திங்கள், 21 அக்டோபர், 2024

தானை என்ற சொல்லமைவு

 இன்று தானை என்ற சொல்லின் தோற்றம் அறிவோம்.

ஒரு சொல்லை அறிவதற்குத் தேவையில்லாத குப்பைகளை எல்லாம் கிண்டி எடுக்க வேண்டியதில்லை,   சொல்லின் பகுதி, இடைநிலை, விகுதி என்ற மூன்றையும் ஆராய்ந்தால் போதுமானது.  இவற்றை  அறிந்த பின் இந்தச் சொல் பயன்பாடு கண்ட இலக்கியங்களை எடுத்து ஆய்வு செய்யலாம்.  இதைச் செய்தால் சொல் எப்படி உண்டானது என்பதைவிட அதற்கு என்ன என்ன பொருள்களில் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம்.  சொல்லின் தோற்றத்துடன் ஒப்பிட்டால் பொருள் வேறுபட்டிருக்கிறதா என்று கண்டுபிடித்துவிடலாம்,.

அகராதிகளை இதை வாசிப்போர் எடுத்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

தானை என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் இதன் பொருள் நீங்கள் அறிந்ததுதான்,  படை என்பதே பொருள். இதே பொருளில் இது கழிபல ஊழிகளாய்த் தமிழில் வழங்கிவந்துள்ளது,  ஊழி என்றால் உள்> ஊழ் > ஊழி, அதாவது கணக்கில் உள்ளடங்கிய ஆண்டுகள் என்று பொருள். இதன் அடிச்சொல்லை அடிச்சொல் அகரவரிசையில் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.

சேனைக்கும் தானைக்கும் பொருள் எவ்வாறு வேறுபடுகிறது?  அரசன் ஒருவன் போர் தொடங்கு முன்பே பலரையும் சேர்த்துப் பயிற்சி கொடுத்துத் தயார்ப்படுத்தி அவர்களுக்கு வில்லும் வாளும் கொடுத்துச் சீருடையும் கொடுத்துப் போரிட வைக்கிறான் என்றால்,  அது சேர்த்துக்கொள்ளப்பட்ட படை என்ற பொருளில் " சேனை" எனப்பட்டது..

சேர்தல் வினைச்சொல்.

சேர் + இன் + ஐ >  சே + ன் +   ஐ > சேனை ஆகும்.

சேர் என்பதில் ர் ஒழிந்ததற்குக் கடைக்குறை என்று இலக்கணத்தில் பெயர்.

இன் என்ற இடைநிலையில் இ ஒழிந்ததற்கு முதற்குறை என்று இலக்கணத்தில் பெயர்.

இவற்றை அடிப்படை இலக்கண நூலில் கண்டுகொள்க. இவை இங்கு சொல்லப்பட மாட்டா. இவை எல்லாம் ஏபிசிடி போன்றவை. இவற்றுக்கெல்லாம் பாடல்கள் சொல்லவேண்டியதில்லை.

இவைபோலும் சொற்குறைகள் சொல்லாக்கத்திலோ, கவிதையிலோ வேறேங்கும் பயன்பாட்டிலோ வரலாம்.

குறைச்சொல்லுக்குத் தொகை என்றும் பெயருண்டு,  சொல்லைத் தொகுத்தல்.

சேமித்தல் என்ற சொல்லில் சேர்மித்தல் என்று நீளாமல் சேமித்தல் என்றே குறுக்கி அமைக்கப்பட்டது.

சேட்டன் என்ற சொல்லில் குடும்பத்தில் முன் பிறந்து சேர்ந்தவன் என்ற பொருளில் சே(ர்)+( இ)ட்ட{வ}ன்> அடைப்புக் குறிகளுக்குள் உள்ள எழுத்துக்கள் மறைந்து,  சேட்டன் என்றானது. சேரிட்டன் என்று அமைத்து ரி என்பதை நீக்கிவிட்டாலும் வகரம் ஒழிய, - சேட்டன் என்றாகி அண்ணனையே குறிக்கும். இட்டவன் என்பதில் வகரம் குறுக்கக் காரணியாவது,  அன் என்பதும் அவன் என்பதும் ஒன்றுதான்.  அ + அன் என்பதுதான் அவன்.  வ என்பது வகர உடம்படு மெய். அது சொல்லின் ஓர்  உட்பகுதி அல்லாமல் புணர்ச்சியில் உண்டானது. இனி, இடு என்பதில் இகரம் களைந்து, டு என்பதை இணைத்தாலும்,  சே+ டு :  சேடு> சேடி  (சேடு+  இ)  என்று பெண்பாலாகும்.  சேடு+ அத்து+ இ > சேட்டத்தி என்று ஆகும்  இடைக்குறைந்தும்  சேத்தி> சேச்சி என்று தகரம் சகரமாகத் திரிந்து சொல் அமைந்துவிடும்,  சேத்தி எனபது மொழியில் மறைந்துவிட்ட சொல்.

தானை என்ற சொல்., சூழப்பட்ட அரசன் எதிரிக்குத் திருப்பித் தரும் அடியில் சேவை தரும் படை என்று பொருள். திருப்பித்தருதலால் தானை என்று வந்தது, தருவது என்ற சொல்லே தா> தான் இன் அம் >  தானம் என்றும் ஆனது,  தா என்ற வீட்டுமொழிச் சொல்லை ஐரோப்பிய மொழிகளிலும் திருடிக்கொண்டனர்.  இதைத் தான் மீண்டெழுந்த தார் (தரும்) நிலை என்று சொன்னார் தொல்காப்பியனார்.  இது தரு என்றும் தா என்றும் வரும் சொல்லிலிருந்து வந்தது என்பதற்கு உரிய சொற்களின் வழியாக மூலத்தைக் காட்டியுள்ளார் தொலகாப்பிய முனிவர்.

தமிழிலே பலவாறு தா என்ற சொல் திரியும்,  தந்து ( தன் து ), தருவான் ( தரு), தாரான் ( தார் ),  தாடா ( தா அடா) என்பவற்றை நோக்கி அறிக. தந்தை என்ற சொல்லும் பிள்ளைகளைத் தருவோன் என்ற பொருள் உடையதுதான்.   தந்து ஐ என்றால் தருகின்ற ஐயன். இதுதான் தந்தை என்பது,

மொய்த்தவழி யொருவன் தான் மீண்டெறிந்த தார்நிலை (தொல். பொ. 72) என்றார் தொல்காப்பியர்.  பூசைக்குத் தானையும் சேனையும் தொடர்பற்றவை.  ஆகவே தானை என்பது பூசைமொழிச் சொல் அன்று. போர்பற்றிய கருத்துகள் பூசைமொழியில் பிற்காலத்து நுழைவுகள் ஆகும். பூசைகட்குத் தானை தேவையில்லை.  அரசர்களும் போர்மறவர்களும் பூசைமொழிக்குரியவர்கள் அல்லர்.  பூசைக்குரியவன் இறைவன் மட்டுமே.

சேட்டன் என்பது சேஷ்டன், ஜேஷ்டன்   என்றும் பூசப்படும். இவை வேய்வுகள் ஆகும்.

இவற்றைத் தொல்காப்பியர் மட்டுமே கூறியுள்ளார்.  வேறு எவனும் சொல்லவில்லை.  ஆதாலால் வேறு மேற்கோள்கள் இல்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

கருத்துகள் இல்லை: