சனி, 30 மார்ச், 2019

பீடம் என்பது

வரிசையாய்ப் பல வந்து முன் நிற்கின்றன சொற்கள் என்றாலும் எல்லாவற்றையும் எழுதிவிட முடிவதில்லை. இன்று ஒன்றை மட்டும்
கவனிப்போம்.   இச்சொல் பீடம் என்பது.

இதன் முந்து   அடியாய் இருப்பது பீடு என்னும் சொல்லாகும்;

பீடு என்பது பெருமை என்று பொருள்படும்.

பழங்கால மனிதனுக்கு மேடு, பள்ளம்,. உயரம், தாழ்வு என்பன போன்ற கருத்துக்களே பல சொற்களைப் படைக்க உதவின. மலை, மடுவு போன்ற
இயற்கை நில அமைவுகளும் இவ்வாறு உதவின.

பிடுதல் என்ற சொல்லே பீடு என்பதன் முன் உள்ளது ஆகும். தரை நிலையிலிருந்து பிடப்பட்டு அல்லது வேறுபாடுற்று உயரமாய்க் காணப்படும்  உயர்நிலம் பீடு > பீடம் ஆனது.   பீடு என்பது பிடு என்றதில் விளைந்த முதனிலை திரிந்து  நீண்ட தொழிற்பெயர் ஆகும்.

பிள் என்பது இதன் மூல அடி.  பிள் > பிளவு.  பிள் > பிடு என்று திரியும். இது சுள் > சுடு, பள் > படு என்பன போன்றவையே.   பள்: >பள்ளம்;  பள் > படு> படுகை என்பன அறிக.

தரையின் மட்டத்திலிருந்து பிளவு பட்டு மேலெழுந்து  பீடம் அமைகிறது. இஃது இயற்கையில் அமைந்தாலும் மனிதனால் அமைப்புற்றாலும்  சொல்லமைப்பில் ஒரு வேறுபாடில்லை.

பிடு என்பது கையால் பிடுவது மட்டுமின்றித் தானே பிடுதலுண்டதையும் குறிக்கும் என்பதறிக.

பெருமை குறிக்கும் பீடு என்ற சொல்லும் இயற்கை அமைப்புகளிலிருந்து உருவான கருத்தே ஆகும்.

பீடம் என்பது பிடு+ அம் என,  நேரடியாகவும் காட்டப்பெறுதல் கூடும்.  முதனிலை நீண்டு அம் விகுதி பெற்ற தொழிற்பெயர் என்று அறிக.

பீடம் என்ற உயர்தரை அல்லது நிலம்  பல வேறு சொற்களிலும் கலந்து வரும்.
எடுத்துக்காட்டு:  தலைமைப் பீடம்.  பீடாதிபதி.  (பீட  அதிபதி).

ஆனால் பீடி என்ற சொல் தொடர்புடையதன்று:  பிடி> பீடி.  புகைப் பிடிப்பதற்காவது.

அறிவோம் மகிழ்வோம்.

கருத்துகள் இல்லை: