ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

முந் நீர் - சமுத்திரம்.

சமுத்திரம்  என்ற சொல்லைச்  சில ஆண்டுகட்கு முன்னரே  ஓர்  இடுகையில் அணுக்கமாகக் கவனித்திருந்தேன்.   இது   எங்ஙனம் உருவானது என்று மீண்டும் சிந்திப்பது நல்லது.

அமை -   அமைத்தல்.

இது பின்    இன்னொரு சொல்லைப் பிறப்பித்தது.

அமைத்தல் -  சமைத்தல்.

 அகரம்  சகரமாய்த்  திரியம் .   அமண்  -   சமண் ,

அகபதி  (அகத்துப் பதிவாய் விளங்கும் இறைவன் )  -  சகபதி.

அகர வருக்கத்துப் பிற எழுத்துக்களும் இங்கனம் திரியும்.


உக > சுக > சுகம்     உகந்த நிலையே சுக நிலை..

முன் இடுகைகளில் தந்த எடுத்துக்காட்டுகள் அங்குக் காண்க.

சமைத்தல் என்பது  வேகவைத்தோ  பொரித்தோ  அல்லது  வேறு வகையிலோ சூட்டினால் உணவு உண்டாக்குதலைக் குறிக்கும் சொல்லாயிற்று.  நுண்பொருள்  வேறுபாட்டு  விரிவு  இது ஆகும்.

சமை என்ற சொல்லில் இருந்து  இந்தோ ஐரோப்பியத்துக்கு  சம் என்ற அடிச்சொல்  கிட்டியது.   சமை என்பதிலிருந்து  வினையாக்க விகுதியாகிய ஐ பிரிவுண்டு விடுமாயின்  மிச்சமிருப்பது சம் அன்றோ?

சீரகம்  சோம்பு     ஏனை   மசாலைப் பொருள்கள்  முதலிய  இட்டுக்  கறி சமைத்து  உண்டவர் தமிழர் . ஆகவே சமைத்தல் என்பதற்குப்   பல பொருள்களை ஒன்று சேர்த்துக் கூட்டுதல், என்ற  பொருள் அமைந்தது  பொருத்தமே. இப்பொருள் ஒரு பின்வரவு ஆகும்.  குழந்தை  சமைந்தது  என்ற வழக்கும் உள்ளது    சமைதல் - தன் வினை;  சமைத்தல் -  பிறவினை.

இனிச்  சமுத்திரம் என்ற சொல்லுக்கு வருவோம்.  

இது முந்நீர் என்ற  தமிழ்ச்சொல்லைப் பின்பற்றியது.    சமுத்திரம்  என்பதன் பின்பகுதி முத்திரம்  -  இது உண்மையில் முத்திறம்  ஆகும். சம் என்பது ஒன்று சேர்தல், கூடுதல்;  (>  சமை).,  திரை (கடல்)  என்பதிலிருந்து  இந்தத் திரம்  வந்திருத்தல் கூடும் என்று  கூறுவர் சிலர்,

இங்ஙனம்  புதிய சொல் ஒன்று அமைக்கப்பட்டது.

முந் நீர்  -  சமுத்திரம்.

இப்போது முந்நீர் போல  சமுத்திரமும் பொதுவாகக் கடல் குறிக்கும் ,  மூன்று கடல் கூடுவதென்பது  சொல்லமைப்புப் பொருள் .  இப்போது அது  மங்கிவிட்டது.


முந் நீர்   -   முத்திறம் /      முத்திரம்
சம்  +  முத்திரம்  -   சம்முத்திரம் >   சமுத்திரம்

இப்படிச் சொற்களைப்  படைத்தவர்கள்  சிறந்த படைப்பாளிகள் என்பதில் ஐயமில்லை. சொற்களின் படைப்பு வழிகளைக் கண்டின்புறும்  இவ்வேளையில்  அவர்களையும் பாராட்டுவோம்.


கருத்துகள் இல்லை: