புதன், 2 அக்டோபர், 2024

காதகன் - பொருண்மையும் ஆக்கமும்.

 காதகன் என்ற சொல்லைக் கவனித்து அது எவ்வாறு அமைந்தது என்று கண்டுபிடிப்போம்.

இச்சொல்லில் காது,  அகம் என்ற இரு சொற்கள் உள்ளனவென்று மேலோட்டமாகத் தோன்றினாலும், இச்சொல்லுக்குக் கூறப்படும் பொருண்மையுடன் இவை பொருந்தினவாக உறுதிசெய்யமுடிய வில்லை. இதன் பொருளாவன:  கொலைஞன், திட்டமிடுவோன், பீடிக்கும் செயல்கள் புரிவோன் எனப்பல கூறப்படுகின்றன.  கெட்டவனுக்குள்ள 108 சொற்களில்,  காதகன் என்பதும் ஒன்றாக அறியப்படுகின்றது. காதால் கேட்டதை அகத்தில் வைத்துக் கெடுதல் செய்வோன் என்பது  மிக்க ஆழமாகச் செல்லாத முடிபு என்று சொல்லவேண்டியுள்ளது.

சொல்லில் உள்ள தகன் என்ற பகவினை முதலில் எடுத்துக்கொள்வோம்.  தகு+ அன்> தகன்,  இதைத் தகவன் என்பதன் சுருங்கிய வடிவமாகக் கொள்ளலாம். இதன் பொருள், தக்கவன் என்பது.  அழிதகன் என்ற இன்னொரு சொல்லும் உள்ளது. இச்சொல்லை ஒப்பீடு செய்யலாம்.  அழி என்ற முன் சொல்லினால் தகன் என்பது தகுதி அழிந்தவன்,  ஆகவே தகுதி இழந்தன்வன் என்று பொருண்மை பெறுகிறது.

இச்சொல் (காதகன்) காட்டும் பொருண்மைகளால்,  இங்கும் காதகன் என்பது ஒருவகைத் தகுதியழிந்தவன் என்று போதருகிறது.  தகன் என்ற பகவு இப்பொருள் தருவதால், இனிக் கா என்பதன் தரவு யாது என்று அறியவேண்டும்.

கா என்பது ஒரு திரிபுப் பகவு ஆகும்.  கடு என்பதே கா என்று திரிந்துள்ளது.  கடு தகவு என்பதே சொல்.  இஃது திரிந்து  கா என்று ஆகியுள்ளது.  காடு என்ற சொல்லும் கா என்று திரியும்.  காவு என்றும் திரியும்.  ( ஆரியங்காவு).

கடு> காடு.  முதனிலைத் திரிபு.

கடு >  காடு> காடி.   ( கடு+ இ).  முதனிலை நீண்டு விகுதி ஏற்றல்.  ( எ-டு:  சீமைக்காடி).

கடு> காடு> கா.  (முதனிலை நீண்டபின் கடைக்குறை).

காவல் உள்ள இடம் கடுமையான இடம் என்றே கருதப்படுவது.  எளிதில் சென்று வரமுடியாத இடம்,

காதகன் என்பவன் கடினமான தன்மைகள் உள்ளவன் ஆவான்.  கடுத்தல் என்ற சொல் தன் டுகரம் இழந்து கா என்று நீண்டது.  (கடைக்குறையும் நீளுதலும்.). டுகரம் இழப்பின் சொல் நீளவேண்டும். ஒரு குறில்மட்டும் இருந்து சொல்லாதல் பேச்சுக்கு எளிதாகாது.  இத்திரிபில் ஒலிநூல் நுட்பம் உள்ளது.

கடுதகன் >  காதகன்.  இச்சொல் சென்று சேரும் மனிதனுக்குச் சொன்ன எல்லாம் கடு (கடுமை> கொடுமை)   என்பவற்றில் அடங்கியுள்ளது காண்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

கருத்துகள் இல்லை: