சனி, 1 பிப்ரவரி, 2025

தேசத்துரோகம் சொல்

 தேசத்துரோகம் என்னும் சொல் எவ்வாறு அமைந்தது என்று பார்ப்போம்.

இஃது இணைப்புச் சொல் என்பது யாவரும் எளிதில் அறிவதே ஆகும்.

தேசம் என்ற சொல் இப்போது இந்தியாவிலும் பிற இடங்களிலும் அறியப்பட்ட சொல்லாயினும் இது முன்னர் தேயம் என்று இருந்தது.  அதற்கும் முன்பு அது தேம், தேஎம் என்று அளபெழுந்தும் அளபெழாமலும் வழங்கியது.இதன் அடிச்சொல் தேய் அல்லது சிற்றூர் வழக்கில் தே என்பதே ஆகும். இதற்குரிய வினைச்சொல் தேய்தல் என்பதுதான்.  ஏன் இந்த அடியிலிருந்து இது வழங்கவேண்டு  மெனில்,  எந்த நாடும் நாளடைவில் தேய்ந்துவிடக் கூடியது என்பதனால்தான். அரச னொருவனுக்கு பிள்ளைகள் இருந்தால் அந்தப் பிள்ளைகள் அரசன் இறந்தபின் நாட்டைப் பங்குவைத்துக் கொள்ளுதல் உள்ளது. ஐந்து பிள்ளைகள் ஐந்து பங்காக் கொண்டனர் எனின் நாடு உடைந்து சிறு துண்டுகளாகிவிடும். இவ்வாறு நடவாவிட்டால் எதிரி நாட்டினர் வந்து தாக்கி நாட்டின் பகுதிகளைத்  தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்வர். அப்போதும் நாடு துண்டுகளாகித் தேய்வுறும். இயற்கைப் பேரிடர்களாலும் நாட்டின் பகுதி அழிவுறுவதுண்டு. உள்நாட்டுக் கலகங்களையும் தேய்வுக்குக் காரணமாகக் கொள்ளலாம்.  கலகத்தால் ஒரு பகுதி விடுபட்டு தனியாட்சி அமைதல்.

தே அல்லது தேய் என்ற இரண்டையும் தொடர்புடைய வினைகளாகக் கொள்க.

துரோகம் என்ற சொல்லின் துருவுதல், ஓங்குதல் என்ற இரண்டு வினைகள் தொடர்புபட்டுள்ளன. துரோகம் செய்பவன் எப்படி ஒரு தீவினை செய்வது என்று துருவி ஆராய்ந்து செய்வான்.  இதை துரு என்ற சொல் தருகிறது.  அடுத்து ஓங்குதல் என்ற சொல் ஓங்கு> ஓகு> ஓகு அம் > ஓகம் என்று பெயரைப் பிறப்பிக்கிறது.

இரு முழுச்சொற்களையும் இணைத்து,  தேசத்துரோகம் என்றாகிறது. துரோகம் என்ற சொல் சிற்றூரில் வழக்குடையதுதான்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்