கள் இன்னும் நம்மிடைக் குமிழ்த்துக்கொண்டுள்ளன.

குறிப்புகள்:

1சொல்லமைபு   -  சொற்கலை .  சொல்லமைப்பு -   ஒரு சொல் அமைந்துள்ள விதம்,   தமிழ்ச் சொல்லமைபு  என்பது  வேங்கடராஜலு  ரெட்டியார் எழுதிய ஒரு நூலின் பெயர்  

2பாடறிவு   பாட  அறிந்திருத்தல் .

கொலையும் காரணங்களும்

கொலைகள்  பலப்பல  கூறுவர்ஏன்  என்றுபல
கூறாது  மறைவுண்ட  ஊறுதளம்  உண்டுபல
கலையும்  இதுவாமோ கருத்துயர்ந்த மாந்தனுக்கே  
கண்டொழி   தண்டனையும் மரணமென விண்டதுவே

கொலைகள்  பலப்பல -  உலகில்  நடைபெறுங் கொலைக்குற்றங்கள்  அதிகம் .
கூறுவர்ஏன்  என்றுபல -  காரணங்கள்  பல  கூறுவர்  ஆய்வு செயதோர் .
கருத்துயர்ந்த மாந்தனுக்கே  -  பகுத்தறிவுள்ள மனிதனுக்கு
கலையும்  இதுவாமோ  -  காரணங்கள் உரைப்பதுவும்  ஒரு கலைதான் .அன்றோ ?
கூறாது  மறைவுண்ட  -  காரணம் கூறாது மறக்கப்பட்டு நம்  நினைவிலிருந்து
அகன்று போன ;
ஊறுதளம்  உண்டுபல  -   இக்கொலை  நிகழ்வுகள் எழும்      நிலைகளும் '  சார்புகளும் பலவாகும்;
மரணமென விண்டதுவே  ‍ மரணம் என்று சொல்லப்பட்டதுவே;
கண்டொழி   தண்டனையும்  ‍  அவற்றை கண்டுபிடித்து ஒழிக்கும் தண்டனையும் ஆகும் .

But critics have argued that even in countries where death is the only sentence for murder,  it has not been proven to be a deterrent! This the author is aware but not taking any stand on it.

வியாழன், 23 ஜூன், 2016

சமாளித்தல் - சொல் பொருள்

சமாளித்தல் என்ற சொல்லினைக் கூர்ந்து கவனிப்போம்.
இதைச் சமம் + ஆள் + இ என்று பிரிக்கவேண்டும்.

சமாளித்தல் என்றால் என்ன என்று கேட்டால், பதில் கூறுவது கடினமாகத் தோன்றுகிறது. ஆனால் அச் சொல்லை மூலங்களாகப் பிரித்துவிட்டால் எளிதில் பொருளைக் கூறிவிடலாம். வழக்குப் பொருளைக் கூறுவது எளிதாக இல்லாவிட்டாலும் சொல்லமைப்புப் பொருளை எளிதாகக் கூறிடுதல் இயலும்,

அது: சம ஆளாக நிற்றல் என்று பொருள்படும்.

சொல்லிறுதியில் வரும் இகரம் அதை வினைச்சொல்லாக்குகிறது. இது பழங்காலம் தொட்டே தமிழ் மொழியில் பயன்படுத்தப் பட்டுப் பெயர்ச் சொற்களை வினைகளாக்குவதற்குப் புழங்கப் பட்டுள்ளமை காணலாம்.

-------------------------------------


எடுத்துக்காட்டுகள் சில காண்போம்:

வழு > வழி > வழிதல், வழித்தல்.
கொழு ? கொழி > கொழித்தல்.
நெள் > நெளி > நெளிதல், நெளித்தல்.
படு > படி > படிதல் : மனிதன் பாயில் படுப்பதுபோலவே தூசு போய்
ஓரிட‌த்தல் படுத்துக்கொள்கிறது. ஆகவே தூசு படிகிறது என்கிறோம்.
படு > படி > படித்தல். கண்ணின் ஒளி அல்லது ஒளிபெறு தன்மையானது ஏட்டுடன் இனைப்பை ஏற்படுத்திக்கொண்டு பார்வையைப் படியச் செய்கிறது. இதை விளக்கத் தெரியாத அகரவரிசைக் காரனொருவன் படி என்பது தமிழன்று என்று எழுதினான். ஆராய்ச்சியின்மையே இதற்குக் காரணம்.

அக்கு சிந்தா பாடா மூ என்ற மலாய் வாக்கியத்தில், பாடா என்பதென்ன? படிதலேயாம். என் காதல் உன்மேல் படிகிறது, படுகிறது என்று தெளிவிக்கலாம். படு> படி, படு > பாடு என்பது
எத்துணை அழகிய தமிழ்.


தமிழிலும் படு என்பது துணைவினையாகப் பயன்படுவதாகும். செய்யப்படுதல் , சுடப்பட்டார், கூறப்பட்டது என்பன காண்க.

இப்போது சமாளித்தலுக்குத் திரும்புவோம். இறுதி இகரமே வினைச்சொல் ஆக்கியது. இவ்விகரமும் தமிழில் தொன்றுதொட்டு
பயன்பாடு கண்டதே ஆகும். இதுவே சமாளித்தலிலும் பயன்பட்டுள்ளது.

இன்னொரு சொல் ஓக்காளித்தல். ஓக்காளம் என்பது வினையாகும்
போது ஓக்காளித்தல் ஆகும். இகரம் வந்து வினைச்சொல் ஆனது.

சமம் என்றால் ஒன்றுக்கு மற்றொன்று இணையாக அல்லது ஒப்பாக‌
அமைந்தது என்பது. அமை> சமை > சம > சமம் ‍ சமன். அல்லது
அமை > அம > சம> சமம்.


தமிழிலும் படு என்பது துணைவினையாகப் பயன்படுவதாகும். செய்யப்படுதல் , சுடப்பட்டார், கூறப்பட்டது என்பன காண்க.

இப்போது சமாளித்தலுக்குத் திரும்புவோம். இறுதி இகரமே வினைச்சொல் ஆக்கியது. இவ்விகரமும் தமிழில் தொன்றுதொட்டு
பயன்பாடு கண்டதே ஆகும். இதுவே சமாளித்தலிலும் பயன்பட்டுள்ளது.

இன்னொரு சொல் ஓக்காளித்தல். ஓக்காளம் என்பது வினையாகும்
போது ஓக்காளித்தல் ஆகும். இகரம் வந்து வினைச்சொல் ஆனது.

சமம் என்றால் ஒன்றுக்கு மற்றொன்று இணையாக அல்லது ஒப்பாக‌
அமைந்தது என்பது. ஒத்தமைவு! அமை> சமை > சம > சமம் ‍ சமன். அல்லது அமை > அம > சம> சமம். இதற்கு அது அமையும். இதற்கு அது சமையும். இதற்கு அது சமம்.


அகரத்தில் தொடங்கும் சொல் சகரமாதல் பெருவரவு. முன் எடுத்துக்காட்டுகளைப் படித்தறிக. Pl see previous posts. அமை என்பதில் உள்ள இறுதி ஐ அகரமாவது ஐகாரக் குறுக்கம். உதை என்பது ஒத என்று பேச்சில் வரும். ஐகாரம் அகரமாவது ஏனைத் திராவிட மொழிகளிலும் ஏராளம்.

நவ -கடலையும் கடந்துவிட்ட சொல்

நவீனமென்ற சொல். தமிழில் வழங்குகிறது. நவீனம் என்பது புதுமை. நவீனம் என்ற பதம் (பொருளைப் பதிந்துள்ளது பதம்) ஏனை மொழிகளி லும் பரவியுள்ளது. இச்சொல்லை உலகுக்கு அளித்த பெருமை தமிழனது ஆகும். நியோ, நியூ என்பனவரை சென்றிருக்கின்றது என்றால் இஃதோர் ஆற்றல் மிக்க, ஆறுமலைகளையும் கடந்து நிற்கின்ற, கடத்தற்கரிய கடலையும் கடந்துவிட்ட சொல் என்றே கொண்டாடவேண்டும்.


அகர முதலவான சொற்கள், பிறமொழிகளில் இகர ஓகார முன்னிலையாகத் தொடங்குவது நீங்கள் கவனித்திருக்கலாம்.

நவ >       நோவல்டி   ( நாவல்டி )  novelty      
நவ > நோவோ.  trial de novo
நய > நியூ           new
நய > நியோ.        neo-colonialism

ஆனால் மேலைநாட்டுப் பண்டிதன்மார் இதை நவ்  (நோவா ) என்பதனோடுமட்டும் தொடர்புபடுத்துவதுண்டு.   எனின்  வகரமும் யகரமும்  உடம்படு மெய்களே; நய நவ எல்லாம் ஒன்றுதான்.

நல் என்பதினின்றே இவை பிறந்தன வென்பதை முன் சுட்டிக்காட்டி 
இருந்தோம்.


அதை மறுநோக்குச் செய்துகொள்ளுங்கள்.

அதன்படி, நன்மைக் கருத்தில் புதுமைக் கருத்து விளைந்தது.

இப்போது நவீனம் என்ற சொல்:

நவ = புதுமை.

நவ _+ ஈனு + அம் = நவீனம், அதாவது புதுமை பிறத்தல்.
ஈனுதலாவது பிறப்பித்தல்.

நவ என்பதன் இறுதி அகரமும் ஈனு என்பதன் இறுதி உகரமும் கெட்டன,

இப்படி நன்மை என்னும் சொல்லிலிருந்து உலகம் நன்மை அடைந்தது.



சங்கிலி யாது

இப்போது சங்கிலி என்ற சொல்ல்லைக்  கவனிப்போம்.

மிகப் பழங்காலத்து மக்கள் சங்குகளை நூலிலோ கயிற்றிலோ  கோத்துக் கழுத்தில் அணிந்துகொண்டனர். பின்பு சங்கு கோக்கும் பழக்கம் போய், சற்று முன்னேறிச்  சங்கு இல்லாத பிற கழுத்தணிகள் வந்தன.  இவற்றுக்கும் சங்கணி என்றே பெயர் வைத்துக்கொண்   டிருந்திருக்கலாம். சங்கு அதில் இல்லாமையாலும் சங்கு என்ற சொல் வழக்கி லிருந்துகொண்டு சங்கை நினைவு படுத்தி உறுத்திக்கொண்டிருந்ததாலும்
வேறு  பெயரிட முந்தாமல்,  "சங்கிலி"  என்றே  குறித்தனர்.

சங்கு +இல் +இ = சங்கிலி.  சங்கு இல்லாத அணி.  சங்கு இல்லாமற் போன அணி கண்டும் சிலர் கவலை கொண்டிருக்கலாம்  மஞ்சட் கயிற்றில் மாட்டாத தாலி கண்டு சிலர் கவல்வது போலும்.

கோயில் தொழுகை நடைமுறைகளில் சங்கிற்கு இன்றும் பெரும் பங்கு
இருக்கிறது.   பெருமிதத்துக்கு உரிய நேரங்களில் சங்கு ஊதுவதும், மணி காட்ட சங்கு ஊதுவதும் வழக்கம்.  சங்கில் பல, பெரியன, சிறியன,  நடுத்தரத்தன என்று வேறுபாடு காணலாம். சங்கிலிருந்து எழும் நாதம்  சங்க நாதம்.

தமிழர் முன் அறிந்தது நாவிலிருந்து எழும் நாதம்.  (நா> நாதம் )  தம் நாவில் எழுவது,  பிற பின் வந்தன.  வாயிலிருந்து வருவது வாயு ஆனதுபோல்  நாவில் எழுவது நாதம்.  இவற்றுள் வாய், நா என்பன‌
பின் தம் பொருள்குன்றின.

தங்கு என்பதினின்று சங்கு என்பது வந்தது,    த‍ > ச திரிபு.  ஓர் உயிர் தங்கும் கூடு.

இப்போது சங்கிலி யாது என்று புரிந்துகொண்டிருக்கலாம்.

புதன், 22 ஜூன், 2016

ஆப்கான் இந்தியர்.நாடு எது ?


புகுபிறப்பு  நாடேதாய்  நாடென்று  கொண்டு
தகுமுறையில் வாழ்வைத் தழுவினும் துன்பமாம்
வந்தேறி என்று வசைபாடி நாளடைவில்
சொந்தநா டொன்றின்றிப் போம்.


https://sg.news.yahoo.com/afghanistans-dwindling-sikh-hindu-communities-flee-abuses-232147252.html?nhp=1

Afghanistan's dwindling Sikh, Hindu communities flee new abuses
  

இன் > சின் > சிந்தி


முன் இடுகையில்  சின் 2  என்பது விளக்கியிருந்தோம்.
 இதற்கு முன்  அகர  வருக்கத்து த்   தொடக்கச் சொற்கள்  சகர  வருக்கத்தில்  ஏற்றபடி திரியுமென்பதைக்  கூறியிருந்ததும்  நினைவில் இருக்கும்.
நினைவை மீள்ஊற்றுவிக்கச்  சில :

அட்டி  >  சட்டி   ( அடுதல் :  சுடுதல் )
உகம்  >  சுகம்.
உகந்த > சுகந்த .
அவை >  சவை  > சபை
உவ  >  சுவை .
ஏமம் > சேமம் .
அகக்  களத்தி  > சகக்களத்தி

பட்டியல் பெரிதாகாமல்  தொடர்வோம்.

இவை போல :

இன்  > இனி
இன்  > இன்னும்.

இனி என்பது பின் வருவது.

இன்  >  சின் .

இனி என்பது பின் தோன்றுவது.

சின்  > சிந்தி   என்பதும் அதுவே. மனிதன் பின் எண்ணுவது.

முன்னரே எண்ணுவது  குறைவு.

ஒன்றிலிருந்து மற்றொன்று  தோன்றும்.   சின் >, சினைத்தல் என்பன இதை ஏற்புடன் குறிக்கின்றன ,

முன்னரே எண்ணவேண்டும் என்பது  சி/றந்தது (idealism )
ஒன்றில் இன்னொன்று விளைவது சொல்லமைப்புக் கருத்து.

will edit


       

சின்> சிந்தி. ( கருத்துகள் தோன்றுதல்).

முன் இடுகைகளில்  சிறுமைப் பொருளதாகிய "சின்"  என்ற சொல்லை ஆய்வுக்கு உட்படுத்தினோம். இதுபோது, தோன்றுதற் பொருளில் வரும் "சின்" என்ற வேறோர் அடிச்சொல்லை  அணுகி ஆய்ந்து மகிழ்வோம்.
வேறுபடுத்தி அறியும் பொருட்டு இவற்றை இப்படிக் காட்டுதல் நன்று:

சின்1 ‍=  சிறியது.

சின்2 =  தோன்றுதல்.

சின்1 சில் என்பதினின்று பெறப்பட்டது என்பதை முன் கண்டுள்ளோம்.

‍‍‍‍=========================

சின் >  சினைத்தல்:   தோன்றுதல்.  (சின்+ஐ)
சின் >  சினை         உறுப்பு.  மீன் முதலியவற்றின் கரு.
சின்>    சின்+து >  சிந்து.  (உகுத்தல், உதிர்தல், உதிர்த்தல் )
         சின் > சிந்துதல்.
ஒப்பு நோக்க:  பின்> பிந்து;  முன் > முந்து.  மன்> மந்தி. ( மன் அடிச்சொல்; மனிதன் போன்றது என்று பொருள்   மன்> மனிதன்)

சின்> சிந்தி.  ( கருத்துகள் தோன்றுதல்).
      சிந்தித்தல், சிந்தை, சிந்தனை.

சின் > சினத்தல். (கோபம் தோன்றுதல் ).
       சினத்தல் >  சினம்.

இவை தோன்றுதல் கருத்துச் சொற்களாகும்.


இகர  ஈறு  பெற்ற வினைகள் சில.

காண்  >  காணித்தல்  (மலையாள வழக்கு )
முயற்சி > முயற்சித்தல்  (முயலுதல் :  )   Some do not accept முயற்சித்தல்.
ஒழி , விழி . அழி . கழி  . அளி   சிரி   என உள்ளன .

will edit

செவ்வாய், 21 ஜூன், 2016

அக்கிரகாரம்.

பின்புலக் கருத்துக்கள் :


இச்சொல் சமஸ்கிருதத்துக்கு உரியதென்ப.  இது தமிழ்ச்சொல் என்று நிலைநாட்டுவதற்காக இதை எழுதவில்லை. இச்சொல்லில் தமிழ் மூலங்கள் உண்டா என்று கண்டறிய முற்படுவதே நோக்கமாகும்.

இந்தச் சமயத் தொண்டர்களின்  குடியிருப்புகள் அமைக்கப்பட்ட காலை
பெரும்பாலும் திருமணமாகாத பூசாரிகளே அமர்த்தப்பட்டதுபோல் தெரிகிறது.   அவர்கள் தங்குவதற்கு  வேண்டிய வசதிகள் உள்ள இடங்களே  அமைக்கப்பட்டன. இவை சிறிய இடங்களென்று தெரிகிறது. ஆனால் பூசாரிகள் எல்லாம் ஒரு வட்டத்துக்குள் அடக்கப்பட்டனர். அப்போதிருந்த பாதுகாப்புகள் மேம்பாடு அடையாமையும், மக்களுடன் சேர்ந்து வாழப் பிறர் ஒத்துக்கொள்ளாமையும் காரணங்களாகவிருக்கலாம்.  சொல் அமைந்த காலம் ஆய்வுக்குரியது என்றாலும் ஆய்வதற்குரிய சான்றுகள் மிகக் குறைவே எனலாம்.

அக்கிரகாரம். -  சொல்லாமைப்பு

அஃகுதல் ‍   :   குறைவு. சுருக்கம்.

இரு +அகம் ‍     இரகம்.   :  இருக்கும் வீடு

ஆரம் :   சுற்று, ஒரு மாலை போல சுற்றான இடம்.

அஃகு+ இரு + அக +  ஆரம் =   அஃகிரகாரம் ;  அக்கிரகாரம்.

குறைவான  குடி  இருக்கும் வீடுகள்  அமைந்த  சுற்றிடம்

இதை  அக்ர  agricola    என்ற  இலத்தீன் மொழிச் சொல்லுடன் தொடர்பு படுத்தி
உழவு செய்தோர் எனலாம்.  இவர்கள்   உழவில் ஈடுபட்ட தகவல் ஏதும்  இல்லை.

இவர்கள் முழு நேரம் பூசாரிகள் ஆனதால்  ஓரிடத்தில் இருந்தனர்.


அங்கு + இரு + கு + ஆரம்  =  அங்கிரகாரம்,   அங்கு அல்லது கோயிலுக்கு அருகில் அமைந்த குடியிருப்பு.  புணர்ச்சியில்,  அங்கு என்பது அக்கு என வந்தது,  இரும்பு + பாதை > இருப்புப்பாதை என்பது போலும் வலித்தல் விகாரம். கு என்ற சேர்விடக் குறிப்பு உருபு இங்கு இடைநிலையாக வந்தது.   ஆரம் _ கோயிலைச் சுற்றி அமைந்த குடியிருப்பு.  இவ்வாறு சில வகைகளில் விளக்கம் பெறவல்ல சொல் இதுவாம்.