ஞாயிறு, 3 மார்ச், 2019

சொல்: ஜீவாதாரம்.

இது ஒரு பழைய பாடல்::

செல்வமே சுக ஜீவாதாரம்
திருமகள் அவதாரம்

உள்ளபடி செல்வம் இல்லாதவரே
உலகினிலே வாழ்வதும் தவறே.

கல்லா ரெனினும் காசுள் ளவரைக்
காட்சிப் பொருளாய்க் காணார் எவரே?

இது நல்ல எதுகை மோனைகளுடனும் இயைபுகளுடனும் பாடப்பெற்றுள்ளது. கருத்துகள் தமிழ் நூல்களிலும் அடிக்கடி வாழ்க்கை நிகழ்வுகளிலும் நாமறிந்துகொள்வனதாம்.

இன்னொரு பாடலும்:

நம் ஜீவாதாரமே
செல்வம் ஆகுமே

என்று வருகிறது.

இன்று ஜீவாதாரம் என்ற சொல்லைப் பார்ப்போம்.

ஜீவன் அல்லது ஜீவ் என்பது உயிர் என்று பொருள்படும்.  ஜீவ +  ஆதாரம் = ஜீவாதாரம்.

இலங்கைத் தமிழ் அறிஞர் முன் கூறிய ஆய்வுரையில்

உயிர்  >   யிர் >  ஜிவ்  > ஜீவ் > ஜீவன் 1

என்று விளைந்தமை கூறுவார்.      ஜிவ் என்ற அயல் திரிபை  அன் விகுதி கொடுத்து ஜீவன் என்பது கலவை அமைப்பு. (hybrid).  அன் தமிழ்க்குரியது.


யகர வருக்கம் ஜகர வருக்கமாவது பல மொழிகளில் உளது.  ஜூலியஸ் > யூலியஸ்;  யாக்கோப் > ஜேக்கப்  என்பன எளிதில் காணத்தக்கவை. மற்றவை வேறு விடயங்களை ஆய்கையில் தானே அறியலாம்.

சீரான வாழ்வுக்கு ஆதாரம் செல்வமே.

சீர் + வாழ்வு > சீர்வாழ்வாதாரம் >  சீவாதாரம்  > ஜீவாதாரம்.

ரகர ஒற்றும் தொலைவதே.  சேர்> சேர்மி >  சேமி > சேமித்தல்.

ழகர ஒற்று இடைக்குறைதல் மிகுதி:

வாழ்த்து + இயம் =  வாழ்த்தியம் > வாத்தியம்.
பாழ்+ வு + அம் =  பாழ்வம் >  பாவம்.

ஜீவிப்பதற்கு  ஆதாரம் ஜீவாதாரம்.  ஜீவனுக்குச் செல்வம் நேரடி ஆதாரம் அன்று.  அதற்கு மூச்சு முதலியன அடிப்படை ஆதாரங்கள்.  ஆனால் சீரான
வாழ்க்கைக்குச் செல்வம் வேண்டும்.

இப்படிச் சீர் வாழ்வு என்பதும் ஜீவி என்பதும் ஆன இரண்டும் பொருந்துவன.


--------------------------------------------

அடிக்குறிப்புகள்:

1  இலங்கை ஞானப் பிரகாச அடிகள்.

திருத்தம் பின்.


கருத்துகள் இல்லை: