வியாழன், 19 பிப்ரவரி, 2015

சத்து

சா  என்பதொரு தமிழ் வினைச்சொல். இது பல தோற்றரவு(அவதாரங்)களை  எடுக்கிறது.அதாவது, பல வடிவங்களை அடைகின்றது. சில மொழிகளில் வினைச்சொல் மட்டுமே நின்று வினை முற்றுப்பெற்றதைக் காட்டும் .  உதாரணத்துக்கு  மலாய் மொழியைக் காட்டலாம். (அவன்) இறந்துவிட்டான்  என்று சொல்ல வேண்டுமானால்  dia mati (ia mati)  என்கையில் ,  mati என்ற வினை எந்த உருமாற்றமும் அடையவில்லை.   இறந்த காலம் காட்ட,  ia telah mati, அல்லது ia sudah mati என்று சொல்ல வேண்டும்.  பழம்பெரும் மொழியான சீன மொழியிலும் வினை உருமாற்றம் இல்லை. இது இலத்தீன் சமஸ்கிருதம் முதலான பிறவற்றுக்கு வேறான அமைப்பு முறை.

தமிழர்  அல்லாதாருக்குச்  சில வேளைகளில் தமிழ்ப் பேச ஆசை.  Where is she ?  என்று ஒரு சீனப்பெண்ணிடம் கேட்டால், அவள் "அவன் போ !"  என்கிறாள். பெண்பாலுக்குப் பதில்  ஆண் பாலில் சொன்னது கிடக்கட்டும்.  போ என்பது ஏவல் வினையாகவே, அல்லது வினைப்பகுதியாகவே நின்றுவிட்டது. தமிழ் முறையில் இது குற்றம். சீன அல்லது மலாய் மொழிகளின் இலக்கணப்படி மிகவும் சரி .

இப்போது  சா என்ற சொல்லுக்கு வருவோம்.

அவன் சாகிறான்.
அவன் செத்தான்.
அவன் சாவான்.

அது செத்த பாம்பு,
அவன் செத்து  மடிந்தான் .

சா>  செ  > சா > செ >  செ .

வா என்ற வினை, இறந்த காலத்தில் வந்தான்  என்று  வா> வ 
என்றாவதுபோல்  (குறுகுவது போல்)  சா என்பது  சத்தான் அல்லது வந்தான் என்பதற்கியைய சந்தான்  என்றோ வந்திருக்க வேண்டுமே.  Bloomfield  முதலிய அறிஞர்  மொழி முறைகேடுகளை எடுத்துக்காட்டியதுதான்  நினைவுக்கு வருகிறது.

மலையாளத்தில் மட்டும்  "அவன் சத்து "என்பது முறைப்படி வினை முற்றாக வருகிறது.  செத்துப்போய் என்னாமல் சத்துப்போய்  என்பது முறைப்படியானது.

கோழியோ உருளைக்கிழங்கோ உண்கிறீர்.  உயிருடன் உங்கள் உடலில் போய்ச் சேர்வதில்லை. செத்து  அல்லது சத்துத் தான் உள்ளேபோகிறது.  அதுவே சத்து ஆகிறது. 
சத்து மடிந்த கோழியை  அல்லது சத்துப் பொரித்த  கிழங்கை 
அது சத்துவிட்டதால் சத்தாக உள்பெற்றுக்கொள்கிறீர்.

சத்து என்ற சொல் உண்மையில் ஒரு வினை எச்சம் . இலத்தீன் omnibus என்ற சொல்லிலிருந்து வந்த "[பஸ்]"  என்ற சொல்லிறுதி  இப்போது சக்கை போடு போடுவது போல,  சத்து என்ற வினை எச்சமே, "சத்து " என்று  சத்துப் பொருள்களை உங்கள்பால் கொண்டுவருகின்றது.

இப்படி எற்பட்ட தமிழ்ச்சொல் சத்து.  பாலி மொழியில் கூட சில எச்ச வினைகள் பெயர்ச் சொற்கள்  ஆகி மறு வாழ்வு பெற்றுள்ளன. பின்னர் காண்போம். 

சத்து உண்டது சத்துத் தந்தது. அதுவே சத்து. 
   

கருத்துகள் இல்லை: