வியாழன், 25 ஜூன், 2020

வாலிபன்

வாலிபன் என்ற சொல்லின் மூலங்களைக் 
காண்போம். இதனடிச் சொல் வல் என்பது
இதிலிருந்து கிளைத்த உங்களுக்குத் தெரிந்த
 சில சொற்கள் இங்கு தரப்படுகின்றன.

வல் - வலிமை;
வல் - வல்லவன்.
வல் - வாறு ( பொருள்: வலிமை).
(வல் > வால் > வால்+து > வாறு. இது வாற்று என்று வலி மிக்கு வரினும் பின் இடைக்குறைந்து வாறு என்றாம். சொற்கள் நீடலும் குன்றலும் தமிழியல்பு. பழைய இடுகைகளிற் கண்டு
குறிப்பெடுத்துக் கற்றுக்கொள்க).

-டு:

நல் > நறு > நாறு > நாற்றம்.

நாற்றம் என்றால் நன்மணம். இது பின் பொருள் இழிபு கொண்டது.

வல் > வாலரி > வாளரி

வலிமையுடன் பிற விலங்குகளை அடித்துக் கடித்துக் கொல்லும் சிங்கம். அரிமா என்பதும் அப்பொருள் பகுதிபொருந்துவதே.

வல் > வால் > வாலுகம். மணல்.
கட்டிட வேலைகளில் வலிமைக்காகக் காரையுடன் ( சிமென்ட்)
கலக்கப்படுவதாகிய மணல்.

வல் > வால் (வலிமைக்காக)
உக > உக+ அம் > உகம் ( உகக்கப்படுவது).

வல் > வால் > வால் + உகு + அம் > வாலூகம்

இது நஞ்சு. உண்டால் வலிமையை உகுத்து ( எடுத்துக்) கொன்றுவிடவும் செய்யக்கூடியது. உகு+ அம் = ஊகம், இது முதனிலை நீண்டு திரிந்த தொழிற்பெயராய் வல் என்பதனுடன் ஒட்டிச் சொல் அமைந்துள்ளது.

வால் என்பது மிகுதியும் குறிக்கும். வலிமை என்பது உடல் தெம்பு மிகுதி.

ஒரு மனிதன் அல்லது விலங்குக்கு வலிமை மிக்கிருக்கும் காலமெனின் அது இளம் பருவமே. ஆகவே வலிமைக் கருத்து இளமைக் கருத்துக்குத் தாவிற்று.

வல் > வால் > வால் > வாலை (வாலைப்பருவம்)
வல் > வள் > வாளார் ( இளங்கொம்பு).
வள் என்ற அடிக்குப் பல பொருள்: அவை, கூர்மை, படுக்கை, பெருமை, வலிமை - தொடக்கத்துப் பலவாகும்.
வல் > வால் > வால்+ பு + அன் = வாலிபன், இங்கு இகரம் சாரியையாய் வந்து சொல்லுக்கு இனிமை பயந்தது.




கருத்துகள் இல்லை: