புதன், 18 பிப்ரவரி, 2015

சாதல் சமஸ்கிருதச் சொல்லா?

சாதல் என்ற சொல், தமிழ்ச் சொல். இதை யாரும் சமத்கிருதம் என்று சொல்லி யாம் கேள்விப்பட்டதில்லை.  இந்தச் சாதல் என்ற சொல்லின் வினைப்பகுதி ஆகிய "சா" என்பது, அங்கும் இடம்பெற்றுள்ளது. அதன் பல்வேறு பொருள்கோள்களை இப்போது கண்டின்புறுவோம்.

Sa :  loss , destruction ; loss of knowledge ; end , term ; rest , remainder ; eternal happiness , final emancipation ; heaven , paradise ; sleep ;

சா:  (= ஸா):  இழப்பு, அழிவு.  அறிவு அழிதல்.  இறுதி.  காலச் செலவு; ஓய்வு.  இறுதலில்லா மகிழ்வு. இறுதிச் சம நிலை;  மேலுலகு. ஒப்பற்ற துறக்கம்; உறக்கம். பொறுமை; தாங்கிக்கொள்ளல்.

இவை எல்லாம் சாதல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இயைந்த பொருண்மைகளே.

இப்போது கேள்வி: சாதல் சமஸ்கிருதச் சொல்லா?  சமஸ்கிருத அகரவரிசையில் இருக்கிறதே!

சமஸ்கிருத அகரவரிசையில் இருப்பவை எல்லாம் சமஸ்கிருதச் சொற்கள் அல்ல . அகரவரிசைகள்  ஆக்கப் பட்ட \காலங்களில் ஒரு மொழியில் வழங்கிய   சொற்கள்  யாவற்றையும் விடாது  உள்வாங்கி எழுதிக்கொள்ள முனைந்தனர்,  பொருந்தாதவை என்று அவர்கள் நினைத்தவற்றை விட்டுவிட்டனர்.  மொழி ஆய்வும்  சொல் ஆய்வும்  செய்துதான்  சேர்க்கலாம் என்ற கட்டாயம் ஏதுமில்லை. குறிப்பிட்ட மொழியில் ஒரு சொல் வழக்கில் இருந்ததா என்பதுதான்  முதன்மையான கேள்வியாய்  அவர்கள் மனத்துள் இருந்தது.  அதுமட்டுமின்றி,  ஆக்கியோரின் மொழிக் கொள்கைகளும் அவர்களையே   பாதித்தன. சமஸ்கிருதம் இந்திய மொழிகள் அனைத்துக்கும் தாய் என்ற கொள்கை  அன்றைய அறிஞர்  இடையே நிலவியதால்  அக்கொள்கையின்படி  எதை வேண்டுமானாலும் உள்வாங்கிக் கொள்ளலாமே.  மேலும்  அகரவரிசை என்பது   பொருளறியும்  கருவியன்றோ?  சொல்லின் பொருளைத் தேடுகிறவன்  அதில் அதைக் காணமுடியவில்லை என்றால் 
அகரவரிசை பயனற்றதாகிவிடும்.  அகரவரிசை ஆசிரியன் இதையும் கருதவேண்டியிருந்தது. இத்தகைய சூழலில் அவன்  குறிப்பிட்ட மொழியில் கிடைத்த சொற்களையெல்லாம்  உள்வாங்க்கிக்கொண்டான்.  இது தவறன்று.   "சா" என்பதை  ஏதேனும் ஒரு நூலிலோ  வாய்மொழியிலோ  அறிந்திருப்பான். அதை எழுதிக்கொண்டான்.  அல்லது மொழிக்கொள்கையின்படி  அதை  ஏற்றுக்கொண்டான் அறியாமையும்  சிலவேளைகளில்  காரணமாகலாம்.   மொழி  ஆர்வமும்  காரணமாகலாம்.

பயன்படுத்துகிறவன்  அயன்மொழிச்சொல்லைக்  கொள்வதற்கு  சட்டப்படியான  தடை ஏதும் இல்லை;  அவனே  அதைத் தீர்மானிக்கிறான். மொழி   அறிஞன்    வேண்டாமென்றால்  அது வெறும் பரிந்துரை மட்டுமே.  
  

-----------------------------------------------------------------------------------------------quod supplantandum, prius bene sciendum

கருத்துகள் இல்லை: