இயற்கை காட்டினை மயக்குறக் கொளுத்தி
எரித்தது வெண்மையில் பொரித்தும் உயிர்களை!
அயற்கை நின்றவன் அறியான் மாந்தனே
மாந்தன் பின்னாள் தீயினை அறிந்து
தான்தன் செயற்குப் பயன் விளைத் தனனே
அகத்தின் இருளை அகற்றிடத் தீபம்
மிகத்திற னுடனே ஒளிதர வைத்தான்.
தீப ஒளிஎன மகிழ்ந்தனன் ஆடி
நாபயன் கூட்ட நாமமும் சார்த்தினன்.
இயற்கைச் சூழலில் எழுந்த பண்டிகை
மயக்கம் தவிர்ப்பீர் பின்வர விணைய
இயைத்தனர் நயந்தரு ஏற்படு நிகழ்வே.
அன்றிருந் தனவாம் அருஞ்சம யங்கள்
ஒன்றுபட் டொளியின் ஒண்மை கூட்டின.
நீள்வர லாற்றின் நேர்வன இவையாம்
கேள்கதை யாவும் நாள்தொறும் மகிழ்த்தும்.
அத்தீ பாவளி இத்தரு ணந்தனில்
முத்தம் இட்டதே முன்கத வதனை.
வருகவ ருக தீ பத்தொளிப் பண்டிகை.
இன்பநல் உணவு இனியப லகாரம்
அன்புடன் கூடி அனைவரும் உண்போம்
நமது நேயர்கள் யாவரும் மகிழ்க
யாவர்ஆ யினுமே மகிழ்க இனியே
தாவறு தீபா வளிவாழ்த் திதுபல.
காரமும் உணவும் கொண்டு
சீர்பல பெறவே சீமையர் மிகவே.
அரும்பொருள்:
மயக்குற - உயிர்கட்கு மயக்கம் வருமாறு;
வெண்மையில் - சாம்பலில்
சதைகள் வேகுமாறு;
அயற்கை - பக்கத்தில் , அயலில்.
பயன் விளைத்தனன் - பிறகாலத்தில் தீப்பயன் அறிந்தான்
நா பயன் கூட்ட - ( பெயரிட்டு) நாக்கு பயன் உண்டாக்க
சார்த்தினன் - பெயரிட்டான் , நாமம்
பின்வரவிணைய - பின்னால் வந்த நிகழ்வுகளும் கதைகளும் இணைய;
அகத்தின் - வீட்டின்
பிற்காலத்தில் பல கதைகள் நிகழ்வுகள் தீபஒளிப் பண்டிகையில் சென்று இணைந்தன.அவற்றைத் தம்மவை என்று சொல்லிக்கொள்ள அவற்றுட் கதைகளைக் கொண்டு இணைத்தல் என்பது இயற்கை (அல்லது உள்ளதுதான்).
கால நீட்சியில் கதைகள் இணைதல் எல்லா நாடுகளிலும் உண்டு.
தாவறு - குற்றமற்ற, தவறுகள் இல்லா.
பெறவே என்பதைப் பெறுகவே என்று இணைக்க. இது கவிதையில் தொகுத்தல்.
மிகவே என்றது மகிழ்வு கூடும்படியாக என்றவாறு.
இங்கனம் பொருள் கூட்டாமல் முன் முடிந்த வரியுடன் இணைத்தும் பொருள் கொள்ளலாம்.
யாவரும் மகிழ்க என்ற நம் நேயரல்லாத நொதுமலரும் மகிழ்க என்றவாறு.
சீர்பல - நலம் பல
சீமையர் - நாட்டினர்
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
திருத்தம் 03112024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக