சனி, 27 ஜூன், 2020

இலிகிதம் (கடிதம்)

இலிகிதம் என்னும் சொல் இப்போது வழக்கில் அருகிவிட்டது. அதற்கு ஈடான சொற்கள் சில வழக்குக்கு வந்துள்ளன. அவற்றுள் மடல் என்பதொன்று.


கடிதம் என்பது ஒரு கடினப் பொருளில் பதிவுசெய்யப்பட்ட செய்தி என்னும் கருத்தை நமக்கு அறிவிக்கிறது. இச்சொல்லமைப்பில் இடைநிலையாக வருவது இது என்ற சுட்டுப்பெயராகும். அது இது என்பவனவெல்லாம் இவ்வாறு இடைநிலையாகப் போதரும் சொற்கள் பிற்காலத்தில் தமிழர்களால் அமைக்கப்பட்டன. இப்புதியவை படிப்போரைக் கவர்ச்சி செய்தமையால் வழக்கில் இருந்தன. ஓர் எடுத்துக்காட்டு: ( இடைநிலை: அது)


பரு + அது + அம் = பருவதம். வகர உடம்படு மெய் புணர்க்கப்பட்ட சொல் இது. வினைப்பகுதி பரு (பருத்தல் ) என்பது. பருவதம் என்பது மலையைக் குறிக்கிறது. மலை பருத்ததன்று என்று நீங்கள் எண்ணினாலும் அது பரியது என்பதை ஒப்புவீர். என்ன வேறுபாடு? ஏதுமிருப்பினும் இருக்கட்டுமே.


இதைப்போலவே இது ( இடைநிலை ) வந்த சொற்களும் பல. ஆயிடை

கடிதமென்பதும் ஒன்றாகும்.


கடு + இது + அம் = கடிதம்.


சொல்லால் தெரிவிப்பது, கடிதம் ஆகாது. இதற்குக் காரணம் சொல்லில் கடிய அல்லது கடினமான பொருள் ஏதுமில்லை. அது வெறும் காற்று. கேட்போன் செவிடனானால் அவன் சொல்லை அறியமாட்டான். ஏதாவது செவிக்கருவி வேண்டும். ஆனால் எழுதிக் கொடுத்துவிட்டால் அது கடினப் பொருளில் எழுதப்பட்டிருப்பதனால் கடு (கடுமை) + இது (இடைநிலை) + அம் (அமைந்தது காட்டும் விகுதி) --- ஆகின்றது. அதாவது "ஹார்டு காப்பி" ஆகிவிடுகிறது.


நாம் தெரிந்துகொள்ள முனைந்தது இலிகிதம். இந்தச்சொல், எதன்மேல் பதிவுபெற்றுள்ளது என்பதைப் பற்றிச் சொல்லாமல், எவ்வாறு பதிவுபெற்றுள்ளது என்பதை அறிவிக்கும் சொல்லாகின்றது. அது எப்படி என்பதைச் சொல்கிறோம்.


பழம் என்ற சொல் பலம் என்றும் வரும். ல் - ழ் போலி அல்லது திரிபு. தமிழ் என்பது தமில் என்பதினின்று திரிந்தது என்பார் கமில் சுவலெபெல். விழிப்ப நின்று இவைபோலும் மாற்றுக்கள் வருங்கால் குறித்துக்கொண்டு அறிக. இவ்வாறுதான்:


இழு > இலு என்பதும் அமைந்தது. இழு என்றாலும் இலு என்றாலும் கோடிழுப்பது. கோடிழுப்பதுதான் எழுதுவது.


பிற ஆசிரியர்கள் கூறியபடி:


இழு > இழுது > எழுது.


இழு > இலு:


இலு > இலுக்கு > இலக்கு ( எழுதிக் குறிக்கப்பட்டது).

இலக்கு > இலக்கியம் ( எழுத்தல் இயன்றது / அமைந்தது).

இலக்கு > இலக்கணம் ( எழுத்தால் இயன்றவற்றை அணவி எழுந்தது.)

அணம் விகுதி. (சார்ந்து எழுவதை குறிக்கப் பொருத்தப்படும் விகுதி.)


இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் என்பர்.


இனி இலிகிதம்.


இலு + இகு +இ து + அம்.


இலு> இழு என்பது எழுது என்னும் கருத்து.

இகு என்பது இங்கு என்பதன் இடைக்குறை.

( இதை எல்லாம் பலவழிகளில் விளக்கலாம். இகு என்பதிலிருந்து தான் இங்கு என்ற சொல் மெலித்துப் பிறந்தது எனினுமது ).

= இகரச் சுட்டு. கு = சேர்விடம் குறிக்கும் இடைச்சொல்.)

இங்கிருந்து (அங்கு) இழுப்பதுதான் கோடு, எழுத்து எல்லாம்.


இவற்றுள்:


இலு என்பதன் உகர ஈறும் இகு இது எனற்பால இவற்றின் உகர ஈறுகளும் விலக்குக.



இல் + இக் + இத் + அம்


இலிகிதம் ஆகிவிடும்.


மறுபார்வை பின்.








கருத்துகள் இல்லை: