புதன், 26 ஏப்ரல், 2017

சமாதி - சொல்லின் அமைப்பு

யாராவது ஒரு பெரிய ஆன்மிகத் தலைவர் மறைந்து விட்டால்,அவர் சமாதி
அடைந்தார் என்பர். சமாதி என்ற சொல்லின் அமைப்புப் பொருளை இப்போது
கண்டு இன்புறுவோம்.

சமாதி என்ற சொல்லின் இறுதியில் இருக்கும் சொல், ஆதி என்பது. இது
தமிழே ஆகும். ஆதல் என்ற வினையினின்று எழுந்தது. ஆதல் என்பது
ஆக்கம். உண்டாதல். எதற்கும் உண்டாதல் என்பதே தொடக்கம் ஆகும்.
ஆதி என்பது தொடக்கம் என்னும் பொருளது.  ஆவது ஆதி ஆதலால், அது
சொல்லினடிப்படையிலும் பொருளினடிப்படையிலும் தமிழாகிறது.

இச்சொல், பிற மொழிகளிலும் வழக்கிலிருப்பின், இது அச்சொல்லின் திறத்தை
நமக்குக் காட்டுகிறது. பிற நாட்டின் செய்பொருள், நம் நாட்டில் பயன்படுமாயின், அது அப்பிற நாட்டின் தொழில்திறன் காட்டுதல் போன்றதே
இதுவாம்.


இச்சொல், பிற மொழிகளிலும் வழக்கிலிருப்பின், இது அச்சொல்லின் திறத்தை
நமக்குக் காட்டுகிறது. பிற நாட்டின் செய்பொருள், நம் நாட்டில் பயன்படுமாயின், அது அப்பிற நாட்டின் தொழில்திறன் காட்டுதல் போன்றதே
இதுவாம். நம் சொல் பிறமொழியரால் பயன்படுத்தப்படுவது சொற்பொருள் திறம் உணர்த்துவது ஆகும்.


இனி, "சம" என்பதன் அமைப்பு அறிவோம்.  அமை > சமை. இது அம்+ஐ
என்று அமைந்தது.  அம் என்பதே அடி.        அம> சம > சமன்; சமம் என்றாகும். சமம், சமன் என்பன " நிகர் " என்ற பொருளது. 
(அம் என்பதிலிருந்து தொடங்கின்,  அம்> சம்> சம்+அம்> சமம் என்பதையே
சுருங்கக் காட்டினோம்.)

இனிச் சமாதி என்பது.  ஒருவன் பிறப்புக்கு முந்திய நிலையில் உடலின்றி
ஆன்மாகவே மட்டுமே இருந்தான். இவ்வுலகில் வாழ்ந்து அவன் ஆன்மா
நீங்கிய காலை, உடல் கைவிடப்பட்டு மீண்டும் ஆன்மா ஆகிவிடுகிறான்.
சமாதி என்பது முன்னிருந்த நிலைக்குச் சமமான நிலை ஆகும். உடலற்ற‌
நிலை அது.அதுவே "சமாதி".

இனி மத நூல்களும் பிறவும் கூறும் பொருள் வேறு. அவற்றை ஆங்குக்
கண்டு தெளிக.

 யோகக் கலையில், உயிருடன் இருக்கும்போதே, ஆன்மாவை உடலைவிட்டுப் பிரித்து மேல் எழுப்புதல் முதலியவை பற்றியும் அது பற்றி
அறிந்தார்வாய்க் கேட்டுணர்க.  அதுவும் உடலுடன் இல்லாத முன் நிலைக்குச்
செல்லுதல் என்று பொருள் தருதல் காண்க.






கருத்துகள் இல்லை: