செவ்வாய், 12 மார்ச், 2019

தீபகற்பம்.

தீபகற்பம் என்ற சொல்லை முன் விளக்கியிருந்தோம்.   இதன்பொருள் "தீவு அல்லாதது"   என்பதுமட்டுமே எனற்பாலதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.  ஒரு பெருநிலத்துடன் அறவே தொடர்பு தீர்ந்தது தீவு ஆகும்,    தீர் > தீர்வு > தீவு.   இங்கு ரகர ஒற்று மறைந்துள்ளமை காணலாம்.  இதற்கோர் எடுத்துக்காட்டு:  பேத்தி என்ற சொல்.   பேர்> பேர்த்தி > பேத்தி ஆதல் காண்க.  வினைச்சொல் ஆக்கத்திலும் :  சேர் > சேர்மி > சேமி > சேமித்தல் என்று சொல்லமைதலைக் காணலாம்.  தீபகற்பம் என்பது :   தீவகம் அல்லாதது என்று பொருள் தருமாறு புனையப்பட்டுள்ளது,   தீவக(ம்) + அல் + பு+ அம்.  அதாவது தீவு அன்று என்பதுதான்.  வியக்கத்தக்க பொருண்மையை உள்ளடக்கி இஃது புனையப்படவில்லை எனினும் எளிமையான புனைவு என்று இதனை நாம் புகழலாம். இதனை முக்கரைத்தொடர் என்பதும் ஏற்புடைத்து என்பதை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.
பு  அம் என்பன இருவிகுதிகள்.   துடைப்பம் முதலிய சொற்களில் வந்துள்ளமை அறிந்தின்புறுக.   துடைத்தல்:   துடை+பு+அம்.
பெருநிலத் தொடர்பு முற்றுந்தீர்ந்த  ஒன்று தீர்வு > தீவு  ஆகும்.  ரகர ஒற்று வேறு பல சொற்களில் போல இதிலும் மறைந்தது.

 தீவகம் அல்லாத நிலம் என்று இதை வாக்கியமாக்கலாம்.  தீவு எனினும் தீவகம் எனினும் ஏறத்தாழப் பொருள் ஒன்றே.  அகமென்பது ஓர் கூடுதல் இறுதிநிலையாக வருகிறது. இதற்குப் பொருள் கூறுவதாயின் அகம் - தீவின் உட்புற நிலம் எனினும் இழுக்காது.

தீவ என்பது தீப என்று திரிந்துள்ளது.  வகர பகரப் போலி.

தீப + கற்பம்?

இதில் தீபம் ஏதுமில்லை.  தீபத்திற்குக் கற்பம் ஏதுமில்லை.  தீபத்தில் எதுவாயினும் எரிந்துவிடுமாதலின் கற்பம் தங்குவதில்லை. தீவகத்து ஒரு கற்பம் இருக்குமாயின் அதுபோலும் தூய கற்பமும் வேறில்லை என்று முழங்கலாம். இதனை இப்படிக் கற்பித்து வரைதல் ஒருவனின் கற்பனைத் திறனை விரித்துக்கொள்ளுதலாம். தீபகற்பம் என்னும் நிலம் முப்புறம் திரி எரிய ஒருபுறம் பிடி இருத்தல்போல என்றுகூட ஒப்பீடு செய்யலாம் எனினும் சொல்லமைப்பு அதுவன்று.

 இவற்றில் கிருதமொன்றும் இல்லை.  அயலென்பார் அறியார். சங்கதம் இந்தோ ஐரோப்பிய மொழியோ வெளிநாட்டு மொழியோ இல்லை என்று ஒப்பின் இச்சொல் அம்மொழிக்கும் உரித்தே ஆகும்.  ஆனால் தீபகற்பமென்பது இந்தோ ஐரோப்பியச் சொல் அன்று.

குறிப்பு:
முக்கரைத்தொடர் - பொருள்: மூன்றுபக்கம் கரைகள் ஒருபுறம் நிலத்தொடர்.



 

கருத்துகள் இல்லை: