சனி, 19 அக்டோபர், 2024

கேவலம் சொல்

 கேவலம் எனும் சொல்லை அறிவோம்.  இதற்குக் கேடு, கேதாரம் என்பனவும் ஒப்பீடு செய்வோம்.

ஒவ்வொரு மனிதனும் பிற மனிதருடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டவனாய் ஒரு வலிமை பொருந்திய நிலையில்தான் இருக்க (வாழ) விரும்புகிறான், ஏதேனும் தாழ்வான செயல்களில் ஈடுபட்டு அதனால் பேர்கெட்டுப் போனவனும் அது பிறருக்குத் தெரியாதவாறு தன்னை மறைத்துக்கொள்கிறான். தன்னைத் தாழ்வாக நினைப்பவன் இல்லாமற் போய்விட்டாலும் அவனுக்கு அதனால் மகிழ்ச்சியே. தனது முன் கெடுவினைகளை அறியாதவனுடன் பழகும்போது அவனுக்கு மகிழ்ச்சிதான். இதைத்தான் வலிமை பொருந்திய நிலை என்று நாம் கூறுகிறோம். இந்த நிலைக்கு ஒரு கெடுதல் வந்தால் இதுதான்  வலம் கெட்ட நிலை ஆகும்.  இது "கெடு வலம்" மேவிய நிலை ஆகும்,   கெடுவலம் என்பது பின்னர் கேவலம்  என்று திரிந்து ஒருசொன்னீர்மை பெற்றது.  டுகரம்  (டு) வல்லொலி ஆகும்.. சொல்லை மென்மைப்படுத்த  ( மெலித்தல் மேவ)  டுகரம் வீழ்கிறது. கெடுவலம் >  கேவலம்.  இதுபோல் வல்லொலி கெட்ட இன்னொரு சொல்: கேது,  அதாவது 

வானத்தில் பார்த்தால் ஏழு கிரகங்கள் தாம் தெரிகின்றன.  சோதிடத்தைச் சரியாகச் சொல்வதற்கு ஒன்பது கிரகங்கள் வேண்டும்.  இரண்டு தெரியவில்லை,  இவற்றுக்குக் காரணப்பெயர்களைக் கொடுத்தார்கள்.  ஒன்று இராகு.  இன்னொன்று கேது,  பெரும்பாலும்  ( எப்போதும் நிகழ்வதில்லை)  கெடுதல் செய்வது கேது.  கேது கெட்டிருந்தால் மங்களம் இல்லை. திருமணம் தொடர்பானவை நிகழவில்லை என்றால் கேது கெட்டிருக்கிறது என்று சொல்வர். மணவாழ்வு கெட்டிருந்தால் கெட்டிருப்பது கேது,  இதற்குப் பெயரே கேது -  கெடுவது  என்பதிலிருந்து வந்த பெயர். கெடுப்பது எனினுமது,  கெடு என்பது கே என்றே திரிந்தது.  கேடாவது என்பதில் டாவ என்ற எழுத்துகள் மறைந்தன என்றும் கூறுதல் கூடும். இப்போது கேவலம் என்ற சொல்லின் திரிபுடன் ஒப்பீடு செய்து அறிந்துகொள்ளவும்,

கேது மங்களம் தருவோன் எனப்படுவதால்,  கே என்பது கேடிலது என்பதன் சுருக்கமாகவும் கொள்ளலாம்,  சிலசொற்கள் இருநிலையும் குறிக்கும்,  இதற்குக் காரணம் ஓரெழுத்தே முதலில் வந்தமை. இன்னொரு சொல்: கேதாரம் - கேடின்மை தருவது அல்லது கெடுதலை நீக்குவது.  கே - கேடின்மை; தாரம் - தரும் தொழுதலம். இதுபோல் வருவதால் இச்சொற்கள் முற்றிலும் இடுகுறிகளாகி விடுகின்றன.  அதனால் மொழிக்கு ஒரு தொல்லையும் இல்லை,  வேறு மொழிகளில் வெறும் ஒலிக்குறிப்புகள் மட்டுமே சொற்களாகிவிட்டன. தமிழில் இயற்சொற்கள் அல்லாதன விலக்குறுதல் வேண்டுமென்பது  புலவர் வாதம்.  இவ்வாதம் காலத்திற்கு ஏற்றதன்று.  ஒரு சொல் தமிழா அன்றா என்பதற்குக் காரணம் அறியாமை ஒரு பொருட்டன்று. ஏனெனில்  " மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா" என்றார் தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில். எல்லாச் சொற்களும் காரணம் அறியப்பட்டன என்பர் தமிழ்ப்புலவர்.   பலசொற்கள் ஆய்வின்றி அறியப்படாமையின்!

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

கருத்துகள் இல்லை: