சனி, 7 மே, 2016

சி போதம் பா 10. முன்பார்வை.

இது சிவஞான போதத்தின் 10‍வது பாடல்.

அவன் தானே ஆகிய அந் நெறி
ஏகன் ஆகி இறைபணி நிற்க‌
மல மாயை தன்னொடு வல்வினை இன்றே

என்பது பாடல்.

அவன் தான்  என்பன விளக்கம்.

இப்பாடலின் அவன் என்றது இறைவனை.  அவன் ஒருவனே. அவன்
இறைவன்.  ஒருமை ஆதலின் ஒருமைக்குரிய அன் விகுதி கொண்டு
கூறப்படுகிறது.  அஃதன்றி  அவன் ஆணுமில்லை; பெண்ணுமில்லை. அவனுக்குப் பால்  (ஆண்/ பெண் வேறுபாடு) இலது. அன் விகுதி வரக்காரணம் மொழிமரபு.


தான் எனறு அடுத்து ஓதியது  ஆன்மாவை. மனிதர் பலர் இருப்பினும் ஒன்றின் மேற்பட்ட பல இருப்பினும்,  ஒவ்வோர் ஆன்மாவும் இறையுடன் தனித்தனியே கவரப்படுவது ஆகும்.  ஒவ்வோர் ஆணியையும் காந்தம் தனித்தனி கவர்வது போன்றதே இது. தனி என்ற ஒரு பிரிவு தவிர, இறைக்கும் ஆன்மாவுக்கும்  வேறு பிரிவினை இல்லை. வேறு அடையாளங்களும் இல்லை.
அவன் என்னும் இறைக்கு வேறு அடையாளம் இலதுபோல, தான் என்னும் ஆன்மாவுக்கும் வேறு அடையாளமோ குறிப்போ இலது. வேறு அடையாளங்கள் எவையானாலும் அவை இந்த அவன்‍  தான்
உறவில் கண்டுகொள்ளப்படாதவை.  எனவே சிவ ஞானத்தில் அவனும் தானுமே.  ஞானம் என்பதில் அவன் ‍ ஞான் ( அவன், தான்). உண்மையில் அவன் என்பது அன்,  இது ஆண்பாலில் விகுதியாய் வரும்.  இதன் பாலியன்மை மாறவே, அன் எனற்பாலது  அம் என்பது ஆகும்.  ஆகவே ஞான் + அம்  =  ஞானம் ஆகின்றது. உலகிலும் அப்பாலும் ஞானும் அம்மும் ( அவனும்)  அன்றி வேறில்லை. இதுவே உண்மை.

சி போதம் பா 10. முன்பார்வை.-  அடுத்த இடுகையில் தொடரும்.


வெள்ளி, 6 மே, 2016

8 successful years ஒசாமாவை ஒழித்தவர் ஒபாமா

ஆரவாரம் இல்லாது சேர்த்த வெற்றி
அடுக்கினவர்  அழகுசெய உலகு ஒபாமா!;
ஊருகூறும் ஒற்றுமையை உலகி யைபை
ஒதுக்காமல் யாவரையும் அணைத்துச் சென்றார்
பேருவர வேண்டுமென்ற நோக்கம் தோய்ந்த‌
பெரும்போர்கள் எவற்றையுமே துவக்கி  னாரோ?
சேறுறுருவும் பொருளியல்சேர் குழப்பம் ஏழ்மை
சேராமல் தம் நாட்டைக் காத்த மேதை.

ஒசாமாவை ஒழித்தவராம் ஒபாமா ஓயார்
ஒன்றொன்றாய்த்   தீயாரை  ஒடித்துப்  போட்டார்!
திசாபுத்தித் திறமென்பார் கணியர்   !   ஆயின்
தேர்ந்ததொரு மூளைப் பலம்: தெரிவார் சொல்வார்.
அசாவாமை அவர் அரசின் இயக்க வேராம்
அழிகூத்தும் இழிகொலையும் இல்லா ஓட்டம்
கசாகூலம் ஆகிவிட்ட காய்கள் ஆளும்
காருலகில் ஏறொளிசேர் கனியாம் செம்மல்.


எட்டாண்டு வரம்புக்குள் ஏய நின்றே
இயல்வதெலாம் முடித்திட்டார் இற‌ங்கும் நேரம்
கட்டான அரசியற்றிக் கருத்தின் கோடு
கைவரவும் பெற்றவரிக் காலம் தோன்றும்
முட்டான கழிவுகளும் மூடம் தானும்
முனைவாரை மட்டுறுத்தி மெட்டுப் பாடித்
தட்டாமல் தம்வழிக்குள் இட்டுஒ   பாமா
தமக்கெளிதே இமையமெனும்  தலைமைச் செல்வம்.


சில அருஞ்சொற்கள்: மற்றும் குறிப்புகள்
வெற்றி  அடுக்கினவர் -  வெற்றிகள் பல பெற்றவர்  
அழகு செய  உலகு ஒபாமா:   இதனை   ஒபாமா உலகை  அழகு செய என்று  திருப்புக .
உலகை அழகுசெய்ய ஒபாமா பல வெற்றிகளை அடுக்கினார் என்று உரை நடைப் படுத்தவேண்டும்.
உலகு அழகு செய்ய வேண்டின் எல்லா இன்னல் இடர்களையும் அகற்றுவதில் வெற்றிகளை அடுக்கி ஆகவேண்டும்.
எதற்கு எது அழகு என்று பழ நூல்கள் கூறுமே.  எ-டு :  உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு என்று சொல்வது காண்க.
" அடுக்கினவர் ./  அழகுசெய / உலகொ /  பாமா "   என்று இசைக்க.
இயற்பெயரைப் புணர்த்தி எழுதவில்லை.சரியாக வாசிக்கவும் .
திசாபுத்தி  -   கிரகங்கள் இயங்குதல் .
கணியர் -  சோதிடர்.
அசாவாமை --- அசந்து போகாமை; தளராமை.
அழிகூத்து -  உலகை  அழிக்கும் செயல்கள்
இழிகொலைகள் -  ஒன்றும் அறியாரை வெடிவைத்துக் கொல்லுதல்
கசாகூலம் - குப்பை;  குழப்படி .
காய்கள் - முதிர்ச்சி இல்லாத் தலைவர்கள்.
கனியாம் -  பழுத்தவர் ஆனவர் (பட்டறிவு/ அனுபவம்  பெற்றார் )
காருலகில் -   இருண்ட உலகில்.
ஏறொளி  சேர் -   போகப்போக  ஒளி மிகுந்துவரும்;
சேறுறுருவும் பொருளியல்சேர் குழப்பம் ஏழ்மை  -  சேறு போல  ஊடுருவும் குழப்பம்  உடைய ஏழ்மை கலந்த  பொருளீயல் //நாட்டைக் கெடுத்துவிடாமல் காத்த என்று  இயைக்க .

ஓட்டம்  :  இது அரசு நடத்திச் செல்லுதல்  குறிப்பது.

ஏய -  பொருந்த.
இறங்கும்  - பதவிக் காலம் முடியும்;
கட்டான -  கட்டுப்பாடு உடைய ;
கோடு -   உச்சி;
கைவரவும் பெற்றவரிக் காலம் தோன்றும் -   கைவரவும் பெற்றவர்  இக்காலம்  தோன்றும் .
முட்டான   - முட்டுக் கட்டைகள் ஆன
 மட்டுறுத்தும் -  வரம்புக்குள் வைத்திருக்கும்

எப்படிநுழைந்தாய் வீட்டினுள்ளே

எப்படிநுழைந்தாய் வீட்டினுள்ளே
இடுப்படி கொடுத்து என்புடைப்பேன்
சொற்புனை வினிலே ஆழ்ந்திருந்தேன்
சூழலைக் கெடுத்தெனைச்  சுழலவைத்தாய்.

இரவினில் வருவது வாடிக்கையோ
இருப்பவை காண்பதும் வேடிக்கையோ
அரவினி வருமுனை விட்டுவைத்தால்
ஆதலின் உன் தலை குட்டுவைப்பேன்,

நறவெனச் சுவைப்பதெம் உணவினையோ
நானவை களைவதும் குணவினையோ
இறவினைத் தப்புக இனியொருநாள்
இவண்வரும் ஆவலுன் நினைவறவே.

வியாழன், 5 மே, 2016

வால்குழைத்தே.......!

குட்டியாய் இருக்கையில் கொடுத்தபால் சோற்றினையே
பட்டியாய்  வளர்ந்தின் னும்  பசுமையாய்   நினைவிருத்தி
சுட்டியாய்ப் பிறரஞ்சச்  சூரனாய்க் குரைத்திடினும்
முட்டிமோந்  தன்பினால் வந்தனை  வால்குழைத்தே

பூமாலையே தோள்சேர வா.! வரன்.............


அகப் பொருளிலக்கணத்தை  அலசிக்கொண்டிருக்கிறோம்.  புறப்பொருளிலும் புகுந்து  வெளிவருகிறோம். தமிழின் பல்வேறு செல்வங்களில்  இவையும் அடங்கும். வேறுபல செல்வங்களையும் பல்வேறு மக்கட்கு வாரி வழங்கியுள்ளோம். பிறமக்களிடமிருந்து பலவற்றைப் பெற்றுமிருக்கிறோம், இல்லையென்றால் மகிழுந்தில் பயணிப்போமா?

பூமாலை தோளுக்கு வந்துசேர வேண்டுமென்பது  வேட்கை முந்துற்ற  பெண்ணொருத்தியின்  இறைஞ்சுதல் ஆகும்.  இது எல்லை மீறிய காமம் பற்றி வந்த ஒரு வேண்டல் ஆதலின் புறப்பொருளிலே அடக்கப் பெற்று பெருந்திணை என்று வகைப்படுத்தப் படும்.

இதற்கான உதாரணச் செய்யுளை புறப்பொருள் ஆசிரியர் ஐயனாரிதனாரே  அமைத்துக்காட்டுகிறார்.

எழுது எழில் மார்பம் எனக்குரித் தாகென்று
அழுதழுது வைகலும் ஆற்றேன் ----- தொழுது இரப்பல்
வல்லியம் அன்ன  வயவேலோய் வாழ்கென
அல்லியந்தார் நல்கல் அறம்,  பு.வெ. 304

எழுது =  பல்வேறு சந்தனம் குங்குமம் நறுமணக் குழம்புகளால் வரையப் பெறும்;
எழில் -   அழகிய
மார்பம் -   உனது மார்பு;
எனக்கு உரித்து ஆக என்று -  எனக்கே உரியதாக வேண்டும் என்பதாக;
அழுதழுது வைகலும் ஆற்றேன் -   கண்ணீர் சிந்திச் சிந்தி ஒவ்வொரு நாளும் தாங்கமுடியாதவளாகிவிட்டேன்;

தொழுது இரப்பல் -  உன்னை மிக வணங்கி ப் பிச்சை கேட்கிறேன்;
வல்லியம் அன்ன -  வன்மையுடைய புலி போலும்;
வய வேலோய்  -  வீர வேலினை உடையவனே;
வாழ்கென =   என்னை  நீ வாழ்த்திக் கேட்டது தந்தேன் என்று;
அல்லி அம் தார் =  உன் அழகிய அல்லிப் பூமாலையை
நல்கல் அறம் -   நீ என் தோளுக்கு  அளித்தல்  உனக்கு அறமாகும்.

என்றபடி.

பூமாலையை  எனக்கு நீ தருவது உனக்கு அறம் என்னாது பூமாலையையே முன்னிலை ஆக்கி  வா என் தோளுக்கு என்று திரைப்பாடலில் போல அழைத்தாலும் பெருந்திணையாகவே கொள்ளல்வேண்டும்,

பண்டைக் காலத்து ஆண்களும் பல்வேறு நறும் பூச்சுக் குழம்புகளால் தங்கள்  மார்பிலும் உடலின் பிற  இடங்களிலும் வரிகளை எழுதி அழகு படுத்திக்  .கொண்டனர் .  போருக்குப் போகும்போதும்  மணமேடைக்குச் செல்லும்போதும் பிற நல்ல வேளைகளிலும் இவை  நிகழும் .  இத்தகு அலங்கரிக்கப் பட்ட ஆடவரைப் பெண்கள்   மணக்க விரும்பினர் .  அதாவது அவனை வரித்துக்கொள்ள  அவள் விரும்பினாள்.      இப்படி வரித்த ( வரிகள் எழுதிய )  ஆண் வரன்  (வரி + அன்)  எனப்பட்டான். வரி எழுதும்  வழக்கம் ஒழிந்து விட்டாலும் வரன் என்ற சொல் இன்றும் நம்மிடை உள்ளது.   வரிகள்  எழுதியவன் வரன்  என்பதை அகரவரிசை எழுதியவர்களும் மறந்துபோம் அளவுக்குக்  காலம் கடந்துவிட்டது . 

நல்ல வேளையாகச் சட்டை கிட்டை எல்லாம் அப்போது இல்லை. உடைகள்  மிகுந்த காலை இந்த வரிகள் சட்டை சேலை முதலியவற்றுக்கு மாறின .
பழங்காலச்   சீன நாடகங்களைப் பார்த்தால் வரிகள் எழுதும் பண்டைப் பழக்கம் கொஞ்சம் புரியும்.  யாரும் இப்போது   பார்க்காததால் இவை மேடைக்கு வருவது மிக அருகிவிட்டது.  1   இவற்றில் நடிக்கும்    சீன நடிகைகள்  வரைந்துகொள்வதும், மைதீட்டிக் கொள்வதும் பொட்டுவைத்துக்கொள்வதும் நம் கலாசார ஒற்றுமையைக் காட்டுகிறது.

குறிப்புகள்:

1  இது வாயாங்   (Chinese  Wayang )  எனப்படும்

will edit later. software error.





புதன், 4 மே, 2016

Forest meditation காட்டில் இயற்றும் தவம்

அரங்கநாதன் பத்தி (திருவரங்கக் கலம்பகம்)

காயிலை தின்றும் கானில் உறைந்தும் கதிதேடித்
தீயிடை நின்றும் பூவலம் வந்தும் திரிவீர்காள்
தாயினும் அன்பன் பூமகள் நண்பன் தட நாகப்
பாயல் முகுந்தன்  கோயில் அரங்கம் பணிவீரே

இந்தப் பாடல், இறைவனைத் தேடிக் காட்டிற்குச் சென்று காய் இலைகள் முதலியவற்றைத்  தின்றபடி  உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் சாமியார்களை அழைக்கிறது. ஒருவன் காடே வீடாகக் கொண்டு  இறையைக் தேடுவதில்  குற்றமொன்றும் இல்லை. நாட்டினுள்ளே இருந்துகொண்டு பல்வேறு கொள்ளை திருட்டு முதலியவற்றில் ஈடுபட்டுச் செல்வம் தேடி  உயர்வாழ்வை எட்ட நினைக்கும் புன்மை மாந்தனால் மக்கட்கு விளையும் கேடுகள் மிகப்பல. காவலர்களாலும் எங்கும் எல்லா நேரத்திலும் உலவ இயலாது ஆகையால் அவர்கள்  ஓரளவே பயன்படுவர்.

காட்டில் திரிந்து கட்டப்படுதலைக் காட்டிலும்  கோயிலில் சென்று வழிபடுதல் இன்னும் எளிது என்பதால்  இக்கலம்பகமுடையார் திருவரங்கத்துக்கு வந்து வழிபடுக என்றழைக்கின்றார்.  ஞான யோகத்தினும் பத்தி யோகம்  சிறந்த தென்கிறார் . மேலும் கானகத்தில் பூச்சிகள் பாம்புகள் பூரான்கள் முதலியவற்றால் துன்பம் நேரிட வாய்ப்புகள் மிகுதியாகும்.  ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிதாய் இருக்கும் ஆதாலால் எது உங்களுக்கு எளிதாய்க் கைவரும் என்பதை நீங்கள்தாம் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்து மதத்தில் வலிமை எதில் உள்ளது என்றால்  வழிபாட்டு முறைகளில்  முழுவதும் உங்கள் விருப்பப்படியே செல்வதற்கு உரிமையும்,  விடப்படுதலும் இருப்பதுதான்.  வீட்டிலிருந்துகொண்டே மனம் நிலை நிறுத்துதலும் (தியானமும்)  இயற்றலாம். தடையேதுமில்லை.

நாதன் உள்ளிருப்பதால் நமக்கு அச்சமென்பதில்லை.

நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே
சுத்திவந்து மொணமொணன்னு சொல்லுமந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டிச் சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

என்கிறார் சிவவாக்கியர்.   ஒரு ஞானியாவான் கிரியை  ( பல்வேறு  சடங்குகள் ) விலக்கிக் கொள்ளலாம். முற்றும் உணர்ந்த நிலையில் அவனுக்கு நட்டகல்லு எது?  அவன் மனமே!   அவன் சாத்தும்  நாலு பூக்கள் எவை?  அவன் மனமே!  அவன் அறியும் மந்திரங்கள் எவை?  அவன் மனமே!  நாதனே நாதமாய் உள்ளிருக்கிறான். மனமே சட்டுவமாகிவிடில்  கறிச்சுவை அறியலாகும் என்பது கருத்து.

 cannot edit now. editor hangs. will edit later.



வண்டிப் பயணத்தின்மேல் ஆசை

வாண்டாய் இருப்போர்க்கு வண்டிச் செலவாசை
தூண்டா நிலையிலும் துள்ளிக் குதித்தா டி
வேண்டாத வீணனுடன் வேறுபடா தோடியே
மாண்டாட் கிரங்கு மனம்.

On violence against children பிள்ளை கடத்தி..........

http://www.usatoday.com/story/news/nation/2016/05/03/new-mexico-girl-killing-arrest/83906060/

சிறுவர் சிறுமியர்க்குச் சீருடன்பார்  மீதில்
நிறுவிய நல்வாழ்வு நேர --- உருவிய
வாள்கொடு பின்செல்ல வேண்டுமோ இன்றெனில்
மாள்நெறி  மன்னுமோ தான்.

பிள்ளை கடத்திப் பிழைச்செயல் செய்வாரை
அள்ளியே கம்பி அறைக்குளிட்டு  ---- உள்ளுக!
நல்லன  நாடிடுக!  நாளைக்குள்  நேர்செலென்
றொல்லும்வாய் ஓங்கிச் செயல்.

பெற்றோர் கதறவே    பிள்ளையைக் கொன்றானை
மற்றோர் கணமுமே தப்பாமல் ---தெற்றின்றி
மன்றிலே  தீர்ப்பளித்து  மாலுதல் நீக்கியே
கொன்றொறுக்கக் கூடா கொலை.

வாள் கொடு  = வாளை எடுத்துக்கொண்டு 
மாள்  நெறி  = மரணத்தில் முடிதல் 
ஒல்லும் வாய் = இயன்றவரை 
தெற்றின்றி =  தவறுகள் இல்லாமல் 
மாலுதல் =  மயக்கம்  , ஐயப்பாடு 
கொன்றொறுக்க =  மரண தண்டனை விதிக்க;
கூடா =  அதிகம் ஆக மாட்டா. (கொலை கூடா )

செவ்வாய், 3 மே, 2016

தீபாவளியையும் இந்திய இசையையும் விரும்பும் முதல்வர்

சரவாக்  முதலமைச்சர்  அடனான்  இந்தியர்கள் பால்  பெரிதும் அன்பு கொண்டு ஒழுகுதலைத்  தம் நெடு நாளைய வழிமுறையாகக் கொண்டிருப்பவர் என்று அறிகிறோம். இவர் தீபாவளி  நாளில் இந்தியர்களைக்  கண்டு அளவளாவுதலுடன்  இந்திய இசையிலும் ஈடுபாடு உடையவர்.

ஏறத் தாழப்  பத்தாயிரம் இந்தியர்களே சரவாக்கில் உள்ளனர். ஆகவே சிறிய குமுகாயம்  (  சமுதாயம் ) தான் . இவர்களில்  இரண்டாயிரவர் தலைநகர்  கூச்சிங்கிலேயே  வாழ்கின்றனர்.

முதலமைச்சருக்கும் அவண்  வதியும்  இந்தியர்களுக்கும்  சரவாக்கியருக்கும் நம் வாழ்த்துக்கள் உரியனவாகுக .





அகமும் புறமும் - எல்லைகள்.



ஓர் ஆண்மகனும் பெண்மகளும் ஒத்த அன்பினால் செல்லாது
 மாறுபட்டு  நிகழ்வன அனைத்தும் பெருந்திணை  என்னும் திணையின்பால் கொள்ளப்பட்டன .  எடுத்துகாட்டாக மனைவியை நீங்கி இன்னொருத்திபின் சென்று அவள்பால் உள்ள காதலை ஒருவன் கூறுவதாக ஒரு பாடல் வருமானால் அது பெருந்திணை ஆகும்.  அதாவது எல்லை மீறிய காம ஒழுக்கம்.   பண்டைத் தமிழர் பண்பாட்டில்  இவை போற்றப்படவில்லை.

இன்னோர் எடுத்துக்காட்டு:   ஓர் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர்.   அந்த ஆடவன் அடக்கத்துடன் நிற்க
பெண் முந்திக்கொண்டு  நீ என்னை   உடன் கொண்டுசென்று என்னுடன்  கூடியிரு என்று  கேட்பாளாயின் அதுவும் பெருந்திணை  ஆகும்.   வேட்கை முந்துறுத்தல் என்னும்  துறை  இது.   இஃது  மாறுபாடான நிகழ்வு ஆகும்.

"கையொளிர் வேலவன்1 கடவக் காமம்
மொய் 1வளைத் தோளி  முந்துற மொழிந்தன்று."


என்பது புறப்பொருளின் கொளு.

கடவுதல் = தூண்டுதல்.

இத்தகைய  மாறுபாடான ஒழுக்கங்கள் புறப்பொருளில்  அடக்கப்பட்டன.  தூய ஒழுக்கங்களே அகப்பொருளில் ஏற்கப்பட்டன.

1 :   errors rectified


திங்கள், 2 மே, 2016

வம்மின் (சொல்வடிவம் ) > வம்மிசம்


இச்சொல் எங்ஙனம்  அமைந்தது  என்பதை  இங்கு விளக்கி இருந்தோம்

வம்மின் (சொல்வடிவம் )  >   வம்மிசம்

http://sivamaalaa.blogspot.sg/2014/07/blog-post_30.html



வருமின் என்பது வம்மின் என்றும் வரும். --  என்றால் வருக என்று பொருள்.

" நாள் முறை தபுத்தீர் வம்மின் ஈங்கு என "

என்ற புறநானூற்று வரியில் ( பெருந்தலைச் சாத்தனார்  - பாடல் 294) இதைக் காணலாம் .

வ + மிசை + அம்  =  வம்மிசம்

தலைமுறைகள் மென்மேலும் வந்துகொண்டிருப்பதே வம்மிசம் .

மிசை - மேல்.

இதில் ஐகாரம் கெட்டது .

இது ஒரு நாட்டுப் புற வழக்குச் சொல்.

கிழவியர் திட்டுப்போது " உன் வம்மிசம் கருவற்றுப் போக " என்று அலறுவர்.

வா என்ற பகுதி  வ என்று திரியும்.

வா  >  வந்தான் ;  

வா>  வருக. (அதாவது  வாருக  அன்று )

வா > வரு . அல்லது  வரு> வா .

வா  முதலா  வரு முதலா என்பது இருக்கட்டும்.

  


சனி, 30 ஏப்ரல், 2016

கவிஞன் அறிவுரை: ஆட்சியாளர் மதிப்பரோ?


கவிஞர், புலவர்,பாரதிகள் என்போரெல்லாம் உணர்ச்சி வயப்படுபவர்கள். உணர்ச்சி கலந்துவிட்டால் உள்ள விடயம் சிதைந்துவிடும்.  சிதைந்துவிட்ட, உருமாறிவிட்ட, பாலில் நெய் போல மறைந்துவிட்ட வரிகளிலிருந்து நடந்தவைகளை வெளிக்கொணர்ந்து உண்மை உருவைக் கொடுத்து மக்களிடம் தருவதென்பது,ஒருவகையில்  முயற்கொம்புதான் அன்றோ?
கவிதைக்குப் பொய்யழகு எனப்படுவதால், அந்தப் பொய்யைக் கலந்தபின் மெய்யைக் கண்டெடுப்பது எப்படி?

இதனால்தான் கவியரசர் கண்ணதாசனை,  நபிகள் நாயகம் வரலாற்றைக் காவியமாக்க வேண்டாம் என்று இஸ்லாமிய நண்பர்கள் கூறினர் போலும் --என்பது அனைவரும் அறிந்திருக்கக் கூடும்.

அப்படியானால்  கவிஞனொருவன்  அரசுக்கோ  ஆட்சியாளனுக்கோ வழங்கும் ஆலோசனைக்கும் அதே மதிப்பெண்தான்  கிட்டுமோ?

கிறித்துவுக்கு ஏறத்தாழ 300 ஆண்டுகட்கு முன் ஒரு சீனக்கவிஞன் இருந்தான், கவிஞன் மட்டுமோ?   அவனோர்  அரசியலறிஞனும் கூட.
இவன் பெயர் ச்யு யுவான்.  சூ என்னும் நாட்டின் மந்திரியாக அரசன் ஹுவாயின் பணியிலிருந்தான். அடுத்த நாடான சின்  தம் நாட்டின் மீது படையெடுத்து வருவது உறுதி என்று அறிந்துகொண்ட ச்யு யுவான், அரசனுக்கு ஓர் ஆலோசனை வழங்கினான்,  பக்கத்திலிருந்த ஐந்து நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு நட்பு நாடாகிவிட்டால் இந்த மிரட்டலைச் சமாளிக்கலாம் என்று உரைத்தான்.
அரசன்பால் மாறாத மன ஒருமைப்பாடும் நாட்டுப் பற்றும் இவன் கொண்டிருந்தான் என்றாலும்,  அவனறிவும் நேர்மையான போக்கும் வேறு மந்திரிகளுக்குப் பிடிக்கவில்லை.  வேண்டுமென்றே பல பழிகளை யவன்மேல்சுமத்தி, அவன் நேர்மைக்குக் களங்கம்  கற்பித்தனர். புகழைக் கெடுத்தனர். அந்த எதிரிகள் கொடுத்த அழுத்தத்தினால், அரசனும் தடுமாறி, ச்யு யுவானை ஹூனான் மாநிலத்துக்கு  நாடுகடத்தினான்.  பதவி இழந்த நிலையில் அவன் ஹூனானில் வாடினான். கொஞ்ச காலத்தில் அவன் கூறிய படையெடுப்பு உண்மையிலேயே நடைபெற்று,  மாற்றார்  நாட்டைப் பறித்துக்கொண்டனர்.  இதைக்  கேள்வியுற்ற ச்யூயுவான், தன் தாய் நாட்டின் வீழ்ச்சிக்கு மிகவும் இரங்கிச் சொல்லொணாத் துயரால் டோங்டிங் என்னும்  ஏரியில்வீழ்ந்து உயிர் நீத்தான்.இந்த அரசுக் கவிஞனின் நினைவாகச் சீனர்கள் இன்றுவரை கடல் நாக விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.

அரசியல் வீழ்ச்சி அடைந்தான் ச்யு யுவான் , என்றாலும்  அவன் நாட்டு மக்கள் அவனை மறந்தார்களில்லை. வெகு உயர்வாய் அவனையும் அவன் வாழ்க்கையையும் அவன் கவிதைகளையும் கொண்டாடினர். மிக்க நேரிய உயர் எண்ணங்களை வெளிப்படுத்தியவன் அவன். "சந்தித்த துயரங்கள்"  என்ற 373 பாடல்கள் கொண்ட காவியம் உயர்த்திக் கொண்டாடப் பட்டதாகும்.  கான்பூஷியஸின் கவிதைகட்கு அடுத்தபடியாக  அவன் கவிதைகள் வைத்து மதிக்கப்பெறுகின்றன . பண்டைச் சீனப் பேரரசின் எழுச்சித் தோற்றத்திற்கு முன் இருந்த காலத்தில், மேல் எல்லையைத் தொட்ட‌ சீனப் பண்பாட்டினைப் படம்பிடித்துக் காட்டும் இலக்கியங்களில் இவன் கவிதைகளும் ஒன்றாம். இன்னும் "ஒன்பது பாட்டுகள்"   " மேலுலகுக்கு விடுக்கும் கேள்விகள் " என்பனவும் இவனுடையவை ‍  யாங்ஸி ஆற்றங்கரை நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகளை ஆய்வு செய்வோர்க்கு இனிய உதவி நூல்கள் இவை  ஆகும். இங்குத்தான்  அவன்றன்  சூ நாடுமிருந்து  பகைவரிடத்து வீழ்ந்து மறைந்தது.  பின் போரிடு மாநிலங்களும்  (the Warring States ) ஒழிந்து  சீனப் பேரரசு உதயமாயிற்று.

பல் வடிவச் சொல்.

பல் வடிவச் சொல்.

இங்கு எல் என்ற சொல்லை எடுத்துக்காட்ட விழைகிறோம். இதற்குப் பல பொருள் உண்டெனினும், எலும்பு என்ற பொருளும் உளது. இன்னொரு திராவிட மொழியான மலையாளத்தில், இது எல் என்றே
இன்னும் வழங்கிவருகிறது. வழக்கில் உகரச் சாரியை பெறும்:

எல் > எல்லு.  ( உகரச் சாரியை).

சொல்லைப் பிறமொழிகளிற்போல் வெட்டி நிறுத்துவது திராவிடர்களுக்கு நாவருவதில்லை. ஆகவே எல் என்று நிறுத்தாமல்
எல்லு, எல்லூ என்றே இழுப்பர். சொல் சிறிதாயிருப்பின் நீட்டிக்கொள்வதில் இவர்களுக்கு மகிழ்ச்சி.  உபகாரமு  அப்பமு  -   தெலுங்கு.

தன் = (பொறு) சீனமொழி.
தங் > தங்கு  (தமிழ் ).  தங் என்று நிறுத்தார். தங்கு என்று நீட்டுவர்.

ஆகவே எல் என்ற சொல் நீண்டுவிட்டது.

எல் > எல்+ உம் + பு =  எலும்பு. உம் வந்து சொல் நீட்சி பெற்றது.

எல் + பு =  என்பு.   ல் > ன்  என்று திரிந்தது.

கோவிந்த்  என்னார்;  கோவிந்து அல்லது கோவிந்தன் என்பர்.

சொல் நீட்சியினால் வடிவங்கள் பலவாயின,

ஒரு வாட்டி, இரண்டு வாட்டி...

ஒரு  வாட்டி, இரண்டு வாட்டி...
ஒரு தரம், இரண்டு தரம்,
ஒரு முறை, இரண்டு முறை,
ஒரு தடவை, இரண்டு தடவை, மூணு தடவை....


இதெல்லாமும் தெரியவில்லை என்றால். ஒரு டைம், இரண்டு டைம்
என்பீர்!

மருந்தாக அல்லது உணவாக இருந்தால், ஒரு வேளை, இரண்டு வேளை.

வேளை என்பது டைம்! டைம்ஸ்.

இதெல்லாமும் பிடிக்கவில்லையோ!

இருக்கவே இருக்கிறது....

ஒரு விடுத்தம், இரண்டு விடுத்தம்......

ஏன் கடன்வாங்கவேண்டும்>

நிறைய சொற்கள் உள்ளன. உங்களை எதிர்பார்த்துத்தான்.

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

ஆரூடம்.

இது தேர்தல் பருவகாலம்  (சீசன்)  ஆதலால் தேர்தல் ஆரூடங்கள் பல அவ்வப்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவற்றை அறிந்துகொள்ள மக்கள் முந்தவே தாளிகைகளும் போட்டிபோட்டுக்கொண்டு ஆருடங்களை அச்சேற்றியவண்ணமிருக்கின்றன.

அதனால் ஆரூடம் என்ற சொல்லை ஆராய்தல் நன்று.

ஆர்தல் -  நிறைதல்.

வளமார் தமிழ் -   வளம் ஆர் தமிழ் -    வளம் நிறைந்த  தமிழ்.
எழிலார் நங்கை =   எழில் நிறைந்த நங்கை.

ஊடம் என்ற சொல்தான் உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டுமே.

ஊடு =   ஒன்றில் உட்புகுந்து செல்லுதல்.
ஊடு+ உருவுதல்:  =  ஒன்றில் உட்புகுந்து  மறுபக்கம் தோன்றுதல். வெளிப்படுதல்.  ஊடுருவுதல்.
ஊடகம் என்ற சொல் :  ஊடு+அகம். பல விடயங்களிலும் புகுந்து செய்தி சேகரிப்பவர்கள்.

ஊடு+ அம் =  ஊடம் (எதிர்கால விடயங்களில் புகுதல்.)

இதிற் புகாவிடில் நிறைவு இல்லை.  புகுந்து ஆய்ந்து சொன்னாலே நிறைவு. இதுதான் ஆர் என்ற சொல் நமக்குத் தெரிவிக்கிறது.

ஆர் + ஊடம் = ஆரூடம்.

இதைச்  சில ஆண்டிகளில் முன்  வெளியிட்டிருந்தேன். வெளியிட்ட வலைத்தளம் இப்போது மூடப்பட்டுவிட்டது

இ தன் படியைத் தேடிக்கொண்டிராமல், இதைப் படித்து
இன்புறவும்.  

புதன், 27 ஏப்ரல், 2016

குற்றவாளியும் சட்டமும்

இல்லா தனசொலும் குற்ற வாளியை
நல்லா ரைப்போல் நடத்தலும்  அருஞ்செயல்
சொல்லான் இவனெனச்  சூழநின்  றதட்டினும்
கொல்லாப் புடைக்கா மெல்வழி மேற்கொளல்.

கடமை செய்தலில் காணும்   கோடிது
கடிதே  ஓச்சுதல்  எறிக மெல்லவே
கடுமை  வேண்டினும் கொள்ளல்  சொல்லிலே
உடமை உயிர்கொளல் சட்டத் துரிமையே.




புறநா: காற்றால் எழும் பறையோசை .........போர்! போர்

இலக்கிய இன்பம் வயப்பட விழையும் எவரும் புறநானூற்றினை நெடு நாட்களுக்கு மறந்துவிட்டு நாட்கடத்திவிடுதல் இயலாதது. நம் ஒளவைப் பாட்டியையும் எண்ணிப்பார்க்காமல் இருந்துவிடல் முடியாதது.  அவர்தம்  பாடலொன்றை இப்போது நுகர்வோம்.

இழையணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல்
பொருநரும் உளரோ  நும் அகன்றலை நாட்டு என
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே
எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவன் மள்ளரும் உளரே அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொருது  எண்கண் கேட்பின்
அதுபோர் என்னும் என்ஐயும் உளனே    89

 உரை :

இழையணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல்   -  அழகிய மணிகள் பொருந்திய பெற்றுக்கொள்ளும் பெற்றியை  உடைய வளைந்த  இடை  அமைந்த;

மடவரல்  உண்கண்  -  மடம்பொருந்திய அழகிய கண்களும்

வாள் நுதல் -   வாளைப்போன்ற நெற்றியுமுடைய;

விறலி -    கலைபயிலும் நங்கையே!  ( பெரும்பாலும் பதினாறு வயதினள் ;   தொண்சுவையும் காண்போர் நுகர நடனம் ஆடுபவள் ....)

பொருநரும் உளரோ  நும் அகன்றலை நாட்டு என  - போர் செய்வோரும்  இருக்கின்றனரோ உன் பரந்த நாட்டில் என்று;

வினவல் ஆனாப் பொருபடை வேந்தே -  கேட்டு அமையாத போர்ப்படைகளையுடைய  அரசே!

எறிகோல் அஞ்சா அரவின் அன்ன -  குச்சியால் அடிக்கும்போது அஞ்சாமல் சீறும் பாம்பினைப் போல;

சிறுவன் மள்ளரும் உளரே அதா அன்று -  சிறிய வன்மைவாய்ந்த  போர்வீரர்களும் உள்ளனரே; அதுமட்டுமில்லை;  ( சிறு  -  வன்மள்ளர் )

பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை  - கூடத்தில் கிடத்தித்  தோல் வாரால் கட்டி வைக்கப்பட்டுள் ள போர்ப் பறைகளில்

வளிபொருது  எண்கண் கேட்பின்  -  கொஞ்சம் காற்று வந்து மோதிப் பறையோசை கேட்டால்

அதுபோர் என்னும் என் ஐயும் உளனே -  அதைக் கேட்டுப் போர் வந்துவிட்டது என்று  கிளம்பும்  என் தலைவனும் இருக்கின்றானே.

எண்கண் = எண்மைக்கண் = எளிமையானவிடத்து = கொஞ்சம்.

ஐ = தலைவன்; மன்னன்.

காற்றால் எழும் பறையோசை .........போர்! போர் என  எழுதல்.  என்னே   தமிழர்  தயார்  நிலை .............

படித்துச் சுவைத்தபடி இருங்கள் . பின்  இது  பற்றிப்  பேசுவோம் 

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

சகம் > சகா.

சக்களத்தி என்ற சொல்லின் அமைப்பினைக் காண்போம்.

ஒரே அகத்தில் (வீட்டில் அல்லது இடத்தில்) ஒன்றாக இருத்தலே சகம் என்பதாகும்.

உலகம் என்ற பொருளில் வரும்  ஜெகம் என்பதும் சகம் எனவரும். அந்தச் சகம் வேறு. அதை முன் யாம்  விளக்கியதுண்டு. அது முன் வந்த இடுகைகளில் இங்குப் பதிவுபெற்றுள்ளது.

இப்போது யாம் கூறவந்த "சகம்".

சகம்+ களத்தி = சகக்களத்தி.   மகர ஒற்றுக் கெட்டது.

இனிச் சகம் என்பதை மட்டும் காண்போம்.

சரி+ அகம் = சகம்.  இதில் உள்ள "ரி" எழுத்தையும்  "அ" எழுத்தையும் விலக்க, சகம் வரும்.

சரியகம் >  ச (ரிய) கம் =  சகம்.

இது ஒரு புனைவுச் சொல்லே.

இதை அமைத்த புலவர்கள் நல்ல படைப்பாளிகள்.

தமிழில் இடைக்குறை, தொகுத்தல் (சில எழுத்துக்களை விலக்குதல்) முதலிய உண்டு. பெரும்பாலும் கவிதைக்கு இவை
பயன்பட்டன.  என்னில் > எனில்  இல்லது > இலது, இப்படிப் பல.

இதைச் சொல்லமைப்புக்குக் கையாண்டது  மிக்க நல்ல உத்தி.


உயிரில் தொடங்கிய பல சொற்கள் உயிர்மெய்யாகத் திரிந்துவிட்டன என்று முன்பு யாம் மொழிந்த வழிச்சென்று, இதையும் உட்படுத்தி உரைப்பினும் ஏற்கத்தக்கதே.  அகரம் சகரமானதற்கு இங்கு ஒரு
காரணம் உண்டேயன்றித் திரிபு பொறுத்தவரை மாற்றம் இலது.

சொற்களின் நீட்டம் குறைத்தலில் குற்றம் ஒன்றும் இலது.

சகம் > சகா.

நன்றாகத்தான் இருக்கிறது.  இதைத் தமிழெனினும்  அன்றெனினும்  அதனால் விளைவு யாதுமிலது.


வெள்ளை அழகே ..... meaning

கறுப்பரொடு  ....  என்னும் இடுகை 

தொடர்ந்து:

வெள்ளை  அழகே கருப்போ அழகின்மை

எள்ளி  இதுசொல்வார் சொல்லுக்கு ‍‍‍----\\உள்ளுவது

யாதென்பீர் ;  யாதானும் சாதி  கறுப்பரொடு\

தோதில்லை என்பாரின் மாட்டு


பொருள்: 




வெள்ளை  அழகே  : உடல் வெள்ளையாக இருந்தால் அவள்தான்

அழகி;

கருப்போ அழகின்மை  ‍‍:  கறுப்பு நிறமானால் உடல் அழகு இல்லை.

எள்ளி : பரிகாசம் செய்து;

இதுசொல்வார்  ‍‍‍ :  இப்படிச் சொல்லுகிறவரின்;

சொல்லுக்கு உள்ளுவது :  வாய்ப்பேச்சுக்கு நீங்கள் நினைக்கும் பதில்;

யாதென்பீர்  : என்னவாய் இருக்கும் சொல்லுவீர்  

யாதானும் சாதி :  நீங்கள் சொல்லும் உங்கள் சாதி எதுவாயினும்;


கறுப்பரொடு :  கறுப்பாய் உள்ள  உங்களுடன்


தோதில்லை என்பாரின் மாட்டு :  தமக்கு எந்தத் தொடர்பும் வேண்டாம் என்பவரின் இடத்து.

மாடு : மாட்டு ,  இடம்  இடத்தில் என்ற பொருள்.  கால் மாடு
தலை மாடு என்ற வழக்கை நோக்குக.

சொல்லுக்கு  உள்ளுவது:  இதன் பொருள் ,  அவர் சொல்லுக்கு நினைப்பதன்றிச்  செயல்   ( நாமும் ஏதும் செய்தல்  )  மேலும் கசப்பு  விளைக்கும் ஆதலால்,   சொல்லுக்கு என்பது அழுத்திக் கூறப்பட்டது  என்பது அறிக. சொல்லுக்கு நாம் அறிவார்ந்த முறையில்
செயல்படுவது  "எண்ணுதல்"  ஆதலால் " உள்ளுதல் " என்ற சொல் பயன்படுத்தப் பட்டது.

தோது  connection, affinity, dealings etc. 

இதுவே பாடலின் பொருள்.

வேறொரு இனத்தவர் உங்களுடன் கொள்ளும் தொடர்பு   மணம் பற்றியதாகவோ  வணிகம்  அல்லது  வேறு எது  பற்றியதாகவுமோ   இருக்கலாம். உறவே வேண்டாம் என்பவரை நாம் வற்புறுத்த முடியாது.
ஊருக்குள் ஒரே சாதிக்குள் கூட இவளைப் பிடிக்கவில்லை  அவள்தான் வேண்டும் என்று போராடுகிறவர்களும்  இருக்கிறார்களே ! ஒரு காரணம் இல்லாவிட்டாலும் இன்னொரு காரணத்தைக் கண்டுபிடித்துச் சொல்வது  எளிதாயிற்றே. பல் சரியில்லை என்று சொல்லி விட்டால் என்ன செய்வது ?  அதனால் எந்த விடயமானாலும் உங்களுடன் ஒத்துப் போகிறவர்  வரும்வரை பொறுமையுடன் இருக்கவும். பெண் வேண்டுமென்று  உங்களை விரும்பினாலும் பெற்றோர்  வேண்டாம் என்றால் விட்டுவிடுவதே அறிவுடைமை.
நம் பண்பாட்டில் /  கலாச்சாரத்தில்  திருமணம் என்பது  தனி இருவரின் 
முடிவன்று.  திருமணத்தின்பின் பல உறவுகள் கிளைத்தெழுகின்றன.  மாமனார், மாமியார் ,  அவர்கள் உறவினர்கள், கூட்டத்தார் என்பனபோன்றவை  அவை. இவற்றையெல்லாம் எளிதில் கையாண்டுவிட  முடியுமோ? வரதட்சினை1  (வரனுக்குத் தக்க இணையான  பொருள் )  வேறு இருக்கவே இருக்கிறது. 
------------------------------------------------------------------------



1  தக்க இணை > தக்கிணை  >  தச்சினை > தட்சிணை.

The typing presentation  (lines ) here could not  be justified.  We do not know how ir appears on your screen. You may report.  Presentation errors seem inherent. 



திங்கள், 25 ஏப்ரல், 2016

காதற்பரத்தைக்கு அறிவுறுத்துதல் - குறுந்தொகை

இப்போது குறுந்தொகையிலிருந்து  மாங்குடி மருதனாரின் ஓர் இனிய பாடல்.இவர்  ஒரு நல்லிசைப் புலவர்.  பாண்டியன் நெடுஞ்செழியனின் அவையில்   தலைமைப் புலவர். "மாங்குடி மருதன் தலைவனாக  உலகமொடு நிலைஇய  பலர்புகழ் சிறப்பின் " என்ற வரிகள் வரும்   நெடுஞ்செழியனின் புறநானூற்றுப் பாடலால் இதனை அறியலாம்.


பாடல் இது:

கணைக்கோட்டு வாளைக் கமஞ்சூல்  மடநாகு
துணர்த்தேக் கொக்கின்  தீம்பழங் கதூஉம்
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண்பெரும் பவ்வ மணங்குக தோழி
மனையோள்  மடமையிற் புலக்கும்
அனையேம்  மகிழ்நற்கு யாம்ஆயினம் எனினே

.
164. ( குறுந்தொகைப் பாடல்.)



என்பது காதற்பரத்தை தலைமகளின் தோழி வந்து கேட்க அவளுக்குச் சொல்லியது.
கணைக்கோட்டு = திரட்சியான நெடுமூக்கினை உடைய.
வாளை - வாளை மீனின்
கமஞ்சூல் - அடர்ந்த கருவினைக் ;கொண்ட;
மடநாகு - மடம் பயிலும் இளம் பெண்மீன்;
துணர்த்தேக் கொக்கின்  - இலை முதலியவற்றுடன் கூடிய கொத்தான
மாவின்;
தீம்பழங் கதூஉம் ;- இனிய (மாம் )   பழத்தைக் கௌவித் தின்னும்.
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது --- பழங் கால வேளிரின் குன்றூரின் கிழக்கே;
தண்பெரும் பவ்வம் -   தண்மையான பெருங்கடல்;
அணங்குக  தோழி -   என்னை எடுத்துக்கொள்ளட்டும் தோழி;
மனையோள்  - தலைவி ; மனைவி .
மடமையிற் புலக்கும் -  எண்ணிப்பார்க்காமல்  குறைத்துப் பேசிப்  பிணங்கும்  ;
அனைத்தேம் ஆயினேம்   -  அப்படிப்பட்டவளாய் யாம் ஆகிவிட்டோம் ;
மகிழ்நற்கு எனினே -    தலைவருக்கு என்னும்போது ..


கமம் = நிறைவு.  அடர்வு. 
மடம்  :  அச்சம் மடம். நாணம் , பயிர்ப்பு  என்ற நான்கனுள் மடம்  கவடு  சூது இலாத நேர்மை; அறியாமை..  
தேம் +  கொக்கு  =  தேக்கொக்கு   கொக்கு என்றது மாமரத்தை.
தீம் பழம் :  தீம் எனில் இனிய.
தொன்று <  தொல்.  மிகப் பழைய .  தொல்+ து =  தொன்று.   
தொன்று தொட்டு  என்பது காண்க.  முதிர் =  மூத்த.
குணக்கு =  கிழக்கு.   குண +  அது =  குணாது.     குணா அது என்று அளபும்  எடுக்கும்.

இப்பாடலில் காதற்பரத்தை சொல்வது : நான் வலியத்  தலைவனிடம் போகவில்லை;  பெண்வாளை மீன் மாம்பழம் கிடைக்கப்பெற்று உண்பதுபோல அவர் என்னிடம் வந்தார், நான் ஏற்றுக்கொண்டேன்.   அவ்வளவே.   மனையறத்தைக் கெடுக்க நான் ஒன்றும் முற்படவில்லை. மனையோள்  என்னை வையுமுன் எண்ணிப் பார்க்கவேண்டும்.  நான்  கேடு  சூழ்பவள் ஆயின், முது வேளிரின் கடல் என்னை எடுத்துக்கொள்ளும்,... என்பது.

காதற்பரத்தையும் ஒரு தன்மானி  ஆகின்றாள். பெண் வாளை மீன் மடமுடைத்தானது  போல இவளும் மடமுடையாள்.

அரசியையும் அரசிளங்குமரிகளையும் ஏனைக் குலமாதர்களையும் காத்தற்குக் காதற்பரத்தை, இற்பரத்தை போலும் வசதிகள் பண்டைத் தமிழர் குமுகத்தில் தடையின்றி விடப்பட்டன. தம்மை அடக்கிக் கொள்ள இயலாத ஆண்கள் அங்குச் சென்று உலவி வந்தனர். அரண்மனைப் பெண்களைக் கண்டு தலைகிறுக்கம் அடைந்தவனுக்கு
இத்தகைய கதவுகள் திறந்திருந்தன. இல்லையென்றால் இளைஞர் பலர்   அம்பிகாபதிகளாகி அறுபட்ட தலையினராய் மடிந்திருப்பரல்லரோ











ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

கறுப்பரொடு தோதில்லை ?


வெள்ளை  அழகே 

கருப்போ அழகின்மை

எள்ளி  இதுசொல்வார் சொல்லுக்கு ‍‍‍----\\

உள்ளுவது

யாதென்பீர் ;  யாதானும் 

சாதி  கறுப்பரொடு\

தோதில்லை 

என்பாரின் மாட்டு


பாடலின் பொருள்:  http://sivamaalaa.blogspot.com/2016/04/meaning.html

வெள்ளைத் தோல் இல்லையென்றால் தாழ்வென்று ஒதுக்கும்  வெள்ளையரிடத்து, கருப்பில் உயர்வென்று கழறுவோர் கூறத்தக்கது யாது என்பது இங்கு எழும் கேள்வி.

இதைப் படிக்கவும் :

https://sg.style.yahoo.com/post/143299017343/a-mixed-race-woman-outs-tinder-date-who-suggested

A Mixed-Race Woman Outs Tinder Date Who Suggested She Should Bleach Her Skin

உண்டிக்கு உழல்வரோ பின் On 'el nino.

நீனோவின்  தாக்கம் நிலம்காய்ந்து நீர்வற்றி
வானோ மழைகுன்றின் வாகிழந்து  ----  காணாரும் 
கண்ட நம்  அண்டையரும்   மண்டையிடி கொண்டுதவித்
துண்டிக் குழல்வரோ  பின்.

நீனோ என்பது
El Niño is a climate cycle in the Pacific Ocean with a global impact on weather patterns. The cycle begins when warm water in the western tropical Pacific Ocean shifts eastward along the equator toward the coast of South America. Normally, this warm water pools near Indonesia and the Philippines.Aug 20, 2015 ----  விகிபிடியா 

வாகு  =  ஒழுங்கு ; இங்கு இயற்கை நடைமுறை ஒழுங்கு .
காணார் -  நாமறியாத பலர்; பொதுமக்கள்.
அண்டையர் -  நாம் அறிந்தவர்கள்.  இங்கு ஐகாரக் குறுக்கம்.
மண்டையிடி :  இங்கும்  ஐகாரக் குறுக்கம்.
மண்டையிடி என்பதை மண்டயிடி  என்றும்  அண்டயர்  என்றும் அலகிடவேண்டும்.

கண்ட நம்  அண்டையரும்   மண்டையிடி கொண்டுதவித்(து )  :  இந்த அடி
முற்றெதுகை.

Enjoy if u like it.











சனி, 23 ஏப்ரல், 2016

Perak River dry-up எல்நீனோ மாறாதோ


பேராக்கு  ஆறும்  சேறாகிக் கல்தெரிய
நீரோடும் நிலைமாறி நெஞ்சும் பதைத்ததே!

மீனோடு சந்தைபோம் மீனவ நண்பர்களும்
வானோடு இறைஞ்சிக் கூனாகி மலைந்திடுவர்.

இயங்கிப் படகுகள் இடிபட்டும் உடைபட்டும்
தயங்கிச் செல்வனவாம் தாழ்ந்திட்ட தண்ணீரே.

வெந்துயிர்கள் அழிய விடுவனோ எழில்ஞாலம்
தந்தருளிக் காக்கும் தன்னேரில் தலைவனுமே.

இந்த நிலைதொடரின் எப்படி வாழ்வரிவர்
நொந்து குடிகெடவோ  எல்நீனோ மாறாதோ

மாறியே இனிவருக மாரியும் நீருமின்னல்
தீரும் வழியே  தெளிநிலையே வந்திடுக.

தென்கிழக்கு நாடுகளில் தெண்ணீரும் முன்போல‌
உண்ணீராய் உயர் நீராய் விளங்கிடுக இனிமிகவே.


This is rewritten from a lost poem today. Editor error.
Will review/

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

poetry topic: DEATH OF WIFE.

வண்ணான்  ஆடை  துவைத்தல்  தப்புதல்  என்றும் சொல்லப்படும். ஆகவே வண்ணான் தப்பிப் பிழைக்கிறான் எனில் அதன் பொருள் தெளியக்கூடியதே.1

குற்றவாளி தப்பிவிட்டான்  என்று காவலர் கூறுவதுண்டு.  இதற்கு  "escaped" -- நேரான ஆங்கிலச்  சொல் .

பயனற்றுப் போவது,  பிறழ்வது,  காணாமற் போதல், விலகுவது ,   பிழை செய்வது,  தவறுவது,  விட்டுப்போவது,   இடர்  நீங்குதல் ,  இறப்பது  எனவும் பொருள் தரும் "தப்புதல் "  பலபொருள் ஒருசொல். இப்பொருள்கள் வரும் வாக்கியங்களைக்  குறிப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.

தப்புதல் (இறத்தல்)  என்பது,  தபுதல் என்று இடைக்குறையும்  2.  இதில் ஒரு பகர ஒற்று ஒழிந்தது.   என்னில் > எனில்;  இல்லாது > இலாது  என்றெல்லாம் வருவன போலவே.

தாரம் என்பவள் கணவனுக்குத்  துணை தருபவள்;  பிள்ளைகள் தந்து குடும்பம் போற்றுபவள்.  தாரம்  : முதனிலை  திரி  தொழிற்பெயர்.

தபுதாரம் -   தாரம்  இறத்தல்.   இது குறித்த பாடல்.

இது தொல்காப்பியத்தில்  தபுதார நிலை எனப்பட்டது.

தபுதாரம் -  வினைத்தொகை.   தாரம் த(ப் )புதல்.

இது குறித்த பாடல் ; அதில் வரும் வரணனை .


1.  தமிழ்க் களஞ்சியம்  -   அறிஞர்  க. ப. மகிழ்நன்  .  
       ( "மகிழ்நன் பேசினார்;  அவரே சங்க இலக்கியம்; சங்க இலக்கியமே அவர்"  என்று  திரு வி க  அவர்களால் புகழப்பட்டவர்.    ) 
2   மறைமலையடிகள்.

இது  பிற அறிஞரால் விளக்கப்பட்டது.  அதனால் அவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளேன்.

will edit,

Ind: விருந்தா வனமும் தேர்தல் களமும்

விருந்தா வனத்துப் பச்சையும் பூக்களும் விருந்தா  வனதேன்  ஈக்கண்களில்
அருந்தா மனத்தோ டங்குமிங்  காகவே பறந்தன பறந்தன தேடலிலே

பொருந்தும் ஒருபூ பூத்தவை தம்மிலே எந்தப் பூவதோ சொந்தமுற.

இருந்தது அங்குசென் றிணைந்ததும் ஒழிந்தது வருந்துதல் தேனீ அருந்தியதே.



தேர்தல் களமென்ன விருந்தா வனமோ
வேட்பா ளர்களும் பூக்க  ளாமோ
ஊர் வாழ் மக்களும் தேனீக்கள் தாமோ  
ஆர்தேன் பெறாவிடில்   நீர்விழியோ

கடல் குடித்த மாமுனிவர்!


http://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_21.html

தொடர்வோம்:

பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடு யாவும்
கடல் கொண்டது.    கடல்கோள் நிகழ்ந்ததாகவே தமிழ் நூல்களும் சங்கத நூல்களும் குறிப்பிடுகின்றன. அண்மையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமொன்று தென்கடலில் கண்டுபிடிக்கப்பட்டது. நாம் குறிப்பிடுவது, ஏறத்தாழ் 5000 ஆண்டுகட்குமுன் நடந்த கடல்கோள். பின்னும் நிலத்தை விழுங்கிய கடல்கோள்கள் நிகழ்ந்தன என்பதையே பின்னாள் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.

இரண்டாம் சங்கமும் தமிழ் நூல்களும் அழிந்தபின், தொல்காப்பியர்
தம் இலக்கண நூலை இயற்றினார். தொன்மையைக் காக்க இயற்றினதால் அது தொல்+ காப்பு+  இயம்  = தொல்காப்பியம் என்று பெயரிடப்பெற்றது.
அப்போது அகத்திய முனி எங்கிருந்தார் என்பதற்குத்   தொல்காப்பியத்தில் ஆதாரமில்லை. அதாவது ,பாயிரமோ எந்த நூற்பாவுமோ  அகத்தியரைக் குறிப்பிடவில்லை. இருந்தாலும்
அகத்தியர் தொல்காப்பியரின் ஆசிரியர் என்றும் அவர் அப்போது அங்கிருந்தார் என்றும் வைத்துக்கொள்வோம்.  தமிழ் என்ற சொல்லும் அமிழ் என்ற சொல்லினின்று அமைந்தது என்றும் வைத்துக்கொள்வோம். தொல்காப்பியம் இயற்றப்பட்டபின் வெகுகாலத்துக்குக்  குறிப்பிடத் தக்க  கடல்கோள் யாதுமில்லை.

 அப்போது மீண்டும் கடல் பொங்கும் என்று எதிர்பார்த்திருந்த தமிழ் மக்கள், அது பொங்கவில்லை என்று கண்டனர்     பொங்காதது ஏன்
என்று வியந்திருக்கலாம்.  அகத்தியர் கடலைக் குடித்துவிட்டதால்
பொங்கவில்லை என்று எண்ணி, அவருக்குக் கடல் குடித்த மாமுனி
என்று பெயரிட்டிருக்கலாம் என்று  சொன்னால்  அது நம்பிக்கையினால் சொன்னதென்று விடல் தகும். நாளடைவில் இதைச்சுற்றித் தொன்மக் கதைகள் புனைவுற்றிருக்கலாம்.

அங்ஙனமாயின் கடல்குடித்தமைக்கு ஒரு காரணம் கிட்டுகிறது.
ஆனால் முன் இடுகைக் கருத்துக்களுக்கு அது இசைவாகுமா என்பதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்.


வியாழன், 21 ஏப்ரல், 2016

கடலுண்ட அகத்தியர்.


கடலென்பது மிக விரிந்த நீர்ப்பரப்பாதலின், அதனை அப்படியே உண்டுவிடவோ குடித்துவிடவோ முடியாது. கடல் குடித்தார் என்று தமிழிற் சொன்னால், கடல் நீரைக் குடித்தார் என்றுதான் பொருள்.அது உப்பு நீரானதால் எடுத்துக் குடிப்பதற்கு ஏற்றதன்று எனப் பெரும்பாலும் ஒதுக்கப்படுவது ஆகும். கடல் குடி நீரன்று, குடித்தார் எனப்படுவதாலே
கடலை முழுமையாகக் குடித்து மாயவித்தை காட்டியவர் என்று சிலர் சிந்தித்து, ஒரு கதையைக் கட்டிவிட்டனர். யாரிடமும் சென்று நீர் என்று இரந்து பெறாமல், கிட்டாப் போதில் கடல் நீரையே  அருந்தி வாழ்ந்தார் என்று சொல்வதே ஓரளவு   பொருத்தமானது. இப்படிப் பொருள் கொண்டால் கடல் என்பது ஆகுபெயராய்க்  கடல் நீரைக் குறிக்கும். கடல் வேறு; அங்குக் கிடைக்கும் நீர் வேறு. அதாவது கடலைக் குடிப்பது வேறு;  கடல் நீரைக் குடிப்பது வேறு.  கவிதைகளில் ஒழுங்காய்ப் படிக்காவிட்டால், பொருள் மயக்கம் உண்டாகும்..
  மேலும் இவருக்கு அகத்திய  என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்று சிந்திக்கலாம். அகத்தி என்பது மருத்துவக் குணங்கள் பல‌
அடங்கிய ஒருகீரை வகை ஆகும். அகத்திக் கீரை உண்டதாலோ,
அகத்திமரத்தை விரும்பியதாலோ, அகத்தியை மருந்தாகப் பயன்படுத்தியதாலோ இப் பெயர் இவருக்கு ஏற்பட்டிருக்கலாம்,
பெரிதும் வீட்டிலேயே அல்லது குகைகளிலேயே தங்கித்  தவமேற்கொண்டதால்  இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஆத்துக்காரன்,
(அகத்துக்காரன்),  ஆத்துக்காரி ( அகத்துக்காரி ),  ஓரகத்தி  (ஓர்
அகத்தி ) என்ற சொற்களையும் ஆய்தல் வேண்டும்.  அகத்தி என்றால் வீட்டுக்குள் இருப்போள், இருப்போன் என்று பொருள்.
இதை யாரும் ஆய்ந்ததாகத் தெரியவில்ல.

இன்னும், குடித்து என்றால் குடியை உடைத்து அதாவது குடியை உடைய என்றும் பொருள் ஆகும்.  குடி என்ற சொல் இன்று பெயர்ச்சொல்லாகவும்  வழங்குகிறது. வினையாகவும் வழங்குகிறது. " கடல் குடித்த " கடல்பக்கம் வீட்மைந்த என்பது கடல் நீரைக் குடித்துக்கொண்டு திரிந்தவர் என்பதினும் நல்ல பொருள் விளக்கமாகவே படுகிறது.
கடலை எடுத்து உண்டவர் என்று தவறாகப் பொருள் கொண்டு, சிலர்
அகத்தியர் என்று ஒருவரே இருந்ததில்லை என்று மறுக்கும் அளவிற்கு அறிஞர் சிலரை எழுதவைத்துவிட்டது இந்த அகத்தியர்
பற்றிய தவறான பொருள்கோடல்கள் என்பது தெளிவு.

கடல் குடித்த அகத்திய மா முனி ‍  :  கடல்பக்கமாக குடியுடையவராய்  அகத்துள் தவமியற்றியவர் என்பது நன்றாகும்.  கடல் -  கடல்பக்கம்  ; குடித்த - குடியுடை கூட்டத்தின் .   ;  அகத்தியர்   -  வீட்டினர்.   அகத்தியருக்குத் தமிழ் போதிக்கப்பட்டதாகக் கதை இருப்பதால்,  அவர் மனிதரே . ஆகையால் அவர் கடலைக் குடிக்க முடியாது.

இது பற்றிப் பின் சிந்திப்போம்.

will edit.

புதன், 20 ஏப்ரல், 2016

தமிழ்ப் பத்திரிகைகளை....

தமிழ்ப் பத்திரிகைகளை வாங்கிப் படிக்க!



நல்லது   தாளிகை
நாளும் பலசெய்தி
சொல்ல  அதுஒன்றே
சோர்வின்றி   வெல்லுதமிழ்  
வேண்டும் எனவே
விரைந்ததனை வாங்குவது
யாண்டும் தமிழர் கடன்.

 குறைகள் இருக்கலாம்
கூறுபாடில் மக்கள்
நிறைகள் இனிப்பெறுவர்
நீங்காத பற்றினால்;
வாங்கி வா  சிக்க;
 வரு நிதி  தானுயரத்
தூங்கினதும் தூக்கப்படும்.

கடையிலே  போட்டவெல்லாம்
கட்டாக மீண்டால்
இடையிலே வாராதோ
இன்னல்   நடையிலே
நல்ல தமிழ்பரப்பும்
நாளே  டதுதொடர 
வல்ல வாழ்வளீய தற்கு.





 .

சடக்கு

சடக்கு =  சாலை .


சடக்கு  -  தமிழ் அகரவரிசைகளில் இருக்கிறது  ஆனால் அதற்குச் சாலை என்ற பொருள் மலேசியாவில் வழங்குவதுபோல் இல்லை  எனினும் அதில் இல்லாதனவெல்லாம் வழக்கில் இல்லை என்று கூறிவிடுதற்கில்லை. பேரகராதியில் விடுபட்டுப்போன விடயங்கள் பலவுண்டு, அதன் பின் இணைப்பு ஒன்று வெளிவந்தது என்றாலும் அதிலும் காணப்படாத சொற்களும் உள.

சடக்கு என்பது  விரைவு என்றும் பொருள்படும்,   ஊர்திகள் விரைவுப்பாதை சடக்கு ஆகையால் அதை ஓர் ஆகுபெயராய்க் கொண்டு விரைவு என்பது விரைந்து செல்லும் பாதைக்கு ஆகிவந்தது என்று இலக்கண அமைதி காணலாம். அல்லது விடுபட்டுவிட்டது என்றே முடித்து அடுத்த பதிப்பில் திருத்தத்தைச் செய்தலும் ஒரு வழியாகும்


செவ்வாய், 19 ஏப்ரல், 2016

கடிகாரம் ‍ கடித்துக்கொள்ளும் காரப்பொருளா?

கடிகாரமென்பது நல்ல பெயர்.  கொஞ்சம் காரமான சிற்றுண்டி கிடைத்து அதைக் கடித்துக்கொண்டு கொழுந்துநீர் tea அருந்துகிற போது, இது கடிகாரம் என்று உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள். அதற்கு விளக்கமும் நீங்களே சொல்லுங்கள்.  இலக்கணப்படி பார்த்தால், கடி+ காரம் = கடிகாரம் ஆகிறது. வினைத்தொகை என்னும் வகையைச் சேர்ந்த சொல். கடிகாரம் என்பதில் வல்லெழுத்து  மிகாது. (x கடிக்காரம் x )

ஆனால் நாம் இதை மணிப்பொறி, மணிகாட்டி என்ற பொருளிலேயே வழங்குகிறோம். மொழிபெயர்ப்பு ஏடுகளில் மணிப்பொறி என்றாலும் இது இன்னும் பேச்சுவழக்கில் ஆட்சிபெற முயன்று முடித்த  சொல்லன்று.


இது யாழ்ப்பாணத் தமிழில் "கெடாரம்" என்று வழங்குகிறது. தமிழாசிரியர்கள் இதனைக் கடிகாரம்  என்ற சொல்லின் திரிபு என்று கருதுகிறார்கள். ஆரம் என்பது வளையம்போன்ற பொருளைக் குறிப்பதாலும்,  முன்காலத்து மணிப்பொறிகள் பெரும்பாலும் வட்டமான முகப்பு உடையனவாய் இருந்ததாலும், மணிக்கெடுவைத் தரும் இந்தக் கருவி கெடு+ ஆரம் = கெடாரம் என்று சொல்லப்பட்டது பொருத்தமாகத் தெரிகிறது.  கெடு என்பது காலமுடிவு, நேரமுடிவு என்று பொருள்படும் சொல்தான். பெரும்பாலும் ஒரு புள்ளியிலிருந்து அடுத்த புள்ளிக்குச்   சென்றடைந்த நிலையில்தான் நேரம் என்பதை நாம் உணருகிறோம்,. இன்னும் அரைமணி நேரத்தில் நான் வகுப்புக்குப் போகவேண்டும் என்றால், கெடார முள் அந்தக் குறிப்பிட்ட புள்ளியிற் சென்றடையும் எதிர்பார்ப்புக் கெடுவைத்தான்  குறிக்கிறோம்.

"கடிகாரமு" என்று தெலுங்கில்  வரும் இந்தக் கடிகாரச் சொல்,
சங்கதமொழியில் காடகா (ghaTaka) என்று வருகிறது.  .காரி (Ghari) என்றும் சொல்லப்படும்  கேட்டுவாசல், பேக்குப்பை என்று சிலர்
சிற்றூர்களிற் பேசுவதுபோல, இரண்டும் சேர்ந்து  காடகா+ காரி1 என்றாகி, கடிகாரம் என்று திரிந்தது எனின், சரியாக இருக்குமோ
என்பது கேள்வி.  ஒரு சொல்லை அமைக்கும்போது, தமிழ் மூலங்களைக் கொண்டே அமைத்தாலும், நாம் மொழிபெயர்க்கும் முதற்சொல்லோடு ஒலியொப்ப வடித்தால் ( as homonym or near-homonym)  இதுவும் தொல்லையாகிவிடுகிறதன்றோ.  பார்லிமென்ட்
எனற்பாலதை பாராளுமன்று என்பது இத்தகு வாதத்தை ஏற்படுத்தலாம். Government  என்பதை  கோவருமன்று என்று எழுதி,  கோ =அரசன் , அரசு,   அரு - அரிய , இணையற்ற ,  மன்று -  அவை'  -  அரசாளும்  அவை,  ஆகவே  அரசு ஆள்வோர்  என்றாலும்,  குழப்பம் நீடிக்கவே செய்யும்.- வாதிடும் சிலரால்.

இது முன் இலங்கையில் கெடாரம்  என்று வழங்கிப்    பின் கடிகாரம் என்று தமிழ் வாத்தியார்கள்  திருத்தியமைத்துச் சங்கத ஒலி யுடன் ஒப்புமை ஈட்டப்  பட்டதாய் இருக்கலாம் என்பதும் ஆய்வுக்குரியதே.

கெடாரம்  - மணிக்கெடு வைத்துக்கொள்ள  உதவும் ஒரு வளை முகப்புப் பொருள்.


----------------------------------------------------------------------

1.சங்கதத்தில்  இது நீர்க் கடிகாரம் என்று பொருள்படுவது,  குட நீரின் அளவு கொண்டு  மணி தெரிந்துகொள்வது.  கடகா என்பது குடம் என்ற தமிழின் திரிபு ஆகும். குறைவான உள்ளிடம் இருப்பதால் குடம் எனப்பட்டது. குடம் > கடம் > கடகை > கடகா.





.

Why not blog in Malay?

Why not blog in Malay? 
With over 220 million speakers around the world, and a rapidly growing audience, Malay content could be the next opportunity to get you new readers.,,,,,?

நல்ல  ஆலோசனைதான்!    சொல்லாய்வுகள்  சுறுசுறுப்பாக்குமா  அவர்களை?  என் வேலை  பன்மடங்காகிவிடுமே......


சிவஞான போதம் 9: " உராத்துனைத் தேர்."

ஊனக் கண் பாசம் உணராப்  பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி
உராத் துனை  தேர்த்து;எனப் பாசம் ஒருவ
தண்ணிழலாம் பதி; விதி எண்ணும் அஞ்செழுத்தே. ( சி  போதம்  9)


இங்கிருந்து  தொடர்கிறோம் :

http://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_17.html

துனை :

ஒன்பதாம் நூற்பாவில் இந்தத் தேர் குறிப்பிடப் படுகிறது. இந்தச் சொல்லில் வரும் துனை என்பது விரைவு என்னும் பொருளுடையது ஆகும்.

துனைதல் என்னும் வினைச்சொல் விரைதலென்னும் பொருட்டாதலின்
துனை என்னும் பகுதி மட்டும் நின்று பெயர்ச்சொல் ஆயினால் அது முதனிலைத்  தொழிற்பெயராய் விரைவு என்றே பொருள்தரும்.

 உராத்துனைத் தேர்

உரா  என்ற சொல்லின் பொருளை அறிவோம்.   இதன் உறவுச் சொற்களை ஆய்வதன் மூலம்  பொருளை எளிதில் கண்டுகொள்ளலாம்.  அதைப் பின்வருமாறு  விளக்கலாம் ,

உர்  என்பது அடிச்சொல் .   இது உள் என்னும் வினையாக்க விகுதி பெற்றுச்  சொல் அமைகின்றது .  உர்  உள் > உருள். உள் என்பது பெயராக்க விகுதியாகவும் வரும். -  வேறு சொற்களில்.

உரு >  உருள் > உருளுதல்.
உரு >  உருடை  ( வண்டிக்கு இன்னொரு சொல்).
உரு >  ஊர்  .  ஊர்தல். (வண்டியில் செல்லுதல்)
உரு >  ஊர் > ஊர்தி  =  வண்டி.( வானூர்தி,  வானவூர்தி  என்ற‌
வழக்குகள் காண்க.)
உரு >  உரா  (  உருளுதல்.)

நில்>. நிலா.  கல் >கலா, பல் > பலா (சுளை பல உடையது )  வில்>  விலா (ஓர்  எலும்பு ) என்பன நோக்குக.

உரா என்பது உருளுதல்; துனை என்பது விரைவு.  உராத்துனைத் தேர் எனின் விரைந்து உருளும் தேர்.

தேர்த்து ‍ ‍=   "தேர் போல்வது"  என்னும் பொருட்டு

சக்கரங்களின் விரைவு உருட்சியினால் பாய்ந்தோடி மறைகின்ற  தேர்.

இதனால் உராத்துனை என்பது விளக்கப்பட்டது.
பின்பு மறுபார்வை செய்யப்படும் .

Hope your reading is more pleasant after editing and insertion of references.





திங்கள், 18 ஏப்ரல், 2016

வை விகுதி பெற்ற சொற்கள் சில

விதவை என்ற சொல்லில் வருவது வை என்னும் விகுதி என்று சொல்
லப்பட்டது.  அதைக் கீழ்க்கண்ட இடுகையில் காண்க:‍

http://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_73.html

 இப்போது சில சொற்களைக் காண்போம்.

வித +  வை =  விதந்து குறிக்கப்பட்டவள்.  (கணவனை இழந்தவள்)
அள + வை =  அளவை.
தெரி +  வை = தெரிவை
முகம் + வை = முகவை
அகம் + வை =  அகவை (இவ்வுலகில் ஒருவற்கு வாழ அகப்படும் காலம் )
அறு +வை =  அறுவை.
அரி + வை = அரிவை. (18 > 25 அகவைப் பெண்)  அரிய அழகினை
உடையவள்.  அரு> அரி > அரிவை.    அரு என்பதில் உகரம் கெட்டு இகர விகுதியுடன் வை விகுதியும் பெற்றது .

பலவாம்.  கண்டுகொள்க .

தமிழ் விகுதிகளாற் சொல்லாக்கும் மொழியாகும். முன்னொட்டுக்கள்
குறைவு.

விதவைக்கு மோப்பி என்பது எப்படி >?

 விதவை என்றாலே, விதந்து தனியாக்கப்பட்டோர் என்று பொருள்.
விதத்தல் என்பதற்கு  specially cited or  highlighted என்பது பொருளன்றோ?

ஒன்றைச் சிறப்பாக எடுத்துரைத்தல் விதந்து ஓதுதல் எனப்பட்டது. என்பது

இந்த விதத்தலிலிருந்துதான் " விதம்" என்பதும் வந்தது.

விதம் என்றால் சிறப்பாக வைக்கப்பட்டது என்பதே பொருள்.

வித >  விதத்தல்.
வித > விதம் ( வித+அம்)  ஓர் அகரம் கெட்டது.

வித + வை ‍=  விதவை.  சிறப்பாகக் குறிக்கப்பட்டோர் என்று
பொருள்.இது உடையணிதல் ஒழுக்கம் பற்றிய கடைப்பிடிகளாக‌
இருக்கலாம்.

இந்தச் சொல்லுக்கு மாறான பொருள் உடையது கைம்பெண்களைக் குறிக்கும் மோப்பி என்ற சொல்.

மோப்பம் > (மோந்து பார்த்தல் )
மோப்பம் > மோப்பி  (மோந்து பார்ப்பவள் _)

அதாவது ஆண்களை மோப்பம் பிடிப்பவள் என்ற அர்த்தம். இது
பெண்களுக்கு எதிரான கருத்தோட்டத்தில் அமைந்த சொல் ஆகும்.

மோகம் என்ற சொல்லும்  மோப்பத்தினடியில் தோன்றிய சொல்லே.
மோ + கு+ அம் =  மோகம்.

சில தமிழ் மூலமுடைய் சொற்கள் பிற மொழிகளில் ஆதிக்கம்
பெற்றன.  இது தமிழின் சிறப்பைக் காட்டுகிறது,

இப்போது ஆங்கிலச் சொற்கள் எங்கும் கலந்து வழங்குவது  ஆங்கிலத்தின்
சிறப்பைக் காட்டுவது போல.

For another view of  the word vithavai:

https://bishyamala.wordpress.com/481

(We could not check as the connection was closed abruptly when we tried. It may work from
your location. We shall try later  )

ம் ‍‍‍ன் திரிபு சீனத்திலும்

சீன மொழியிலும் மகர ஒற்றீறு  னகர ஒற்றீறாதல்  உண்டு.
ஒரு கிளைமொழியிலிருந்து தலைமொழிக்கு மாறுகையில் இது
நிகழும்.

சாய் ஸிம்  .  சாய் க்ஸின்

என்பது நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.

தமிழிலும்  அறம் >  அறன்;   திறம்> திறன் என வருதல்
காணலாம்.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து  (குறள்)

உரம் >  உரன்.

முன் வேறு எடுத்துக்காட்டுகள் தந்துள்ளோம்.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

உயிர் உயிர்மெய் திரிபு

உயிரெழுத்துக்களில் தொடங்கிய சொற்கள் நாளடைவில் உயிர்மெய் எழுத்துத் தொடக்கமாக மாறுவது தமிழில் காணப்படும் ஒரு வளர்ச்சி என்றே சொல்லலாம். சில சமயங்களில் பொருளில் வளர்ச்சி காணப்படும்.

எடுத்துக்காட்டாக, கலகம் என்ற சொல்.  கலகத்தில் பலர்  நெருங்கி வந்து அடிதடியில் ஈடுபடுவதைக் காண்கிறோம். இவர்கள் இப்படிக் கலக்காமல் தங்கள் தங்கள்  இடத்திலேயே இருந்துவிட்டால்  கலகமே இருக்காது என்று கண்டுகொண்ட ஊர்க்காவல் அறிஞர்கள், ஊரடங்கு என்ற ஒரு நடபடிக்கையை உண்டாக்கினர்.  ஆகவே கலகத்துக்குக் காரணம் கலத்தலே. அடி என்ற சொல்லிலும்,அடுத்துச்சென்றாலே அடிக்கமுடியும் என்பதை அறிந்துகொள்ளலாம். அடு> அடி. இதுபோலவே
அண்டையில் சென்றாலே ( நெருங்கினாலே)  சண்டையைப் போடமுடியும்.
இவற்றிலிருந்து, சொல்லில் சிறு மாறுதலும், அதற்கேற்பப் பொருளில் சிறு வளர்ச்சியும் ஏற்பாடுதல் காணலாம்,

அண்டை >  சண்டை.

அகர வருக்கச் சொற்கள் சகர வருக்கமாக மாறுவது மட்டுமின்றி,
வேறு உயிர்மெய்களாகவும் மாறும்.

 எடுத்துக்காட்டு:

உச்சி > முச்சி.

உச்சி என்பது முன் உச்சியை (அதாவது உச்சியில் முன் பக்கத்தைக்)
குறிக்க எழுந்த சொல்லாகலாம்.  முன் உச்சி ? முச்சி.  ஓர் ஒற்றும் உகரமும் கெட்டன. தேவையற்ற விரிவுகள் ஒழியும். அல்லது உச்சி என்னும் சொல்லின்முன் உள்ள உகரத்தில் ஓர் மகர ஒற்று ஏறிற்று எனினும் அமையும்.



சிவஞான போதத்தின் 9ம் பாடல்

ஊனக் கண் பாசம் உணராப்  பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி
உராத் துனை  தேர்த்து;எனப் பாசம் ஒருவ
தண்ணிழலாம் பதி; விதி எண்ணும் அஞ்செழுத்தே.

இது சிவஞான போதத்தின் ஒன்பதாம் பாடல்.

இதன் பொருளைச்  சுருக்கமாக நோக்குவோம்.

ஊனக் கண் = குறையுடையன வாகிய விழிகள் ;

பாசம்  = சடப் பொருள்களை உண்மையென்று உணரும் அறிவு ;

பதியை உணரா =  இவற்றால்  சிவத்தை அறிய இயலாது.

ஞானக் கண்ணினில் சிந்தை நாடி  -  ஞானக் கண்களால் மனத்தை நிலை  நிறுத்தி உணர்ந்து;

உராத்துனை தேர்த்து  = விரைந்து செலுத்தப்படும்  தேரின் தன்மையது

எனப் பாசம் ஒருவ -   என்று பிறழ்வுணர்வினை  விலக்க


விதி எண்ணும் அஞ்செழுத்தே.  =   உறுதி செய்யப்பட்டபடி ஐந்தெழுத்தைச்
சிந்திக்க


தண்ணிழலாம் பதி  -  சிவத்தை அறியலாகும். அருள் பெறலாம்,

ஊனக் கண்களோ  சடப் பொருள்களை அன்றிப் பிற அறிய மாட்டா;  பாச அறிவோ எனின்  நிலை அற்றவற்றை நிலையானவை என்று பிறழ உணரும்;
இவை இரண்டாலும் பயனில்லை.   இவை விரைந்து செல்லும் தேர் போன்ற  தன்மையை நம்முள் உய்ப்பவை;    இவற்றை விலக்கி  பஞ்சாட்சரத்தைக்
கைக்கொள்ளப் , பதியாகிய சிவத்தின் இன்குளிர் அருள் கிட்டுவவதாகும்.

விரைந்து செல்லும் தேரினால் யாருக்கும் பயனில்லை.  அதனில் அமைவுற்ற சிலையைக் கையெடுத்துக் கும்பிடக் கூடப் பத்தனுக்கு  (இறைப்பற்றாளனுக்கு )  முடிவதில்லை. அத்தகைய தேரினைப் பேய்த்தேர்  என்றனர்.

இவற்றைப் பின் விரித்துணர்வோம்,

Previous post on this subject went missing owing to some software error, This was rewritten.











சனி, 16 ஏப்ரல், 2016

T V RETHINAM PLAYBACK SINGER.

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி டி.வி. ரத்தினம். (B.1930)

இவர் பாடல்களை நேரில் கேட்ட திரு. அ.பி. மாசிலாமணி உங்களுடன் பகிர்ந்துகொள்வது.
----------------------------------------------------------------------------------


"அப்போது திருமதி ரத்தினம் சிங்கப்பூருக்கு வருகை புரிந்திருந்தார். அவர் பாடலைக் கேட்க சிங்கப்பூர் பார்ட்லி சாலையிலுள்ள இராமகிருஷ்ண மடத்திற்குக் குடும்பத்துடன் சென்றிருந்தோம். நாங்கள் அங்கு சென்று சேர்வதற்குச் சற்று நேரமாகி விட்டது. நாங்கள் மண்டபத்திற்குள் நுழைந்தபோது திருமதி ரத்தினம் மங்களம் பாடிக்கொண்டிருந்தார். இருந்தாலும் அமர்ந்தோம். பின்பு இராமகிருஷ்ண மடத்துத் தலைவர் திருமதி ரத்தினம் நன்றாகப் பாடியதாகவும், வட இந்திய இசை நுணுக்கங்களைத் தென்னகத்து
இசையுடன் கலந்து இனிமை பயத்ததாகவும் கூறித் தன்  புகழுரையை முடித்து நன்றி நவின்றார். அத்துடன் நிகழ்ச்சி முற்றுப் பெற்றது.

அடுத்து வந்த ஒரு ஞாயிற்றுக் கிழமையில் திருமதி இரத்தினம் இசை வழங்கிய , சிங்கப்பூர் பெருமாள் கோவிலில் உள்ள  கோவிந்தசாமிப் பிள்ளை திருமண மண்டபத்திற்குச் சென்றிருந்தேன். மிக்க அருமையாகத்  தமிழிசை‍ --  கரு நாடக இசையை  அவர் வழங்கினார். முடிவடையும்
தறுவாயில், வந்திருந்த சுவைஞர்கள் திரைப்பாடல்களைப் பாடும்
படி கேட்டனர்.  கோவில் சார் இடமாதலால், திருமதி இரத்தினத்துக்குக் கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது. தலைமை தாங்கி
இருந்த தமிழவேள் சாரங்க பாணி அவர்கள் எம்.கே. தியாகராஜ‌
பாகவதர் காலத்துக்குப் பின் தாம் தமிழ்ப் படங்களைப் பார்ப்பதில்லை என்றும், தாம் சுவைத்த இசை பாகவதருடையது என்றும் கூறி, திரைப்பாடல் ஏதாவது பாடிச் சுவைஞர்களை மகிழ்விக்கும்படி கேட்டுக்கொண்டார். இப்போதெல்லாம் " இங்கே பேசினால் அங்கே கேக்குது  அங்கே பேசினால் இங்கே கேக்குது என்பது போன்ற தொடர்களால் பாடல்நயம் அற்றவைகள் இக்காலத் திரை இசைப் பாடல்கள் என்றும் குறிப்பிட்டார். பின்னர் திருமதி இரத்தினம் அவர்கள் ஒரு திரைப்பாடல் பாடினார்:  அது " நல்ல பெண்மணி, மிக நல்ல பெண்மணி, மிக நல்ல பெண்மணி " "கெட்ட பெண்மணி
மிகக் கெட்ட பெண்மணி என்ற தொடர்கள் இலங்கும் உடுமலை
நாராயணக் கவிராயரின் பாட்டு.

 இரத்தினம்  பாடிய புகழ் பெற்ற திரைப் பாடல்கள் பல.  பொன்முடிப் பாடல்கள்;  வேலைக்காரியில் "வாழிய நீடுழி, பகுத்தறிவாளன் ஆனந்தன்",  மற்றும் "ஆடவருவாயா கண்ணா",  இன்னொரு திரையில் "மனமுடையோரே மனிதர்கள் என்னும் வாய் மொழி வள்ளுவன் சொல்லாகும்" என்பது, இன்னும்  அஞ்சு ரூபா நோட்டைக் கொஞ்சமுன்னே மாத்தி மிச்சமில்லை"  " அத்தானும் நாந்தானே" என்ற இருகுரலிசை, "மனதுக்கு இசைந்த ராசா, எனை மயக்கு முகவிலாசா" (மர்மயோகி)  "பகைவனுக்கு அருள்வாய் (பாரதி பாடல் )  "ஆளை ஆளைப் பார்க்கிறார்"  "மாலையிட்ட மங்கை
யாரோ என்ன பேரோ எந்த ஊரோ (பாரதிதாசன்)  :  என்று பல.

 ஒரு திரைப்பாடலே அன்று கிடைத்தது என்றாலும்
சுவைஞர்கள் பெரிதும் பாராட்டினர். நல்ல குரல் வளமும் திறனும்
 உடையவர். டி .வி ரத்தினம்.    இவர் பின்னாளில் தண்டபாணி தேசிகரைப் போலவே  கல்லூரி  இசைப்பேராசிரியராய்  ஆகிவிட்டார்  என்று தமிழ் முரசு மூலம் அறிந்தோம்.  "

-----  A P MASILAMANI.