ஒரு சொல்லை அமைக்கப் பல தந்திரங்களைக் கையாளவேண்டியுள்ளது. அவ்வாறு அமைப்பதில் இலக்கணம் படித்த புலவர்கள் திறனுடையோர் என்றுதான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். வாழ்க்கை முழுவதையும் கல்வியில் செலவிட்டுப் பலவற்றை அறிந்து உளப்புலம் அடைந்தோரை நாம் போற்றத்தான் வேண்டும். என்றாலும் சில பழஞ்சொற்களை ஆய்வுசெய்கையில், பாமரர்கள் புலவர்களை வென்றுவிட்டதைப் போலவே தெரிகிறது.
நிமை என்பது முதனிலைத் தொழிற்பெயர். நிமைத்தல் என்பது வினைச்சொல். இது இமைத்தல் என்றும் வரும்.
நிமை இடும் நேரமே நிமிடம் எனப்படுகிறது. நிமை+ இடு+ அம் > நிமிடம். நிமை என்பதில் உள்ள ஐகாரம் குன்றிப் புணர்ந்தது. இது சொல்லாக்கப் புணர்ச்சி. நிமை எனற்பாலது நிம் என்று நின்றது.
நிம் என்பது ஓர் தமிழ் அடிச்சொல். நிம்> நிமிர் என்பதில், மனிதன் கூனுதல் இன்றிச் சரிப்படுத்திக்கொள்கிறான். நிம்+ ஐ > நிமை என்பதில் நிற்கும் இமை தன் இயக்கத்தை மேற்கொள்கிறது. இதில் சேர்ந்த ''ஐ'' இதைக் குறிக்கிறது. நிமைத்தல் என்பது ஆகும் தொழிற்பெயர். இமைத்தல் என்பதும் அது.
நிமித்தம் என்பது நிமிர்ந்து இடுவித்தலுக்கான நோக்கினைக் குறிக்கிறது. இங்கு ''இடுத்தம்'' என்பது குறுக்கப்பட்டது. வல்லொலியான டுகரம் விலக்குண்டு சொல் நன்கு அமைகிறது. இது சொல்லாக்கத்தில் கடைபிடிக்கப் படும். எ-டு: பீடு+ மன் > பீமன். பீடுடைய மன்னன் என்பது. காரணப்பெயர்.
ஒரு மத்து என்பது சுற்றியுள்ளவற்றை மருவிச் சுற்றுகிறது. அதனால் அதற்கு இப்பெயர் வந்தது. மரு> மருத்து> மத்து என்று ருகரம் நீங்கியது காண்க.
ஒரு பொருளின் நடு என்பது அதன் சுற்றியுள்ள பாகங்களை மருவி நிற்பது ஆகும். மருவாமை இருப்பின் அது நடுவாகாமை உணர்க. மருவி இயல்வதினால், மருத்து+ இயம் > மருத்தியம்> மத்தியம் ஆயிற்று. ருகரம் நீங்கிற்று. இந்நீக்கம், நாட்கடப்பினாலோ, கருதி விலக்கினதாலோ நடைபெறலாம்.
நிமிடம் ( நிமை+ இடு+ அம்) என்பது சரி. இதில் இடு என்பது பொருந்தி நிற்கிறது. நிமிஷம் என்பது சம ஒலி அமைப்பு ஆகும். அதுவே சம(ஸ்) கிருதம் என்பது. கத்து> கது> கதம்> கிருதம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக