வெள்ளி, 5 ஜூன், 2020

அனுஜன் என்ற சொல்லில் தமிழ் மூலங்கள்.

இங்கு யாம் சொல்லப்போகின்றவை, ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக
யாம் சொல்லிவருபவை தாம்.  ஆராய்ச்சி என்று கடுமையாக ஒன்றிலும் ஈடுபடுவதில்லை.

அணுகுதல் என்ற வினைச் சொல்லை எடுத்துக்கொள்வோம்.  இதன்
வினைப்பகுதி   அண்> அணு > அணு(கு)> அணு(கு)(தல்) என்பதுதான். 
அண் என்ற மூலச்சொல்லுக்கு இடைவெளியின்றி  அருகிலிருப்பது
என்பதுதான் பொருள்.  இந்த அண் என்பது அன் என்றும் திரியும்.  அப்புறம்
பு என்னும் விகுதி பெற்று அன்பு என்றாகும்.  அன்பு என்றால்  -  சொல்லமைப்பில் என்ன தெரிவிக்கிறதென்றால்-   இருவர் அணுக்கம் அடைந்துவிட்டனர் என்பதைத் தெரிவிக்கிறது.  இந்தச் சொல்லை எடுத்து உங்களுக்கு மனநிறைவு உண்டாகுவண்ணம் வரையறவு செய்துகொள்ளலாம். யாம் சொல்வது சொல்லைப் பிரித்து அறிந்த அமைப்புப் பொருளை மட்டுமே.  சொற்பொருள் என்பது வேறு. சொல்லமைப்புப் பொருள் என்பது வேறு.

அண் > அன் என்று திரிகிறது.  பின் உகரச் சாரியை பெற்று அனு என்றாகும். அன்> அனு>அனுசு> அனுசன் என்று ஆகிப் பிறப்பில் ஒருவனுக்கு அடுத்து உள்ளவனைக் குறிக்கிறது.  அடுத்ததிலும் பின் உள்ளவனைக் குறிப்பது வழக்கு ஆகும். இந்த பின்மைப் பொருள் சொல்லின் உடைசல்களில் இல்லை. பயன்பாட்டில் உண்டாவதாகும்.  ஆனால்  தம்பி என்ற சொல் தம்+பின் என்ற இரண்டு துணுக்குகளின் திரிபாக இருப்பதால், பிறப்பால் பின்மை என்பது சொல்லிலேயே வந்துவிட்டது.   அனுசன் என்பதில் இப்பின்மைக் கருத்து வழக்கினால் அல்லது பயன்பாட்டினால் வருகின்றமையின், காரண இடுகுறி ஆகின்றது.  தம்பி என்பதிலும் இப்பிறப்புப்பின்மை முழுமையாக வந்துவிட்டதா என்றால்,  இல்லை; அது இடத்தால் பின்மை அன்று. அதாவது காலத்தால் பின்மை. இன்னும் வரிசையில் பின்னால் நிற்பவனைக் குறிக்காது; அடுத்துப் பேருந்தில் ஏறப்போவோனைக் குறிக்காது( காலம், இடம் இரண்டும்). அது ஒருதாயிலிருந்து முன் பிறந்தோனுக்கு அடுத்துப் பிறந்தோனைக் குறிக்கிறது.  ஆகவே அனுசன் என்பதில் இப்பொருண்மை இல்லையாதலால், வழக்கிலுளமை கருதி, காரண இடுகுறியே ஆகும்.

அனுசன் என்பதில் சு இடைநிலை; அன் ஆண்பால் விகுதி.

இது பின் அனுசன்> அனுஜன் என்று மாறிவிட்டது. வடவெழுத்து ஒரீஇ நோக்கின், அனுசன் என்பதே அதன் வடிவம் ஆகும்.

இராமனுக்கு அனுசன், இராம+ அனுசன் > இராமானுசன்> ~ஜன் ஆகும்.

ஜன் என்பதைப் பிறப்பு என்று கொண்டாலும், அடுத்து என்பது வழக்கினால்
பெறப்படுவதே ஆகும். அடுத்து அல்லது பின் என்பதைக் கல்லி எடுத்தற்கு
இப்படிச் செல்லலாம்:

இராம +
அன் +
உ +
ஜன்.

உ என்ற சுட்டு, பின்மையும் காட்டும். எடுத்துக்காட்டு: உப்பக்கம் என்ற
சொல்.

இதிலுள்ள பிற சிறப்புக்களைப் பின் அறிவோம்.

தட்டச்சுப் பிறழ்வு காணப்படின் பின் சரிசெய்யப்படும். 

2 கருத்துகள்:

C.Rajendiran, Founder ,www.voiceofvalluvar.org சொன்னது…

சிந்தனை செய்ய வேண்டிய விளக்கம்.. அருமை.. மகிழ்ச்சியும் நன்றியும் பாராட்டும்

SIVAMALA சொன்னது…

நன்றியும் வணக்கமும். தங்கள் வள்ளுவர் இயக்கத்தில் இணைந்துள்ள அன்பர்கட்கும் எங்கள் வாழ்த்துகள் உரியனவாகுக.