வியாழன், 22 ஜனவரி, 2015

முல்லைக்குத் தேர்கொடுத்துத் தன் புகழ் நிறீஇ......

முல்லைக்குத் தேர்கொடுத்துத்  தன் புகழ் நிறீஇப்  பின் பல நூற்றாண்டுகளிலும் மக்கள் மனத்தில் பரிவு அதிர்வுகளை விளைத்தவன் பாரிவள்ளல்.  அவனை  நினையாத புலவர்கள் தமிழக வரலாற்றில் இருந்திருக்க மாட்டார்கள்.  இலக்கணம் வரையும்போது கூட அவன் நினைவு நிகழ்கின்றது.

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் 
எல்லை  நீர் ஞாலத் திசைவிளங்கத்  --- தொல்லை 
இரவாமல்  ஈந்த இறைவர்போல்  நீயும் 
கரவாமல் ஈகை கடன்.  (பு.வெ .மா. 164.)

என்பது  ஐயனாரிதனாரின் பாட்டு.

எல்லை நீர் =  மிக விரிந்த கடல்.  இசை  = புலவர் பாடிப் பாராட்டும் புகழ்.  
தொல்லை =  முற்காலத்தே;    இரவாமல்  ஈந்த  = யாசிக்காமல் வழங்கிய;
இறைவர் =  மன்னர்கள் .  கரவாமல் =  இல்லை என்னாது.  

பரிசில் கேட்பான்  யார்யார் என்னென்ன கொடுத்தனர் என்று பட்டியலிட்டு, அவர்கள் போலவே  நீயும் எனக்கு அளிக்கவேண்டுமென்று பாடினால்,  அது, 
பாடாண் திணையில் "இயன்மொழி வாழ்த்து"  என்னும் துறை என்று புறப்பொருள் இலக்கணம் வகைப்படுத்தும்.

வள்ளன்மை  மரபு வழாது வழங்குக என்பதாம்.

அரண்மனைச் செல்வங்கள் எல்லாம்  நல்ல பொக்கம் உள்ள இடத்தில் பத்திரமாகப் பெட்டிக்குள் வைக்கப்படும்.  பொக்கமான இடத்தில் உள்ளது பொக்கிடம்  ஆனது. அது பின் பொக்கிஷம் ஆயிற்று.  பொங்கு+ அம்  = பொக்கம்.   ~ங்கு + அம் = ~க்கம் என்றே முடியும்.  செல்வங்கள் பொங்குமிடம் 
என்பதுமாம். பொங்குதல் = உயர்தல். rising;  height.  சிலர் கிடங்குகளில் வைத்திருப்பார். அங்கும் அது சற்று மேலெழுந்த இடத்திலேதான் வைக்கப்படும்.

செலவங்கள் குறைதல் ஆகாது என்று கொடுப்போன் எண்ணினாலும்,  மரபினைச் சுட்டிக் காட்டுகையில் என்செய்வது?  கொடுத்தலே கொள்ளத்தக்கது.
   


கருத்துகள் இல்லை: