செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

டகரம் ரகரமாக

டகரம் சொற்கள் சிலவற்றில் ரகரமாகத் திரியும். இதற்கு ஓர் எளிதான எடுத்துக்காட்டினைத் தரவேண்டுமானால்:

மடி >  மரி என்பதைக் குறிப்பிடலாம்.  இங்கு டி > ரி என்று திரிந்ததைக் கவனிக்கவும்,

கோடு என்ற சொல் வளைவும் குறிக்கும். மலையுச்சி வளைவைக்  கோடு என்பர். பின்னர் அது அம்மலை உள்ள ஊருக்கும் பெயரொட்டானது .

உதாரணம்:  திருச்செங்கோடு.   கசரக்கோடு .  அதங்கோடு.

வடக்கிலுள்ள பதன்கோடு வரை செல்லும் இச் சொல்லாட்சி. கோடு+ ஐ =  கோட்டை ஆயிற்று. கோட்டைகளும் வளைவாகக் கட்டப்பட்டனவாதலினால்,  கோடு அடிச்சொல்லாக நின்றது.

கொடு > கோடு.

கொடு என்பது இங்கு நீண்டது.  கருத்து வளைவுதான்,  நண்டுக்கொடுக்கு  வளைவானது.  கொடு> கொடுக்கு,     கொடுக்குப்பிடித்தல் என்ற வழக்கையும் நினைவுகூர்க.

செயலாலும் வளைவு உணரப்படும்.

கொடு > கொடுமை.

கொடு > கொடுங்கோல்  ( வளைந்த கோல்;  நேர்மையின்மை குறித்தது. )


கோடு > கோடம் > கோரம்.  ( மிகக் கொடுமை.)  ட > ர .

கோரக் கொலை என்பது காண்க.

கொடு > கொடுத்தல். ( வளைந்து நின்றபடி ஒன்றைத் தருதல்.)  இதுவே  சொல்லமைப்புப் பொருள்.  நாளடைவில் வளையாமல் கொடுத்தலும் கணினிக்கணக்கு வழி காசு கொடுத்தலும் எல்லாம்
கொடுத்தலில் உள்ளடங்கின .. இது பொருள் விரிவாக்கம். பயன்பாட்டு  விரிவு ஆம்.

கருத்துகள் இல்லை: