வியாழன், 17 செப்டம்பர், 2020

குபேரன்

 குபேரன் யார் என்பது நீங்கள் அறிந்ததே. இச்சொல்லை அமைத்த விதம் நாமறிவோம்.

குவை என்ற சொல் குவியலைக் குறிக்கும் சொல்.  வேண்டிய பொருளோ வேண்டாத பொருளோ -  ஓரிடத்தில் குவிந்துவிட்டால் அது குவை. மணற் குவை "ஓங்கு மணற் குவை"  (புறநானூறு  24). பணம், செல்வங்கள் ஓரிடத்துக் குவிந்துவிடுகின்றன.  முற்றத் துறந்த முனிவருக்கு செல்வக்குவியல் தேவையற்றது. உணவுகூட மிகுதியாய் எடுத்துக்கொள்ளமாட்டார்.  மூச்சுப்பயிற்சிகள் செய்து பசி, தாகம் ( நீர்விடாய்) முதலிய அடக்கிக்கொள்வார்.  கிடைப்பன பிறர்க்களித்துவிடுவார்.  தேவர் சொன்ன " என்பும் உரியர் பிறர்க்கு" என்பதை எண்பிப்பவர் அவர்.  செல்வம் தேவை என்பவர், அவற்றைக் குவித்து வைத்துக்கொள்வர்.  இவர்போன்றோருள் " ஈதல் இசைபட வாழ்தல் " என்று இயன்ற மட்டும் ஈந்து வாழ்வாரும் சிலர் உலகில் உளர்.

குவை என்ற சொல் வகர பகரத் திரிபு விதிப்படி,  குபை என்று திரியும்.  ஆனால் குபை என்னும் சொல் கிட்டவில்லை..  மொழியில் மறைந்தொழிந்த சொற்கள் பல. அவற்றுள் இதுவும் ஒன்றாகலாம்.  அல்லது தனித்து இத்திரிபு இலங்கவில்லை என்பதாகவும் இருக்கலாம்.  இது நிற்க.

குவி > குவை > (குபை) > குப்பை ( வேண்டாத குவியல்) என்பது உள்ளது. பகர ஒற்று இரட்டிப்பு : காண்க. இவ்வாறு வடிவங் கொள்வது செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தோர்க்கு ஏற்புடைத்தென்று நாம் எண்ணலாம்.

ஏர் என்பது "உழவு ஏரைக்" குறித்தல் மட்டுமின்றிப் பிற பொருளும் உடையதே. அப்பொருள்களில் உயர்ச்சி ஒன்றாகும்.  ஏர்தல் என்ற வினைச்சொல்லும் உள்ளது.  ஏர்தல் - எழுதல். மேலெழுகை.

செல்வக் குவியலால் மேலெழுந்தவன் குவை + ஏர் + அன் =  குவேரன் > குபேரன் ஆவான்.  குபேரன் என்ற திரிசொல் நிலைவழக்கு உற்றபின், குவேரன் என்னும் இடை வடிவம் ஒழிதல் மொழியியல்பே.

அறிக. மகிழ்க


மெய்ப்பு பின் .



 

கருத்துகள் இல்லை: