புதன், 24 பிப்ரவரி, 2016

பொறுப்பு ஒப்படைக்க

ஒரு பழமொழிப் பாடலைப் படித்து மகிழ்வோம்.  பழமொழி என்பது நூலின் பெயர்.


உடைப்பெரும் செல்வத்து  உயர்ந்த பெருமை
அடக்கமில் உள்ளத்தன் ஆகி ===  நடக்கையின்
ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக்
கொள்ளி கொடுத்து விடல்.

இப்பாடல் அடக்கமில்லாதவனைப் பற்றியது.  அடுத்த வீட்டான் உங்களுக்கு அடங்கிப் போகவேண்டும் என்று நினைத்து அவன் அடக்கமில்லாதவன் என்று பேசுதல் கூடாது. இப்பாடல்  அத்தகைய  சூழ்நிலையைப் பற்றியதன்று.

அதிகாரத்தை வழங்கும் நிலையிலுள்ளோன், அதை இன்னொருவனிடம்  ஒப்படைக்கும் முன்னர், அதைப் பெறுவோன் எப்படிப் பட்டவனாய் இருக்கவேண்டும் என்பதை   இப்பாடல் தெளிவாக்குகிறது.

அவன் செல்வச் செருக்கு உடையவனாய் இருத்தல் ஆகாது.  அதாவது அவன் செல்வனாய்  இருக்கலாம்  ஆனால் செல்வச் செருக்கு உடையவனாய் இருத்தலாகாது ; இரண்டும் வெவ்வேறாம்,  தன் உயர்ந்த பெருமைக்கு ஏற்ப அவன் நடத்தையில் சிறந்தவனாய்  இருக்கவேண்டும். அல்லாதவன்மேல் அதிகாரத்தை வைத்துவிட்டால் அவன் ஆடத்தொடங்கிவிடுவான்,  அது குரங்கின் கைகளில் எரியும் கோலைக் கொடுத்ததற்கு ஒப்பாகிவிடும். எரிகோல் பிடித்த குரங்கு ஊரையே  அழித்துவிடும். இதை நன்கு ஆராய்ந்து உணர்ந்துதான் எந்தப் பொறுப்பையும்  ஒப்படைக்க வேண்டும்.

மக்களாட்சி முறையில் தேர்தலுக்கு விருப்பாளர்களாக (candidates)  நிற்க முன்வந்தோரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்.  முன்வராதோரில் அதற்குத் தகுதியானவர் அருகிலேயே இருக்கலாம்;  அவர் முன்வரவில்லை என்றால் மக்களால் அவரைக் கொண்டுவந்து தேர்ந்தெடுப்பது  இயலாதா காரியம்.

இப்படி வழிகாட்டுகிறது  பழமொழி நானுறு. 

கருத்துகள் இல்லை: