புதன், 24 ஆகஸ்ட், 2016

பலி - பரி



இப்போதெல்லாம் பலியிடுதல், பலிகொடுத்தல் என்ற தொடர்கள் அடிக்கடி
செவிகளை எட்டுகின்றன. சிலவிடங்களில் நரபலி பற்றிய செய்திகளும்
கிடைக்கின்றன. திறமாக உசாவியறிந்து எலும்புக்கூடுகளைக் கைப்பற்றிய‌
காவலர்கள் கதைகளும் உலா வருகின்றன.

பலி என்கையில், தலையை வெட்டிக் கொல்லுதலே எடுப்பாக முன் நிற்கின்றது. நண்ணிலக் கிழக்கிலும்  (Middle East ) இது பரவலாக நடைபெறுதல் இணைய மூலம் அறியப்படுகிறது.

பலி என்ற சொல் உண்மையில் பரி என்பதன் திரிபு ஆகும். பரி என்றால்
வெட்டுதல் என்று பொருள். பரிதல்,பரித்தல் ‍ வெட்டுதல், அறுத்தல்.

ரகரம் லகரமாவது தமிழிலும் பிறமொழிகளிலும் உண்டு. ரகரத்தைப்
பலுக்க நாக்குத் திரும்பாமல், அதை லகரமாக வெளிப்படுத்தும் பிறமொழியளரும் பலர். ரகர எழுத்துக் குன்றிய மொழிகளும் உலகில்
உள. ஆர் என்று உச்சரிக்க‌ இயலாமல் அதை ஆர என்று இழுப்போரும்
பலர்.இங்கு அவர்களைப் பழிப்பதற்காகக் கூறவில்லை. ரகரமும் லகரமும்
ஒன்றுக்கொன்று பரிமாற்றம் பெறத்தக்கவை என்பதை, ஆணியடித்ததுபோல் இறுக்கிப் பிடித்தபடி உணரவேண்டும் என்பதற்காகவே சொல்கிறோம். ஒலிகளின் உச்சரிப்பில் மனித நாவு அப்படிச் செயல்படும் தன்மையை உடையது, அவ்வளவே. ரகர லகரத்தைத் தெளிவாக உச்சரிப்பதால் நாம் அவர்களைவிடக் கெட்டிக்காரர்கள் என்பது பொருளன்று.

ஒலி நூலில் ர‌கரத்தை முந்தியது லகரம் என்பதற்குத் தமிழில் அகச்சான்றுகள் உள. வள்ளல் என்ற சொல்லைப் பாருங்கள். வள்ளன்மையுடையோன் வள்ளன் / வள்ளர் என்று வரவேண்டுமே. ஏன் சொல் அல் விகுதி பெற்று முடிகிறது? காரணம் அன், அர் இவற்றை முந்தியது அல். தோன்றல் என்ற தலைவரைக் குறிக்கும் சொல்லும் அப்படிப்பட்டதே ஆகும். இது நிற்க.

சிற்றம்பலம் என்ற சொல் சித்தம்பரம் > சிதம்பரம் என்றாகியது. இதில்
லகரத்துக்கு ரகரம் வந்தது. இப்படிப் பட்ட பரிமாற்றத் திரிபுகளைக் கண்டு
கொள்க. கோடரி > கோடாலி என்பதும் காண்க. போக்கிலி > போக்கிரி
மற்றொன்று. பக்கத்தில் யாருமில்லாத தனியன் தான் பக்கிலி > பக்கிரி.
பக்க இலி > பக்கிலி > பக்கிரி (மரூஉ). (பக்கவடை> பக்கோடா போன்ற திரிபு). நிலம்+தரம் = நிலந்தரம் > நிரந்தரம். ( நில் ‍ பகுதி).

எனவே பலி <> பரி தொடர்பு தெளிவாகிறது. பரித்தலே பலியாம்.  Not Bali.  
வெட்டுதல் பரி  என்பதன் பொருள்.  பிற பொருள் தொடர்பற்றவை.








துங்கமும் குலோத்துங்கனும்.

தமிழ் மொழியில் மிகப் பழங்காலத்திலேயே சொற்களைச் சுருக்கிபும் விரித்தும் பயன்படுத்தும் முறைகளைக் கையாண்டுள்ளனர். இல்லாத என்பதை இலாத என்று சுருக்குவதைக் காணலாம். இல்லான் அடி சேர்ந்தார்க்கு என்பதை இலான் அடி சேர்ந்தார்க்கு என்று குறள் கையாளுதல் நீங்கள் அறிந்ததாகும். ஆனால் பொருள் கெட்டுவிடாதபடி சுருக்கவேண்டும். வெற்றி என்பதை வெறி என்று சுருக்கினால் பொருள் கெடுதலால் அங்ஙனம் செய்யார் புலவர். நீட்டம் தேவைப்படும்போது சொற்கள் கூட்டி எழுதப்பட்டன. தழுவிய என்பதைத் தழீஇய என்று நீட்டி இதை அளபெடை என்பர். தொழார் என்பதைத் தொழாஅர் என்பர். செய்யுட்களைப் படிக்கையில் இவற்றை நீங்கள் கவனித்துக்கொள்ளலாம்.

ஆனால் இத்தகு தந்திரங்களைச் செய்யுட்கு மட்டுமின்றிச் சொல்லாக்கத்துக்கும் பயன்படுத்தித் தமிழ்ச் சொற்களை வேறுமொழிகட்குப் பயன்ப‌டுத்திய சிறந்த நல்லறிவும் சில அறிஞர்கட்கு இருந்தது. அப்படிப் பயன்பாடு கண்டவற்றுள் துங்கம் என்ற சொல் குறிப்பிடத்தககது ஆகும்.



துலங்குதல் என்பது இன்றும் வழக்கிலுள்ள சொல் ஆகும். இதன் அடிப்படைக் கருத்து ஒளிவீசுதல் என்பது. இதல் மூலம் துல் என்பதாகும்.

துலங்கு என்பதைப் பெயர்ச்சொல் ஆக்க ஓர் அம் விகுதி சேர்க்கவேண்டும்.
துலக்கம் என்று வரும். அப்படி வல்லோசை தழுவாமல், துலங்கம் என்றே வைத்துக்கொண்டு, இடையில் வரும் லகரத்தை விலக்கிவிட வேண்டும்.
அம் என்ற இறுதியையும் குறுக்கவேண்டும். இதைச் செய்தால், துங்க‌
என்பது கிடைக்கிறது. துலங்கம் > துங்க. அல்லது துலங்க என்ற எச்சத்திலிருந்து ஒரு லகரம் நீக்கித் துங்க என்பதை வந்தடையலாம். பிற மொழிகளில் எச்ச வினைகளிலிருந்தும் சொல் உருவாகும். பாலி மொழியிலும் இங்ஙனம் செய்தல் உண்டு.


துங்க என்ற சொல் மேன்மை குறிப்பது. குலோத்துங்க சோழன் பெயரில்
துங்க(ம்) வருகிறது. சிங்கள மொழியிலும் இது பயின்று வழங்குவது
ஆகும்.

துங்க பத்திரை நதியின் தீரத்தில் நீங்கள் உலவிக்கொண்டிருக்கும் போதும் துங்கத்தை நீங்கள் சிந்திக்கலாமே!

குலோத்துங்கன் என்றால் குலத்தில் துலங்குபவன் என்பது பொருள். அதாவது குலத்துலங்கன். லகரம் நீக்க, குலத்துங்கன்; வடமொழிச் சந்தியைப் பற்றினால் குலோத்துங்கன்.


துலங்கு (தன்வினை) > துலக்கு (பிறவினை).
துலக்கு + அம் = துலக்கம்.
துலங்க > துங்க > துங்கம்

துங்கமும் குலோத்துங்கனும்.




செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

திலோத்தமை

அரம்பை என்ற சொல் அமைந்ததெவ்வாறு என்று ஆய்ந்தறிந்த நாம்  http://sivamaalaa.blogspot.com/2016/08/blog-post_19.html இனி, திலோத்தமை அவள் பெயரை யாங்குப் பெற்றாளென்பது  துருவியறிந்து மகிழ்வோம்.

திலகம் என்ற சொல், உண்மையில் துலகம் என்பதன் திரிபு எனபது முன்னர் கூறப்பட்டது.    https://sivamaalaa.blogspot.sg/2014/06/blog-post.html

துல >  துலங்கு. கு : வினையாக்க விகுதி;    துல :  அடிச்சொல்.

பண்டைமக்கள் பொட்டு இட்டு அவனருட் பெற்று முகவழகுடனும்  ஆன இலக்கணங்களுடனும் இலங்கினால்  வீடும் துலங்கும் என்று நம்பினர்.  ஆதலின்  பொட்டு  இடும் வழக்கம் உண்டாயிற்று.அதற்குத் துலகம் என்ற சொல்லும் ஆக்கப்பெற்று, அது திலகம்>  திலக் என்றெல்லாம் "மெருகூ"ட்டப்பட்டது.

இங்கு நாம் கவனிக்கவேண்டியது யாதெனில், து> தி  திரிபு.

இதே வழியைப் பின்பற்றி,  திலோத்தமாவிற்கும் பெயர் புனையப்பெற்றது.

அவள் யார்?  துலங்கும் உத்தமி!   எனவே அவளுக்கு துல+ உத்தமை என்ற பெயர் புனைவுற்றது.

துல + உத்தமை >  துலோத்தமை > திலோத்தமை.1

துலங்கி முன்னிருப்பவள்.   உ> உ + து + அம்+ இ./ ஐ.

அவளுக்குப் பெயர் தந்ததும் தமிழே ஆகும்.



-----------------

1 இது வடமொழிச் சந்தி என்பர் . மூலங்கள் தமிழ் .

கள் அடியும் கருமையும் கள்ளரும்

கள் என்ற அடிச்சொல்லின் ஒரு பொருண்மையை இவ்விடுகையில் (https://sivamaalaa.blogspot.sg/2016/08/blog-post_65.html   )அறிந்து இன்புற்றோம்.கள் என்னும் அடிக்குப் பல பொருளுண்டு என்பதும் ஆங்குச் சொல்லப்பட்டது.

அதன் இன்னொரு பொருள் கருப்பு என்பது ஆகும்.

கள்ளர் என்ற தொழிலர் பெயரை ஆய்ந்த அறிஞர் பண்டித வேங்கடசாமி நாட்டார்கள்ளர் என்ற சொல் கறுப்பர் என்று பொருள்படுமென்று கூறினார்.

களங்கம் என்ற சொல்லும்  கள் என்ற அடியினின்று பிறந்ததே .

இது கள்அங்குஅம் என்று பிரித்தற்கு வரும்இதற்கு அங்கே
உள்ள கருப்பு என்று வாக்கியப்பொருள் கூறலாம்அங்ஙனமின்றிகள்அம்குஅம் என்று பகுத்துகு என்னும் இடைச்சொல் இடையிட்ட இரண்டு அம் விகுதிகளைச் சொன்னாலும் அதனால் ஏற்படும் ஆய்வு இழுக்கு ஒன்றுமில்லை.. மொழிக்குப் பல சொற்கள் வேண்டுமாயின் இத்தகு தந்திரங்களைக் கைக்கொள்ளுதல் அறிவுடைமையே ஆகும்.


அது,இதுஅங்குஇங்கு என்பன தொடங்கிப் பல சொற்கள் தம் பொருளுடனோ பொருள் இழந்தோ சொல்லமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன..இடைநிலைகள் பொருளுடன்தான் பயன்படுத்தப் படவேண்டும் என்னும் ஒரு விதியோ ஏற்பாடோ மொழியில் இல்லைபொருந்து மிடத்துப்      பொருள் கூறினும் இழுக்காதென்பது அறிகஇதனால்தான்  இன்று என்ற காலப்பெயரைக் கின்று என்று உருமாற்றி இடைநிலையாக்கினார் பவணந்தி முனிவர்.   (கு +  இன்று )


களங்கம் என்ற சொல்லைப் புனைந்து இன்புற்ற ஆய்வாளர்அதில் அன் விகுதி சேர்த்துக் களங்கன் ஆக்கி நிலவுக்குப்  பெயர் ஆக்கினர்.

களங்கம்களங்கன்.

கள் அங்குஅன் களங்கன் எனினும் அதே.

"களங்க்" என்று நிறுத்தி உ+அம் என்பவற்றை விலக்கிகளங்கன் என்று ஆக்கி அதற்கு முடிவு சொன்னாலும் அதேதான்அடிச்சொல் "கள்" தான்.

களம் (கள் + அம்) என்றாலும் கருப்பு என்றே  பொருள் தரும்.  கள் +அர்இ =களரி எனினும் கருமையே  ஆகும்களர் எனினுமதுஅர் என்ற பலர்பால் விகுதி இங்குப்  பொருளிழந்தது.

இச்சொற்கள் இவ்வாறு வளர்ந்திருக்ககள்ளர் என்ற கூட்டத்து அடையாளப் பெயருக்குக்  கறுப்பர் என்ற பொருள்மட்டுமின்றித் திருடு செய்வோர் என்னும் பொருளும் உள்ளதுஇந்தப் பொருள் எக்காலத்து இவர்களுக்கு வந்து சேர்ந்தது என்பதை அறிதல் இயலவில்லை.

இக்கூட்டத்து யாவரும் இத்தகு தொழிலில் ஈடுபாடு கொண்டனர் என்பது ஏற்கத்  தயங்குமொரு கருத்தாகக் கருதப்படலாம்பண்டை அரசர் போர்க்குமுன் ஆனிரை கவரும் ஒரு படைப்பிரிவை வைத்திருந்தனர் ஆதலின் அதில் பணியாற்றியதன் மூலமாக இவ்வடையாளக் குறி ஏற்பட்டிருக்கக் கூடுமென்று கருதலாம்இருட்டில் செய்தற்குரிய வேலைக்கு ஏற்ற நிறமுடையராய் இருந்ததினால் இவர்கள் இதிற்  சிறக்க
ஏற்புடையோர் என்று அரசன் கருதினன் என்க.

தற்கால ஆய்வுகளின்படி இவர்கள் ஆப்ரிக்காவிலிருந்து 70 ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே வந்துவிட்டனர் என்பதை
குருதி ஆய்வின்மூலம் நிறுவியுள்ளனர்.. 1900 ஆண்டுகள் வரை கலப்பு மணங்கள் நிகழ்ந்துவந்துள்ளமையால்இவர்களும் கலந்து பின் கலவாமை போற்றும் புதுப் பழக்கம் மேற்கொண்டனர் எனலாம்பிற்காலத்து இவர்கள் ஆனிரை கவர் தொழில் மேற்கொண்டனர் என்பது ஏற்புடைத்தாகலாம். முன்னரே வழங்கிவந்த  "கள்ளர்" (கறுப்பர் ) பெயருக்குப்  பின்   கொண்ட   இத்தொழிலின்    (அரசாணை ஆநிரை கவர்வுப் )   பெயர்    ஒரு மெருகு தந்திருக்கலாம் .  திருடுதற்  கருத்து  தவறாக ஏற்பட்டிருக்கலாம் . 

Certain portions of this post could not be edited due to software error. Will attempt later.

  






கட்சி ( கள் என்ற அடிச்சொல்)

கள் என்ற அடிச்சொல்லுக்குப் பல பொருள் உள. இவற்றுள் கட்டுதல், இணைத்தல், ஒன்று சேர்த்தல் என்பதுமொன்று. இஃதோர் முன்மை பொருந்திய பொருளாகும். இதைச் . சற்றே சுருக்கமாகக் கவனிப்போம்.

கள் >  கட்டு.  கட்டுதல்.   கள்+ து =  கட்டு.
கள் >  கட்டு >  கட்டி.  ஒன்றாக இணைந்திருப்பது.
கள் >  கடு:   ஒன்றாக இணைந்திருப்பதனால் " கடுமை" உண்டாகிறது.
ஒப்பீடு :  பள்  -  படு  பள்ளம்  படுகை  
கள் >  கடு > கடன்.  கட்டவேண்டியது கடன்.    "கட்டுதல்" போன்ற பிற நடவடிக்கைகளும் அடங்கும்.

கள் > கட்சி.  கள்+ சி.   பலர் ஒன்றாகக் கட்டப்பட்டதுபோன்ற  நிலை.
இது கொள்கைக் கட்டாகவே பிறவாகவோ இருக்கலாம். சி என்பது விகுதி.

கள் >( கழ) >  கழகு >  கழகம்.  பலர் சேர்ந்திருப்பது. இது கட்சியாகவோ சூது மூலம் கட்டுண்ட நிலையாகவோ இருக்கலாம்.

கள் >(  கழு) >  கழுத்து.   பல தசை நார்களும் அரத்த நாளங்களும்
கட்டப்பட்டிருப்பது.

கள் > கள்ளம்.   கட்டப் பட்ட உரை/ செயல் . பொய்

இன்னும் பல/ அவற்றைப் பின்னொரு நாள் காணலாம்.

இந்த இடுகை மூலம் கள் என்ற அடிச்சொல்லின் ஒரு பொருண்மை
தெளிவாகிறது. நேரம் கிட்டுகையில் விரித்துச் சொல்வோம் . 

முன்னாள் அதிபர் நாதன் மறைவு இரங்கல்

இன்னுமினி பொன்னாட்கள்   இங்கிருப்பார் என்றிருக்க‌
விண்ணிற்சென் றேய்ந்திட்டார் வெற்றித் திருமகனார்
நாதன்சிங் கப்பூரின் நல்லார்தம் உள்ளமெலாம்
மேதகவாய் வாழுவார் மேல்.

இழந்து வாடும் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக.

பொருள்:

இன்னும் :  வரும் காலத்தில்  ;
இனி  :  இனிக்கின்ற
பொன்னாட்கள் :  நோயற்ற  நாட்கள்
இனி பொன்னாட்கள்: இனிக்கின்ற நோயற்ற நாட்கள்  இது வினைத்தொகை .
ஏய்ந்திட்டார் :  இயைந்திட்டார்  அல்லது இணைந்திட்டார்
மேதகவாய் :  உயர் நிலையில்



ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

வாந்தி (யகர ஒற்று மறைவு )

அறிஞர் தீ என்ற சொல் எப்படி உண்டானது என்று ஆய்ந்தனர், முடிவில்
தேய்தல் என்ற கருத்திலிருந்து அது வந்தது என்று கண்டனர். கற்கள் தேயுங்கால் வெப்‍‍பமும் தீயும் உண்டாகிறது. மரங்கள் தேய்ந்தும் காடுகளில்
தீயுண்டாகிறது என்றும் சொல்வர்.

தேய்தல் > தீய்தல் என்று சொல்லமைந்தது. தீய்ந்து சாம்பலாயிற்று என்பது
காண்க. தீய் என்பது பின் தீ ஆயிற்று.  (வினையிலிருந்து  போந்த பெயர்ச்சொல் )

தீய் > தீய்பு > தீபு+அம் = தீபம். யகர ஒற்று மறைந்து, பு அம் விகுதிகள்
பெற்றுச் சொல்லானது.

யகர ஒற்றுக்கள் இடையில் நிற்கையில் சொல் நீட்சி பெற்றால் அவை மறைதல், முன் பல இடுகைகளில் விளக்கப்பட்டது.

இன்னோர் எடுத்துக்காட்டின் மூலமாய் இதனை விளக்கலாம்.

தின்றது வாய்வழியாகத் திரும்பி வெளிவருவது வாந்தி என்றனர்.

வாய் + தி > வாய்ந்தி > வாந்தி.   (  இங்கு யகர ஒற்று  மறைந்தது )

தி என்பதை விகுதியாகவும் திரும்பிவருதற் குறிப்பாகவும் மிக்கத் திறமையுடன் அமைத்தனர்.

வாந்தியை வாயால்எடுத்தல் என்பதுண்டு.

யகர ஒற்று  மறைவுக்குப் பிற காட்டுகள்

தீய் > தீய் + பு = தீய்ம்பு > தீம்பு
காய் > காய்+பு > காய்ம்பு > காம்பு.  (காயுடன்  இணைந்தது )
தோய் > தோய்+ பு > தோய்ம்பு > தோம்பு. (துணி முதலியன தோய்த்து
வைக்க உதவும் பெரிய கொள்கலம்)  (தானியங்கள் ஊற வைக்கும் கலம் )
பாய் + பு  =   பாய்ம்பு  > பாம்பு     ( மு வரதராசனார் )

காய் > காய் + து +  அம் =  காய்ந்தம் >  காந்தம்,  உள்ளில் தீ இருப்பதாக எண்ணப்பட்ட இரும்பு, காந்துதல். இதுவும்  பகுதியாகலாம் .

இவற்றில் யகர ஒற்றுக்கள் மறைவினைக் கண்டுகொள்க.   


ஆங்கிலத்தில் உள்ள டேய் என்னும் நாள் குறிக்கும் சொல்லும்
நமது சொல் தான். காரணம் அது 'டா" என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து புனையப்பெற்றது. டா என்பதோ எரிதல் என்று பொருள்
படும் சொல். டா> டியெஸ் (இலத்தீன்) > தெய் ( பழைய பிரிசியன்)
என்பன தொடர்பு உடையவை. டியெஸ் அதில் தொடர்பில்லாதது
என்றனர் ஆய்வாளர் சிலர். ஆனால் இவை எல்லாம் தேய் > தீ
என்ற தமிழினின்றும் பெறப்பட்டவை. இதில் நான் எடுத்துக்காட்ட விழைந்தது, டே (day ) என்ற ஆங்கிலத்தில் யகர ஒற்று இன்னும் இருக்கிறது
என்பதுதான்.

தொடர்புடைய இடுகைகள்:

தாதி  :   https://sivamaalaa.blogspot.sg/2014/07/blog-post_3978.html
இடையில் யகர ஒற்றுக் கெடுதல்  https://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_89.html

derivation words meaning mother:
https://sivamaalaa.blogspot.sg/2014/02/derivations-of-words-meaning-mother.html









மாலாவின் பெயர்

அது தமிழ், இது தமிழில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும்  மாலாவின்
பெயர் தமிழில்லை (தமிழன்று) என்று சில நல்லன்பர்கள் கூறியுள்ளனர்.
அதனை இப்போது ஆய்வு செய்யலாம்

செல்லாயி என்பது செல்லமான ஆயி என்று பொருள்படுவது. இக்காலத்தில் இப்பெயர் நாகரிகமற்ற பெயராய்க் கருதப்பட்டு யாரும் வைத்துக்கொள்வதில்லை. ஓர் ஆய்வாளிக்கு மனித நாவிலிருந்து வெளிப்போதரும் எந்தச் சொல்லும் நாகரிகம் உள்ளதுமில்லை; இல்லாததுமில்லை. சொல்லில் நாகரிகம் இருப்பதாக நினைத்தல் மனிதனின் மகிழ்வில் விளைந்த நினைப்பு. சில மனிதர்கள் சில ஒலிகளை விரும்புகிறார்கள். இது ஒரு மனப்பதிவு அன்றி வேறில்லை.


ஆனால் விரும்பாத ஒலியை நாம் கட்டாயப்படுத்தி ஏற்கச்செய்தல் இயலாத காரியம். நம்மைப்பொறுத்தவரை குறித்த எல்லா ஒலிகளும் மனித நாவில் விளைந்தவை.

செல்லாயி என்பதைச் சுருக்கிச் செல்லா என்றால் நன்றாக இருக்கிறது. திடீர் நாகரிகம் ஏற்பட்டுச் சிறந்துவிடுகிறது. ஒரு சீனப்பெண்னிடமோ மலாய்ப் பெண்ணிடமோ சொன்னால் சிறிதாகவும் இனிதாகவும் இருக்கிறது என்கிறார்கள். சிற்றூர்க்காரர்கள் முயற்சிச் சிக்கனத்தின் காரணமாகச் செல்லா என்றனர். இப்படித் திரிந்த பெயர்களின் பட்டியல் நீளமானது.

எல்லாவற்றையும் எழுதிக்கொண்டிருந்தால் அலுப்பு ஏற்படும்,

இலக்கணப்படி செல்லாயி செல்லா என்றானது கடைக்குறை.

இங்ஙனமே மீனாய்ச்சி அல்லது  மீனாயி என்பது மீனா என்றானதும் கடைக்குறை. மீனாட்சி  என்பது  ஆட்சியைக் குறிக்கிறது.
ஆகுபெயராய்ப் பெண்ணையும் தேவியையும் குறிக்கும்.

இதுவேபோல் மாலாய்ச்சி அல்லது மாலாயி என்பது மாலா என்றானால்
கடைக்குறை.

மால் மாலன்
மால் மாலி
மால் மாலினி\
மால் மாலவன்
மால் மாலதி
மால் மாலை
மால் மாலு.
மால் மாலியை மால்யா ( மால் ஆயா என்பதன் திரிபு .)
மால் மாலிகை

எனப்பற்பல வடிவங்கள்.

இந்த வடிவங்களைப் படைத்தவர்கள் மனிதர்களே.  நாமே 

மாலுதலாவது கலத்தல். இருளும் ஒளியும் கலந்த நேரம் மாலை நேரம்.
மால் : மாலை. மால் : கரியமால் எனவும் படும், பல பூக்கள் கலக்கத் தொடுத்தது மாலை, மால் ஒளி குறைந்த நிறம். மால் > மா , மா நிறம்.
மாலினி, மாலா என்ப கருத்தவள் என்று பொருள்பட்டுக் காளியைக் குறிக்கும், அம்மனை அறிவுறுத்தும்.   

மால் ஆயி : மால் அல்லது கருவல் ஆனவள் எனினுமாம்.

மாலும் என் நெஞ்சு ;  மாலானவர் அணி பொன்னாடை;  தொடர்கள் காண்க 


மாலு என்பவள் என் தோழி. இவள் கேரளாவில் வக்கத்தில் உள்ளவள்.

விகுதிகள் வேறுபட்டன; திரிந்தன.


மா: மாயி: கருப்பன்.  ( மா + இ .)


மாயம்> மாயி எனினும் அமையும். மாயம் செய்வோன் என்னும் பொருளில்,

.மற்றவை  பின்னர் காண்போம்,


இங்கு தென்பட்ட சில பிழைகள் திருத்தப்பட்டன. 8.22 இரவு 1.12..2017
மறுபார்வை செய்யப்படும்.









சனி, 20 ஆகஸ்ட், 2016

கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச ,,,,

கருப்பாய் இருப்பது பற்றியும் வெள்ளையாய் இருப்பது பற்றியம்  எழுதப்பட்ட ஒரு சுவையான கட்டுரை:


http://thisisafrica.me/who-taught-you-to-hate-your-dark-skin/

 IDENTITY
SHARE ON:
Who taught you to hate your [dark] skin?


வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

பாக்கிஸ்தான் சோதிடப்பலன்

நாளோடு  கோளும் நலிந்திருக்கும் கட்டத்தில்
மீளா தழுந்தியது பாக்கித்தான் === கேளாமல்
போனதனால் ஓர்பாதி  போகக்  கொடும்பலன்கள்
ஆனதனால் கேடினி  ஆம்      

https://www.journalofastrology.com/article.php?article_id=371


கணங்களின் அதிபதி கணபதி

ஏறினான் ஏணி  தன்னில்
என்றனின் முயற்சி  என்பான்
ஏறிட வழுக்கி வீழ்தல்
எவரது முயற்சி என்பீர்
காரணம் இலதென் பீரோ
கால்தளர் வெனச்சொல் வீரோ
ஓருமோர் கணத்தில் வந்த
ஒருவிபத் தெனவிள் வீரோ?

தொடைவலம் இழந்து போனால்
தொடரவும் முடியா தன்றோ?
தொடைப்பலம் உமதே என்றால்
தொலைந்ததும் வலிமை எங்கே?
உடையதை இழந்த பின்பே
உமதுசென் றதுவும் யாங்கு?
அடைந்தவை உம வென் றாலோ
இழந்தவை எவரின் செய்கை?

(கணங்களின் அதிபதியாம் கணபதி உங்கள் வலிமையைப்
பின்னிழுத்திருக்கலாம்......)

அவன்தந்த துன்றன் வலிவது  போயின்
எவன்போயிற்  றென்பது நாடு.

பொருள்:
--------------
உம -  உம்மவை.   உமது: ஒருமை. உம  - பன்மை.
எவன் - ஏன்
நாடு  -  சிந்திக்க .

அரம்பை

அரம்பை என்பது பல்பொருளொரு சொல். முன் இடுகையில்  அரம்பை என்பது வாழை(ப்பழம்) என்ற பொருளில் வந்தது. அரம்பை  ஒரு தேவலோக
மாதென்பது தொன்மம்   (புராணம் )  வழியாய் நாம் அறிவது ஆகும்.

அரம்பை என்ற சொல் அமைந்த விதம் காண்போம்.


அரு =  அரியது.  அருமை

அம்  =   அழகு.

பை =  பசுமை

அரிய, அழகிய, பசுமையான ஒரு பொருள் அல்லது பெண்.

பொருளென்று வருகையில் வாழை எனவும் 

பெண்ணென்கையில் தேவருலக மாதெனவும்

பயன்பாடு கண்ட சொல்.

இதுபின்  தன் தலையை இழந்து "ரம்பா" ஆகிற்று.

நீங்கள் செய்தகு ஆய்வு:  அவஸ்தான் மொழியிலும்
ஐரோப்பிய மொழிகளிலும் தேடிப்பார்க்க. இதன் மூலங்கள்
தமிழ்.

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

Forgetting One's Guru "ஆன்பாலும் தேனும்"

இது  http://sivamaalaa.blogspot.com/2016/08/blog-post_17.html  இடுகையின் தொடர்ச்சி:


"ஆன்பாலும் தேனும் அரம்பைமுதல் முக்கனியும்
தேம்பாய உண்டு தெவிட்டுமனம் ‍=== தீம்பாய்
மறக்குமோ வெண்ணெய் வருசடையா கம்பன்
இறக்கும்போ தேனு மினி"

பொருள்:

ஆன் பாலும் தேனும் :  பசுவின் பாலும்  தேனும்;
அரம்பை முதல் முக்கனியும்:   வாழைப்பழம் தொடங்கி மூன்று
வகைப் பழங்களையும்;   முக்கனி : மா, பலா, வாழை

தேம் பாய உண்டு :  இனிப்புச் சுவை மிகும்படியாக உட்கொண்டு;

தெவிட்டும்:   அது அப்போது  மேலும் உண்ணவியலாது போய்விடும்;
திகட்டும் என்றும் சொல்வர் .

வெண்ணெய் வரு சடையா :  திருவெண்ணெய்நல்லூரான் ஆகிய சடையப்ப வள்ளலே உன்னை:


கம்பன் :  கம்பனாகிய யான்;

இறக்கும்போதேனும் :  இறந்துகொண்டிருக்கும் இந்த வேளையிலுமே

இனி :  இனிமேல். நினைவு என்பது இருக்குமாயின் இறந்த பின்னும்.

தீம்பாய் மறக்குமோ :  கெடுதலாக  மறப்பேனோ

என்றவாறு

ஆசிரியனை மறத்தல்  நன்றி கெட்ட செயலாகும்  என்பது கருத்து, இது  தீம்பு  என்று குறிக்கப்பட்டது .

இன்று அவன் அழைக்கின்றான்

நான் அழைத்தேன் ஒரு நிகழ்ச்சிக்கு;
அவன் சிரித்துக்கொண்டான்
ஆனால் அவன்  வரவில்லை;     இப்போது
இரண்டு மூன்று வேலைகள்
எனக்காகக் காத்துகொண்டிருப்பவை ;
அவற்றை நான் நாளைத்  தொடங்கவிருக்கிறேன்;
இன்று அவன் அழைக்கின்றான்
ஆனால் என் தோழி மூலமாக;
நேரடியாகக் கூப்பிடத்
தொடர்பு கிடைக்கவில்லை .என்கிறானாம்
அவனே இவன்
இவனுக்காக என் வேலைகளை மாற்றிவைக்க
என்னால் இயல  வில்லை ;
காரணம் இது மற்றவர்கள் தொடர்புடையது.
மூஞ்சியை இவன் இழுத்துக்கொண்டாலும்
நான்செய்வனவற்றை  எப்போதும்
தள்ளி வைத்துக் கொண்டிருக்க  முடியாதே
பிறர்க்கும் வேலை இருக்கும் என்பதை
இவன் உணராதவன்....
இவன் வேலை மட்டும்
இவன் விழித்திரையில்
இவனுக்கு வெளிச்சமாய்த் தெரிகிறது.


புதன், 17 ஆகஸ்ட், 2016

"குருப்பத்தி" - குருபக்தி.

ஆசிரியரைப் போற்றுதல் ("குருப்பத்தி")( குருபக்தி.)


அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வம். அதற்கடுத்து ஆசிரியர் வருகிறார், அவரிடமும் நம் வாழ்நாள் முழுவதும் நன்றியுடனிருக்கவேண்டும். நாம் தெய்வத்தை அறிந்தது இறுதியாகவே.

இவ்வுலகை நாம் முதலில் அறிந்துகொண்டது பெற்றோரின் வாயிலாகவும் அடுத்து ஆசிரியரின் வாயிலாகவுமே என்பது இதன் பொருள். பண்டை நாட்களில் காவியம் புனைந்தோர் எத்தனை பாடல்களுக்கு ஒருமுறை ஆசிரியனைப் புகழவேண்டும் என்றொரு முறை வைத்துக்கொண்டிருந்தனர் என்று தெரிகிறது. மாணவன் தன் ஆசிரியனை மறந்தானில்லை என்பதை உணர்த்த இது சான்றாகத் திகழ்ந்தது.

தமிழ்ப் புலவோர்தம் ஒழுக்கம் இவ்வாறிருக்க, தமிழரல்லாத பெரியோரும் இவ்வாறே ஆசிரியப் பற்று உடையோராய், இப்புதுமை அறிவியல் நாட்களிலும் திகழ்கின்றனர் என்பதை நம்மில் பலர் அறிந்திருத்தல்கூடுமென்று நினையாநின்றோம். இதற்கோர் எடுத்துக்காட்டு
அண்மையில் காணும் மக்களைக் களிப்பிலாழ்த்தும் வண்ணமாய் மேலெழுந்துள்ளது. அதனை இஞ்ஞான்று நினைவுகூர்வோம்.

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்து இற்றை முடியரசர் முன்னைய ஆங்கில மொழிக் கல்லூரியில் கற்றுத் தேர்ந்தவர். ‍ இது இப்போது ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியாகிவிட்டது. இங்கு இதன் தலைமை ஆசிரியராய் 1971 முதல் 1975 வரை இருந்து பணிபுரிந்தவர் சியு முன்  என்னும் பண்பாளர். இவரை மறவாத முடியரசர் (சுல்தான் ) பினாங்குத் தீவுக்குச் சென்று சியு முன் அவர்களைக் கண்டு இருபது நிமிடங்கள் உரையாடி மகிழ்ந்ததுடன் குடும்பத்துடன் மதிய உணவிற்கும் அழைத்துச் சென்று கொண்டாடினார்.

தம் ஆசிரியரைப் பிரியுமுன், தமது நினைவாகத்  தம் முடிசூட்டுச் சின்னம் கொண்ட மணிப்பொறி நாணயத்தையும் வழங்கி, சிறப்புச்செய்தார்.

ஆசிரியரைப் போற்றும் பண்பாடு பெரியோரிடமும் எம்மக்களிடமும் காணப்படுவதொன்றாம் என்பதை இது தெளியக்காட்டுகின்றது.

யாமறிந்த ஒரு பெரிய பதவியிலுள்ள சீன நண்பரொருவர், தமிழரான தம் ஆசிரியரின் அறிவுரையை அடிக்கடி நினைவு கூர்வார். "வானமே உன் குறியாக இருந்தால், மரத்துனுச்சி உனக்குக் கிட்டும்; மரத்தினுச்சி உன் குறியாகவிருந்தால் ஒருவேளை உனக்குத் தரையே கிட்டக்கூடும்" என்பாராம். இதைப் பின்பற்றித் தாம் பயனடைந்ததாக இவர் பலரிடமும் கூறுவார்.


கம்பநாடன் தன் ஆசிரியர் சடையப்ப வள்ளலை இராமயாணத்தில் அவ்வப்போது நினைவுகூர்ந்த பெருந்தகவினன். தானிறக்கும் வேளையிலும்:

"ஆன்பாலும் தேனும் அரம்பைமுதல் முக்கனியும்
தேம்பாய உண்டு தெவிட்டுமனம் ‍=== தீம்பாய்
மறக்குமோ வெண்ணெய் வருசடையா கம்பன்
இறக்கும்போ தேனு மினி"

என்று இறுதிவணக்கம் செலுத்தினன் என்ப.

பெருங் கவிஞன்  கம்பனின் பாடற் பொருள் :-

 http://sivamaalaa.blogspot.com/2016/08/forgetting-ones-guru.html



==============================
1   (thA. 30.5.2016)





‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍





செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

சாய்த்தலும் ஆற்றலும்

சாய்த்தல் :  https://sivamaalaa.blogspot.sg/2014/03/blog-post_23.html.   சாத்தியம்  என்பதை  ஆய்ந்துகொண்டு பின்பு வாயித்தல்  ( அதாவது வாசித்தல் , )  நலம் .


மரங்கள் அடர்ந்த காடுகளில் சுற்றி வேலை பார்ப்பவர்களுக்கு மரங்களைச் சாய்ப்பது ஒரு பெரிய வேலை.  சாய்க்க முனைபவரின் பக்கமே சாய்ந்து அம்மரம் அவரைக் கொன்றுவிட்டால் அது பெருந்துன்பக் கதையாகிவிடும். இப்படிச் சில நிகழ்வுகள் ஏற்பட்டு அவை தாளிகைகளில் வந்தன; அவை கண்டு, சாய்த்தல் என்பதன் பொருளை யாமும் உணர்ந்தோம். அதுவரை " இவன்  என்ன சாய்த்துவிட்டான்?"   என்ற கேள்வியின்  உண்மைப் பளு மேலோட்டமாக நின்று, அப்போதுதான்  விரிந்தது,   புரிந்தது.  எங்கள் வீட்டில்  ஒரு மரத்தை வெட்டவேண்டி ஏற்பட்டபோது,  மரம்வெட்டுத் துறையில் வல்லோரையே அழைத்தோம். வீட்டிலோ பக்கத்திலோ உள்ள தெரியாத பையன்களிடம் பத்து வெள்ளியைக் கொடுத்துச் சாதித்துவிடலாம் என்பது  அறிவுடைமை ஆகாது. 

மரம் விழுந்து செத்தவர்களின்  கதைகளைச் சேர்த்துத்தந்து மூளையைச் சுண்டிய இணையத்தைப் போல் தாளிகைகளால் செயல்புரிதல் அரிது. 


சாய் என்றாலே ஆற்றல்.   அது மரம் சாய்க்கும் ஆற்றல்.  பின்னர் அது பொதுப்பொருளில் வழங்கி,  ஆற்றல் என்று மட்டும் நின்றது. பேராற்றல் என்று மனத்தில் பதிவுறுத்தப்   ' பெருஞ்சாய்' என்றனர்.. இந்தச் சொல் இன்னும் நம்மிடம் உள்ளது.  பேச்சில் அடிக்கடி கேட்க முடியாமற் போனாலும் நிகண்டுகள் கைவிட்டுவிடவில்லை. அதுவரை நன்மையே நிலைப்பட்டது.

சாய்த்தல் >  சாய்த்தியம் > சாத்தியம்.

ஓலைச்சுவடிகள் இல்லாமல் வாய்மொழியாகவே பாடம் சொன்னவர்:
வாய் > வாய்த்தி > வாத்தி > வாத்தியார்  ஆனால், இரண்டில்  ஒரு பொட்டு (யகர  ஒற்றெழுத்து அல்லது மெய்)  அவர் வைத்துக்கொள்வதில்லையே. இறுதியில் வரும் "ஆர் "  பணிவுப் பன்மை .


பாய்ச்சு > பாய்ச்சனம் >  பாசனம் என்பதற்கு இரண்டு பொட்டும் இல்லாமல் போனதால், இப்போது அடிக்கடி தண்ணீர்ப் பஞ்சமோ?


மெய்யெழுத்துக்கள்  நீக்கி எழுதும் இயக்கம் ஒரு காலத்தில் மும்முரமாக இருந்தது. அடிக்கடி பொட்டு  அல்லது குத்துப் போட்டால் ஓலை கிழிந்து இடர் ஏற்படுகிறது.   கல் மற்றும் ஓடுகளில் எழுதும் போதும் தேவையற்ற உடைப்புகள் அல்லது சில்கள் வெளிப்படும். மெய்களை ஒலிக்கக்  கூடுதல் முயற்சி வேறு தேவைப்படுகிறதே........


will edit. Part of the post was unexpectedly destroyed.



Tamil inscription from China

Fig. 20 Section of stone inscribed in Tamil and Chinese.


Fig. 20 Section of stone inscribed in Tamil and Chinese.








சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று ஒரு சிவன் ஆலயம் குப்லாய் கானால் சீனாவில் கட்டப்பட்டது.அங்கு தமிழ்க் கல்வெட்டு காணப்படுகிறது . படம் மேலே .

கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடியபின் அவன் சீனாவில் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கிப் புகழ்ப் பெற்ற யுவான் அரசமரபைத் தொடங்கி, அப்போது தமிழ்நாட்டில் அரசாண்ட குலசேகரப் பாண்டியபனின் பேரரசுடன் நட்புறவுடன் திகழ்ந்து , இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொண்டான்.

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

கவை to கவனம்

கவை என்பதன் அடிப்படைப் பொருள் பிரிவு என்பது. ஒரு மரக்கொம்பு, இரண்டாகப்  பிரிந்திருப்பது, நண்டுக்கால் கொடுக்கு  இரண்டாகப் பிரிந்திருப்பது, ஒரு இரும்புக்கருவி இறுதியில் இரண்டாகப் பிரிந்து பயன்படுவது ..... எனப் பல. இந்தக் கவை, இரண்டாகிப் பிற பொருளை
பற்றி எடுக்க உதவுகிறது. அல்லது ஒன்றாக வருங்கால் எதையாவது பிடிக்க அல்லது "கடிக்க"ப் பயன்படுகிறது.

மனத்தில் ஏதேனும் துன்பமிருந்து, என்ன செய்வது என்ற போராட்டமிருந்தால் அதை நாம் கவலை என்கிறோம். மனம் இரண்டு பட்டுவிட்டது என்றும்  சொல்வர். கவை என்ற சொல்லிலிருந்து  தொடர்புடைய பிற அமைந்த விதம் காண்போம்.

கவ  >  கவர் >  கவர்தல்
கவ >   கவை   (  க வ +  ஐ  )
கவ >   கவடு  >  கபடு  >  கபடம்    வ > ப  திரிபு .
கவ  >  கவல்  >  கவல்தல்
கவ  >  கவல்  >  கவலை .   ஐ விகுதி .
கவ  >  கவல்  >  கவலி  >   கவனி  >  கவனித்தல்   ல > ன  திரிபு.
   கவல்தலின்  காரணமாகத் தோன்றுவது  கவனம்.
   கவலைப் படாதவனுக்குக் கவனம் இல்லை .
   விளைவுகள் பற்றியதே கவலை .(கவலை காரணமாகத் தோன்றுவது கவனம் .)  கவல்தல் =  கவலை .

கவனி  >  கவனம் .

பிற மொழிகட்கும் சில கொடை  செய்யப்பட்டன.  அவை பின் பேசப்படும்,

kavanam  not gavanam,

இதனைப் அறிஞர்  பிறரும்  கூறியுள்ளனர்   அறிந்து இன்புறுக .


சனி, 13 ஆகஸ்ட், 2016

சுமங்கலிப் பூசை

Time:  6 am tomorrow
Place : Potong Pasir Ave 1  சிங்கப்பூர் .
Sri SivaDurga Temple

SUMANGALI PUJA   சுமங்கலிப் பூசை



கதிரொளியோன் எதிர்முளைத்து சிரிவிளைக்கும் காலை
கறைபடரா நிறைதொடரச் சிவச்சுடரைக் காண்பீர்

அதியருளே பதிவுறவே திருபெறவே துர்க்கை
அம்மனமர் ஆலயத்துள்  உம்மனமே செல்க.

நாளைநலம் வாய்ந்திடுக! காலையிலே பூசை
நடைபெறுபோத் தோங்பாசீர்  அடைபெழுதில் ஆங்கே

சுமங்கலிப்பெண் பிள்ளைகள்செய் சுட்டுயர் ஏத் துகையே
துவங்கிடுமுன் இருந்திடுக!  மகிழ்ந்திடுபுன்  னகையே

பங்குகொண்டு பயன்பெறுவீர் எங்கெவர்க்கும் இறைவி
தங்குதடை யாதுமின்றிப் பொங்குவரம் தரவே.


It was a grand festival for the participating sumangalikaL and  other attendees. The temple fees alone for  the festival came to SGD 7750 paid by the  group,  we understand.  The annathanam (food after prayers )   was excellent.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

நடிகையர் வாழ்வெலாம்.....

நல்ல  பொருள்வரவு  நாளும்நோக்   காடியில்
சொல்லவும் ஒண்ணாத் துருவல்  பொதுப்பூ 
நடிகையர் வாழ்வெலாம் நாடுரிய நாடின் 
குடித்தனிமை கூறுதற்  கில் .

அரும்பொருள் :

நோக்காடி  - scanning device or scope.
துருவல் - intrusions
பொதுப்பூ -  பலரும் சொந்தமென்று நினைக்கும் பூ.
நாடுரிய - நாட்டுக்கு உரியவை
குடித்தனிமை  -   privacy as citizens
நாடின்  -  ஆராயும் பொது .
கூறுதற்கு  -  சொல்வதற்கு . 

அபூர்வம்

அபூர்வம் என்ற சொல்லைக் கவனிப்போம்.  இது எந்த மொழிச்சொல்லாக
இருந்தால் என்ன? நாம்  அன்றாடம் வழங்குகிறோம்.

புகு என்ற சொல்லைப் பேச்சு மொழியில் பூர் என்றுதான் சொல்கின்றனர்.
நலல கம்பிக் கதவு; திருடன் பூர முடியாது என்பது காதில் விழுகிறது.
சீட்டு இல்லாவிட்டால் என்ன, பூரலாம் நமக்கு ஆள் இருக்கிறது என்பதும் பேசப்படுகிறது.

புகு> பூர் > பூந்த,  பூந்து

எங்கேயோ பூந்து எங்கேயோ வந்துவிட்டானே......

நாம் எண்ணிப் பார்க்கமுடியாத  முன் காலத்தில் பூந்தது   'பழையது'.  அதனால்
புர் > பூர்  என்பதற்கு  பழைய என்ற  பொருள் ஏற்பட்டது .தொடக்க நாள் பழையது ஆகவே பூர்விகம்  என்ற சொல்லும்  அமைந்தது.

போன நாளிலேயே  இருந்த ஒன்று ' பூர்வம்' உள்ளது.   எப்போதாவது தோன்றுவதே  அபூர்வமானது.    அ  என்ற முன்னொட்டுக்கு  அன்மை  என்பது   பொருளாம்

பகுதி  என்பது  பாதி என்று திரிதல் காண்க .  பகு  > பா /    அதுபோல்  புகு
பூ  எனத்  திரிந்தது   சொன்னூலுக்கு இணங்கியதே  ஆகும் .

The paragraphing and spacing error is inherent in this post which  could not be ameliorated. 

உச்சி என்ற சொல்.



உ என்று  வரும் சுட்டு  முன்னிருப்பதைக் குறிப்பது.

உ > உன்.
உ >  உம். இது உன் என்பதன் பன்மை

உ > உய்.   முன்  செல்,  மேல் எழு என்று பொருள்.
உ >உய் >  உய்தல்.

அர் என்ற வினையாக்க விகுதி இணைத்து:

உய் >  உயர்.  உயர்தல். உயர்ச்சி.

உய் > உய்த்தி > உத்தி    இதிலிருந்து யுத்தி > யுக்தி கிடைத்தது.

தமிழ்த் திரிபுகள் பல உள்ளடக்கியது நாம் வடமொழி என்று கூறும் மொழி.
வடமொழி என்பது ஒரு மொழிப்பெயர் அன்று.  அது திசையைப் பொறுத்துச்
 சுட்டப்பட்ட ஒரு சொற்றொகுதி.  இது பின் சமஸ்கிருதம் என்ற பெயரால்
அமைவுற்றது.

வட சொற் கிளவி  என்று தொல்காப்பியர்  குறித்தது   வடபுலத்துப்   புழங்கிய சொற்றோகுதியை.  அது  அவர்காலத்தில் ஒரு மொழி ஆகிவிடவில்லை. வட சொல் என்பது ஆலமரத்தடியில் ஓதுகையின்போது  வழங்கிய சொற்றோகுதியையாகவும்  இருக்கலாம் . இது திரு வி க வின்  கருத்து. வடம்  என்றால் பல பொருள் உள .

உச்சி  என்ற சொல்.

உய் > உய்தல் > உய்த்தல்.(பிறவினை).

உய் > உய்ச்சி >  உச்சி. (மேல் உள்ள பகுதி.)

உய் > உய்ச்சம் > உச்சம்.

யகர ஒற்றின் பின்  வரும் கசட தபற வல்லொற்றுகள் ஒழியும் என்று
பலமுறை பாடிச் சொல்லியுள்ளோம்.

வாயால் பாடம் சொல்பவன் வாய்த்தி.  அப்புறம் வாத்தி. பின்  வாத்தியார்..

உப அத்தியாயி என்ற உபாத்தியாயர் வேறு. குழப்புதல் வேண்டா.

காய்ச்சல் என்பது  காச்ச(ல் )  என்று யகர ஒற்றுக் கெட்டு  பேச்சு மொழியில் வருமேனும்  இன்னும் எழுத்தில் நிலை பெற்றிட வில்லை.  மேய்ச்சல்  முதலியவும்  அப்படியே . 

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

நீட்டி எழுதினால் கதை ஆகிவிடும்.....

அடி ஆசோ!  நீ காயவைத்த துணிகள் கம்பிக்கட்டுடன் சாய்ந்துவிட்டனவே! உனக்குத் தெரியவில்லையா?  வந்து கம்பிக்கட்டினை நிமிர்த்தி வை,  என்ன ஓர் ஒலியையும் காணோம்.   அப்படி ஆழ்ந்த தூக்கமா,,,,( பதிலொன்றும் இல்லை)   என்ன, வீட்டுக்காரியா பணிப்பெண்ணா....வெளியிலே எட்டிப்பார்...."  என்று ஒரு கிழவியின் குரல் சீனமொழியில் ஒலித்தது.

இவள் என்ன சாதியோ, நான் என்ன சாதி....நான் ஏன் அக்கறைப் படவேண்டும்... என்று நினைக்கவில்லை. எல்லாரும் மக்கள்தாம்.
உனக்கு இடர்   ஒன்று என்றால் நான் முடிந்தால் உதவுவேன்...என்னால் முடிந்த அளவு.

இதுதான் சிங்கப்பூர் மக்களின் அன்புநிலை. பாசவலை. ஆக்க உலை.

நான் கொஞ்ச நேரம் கழித்து வெளியிற் சென்று பார்த்த போது,  துணிக்கம்பிக்கட்டு  காற்றினால் சாய்ந்து துணிகள் தரையை முத்தமிட்டுக்கொண்டு கிடந்தன. காய்ந்துவிட்டன; அவற்றை அகற்றி
மடித்து வைத்துவிட்டேன்.

இது மலேசியாவாக இருந்து, எந்தக் கிழவியாவது கூப்பிட்டிருந்தால்,
நல்லபடி பார்த்துத்தான் கதவைத் திறக்கவேண்டும்.  வெளியில் திருடர்கள் ஒளிந்துகொண்டிருந்து, கதவைத் திறந்தவுடன் உள்ளே பாய்ந்து
என்னைக் கட்டிப்போட்டிருப்பார்கள். பெரும்பாலும் இந்தியர்களே திருடர்கள்.
வேலையில்லாமல் திருடுவோரும்  வேலையாகத் திருடுவோரும் மிகுதி,

பிலிப்பீன்ஸில் எச்சரிக்கை.

இந்தியாவின் நிலை என்ன?  சிற்றூராய் இருந்து, சாதிக்காரனாய் இருந்தால்
உதவுவான்.  நகரங்களில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று தொலைக்காட்சிக்காரர்கள் துளைத்து எடுக்கிறார்கள். ஆகவே தெரியவில்லை.

நீட்டி எழுதினால் கதை ஆகிவிடும்.

புதன், 10 ஆகஸ்ட், 2016

இல்லத்துப் பிள்ளைமார் அல்லது ஈழவர்.

ஈழவர் என்ற பெயருடைய கூட்டத்தினருக்கு "இல்லத்துப் பிள்ளைமார்( ( கள்) என்பது மறுபெயர்.. இவர்களுக்கு நாடார் என்ற பெயரும் உண்டு என்றும் சிலர் நினைக்கின்றனர்.

இல்லம் என்பது வீடு என்னும் பொருளது. இது உண்மையில் இடம் என்றும் பொருள்படும். அப்பொருளில் அது இன்னும் தமிழில் வழங்குகிறது. கண்ணில் கருமணி இருக்கிறது என்ற வாக்கியத்தில்
இல் என்பது இடம் குறிப்பதை அறியலாம். இல் என்பதே இன் என்றும் திரியும். அதுவும் இடப்பொருளையே உள்ளடக்கி நிற்கிறது. "கண்ணின் கருமணி" என்பதில் இன் என்பது இடத்துரிமை காட்டுகிறது. கண் என்னும் இடத்திற்கு உரிய கருமணி என்று அதனை விரிக்கலாம்.

இல் என்பதே இழ் என்று மாறிற்று என்று தெரிகிறது. அப்படி மாறி ஒரு விகுதியாகி, தம்+ இழ் = தமிழ் என்றானது என்று கொள்ளலாம். அப்படியானால் தமிழ் என்ற சொல் தமது இடத்து மொழி என்று பொருள்படும்,.

தமில் என்பதே தமிழ் என்று திரிந்தது என்பது அறிஞர் கமில் சுவலபெல்
அவர்களுடைய கருத்து. இதுவே தேவனேயப் பாவாணரின் கருத்துமாகும்.

தமிழ் என்ற சொல்லுக்கு மணிக்கணக்கில் பொருள்சொல்லும் திறமை உடையவர் பெரும்புலவர் கிருபானந்த வாரியார் அடிகள். அவர் பொழிவைக் கேட்டுப் பாரதிதாசனார் பெருமகிழ்வு எய்தினார், பாராட்டினார் என்ப. ஆய்வாளர் பிறரும் பல்வேறு சொல்விளக்கங்களை முன்வைத்துள்ளனர். ஆனால் அவை முன் கூறப்பட்ட கருத்துகள். எனவே சுவலபெல் - பாவாணர் கருத்து நமக்கு இற்றை முடிபு என்று கொள்ளவேண்டும். காரணம் முன் கருத்துகள் ஏற்புடையவாகக் கருதப்படவில்லை.

இல் என்பதே இழ் என்று திரிந்தது ஆகையினால் இழ்> ஈழ் > ஈழம் என்றும் இழ் > ஈழவர் என்றும் திரிந்தது என்று கொள்ளவேண்டும். எனவே ஈழம் எனின் வாழ்விடம் என்றும், ஈழவர் எனின் இடத்தவர் என்றுக் பொருள்படும்.
இழ் > ஈ ழ்  முதனிலைத் திரிபு .

இல் என்பதில் திரிந்த இன் என்னும் இடைச்சொல், இந்தோ ஐரோப்பிய மொழிகளிலும் பரவி வழங்குகிறது. இடப்பொருளே குறிக்கிறது. ஆங்கிலத்தில் இன் என்பது இடம் காட்டும் இடைச்சொல் ஆகிறது. (in)


இல் என்ற சொல் இகரச் சுட்டடியாகத் தோன்றியது. ஆகவே தமிழாகும்.

சுட்டடிச் சொற்கள் சீன மொழியிலும் உள. ஈ என்பது இவன், இவள் என்பதாகும். இய (ia)  என்ற மலாய்ச் சொல்லும் அதிலிருந்து திரிந்த டிய (dia)   என்பதும் இதன் வளர்ச்சியாம்.

ஆஃபிரிக்காவலிருந்து இடம்பெயர்ந்த சீனர்கள், தெற்காசியா வழியாக தென்கிழக்காசியா வந்து அதன்பின் சீனாவில் தங்கினர் என்று மாந்த வளர்ச்சி நூல் கூறுகிறது. 1

ஆகவே சுட்டடிச் சொற்கள் இம்மொழிகளில் காணப்படுதல் இயற்கையே ஆகும்.

இப்போது:

இல்லத்துப் பிள்ளைமார் = இடத்து மக்கள்.
ஈழவர் = இடத்து மக்கள்
தமிழ் (இழ்) - இடத்து மொழி.
ஈழம் = வாழ்விடம்.

என்றபொருளாகின்றன.

நீங்கள் மறுப்புரை  வழங்கலாம் .


---------------------------------------------------------------------------------------------


According to the newspaper, a research team led by Jin Li (金力) of Fudan University in Shanghai .
But Jin and his fellow researchers found that early humans belonged to different species, of which only the East African species developed into modern humans.  About 100,000 years ago, some of those humans began to leave Africa, with some people moving to China via South and Southeast Asia, Li said. (There were other contacts as well )



செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

இறுதல் இறத்தல்



இறுதல் 
=======
ஒரு வினையிலிருந்து இன்னொரு வினை ( a verb formed from another verb ) தோன்றுதல், பெரும்பாலும் இலக்கணம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் வகுப்பில் அல்லது தம் பொழிவில்( lecture ) விதந்து ஓதாதது ஆகும்..

இறுதல் என்றால் முடிதல். இந்தச் சொல்லிலிருந்து இறுதி என்ற தி விகுதி பெற்ற சொல் தோன்றியிருத்தலை நோக்கி, இறு என்றால் இறுதியை அடைதல் என்று புரிந்துகொள்வது எளிதாகவிருக்கும்.

இது வினை எச்சமாக வருங்கால் இற்று என்று வடிவுகொள்ளும். உறு > உற்று என்பதுபோலும் வடிவம். இரும்புப் பாத்திரத்தின் அடி இற்றுப் போயிற்று என்பதில் இற்று ‍= இறுதியை அடைந்து போய்விட்டது என்பது
பொருளாம்,

இச்சொல் பெயரெச்சமாக நிகழுங்கால் இற்ற என்று வரும். முச்சீரால்
இற்ற அடி எனின் மூன்று சீர்களால் முடிகின்ற அடி என்ற பொருளாகும். இற்ற ‍ முடிந்த என்பது. இறந்த காலம் காட்டும் வினை எச்சம்.

இறத்தல்

இறத்தல் என்ற வினைச்சொல் இறு என்பதிலிருந்து தோன்றிற்று.

இறு > இற.

இறத்தல் என்ற வினை. இறு > இற என, இறுதியில் அகரம் பெற்று வினை ஆயிற்று.

இறத்தல் என்பது உயிர்விடுகை குறிக்கும். எ‍-- டு: அவர் இறந்துவிட்டார்.

இறத்தல் என்பது கடத்தல் என்றும் குறிக்கும்.காடிறந்த தலைவன் என்றால் காட்டைக் கடந்து சென்ற தலைவன் அல்லது காதலன் என்பதாகும்.

 இது போல அகரம் பெற்று வினையான இன்னொரு சொல் அள என்பது.
(பழங்காலத்தில்) நெல் முதலியவற்றை அள்ளிக் கொணர்ந்து அளந்தனர் அல்லது  அளக்கும்  ஏனத்தில் அள்ளிப்போட்டு  அளந்தனர் .  ஆகையினால்.  அள் என்ற  சொல்லிலிருந்து அள என்று அகரம் பெற்று வினையானது.

அளத்தல்  கதை யளத்தல் படியளத்தல் முதலியவற்றில் போதரும் கருத்துக்கள்  பின்பு  கவனிப்போம்,  

அள் >  அள்ளு  ;   அள்ளுதல்.
அள் > அள்+ அ =  அள > அளத்தல்.

"பிள்" அடியினின்று பிளத்தல் என்பதும் இதுபோல அமைந்ததுதான்,

will edit later.   








மணியைத் திருப்பிவைக்க இயலுமோ?


(புதுக்கவிதை )

மறதியால்   விளைந்த கேடு
மாநிலமேல்  ஒன்றா இரண்டா?

அலுவலகம் அடைத்தபின்,
அன்புள்ள என் வேலைத்தோழி
குலுங்கிச் சிரித்துக்கொண்டு
கூடவே வந்தாள்

அமர்ந்தாள்  என் உந்தில்.
அசத்தும் கதைகள் பேசிக்கொண்டே
அவள் வீடு  நோக்கி
முதலில்  ஓட்டினேன்  .
ஒரு பதினைந்து கல்தொலைவு சென்றபின்
இறங்கி அவள் வீடு  நோக்கிப்  போனாள் ..

அப்புறம் ஒரு பத்துக்
கல் தொலைவு.  ஓட்டினேன் .
என்  கைப்பேசி மணி அடித்தது.

"என் வீட்டுத் திறவுகோலை
அலுவலகத்தில் வைத்துவிட்டேன்  " என்றாள்.
"வெளியில் நிற்கிறேன்
"கதவு  திறக்க  நீங்கள்
உதவ வேண்டும் "  என்றாள்


அடி பாவி !
செய்யும் காரியத்தில்
சீரான கவனம் வேண்டாமோ?
உலகில் பலர் இப்ப்டி?
இப்ப்டிப் பெண்ணை எப்படி  ஏசுவது?

ஒரு மூன்று மணி நேரம்.
மீளாது ஒழிந்தது ....
பணமே  தேடினும்
மணியைத் திருப்பிவைக்க இயலுமோ?  *

----------------------------------

நேரம்  கழிந்தால் கழிந்ததுதான் காசைத்தான் 
யாரும் பெறல்மீண்டும் ஆம் !           (  நம்  குறள்  )


------------------------------------------------

பல மணி நேரம்  பாழான  நேர்வு 
பைந்தமிழ்ப்   பாடவும் ஏலாத சோர்வு ,


edited.  10.9.2016

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

சிங்கைத் தேசிய நாளாம் ,,,,,

தூசியைத் தூய்மைக் கேட்டை த் 
துடைப்பதில்,  ஊழல் கூட்டிக்
காசினைச் சேர்க்கும் நீக்கம்
கடிந்திடும் கொள்கைப் போக்கில்,
நேசமெய்ம் மக்கள்  ஆக்கும்
நேர்மையில் ஓங்கும் சிங்கைத்
தேசிய நாளாம்  தேனும்
திறலொடு திரள்க பொங்கி.

இர் என்ற அடிச்சொல்லிலிருந்து

இர்  என்ற அடிச்சொல்லிலிருந்து இருள் இரவு இராத்திரி முதலிய சொற்கள்  விளைந்தனவென்பதை முன் ஒன்றுக்கு மேற்பட்ட இடுகைகளின் மூலமாக எடுத்துரைத்துள்ளோம்,  இராமன், இராவணன் என்ற தொடக்கத்துப் பலவும் இதிலிருந்தே தோன்றின என்பதும் விளக்கப்பட்டிருந்தது.

இர் என்ற அடிச்சொல் தமிழே. மேலும் இராமன் முதலிய சொற்கள் தமிழ் அடியிலிருந்தே திரிக்கப்பட்டன என்பதற்கு,  திராவிட அரசனாகிய மனுவின் முன்னோன் இராமன் என்று கம்பன் கூறியதையும் எடுத்துக்காட்டி இருந்தோம்.  இராமனும்  நீல நிறத்தவனே என்பதும் நீங்கள் அறிந்ததே. புதுச்சிலைகள் வெள்ளையாக இருக்கலாம்.

என்றாலும் இர் என்ற அடி தமிழன்று என்று கண்மூடிக்கொண்டு வாதிடுங்களேன். அது தமிழ்தான் என்பதற்கு இப்போது இன்னொரு சான்றினைப் பகர்ந்து மகிழ்வோம்.

இர் என்பது ஒளி இல்லாத நிலை.  ரகரமும் லகரமும் ஒன்றுக்கொன்று பரிமாற்றம் காணக்கூடியவை. தமிழ் மட்டுமின்றிப் பிற மொழிகளிலும் இத்திறத்துத் திரிபுகள் காணலாம்.

இர் என்பதன் மூலம் இல். அதாவது ஒளி இல்லாத நிலைமை.  இல்-  இர்.

இல் ( இல்லை) என்பது தமிழாதலின்,  அதனின்று திரிந்து வந்த இர் என்பதும் தமிழே ஆகும் என்பது  சுருக்கமான சான்று ஆகும்.

சனி, 6 ஆகஸ்ட், 2016

கிரண் > கிரணா.


continue from https://sivamaalaa.blogspot.sg/2016/08/how-formed.html

கரு என்பதிலிருந்து கிரு என்று மாறிய சொல்.  கிருஷ்ண  என்று மாறி
கண்ணபிரானுக்குப் பெயரானபின், கரு என்ற அடிச் சொல் பொருள்  மறக்கப்பட்டு,  கிருஷ்ணன் அழகன் என்றாகி,  கிரு என்ற அடியும் அழகு என்ற பொருளைப் பெற்றது. பிறகு அழகு என்பது வெண்மை என்ற கருத்து மேலோங்கி  வெண்மை யிலிருந்து ஒளி  ஆகி,  ஒளி என்பது ஒளிக்கதிர் என்ற பொருளை எட்டிப்பிடித்தது. ஆகவே உலக நாடுகளில் கிரண் என்பது  அழகு, ஒளிக்கதிர் என்பது பொருளாகக் கொள்ளப்பட்டது.

கரு >  கிரு > கிருஷ்ண
கிரு > கிரண் > கிரணா.

கிரு+ அண் =  கிரண்.   அண் என்பது அணி என்பதன் அடிச்சொல். அழகு
என்பது பொருள்.  கிரு தன் பொருளை இழந்தது. புதுப்பொருள் மேவிற்று.