வியாழன், 27 ஏப்ரல், 2017

இழந்தவை இருப்பவை ........

பண்டைத் தமிழர் சிறப்புகள் பலவுடையராக வாழ்ந்தனர். எனினும் எல்லாச் சிறப்புகளும் அவர்களிடம் தங்கிவிடவில்லை. இன்று அவர்களிடம் உள்ள சிறப்புகளில் கருதத்தக்கது யாது எனின், மொழி ஒன்றே என்று கூறின், அதுவே உண்மையாகும். பிற சிறப்புகள்
பலவும் கழிந்தன.


நம் சிறப்புகளிற் சிலவற்றைப் பிறர் பெற்றுக்கொண்டு அதைப் போற்றிவைத்திருந்தனராயின், நாம் அவற்றை இழந்துவிடினும் அவர்களிடமிருந்து அவற்றைத் தெரிந்துகொள்ளலும் வேண்டியவிடத்து மீண்டும் கொணர்தலும் கூடும். முற்றும் அழிந்தவற்றை எவ்வாற்றானும் மீளப்பெறுதல் இல்லை. புட்பக வானூர்தி இவற்றுள் ஒன்றாக இருக்கலாம்; எனினும் இப்போது அவற்றினும் நல்ல வானூர்திகள் கிட்டுவதால், அவற்றை மறந்துவிட வேண்டியதுதான். பண்டைப் போர்க்கருவிகள் இன்று பயனற்றவையாய்விட்டன.

காட்டில் வேட்டையாடச் செல்பவன் சுடுகருவிகள் இல்லையேல் சில ஆயுதங்களையாதல் எடுத்துச்செல்லவேண்டும். ஈட்டி முதலியவை   இன்று போர்க்கருவியாகப் பெரிதும் பயன்பாடு அற்றவையாய்விடினும்  வேட்டைக்காரனுக்குப் பயன் உடையதாய் இருக்கக்கூடும்.

ஈட்டி என்ற சொல் வடிவே பெரிதும் இன்று பலரும் அறிந்தது. இதன் அடிச்சொல் இடு என்பது. பண்டைக்காலத்தில் ஈட்டியை இடுதல் என்பது வழக்காய் இருந்தது தெரிகிறது. இடு > இட்டி என்று சொல் அமைந்தது. இது பின்னர் ஈட்டி என்று முதனிலை நீண்டது.

ஈட்டி ஓர் ஆயுதம். ஆய்வதற்குப் பயன்படுவது ஆயுதம். ஆய்தலாவது சொற்களைப் பகுத்தும் தொகுத்தும் சேர்த்தும் கோத்தும் செய்வதுபோன்று பிறபொருட்களுக்கும் செய்தல். இது ஆய்+ உது + அம் என்றவை சேர்ந்து ஆனது. அது, இது மற்றும் உது என்பன சேர்ந்து பல சொற்கள் அமைந்துள்ளன. உது எனின் முன் நிற்பது. இங்கு சொல்லாக்க‌ இடைநிலையாய் நின்றது.

ஆய்தம் என்பது ஓர் எழுத்தின் பெயர். இதுவும் ஆய் அதாவது ஆய்தல்
என்ற சொல்லடிப்படையில் எழுந்ததே ஆகும். ஆயின் ஆய்+ த் + அம் என்ற முறையில் அமைந்தது. த் எனினும் து எனினும் விளைவு
வேறுபடாது. ஒரே அடியிற் தோன்றினும் இச்சொற்கள் வேறுவேறு ஆகும்.

இழந்தவை   இருப்பவை

கருத்துகள் இல்லை: