வெள்ளி, 1 மார்ச், 2019

யோசனை ஆலோசனை

ஓர்தலும் ஓய்தலும்


ஓர்தலும் ஓய்தலும் ஆய்வுக்குரிய சொற்கள். இவற்றின் தொடர்பினைச் சிறிது ஆய்வோம்.

ஓர்தல் எனின் யோசித்தல். இந்தச் சொல் இப்போது இலக்கிய வழக்கில் மட்டுமே தமிழில் உள்ளது. தமிழில் பண்புப் பெயர் விகுதியாகிய மைகாரம் ஏற்றப்பட்ட " ஓர்மை" என்பது மலையாள மொழியில் உள்ளது. அஃது ஆங்கு நினைவு அல்லது ஞாபகம் என்னும் பொருளில் நிலவுகின்றது.

ஓய்தல் என்பது இதே பொருள் உடைய சொல். ஆயின் இப்பொருள் அகரவரிசைகளில் கிட்டிற்றிலது. இது முற்றிலும் வழக்கிறந்ததுடன் இச்சொல் இப்பொருளில் பயன்பட்ட நூல்கள் எவையும் அகப்படாதொழிந்தன. தமிழ் மொழியின் நீண்ட வரலாற்றில் இவ்வாறு அகப்படாதொழிந்தவையும் அழிந்தவையும் மிகப்பலவே என்றறிக.

ஓய்தல் என்பதற்கு அழிதல், இளைப்பாறுதல், சோர்தல், சாய்தல், தளருதல், முடிதல், நீங்குதல் மற்றும் மாறுதல் என்பன இன்று கிடைக்கும் பொருள் ஆகும்.


யோசி யோசனை என்ற சொற்கள் தமிழ்ப் பேச்சில் அன்றாட வழக்கில் உள்ளனவாகும். அகர வருக்கச் சொற்கள் யகர வருக்கமாகவும் திரிவன என்ற சொல்லியல் விதிகொண்டு நோக்கின் இவை முற்காலத்து ஓசி, ஓசனை என்றிருந்திருத்தல் தெளிவு. கல்வி அறிவில்லாத மக்களின் பேச்சில் இவை எங்கேனும் இருத்தல் கூடும். அவற்றைக் கேட்டோரும் அவை தவறாக ஒலிக்கப்பட்டன என்று கோடலும் எதிர்பார்த்தற்குரியதே.

ஓய்> ஓயி > ஓசி > ஓசனை > யோசனை;


இனி:

ஆனை > யானை
ஆண்டு > யாண்டு
ஆய் > யாய்
ஆறு > யாறு
உத்தி > யுக்தி
எமன் > யமன்

என வழங்கும் சொற்களினால் அ-ய மற்றும் வருக்கமும் அடங்கிய  இவ்விதியை நன் கு உணரலாம்.

ஆகவே யோசனை என்பதன் முன்வடிவம் ஓசனை என்பது எனல் எளிதின் உணரப்படும்.

ஆலமரத்தடியில் அமர்ந்து பழங்காலத்தில் ஆலோசனைகள் நடைபெற்றன.
ஆலமரத்தடியில் அமைக்கப்பட்ட அல்லது தொழப்பட்ட கடவுளும் ஆலமர் கடவுள் எனப்பட்டார். இனி ஆலோசனை என்ற சொல்லை ஆய்ந்தால்:

ஆல் + ஓசனை என்பது கிடைக்கிறது.

ஆலோசனை என்ற இருபெயரொட்டுச் சொல்லில் ஓசனை என்ற முந்தை  வடிவம் இன்னும் வாழ்கிறது என்பதறியலாம்.

இதை ஆய்ந்து ஓய்ந்து பார்த்துச் செய்ய வேண்டும் என்ற தொடர்மொழியில் ஓய்தல் என்ற வினை வருகின்றது. ஆய்தல் என்பதும் ஓய்தல் என்பதும் ஆராய்தல் யோசித்தல் என்பனவே ஆகும்.

இதை இன்னொரு நாள் வேறொரு கோணத்தில் தொடர்வோம்.

பிழை புகின் பின் திருத்தம்



கருத்துகள் இல்லை: