சேர்+ ம் + இ = சேர்மி என்பது சேமி, சேமித்தல் என்று வினையாகும்.
ஒரு புதிய சொல்லை உருவாக்கிய பின், இடையில் நின்று சொல்லை
நீட்டமாக்கிக் கொண்டிருக்கும் ரகர ஒற்றை நீக்கிவிடுதலென்பது ஓர்
இயல்பான திரிப்பு முறையாகும். ரகர ஒற்று நின்று ஆகப்போவது
ஒன்றுமில்லை; சேர் என்பதே பகுதி அல்லது முதனிலை என்பதை
விளக்க உதவலாம். சொல் எப்படி உருவாயிற்று என்பதைப் பேசுவோன்
அறிந்து ஆகப்போவது ஒன்றுமில்லை. சொல்லைப் பயன்படுத்திக்
கருத்தறிவிப்பதே பேசுதலின் தலையாய நோக்கு ஆகும்.
வழக்குக்கும் வாய்ப்புக்கும் மலாய், ஆங்கிலம் என்பவை எப்போதும்
பேசுவோனிடத்துத் தயார் நிலையில் உள்ளபடியால், பேசுவோனிடம்
அதிக முயற்சியையும் கருத்துத் தடைகளையும் வேண்டும் சொற்கள்
நளடைவில் நகர்ந்துபோய்விடும். இதனாலே, திரிபுகளுக்கு இதுகாலை
ஒரு தேவை உண்டென்றும் கூறலாம். பேசுவோனிடம் நெருக்கடி கொடுத்து மொழியை வளர்த்துவிடமுடியாது. ஊக்குவித்தல் என்பது
வேறு. பல திரிபுகள், சொற்களை எளிதாக்குபவை.
சேமித்தல் என்பதுபோல் அமைந்ததே நேர்மித்தல் > நேமித்தல் என்பதுமாகும். நேராக அழைத்து ஒருவனை ஒரு வேலையில்
வேலையிற் பணித்தல் என்பது ஆதி வழக்கமானாலும் இப்போது
பணிப்போலை மூலம் நேமித்தல் பெருவழக்கு ஆகும். இதுபற்றிய
எம் பழைய இடுகைகள் அழிந்தன.
சோதனை என்பதும் ஒரு சிற்றூர் வழக்கு. சோர்(தல்) என்பதினின்று
தோன்றியது இதுவாகும். ஒரு சோதனையானது, தன்னைச் சோர்வடையச் செய்துவிடும்.
சோர்+தன்+ஐ > சோ+தன்+ஐ = சோதனை.
அல்லது:
சோர் > சோ.
சோ+ தன் + ஐ = சோதனை.
தன் என்பது "தன்" என்ற முழுச்சொல்லாகவிருந்தாலும், து+அன் என்பதன் திரிதலாக இருந்தாலும், விளைவில் மாற்றம் இல்லை.
தன் - இடை நிலை; ஐ : விகுதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக