அரசன் என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்பதை முன்னர் விளக்கியுள்ளேம். அதனை இங்குக் காண்க:
https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_12.html
அரட்டுதல் அல்லது கத்திக்கொண்டு கட்டளையிடும் முறையின் மூலமே பட்டாளத்திலும் "ஆட்சி" நடைபெறுகிறது. அணிவகுப்பு முதலியவைகளில் இதனை நீங்கள் காணலாம்.
அரசன் அரண் உடையவன். அரணன் ஆன அவனுக்கு அரணன் > ராணா ( மகாராணா) என்ற பெயர்களும் வழங்கியுள்ளன.
ஒருவன் அரட்டப்படுவது அச்சத்தை விளைக்கிறது. அரள் > அரளுதல் என்பது அச்சமுறுதல். அன்புடன் பேசி பல்வேறு சலுகைகளையும் வழங்கி வேலைவாங்குவது என்பதெல்லாம் இக்காலத்து நெறி. பண்டை நாட்களில் கத்திச் சவுக்காலடித்து அல்லது உதைத்து வேலைவாங்கினர்.
நாளடைவில் இந்த ஒலி எழுப்புதற் கருத்தும் அச்சக்கருத்தும் அரசன் என்ற சொல்லினின்று மறைந்துவிட்டது. அர் என்ற அடிச்சொல் ஒலி குறிப்பது.
இதையும் வாசித்து அறியுங்கள்:
https://sivamaalaa.blogspot.com/2020/06/blog-post_11.html
அரசனிலும் சற்றுக் குறுகிய அதிகாரமுடைய ஆட்சியாளன் அரட்டன் என்று குறிக்கப்பட்டான். இச்சொல் நேரடியாக அரட்டு என்ற சொல்லினின்றே புனையப்பட்டது தெளிவு. அரட்டு + அன் = அரட்டன். திவாகர நிகண்டு அரட்டனைக் குறுநிலமன்னன் என்று குறிக்கின்றது.
அரட்டிப் பிறரை அடக்கியாள்பவனே ஓரிடத்தை ஆளவும் தகுதி உடையோன் என்று பண்டையர் எண்ணினர் என்பது இச்சொற்கள் மூலம் தெளிவாகிறது.
அறிந்து மகிழ்வீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக