செவ்வாய், 1 செப்டம்பர், 2020

படித்தல், வாசித்தல், படி - பஜி வினைகள்

 படித்தல் என்ற சொல், இக்காலத்தில் இராகம் 

ஏதுமில்லாமல் வாசிப்பதையே குறிக்கிறது.  ஆனால்

 பதினெட்டு - பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில்

 வாழ்ந்த மக்களுக்கு இது இருபொருள் தரும்

சொல்லாய் இருந்தது என்பதை நாம் மறந்துவிட

லாகாது. எந்த மொழியிலும் ஒரு சொல்லுக்கு 

ஒரு பொருளே இருந்தது என்று நாம் நம்புவோ

மானால், நமக்கு மொழியறிவு குறைவென்று நாமே 

முடிவுகட்டிக்கொள்ளவேண்டியதுதான். ஒரு 

காலத்தில் ஒரு பொருளிருந்திருக்கலாம்; 

 இன்னொரு காலத்தில் இன்னொரு பொருள் 

இருந்திருக்கலாம்;  இருபொருளும் ஒப்ப 

வழங்கினாலும் அவற்றுள் ஒன்று முன்னணி 

பெற்றுமிருந்திருக்கக் கூடும்.

எனவே சொல்லும் பொருளும் அவ்வளவு 

எளிதானவை என்று கூறிவிடமுடியாது.


எழுத்துக்களின்மேல் கண் அல்லது கண்ணின்

பார்வை படுகின்றது.  தொடர்ந்து பார்வை பட்டு 

நாம் வாசிக்கவே பார்வையானது படிகின்றது;  

ஆக, இவ்வாறு படிதலையே படிக்கின்றோம் என்று 

நாம் சொல்கின்றோம் என்பதை நாம் உணர

வேண்டும்.  ஆகவே  படுதல் > படிதல் > படித்தல்

என்பவற்றை நாம் இதன்மூலம் நல்லபடியாக 

உணர்ந்து கொள்கின்றோம்.


படிக்கும்போது வெளியில் ஒலி எழுப்பாமல்

 படிப்பது ஒருவகை; இதை மனத்துக்குள்ளே 

வாசித்தல் என்பர். இன்னொரு வகையான 

படித்தலில் ஒலிசெய்து பிறர்கேட்கும் வண்ணம் 

படிப்போம். இதைத்தான் முன்னாட்களில் 

வாசித்தல் என்று சொன்னார்கள். வாசித்தலாவது

 வாயிலிருந்து ஒலியெழப் படித்தல்.

வாய் என்பதிலிருந்து வாயித்தனர்: 

வாய் > வாயி> வாயித்தல்.  இது பின் திரிந்து

 வாசித்தல் ஆனது. ( இது  யகர சகரத் திரிபு வகை) 

 வாசித்தான் என்று தமிழன் சொல்வதை 

வாயிச்சு என்று மலையாளி சொல்வதிலிருந்து 

இதை அறியலாம். எனவே வாசித்தலில் வாயின்

பங்கு உள்ளது. இந்தச் சொல் அமைந்த காலத்தில்

 இந்த நுண்பொருள் நல்லபடி வெளிப்பட்டுச் 

சொல் வழங்கிற்று என்றாலும் நாளடைவில் 

அதிலும் மனத்துக்குள் வாசித்துக்கொள்ளுதல் 

என்ற பிரிவு எழுந்தது.  இவ்வாறு பொருள் விரி

கொள்ளுதல் மொழிக்குச் சொற்களில்  இயல்பே  ஆகும்.


சோல்ஜர் என்ற ஆங்கிலச்சொல் எழுத்தில் 

சோல்டர் என்றுதான் எழுதப்பெறும்.  எழுத்தின்படி

வாசித்தல் என்பது ஆங்கில மொழியில் இல்லை.

(குறைவு) . சிரி என்று பொருள்படும் லாஃப் என்ற 

சொல்லை எழுத்தின்படி எப்படி வாசிப்பது?  

முடியாது.  ஆங்கிலமொழிக்கு வேறுமொழியி

லிருந்து வந்த சொல்லை எழுத்துடன் கடன்பெற்று

வேற்றுமொழியில் உச்சரிப்பதுபோலவே 

ஆங்கிலத்திலும் ஒலிக்குமுறை(யும்) இருப்பதால், 

சோல்டியர் என்று எழுதிச் சோல்ஜர் என்றுதான் 

வாசிக்கவேண்டும்.


இதிலிருந்து  ட-வுக்கும் ஜ-வுக்கும் உள்ள ஓர்

ஒலியுறவை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

ஹாப்டாய் என்று எழுதிக்கொண்டு ஹாப்ஜாய்

என்று வாசிப்பதையும் காண்க.  வேறு எடுத்துக்

காட்டுகள் பல இருந்தாலும் இங்குக் கூறியன 

உணர்ந்தாலே படி என்ற தமிழ்ச்சொல்

பஜி என்று அயலில் வருமாறு நீங்கள் உணர

நேரமாகாது. ஆமாறு உணர்ந்து,   " முருகனைப்

படிமனமே,  திருமால் மருகனைப் படிமனமே " 

என்று பாடி,  அதை அப்படியே "முருகனைப் பஜி 

மனமே, திருமால் மருகனைப் பஜி மனமே" என்று

மாற்றிப் பாடி ஆனந்தம் அடையுங்கள்.

படிதான் பஜியாயிற்று.  பஜி + அன் + ஐ = பஜனை.

படி அன் > படன் > பஜன்,  ட-ஜ திரிபு பன்மொழிக்

காட்சியுடையது.


இதைச் சில ஆண்டுகளின் முன்னமே 

சொல்லிய -எழுதிய நினைவு உண்டெனினும், 

யாம் தேடிப்பார்க்க வில்லை. இங்கு பழைய 

இடுகைகளில் நீங்கள் தேடிப் பார்த்தால் 

ஒருவேளை கிட்டுதல் கூடும்.


இரு நூற்றாண்டுகளின் முன் இருந்த தமிழர், 

பாட்டுப் படி என்றும் சொல்வர். இன்று பாட்டுப்

பாடு என்று சொல்கிறோம். படி என்ற வினையின் 

பொருள் சற்று மாறிவரல் உணரலாம். " உன்னை

 நினைச்சேன், பாட்டுப் படிச்சேன்" என்றுவரும் 

ஒரு பாடல்,  முன்வழக்கினை கொணர்ந்து மீட்டு

 மூட்டுகின்றது. ஆனால் படி , பாடு

என்பன ஒரு மூலத்தின் விளைவுகள்தாம். 

 பழங்காலத்தினர் உரைநடையையும் " இராகம்

போட்டுப் பாடியவர்கள். உரைநடை ஏதேனும் 

பாடலுக்குப் பொருள்கூறுகையில் மட்டுமே 

கைக்கொள்ளப்பட்டது. மற்றபடி தமிழென்றால்

எங்கும் எதிலும் பாட்டுத்தான்.



    பாகத்தி னாற்கவிதை பாடிப் படிக்கவோ
            பத்திநெறி யில்லைவேத
    பாராய ணப்பனுவல் மூவர்செய் பனுவலது
            பகரவோ இசையுமில்லை
    தாயுமான  அடிகள்.
அறிக மகிழ்க


மெய்ப்பு  - பின்பு


கருத்துகள் இல்லை: