இசை வல்லுநர் தஞ்சை தன்ராஜ்
-செ.அ.வீரபாண்டியன் –
http://musicdrvee.blogspot.in/ http://musictholkappiam.blogspot.in/
‘தமிழிசையின் இயற்பியல்’ (Physics of Tamil Music) என்ற எனது முனைவர் பட்ட ஆய்வு தொடர்பாக, 1990- களில் நான் பயன்படுத்திய அரிய நூலகங்களில் ஒன்று , சென்னை திருவான்மியூர் கலாசேத்ரா அருகில் உள்ள 'உ.வெ.சா நினைவு நூலகம்'.
அந்நூலகத்தில் சுமார் 30 பக்கங்களுக்குள் இருந்த ஒரு மிகச் சிறிய புத்தகம் என்னை அதிர்ச்சி இன்பத்திற்குள்ளாக்கியது. சிலப்பதிகாரத்தில் உள்ள வட்டப்பாலைப் படத்துடன் ‘இசை விதி -> 1800 -> பிரம்ம மேள பிரமாணம்’ - தஞ்சை தன்ராஜ்’ என்பதை தலைப்பாகக் கொண்டு அப்புத்தகம் என்னை ஈர்த்தது. உடனே எடுத்து படித்தேன்.
அப்புத்தகத்தில் சிலப்பதிகாரத்தில் உள்ள வட்டப்பாலை முறை, மேற்கத்திய இசை முறை, மேளகர்த்தா ராக அமைப்பு உள்ளிட்ட கர்நாடக இசை ஆகியவற்றினை பற்றிய அரிய ஆராய்ச்சி முடிவுகள் இருந்தன. இப்படிப்பட்ட அரிய நூலை பதிவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, , எனது முனைவர் பட்ட ஆய்வில் அந்நூலைக் குறிப்பிட்டுள்ளேன். அதன் பின் அவரைப் பற்றி நான் கேள்விப் பட்டவற்றை கீழே தொகுத்து குறிப்பிட்டுள்ளேன். இவை எந்த அளவுக்கு நம்பத் தகுந்தவை என்பதை இனிவரும் ஆய்வுகள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
1. தஞ்சை மாவட்டத்தில் ஒரு கிறித்துவ பாதிரியரால் அனாதையாகக்(orphan) கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்.
2. இசையில் நிபுணராகும் அளவுக்கு அவர் பெற்ற இசை தொடர்பான கல்வி பற்றி எந்த தகவலும் இல்லை.
3. சென்னை மைலாப்பூர் தெப்பக்குளம் எதிரேயுள்ள சாய் லாட்ஜில்(Sai Lodge) பிரம்மச்சாரியாக, சாகும் வரை ஒரு அறையில் வாழ்ந்து, இசை வகுப்புகள் நடத்தி வந்துள்ளார்.
4. இளையராஜா, ஏ, ஆர், ரகுமான் உள்ளிட்ட இசை அமைப்பாளர்கள் அவரிடம் இசை பயின்ற மாணவர்களில் அடங்குபவர் .
5. குடிப்பழக்கம் உள்ளவர். விஸ்வநாதன் - ராமமூர்த்தி திரை இசையில் கொடி கட்டி பறந்த காலத்தில், இரவில் அவரது அறைக்கு சென்று, ' ஸ்காட்ச் விஸ்கி'(scotch whisky) பாட்டிலைக் கொடுத்து, அவரிடம் இருந்து, இசை நோட்ஸ்களைப்(Music Notes) பெற்று தமது திரை இசையில் பயன்படுத்தியுள்ளனர்.
6. இளையராஜா பிரபல திரை இசை அமைப்பாளரான பின்னரே அவர் மறைந்தார். அவரது இறுதிச் சடங்குகளை தமது செலவில் இளையராஜா செய்து முடித்து, அவர் அறையிலிருந்த 'அனைத்தையும்' தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
7. அவர் இசை தொடர்பாக எழுதிய குறிப்புகள் பற்றி இளையராஜா எதையும் வெளிப்படுத்தவில்லை. அதைப் பற்றி பேசுவதையும் விரும்புவதில்லை.
8. அவரின் இசைக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டே இளையராஜா திரை இசையில் கொடி கட்டி பறந்தார். அவை முடிந்தவுடன், அவர் 'ஹிட்'(Hits) பாடல்கள் கொடுப்பதும் முடிந்து விட்டது.
திருவாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன்,இளையராஜா,ஏ.ஆர்.ரகுமான் போன்று அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தான், மேலேக் குறிப்பிட்டுள்ளவை எந்த அளவுக்கு சரி, அல்லது தவறு என்று தெளிவுபடுத்த வேண்டும்.
தன்ராஜ் பற்றிய எனது முயற்சிகளைப் பற்றி கேள்விப்பட்ட பத்திரிக்கையாளர் நாகார்ஜுனன் (பெயர் எனது நினைவில் உள்ளபடி) சென்னையில் மாநிலக்கல்லூரியில் நான் பணியாற்றிய காலத்தில் என்னை சந்தித்தார். தன்ராஜின் இசைக் குறிப்புகள் என்னிடம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டார். நான் உ.வெ.சா நூலகத்தில் படித்த அந்த புத்தகத்தைப் பற்றி சொன்னேன். இளையராஜவிடம் அது பற்றிய தகவலைப் பெற பலர் முயன்றும் ஒன்றும் பலனில்லை என்று வருத்தத்துடன் என்னிடம் சொல்லி, விடை பெற்றார்.
தமிழ்நாட்டில் மேற்கத்திய இசை, கர்நாடக இசை, தமிழ் இசை பற்றிய ஆழ்ந்த புலமையுடன் வாழ்ந்து மறைந்த இசை வல்லுநர் அவர். உ.வெ.சா நூலகத்தில் உள்ள அந்த புத்தகம் மட்டுமே அதற்கான சான்று. கூடுதல் சான்றுகளை அவரிடம் இசை படித்த மாணவர்களும்,தொடர்பில் இருந்தவர்களும் தான் வெளிப்படுத்த வேண்டும். அது 'குருவிடம்' காண்பிக்க வேண்டிய நன்றியுமாகும்.
தன்ராஜின் இசைக்குறிப்புகள் கிடைத்து, அவற்றை புத்தகமாக வெளியிடும் முயற்சியில் யாரேனும் ஈடுபட்டால், அவற்றைத் தொகுத்து தரும்(Editing) பணியை எந்த கட்டணமுமின்றி (without remuneration) நான் செய்து தர விரும்புகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்
(Reproduced without any amendment or modification. The writer and not the Blogger Sivamala is responsible for the contents. Any query or objection is to be referred to the writer. Blogger Sivamala excludes any liability)