செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

உளுந்து - தானியப் பெயர்.

 தானியங்கள் என்பவை ஒரு குடியானவன் தனக்கென்று ஒதுக்கிவைத்துக்கொண்ட கூலங்கள். விளைத்த எல்லாவற்றையும் அவன் எடுத்துக்கொள்ள முடிவதில்லை. வேலை செய்தோருக்கு அளக்க வேண்டும். அப்புறம் ஊர்ப்பெரியவர்களுக்கும் கொடுக்கவேண்டும்.   பிற குடியாவர்களிட மிருந்து முன் பெற்றவற்றைத் திருப்பிக் கொடுக்கவேண்டும்.  அப்புறம் அரசனுக்கு உரியவற்றைத் தனியாக ஒதுக்கி வைத்து அவனுடைய அதிகாரிகள் வரும்போது முறைப்படி அளிக்கவேண்டும். வீட்டுக்கு வேண்டியவற்றை ஒதுக்கி வைத்துக்கொள்ளவேண்டும். பிச்சைக்காரனுக்கும் ஏதாவது வைத்திருக்கவேண்டும்.  நிலக்கிழாருக்கு ( ஜமீந்தாருக்கு) வேண்டும்.  நாமே இவ்வளவும் அவன் கணக்கு என்று ஒரு பத்தி எழுதமுடிகிறது.  அவனே வந்து எழுதினால் ஒரு பக்கத்துக்கு மேலாகவே இருக்கும்.  நீங்கள் சம்பளம் எடுத்தவுடன் செலவுத்திட்டம் எழுதிப்பார்த்தால் கடனாக வந்து முன் நிற்கும்.  துன்பமாதமே என்று பாடவேண்டி இருந்தாலும் இருக்கும்.  மாநில வாழ்வு பெரும் ஆனந்தம் என்று பாகவதர்போல் பாடமுடியாது.  இவ்வாறு இன்னலுற்றுத் தான், தனக்கு என்று ஒதுக்கவேண்டி யுள்ளது.   இப்படி ஒதுக்கியதற்கு ஒரு தனிப்பெயர் வேண்டுமே!  தான் இயம் -  தன்னால் இயன்றது என்று ஒதுக்கியதுதான் பின் தானியம் என்று உருவெடுத்தது.

இயன்றது என்பதும் இயம் என்பதும் எப்படி ஒன்றாகும் என்று கேட்கவேண்டும். இயம் > இயன் என்றாகும்.  அறம் >  அறன் என்றாகவில்லை?  திறம் - திறன் என்றாகவில்லை?  உரம் - உரன் என்றாகவில்லை?  பதம் > பதன் என்றாகவில்லை?  பதனழிவு என்ற பதத்தைப் பாருங்கள். இயம்> இயன் என்பதும் அத்தகையதே.  தமிழின் மொழி இயல்பு அது.  மகர ஈற்றுச் சொற்கள் னகர ஈறாம்.  இயன்> இயன்+து > இயன்று என்று எச்சமாகிவிடுகிறது. இயன்> இயன்று > இயன்ற என்று மாறிமாறி அமையும்.  தனக்கு இயன்றதை வைத்துகொள்வது தானியம் என்று அறிக.

ஆங்கில நிலச் சட்டத்தில் personalty என்று ஒரு சொல் உள்ளது.  A person's personal property என்று இதற்குப் பொருள்.  இதுபோலுமே, தானியம் என்றால் தனக்கு என்று வைத்துக்கொள்ள இயன்ற கூலங்கள் ஆகும்.

இவற்றுள் உளுந்து என்பது உண்டால் உடலில் ஓர் உந்துதலைத் தரும் தானியம் என்று பொருள். உள்ளில் சென்று உந்துதல் ஆற்றல் தரும் தானியம் என்ற பொருள் உள்+ உந்து > உளுந்து என்று பெயர் அமைந்தது.   அதன் ஆற்றலைத் தெரிவிக்குமாறு அமைந்த சொல்.

கூலம் என்பது தானியப் பொருளதுதான்.  விளைந்த பின் அறுவடை செய்து ஒன்றாகச் சேர்க்கப்படுவது என்று பொருள்.  குல் என்பது அடிச்சொல். குல்> குலை. குல் > கூல்> கூல்_+ அம் >  கூலம்,    இதன் சொல்லமைப்புப் பொருள் ஒன்றாகக் கொணர்ந்து குதிருக்குள் வைக்கப்படுவது என்பதுதான். வேறு சம்பளத்துடன் சேர்த்துத் தரப்படுவது என்று சொல்லலாம்.  சம்பளம் என்பதே சம்பு - நெல்,  அளம் = உப்பு என்று  இரண்டும் முன்னாளில் ஒன்றாகக் கொடுக்கப்பட்டதனால் வந்த பெயர்தான். குல் > குலம் என்றால் சேர்ந்துவாழும் கூட்டம் அவ்வளவுதான்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

 

கருத்துகள் இல்லை: