சனி, 22 பிப்ரவரி, 2025

மறைமலை அடிகளும் தேவநேயப் பாவாணரும்

 இன்று மறைமலையடிகளாரையும் தேவநேயப் பாவாணரையும் பற்றி அறிந்துகொள்வோம்.  இருவரும் தமிழ்த் துறையில் சிறந்து விளங்கிய  பெரும்புலவர்கள்.

அடிகள் தனித்தமிழ்த் தந்தை என்று போற்றப்படுபவர். தேவநேயப் பாவாணர் சொல்லாய்வில் மூழ்கித் தனி முத்திரை பதித்த பெருமை உடையவர். 
இருவருமே வெள்ளையர்  ஆட்சியின் முடிவு காலத்தில் வாழ்ந்தவர்கள்.  ஆகவே அவர்களின் மொழிக்கொள்கை வெள்ளையர் எழுதிய இந்திய வரலாற்றினை ஒட்டியே அமைந்திருந்தது. இவர்கள் சமஸ்கிருதம் அல்லது சங்கதம் என்பது  இந்தியர்களின் மொழி அன்று என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். 
இந்தக் கொள்கை வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆள்வதற்கு உதவுவதற்காக வரைவு   செய்யப்பட்ட கொள்கை என்பதே உண்மை. இந்தக் கொள்கைக்குச் சில சொல்லாய்வுகள் தாம் காரணம்.  பல இந்தியச் சொற்கள் மேலைமொழிகளில் புகுத்தப்பட்டிருந்தன.  அவை அங்கிருப்பதைக் கொண்டு, இவர்கள் சமஸ்கிருதம்  இந்திய மொழியன்று,  உருசியப் பக்க நிலங்களிலிருந்து பெயர்ந்த மக்களின் மொழி என்றனர்.

ஒரு மொழியில் பிறசொற்கள் உள்ளமை ஒருகாரணமே மக்கள் பெயர்ந்து வந்தனர் என்பதற்கு எப்படி  ஆதாரமாகக் கூடும் என்று இவர்களால் விளக்கமுடியவில்லை.

நாம் செய்த சொல்லாய்வில் பல  சமஸ்கிருதச் சொற்கள் தமிழ்ச்சொற்களுடன் வேர் ஒருமை உடையனவாய் உள்ளன. மேலும் சமஸ்கிருதத்தில் முதல் கவி வால்மிகி முனிவர், ஒரு பழங்குடியைச் சேர்ந்தவராய் உள்ளார்.  அவர் பாடிய வரலாற்றில் வருபவர்களும் மேலை நாட்டினர் அல்லர்  பாணினி என்பவரும் பாணர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றே சொல்லாய்வு காட்டுகின்றது.
அடிகளும் பாவாணரும் வெள்ளையர்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பதே நாம் இதிலிருந்து காண்கிறோம் மேலும் சொற்கள் வெளியுலக மொழிகளில் உள்ளமை ஒன்றை வைத்தே மக்கள் பெயர்ந்து வந்தனர் என்பதைக் கூறமுடியுமானால்  பாணினியின் பெயரில் பாண் என்ற பாணரைக் குறிக்கும் அடிச்சொல் இருப்பை வைத்தே பாணினி பாணன் என்பதையும் கூறவேண்டுமே.  ஏன் இது கூறாது தவிர்த்தனர் என்பதற்கும் விளக்கம் இல்லை.

சொற்களை ஆய்கின்ற பொழுது அவ்வப்போது இதனை விளக்கியும் உள்ளோம். இவர்களின் ( அடிகள்  பாவாணராகியோரின் ) சொல்லாய்வு சரி என்றாலும் வரலாற்றுக் கொள்கை சரியாகவில்லை. சமஸ்கிருதம் என்பது ஓர் இந்திய மொழி என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.


கருத்துகள் இல்லை: