புதன், 16 செப்டம்பர், 2020

தயார் ( போருக்குத் தயார் !)

 நாம் இப்போது தயார் என்ற சொல்லை அமைப்பறிந்து கொள்வோம். இச்சொல் தமிழர்  சிற்றூர்களிலும் வழக்கிலுள்ள சொல்லாகும்.  இதற்கு மாற்றாக வழங்கத் தக்க தமிழ்ச்சொல் " அணியம்" என்பதாகும். " நாம்  நூல்நிலையத்துக்குச் செல்ல அணியமாய் உள்ளோம்" என்னும் வாக்கியத்தில், அணியமாய் என்பது தயாராய் என்று பொருள்படும்.

அணியம் என்ற சொல்லில் மட்டுமின்றித் தயார் என்ற சொல்லிலும்கூட அடிப்படையாக நிற்பது அணிமைக் கருத்து ஆகும். அண் என்ற அடிச்சொல் அருகில் இருத்தலைக் குறிக்கும்.  அருகில் இருத்தல் என்பது  இடம், காலம்,  பொருள் உருவம் என்ற ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளுட் படும். காலத்தால் அடுத்தது, பின் இடத்தால் அடுத்தது, உருவத்தால் அடுத்தது ( மந்தியும் மனிதனும் போல ).... என்றிவ்வாறு விரித்துக்கொள்ளலாம்.

குற்றவாளியைக் கொல்வதற்கு அரசன் தீர்மானித்தபின் அதற்கேற்ற காலத்திற்காக அவன் காத்திருப்பானாகில், அதுவே அவனைத் தயங்கி நிற்கும்படி செய்கிறது. (காலத்தால் தயக்கம்).  அரசவையில் வீற்றிருப்பவன் குற்றவாளியைக் கொல்வதற்கு அதற்குரிய களத்திற்குச் செல்லக் காத்திருத்தலும் கூடும்.  அரசவையிலே அவனைக் கொல்வது வழக்கமன்று என்பதொரு காரணமாயும் இருத்தல் கூடும். இஃது இடத்தால் தயங்குதல். அரசன் அணிமைநிலைக்கு வந்துவிட்டான் எனினும், தள்ளிவைத்து நிற்றலும் பின்னர் செயல்படுத்தக் குறித்துவைத்தலும் தயங்குதல் > தய > தய+ ஆர் = தயார் ஆகிறது. ஆர்தல் - நிறைதல்.  இஃது தயக்க நிறைவு.  அது நீங்கிடில் செயல் தொடரும்.

தயங்கு - தய என்னும் சொல்வடிவங்கள்  தங்குதல் என்பதனோடும் தொடர்பு உடையவை.  தூங்குதல் என்பதும் தயங்குதல், காலம் கடத்துதல் என்பவற்றோடு தொடர்புடைய கருத்தே ஆகும். மொழியின் தொடக்க காலத்தில்  த - தூ என்று மிக்கச் சிறிய வடிவங்களாய் இருந்திருக்கவேண்டும். ( சீன மொழியிலும்  (த >) தான் என்பது சற்றுநிற்றல், பொறுத்தல் என்று பொருள் படுகிறது).  இனி இலத்தீன் தர்டரே tardare  என்பதும் ஆங்கிலம் தாரி/( டாரி)  tarry என்பவும் ஒப்பீடு செய்யத்தக்கன.  நில் என்று சொல்ல விழைபவன் "த" என்று அதட்டி நிறுத்துவது இன்றும் காணக்கிடைப்பது ஆகும்.

த ய என்ற அடிச்சொல் த - அ என்ற இரு உள்ளுறுப்புகளை உடையது. இதை வாக்கியப்படுத்தின்  த = நில்;  அ = அங்கே என்னலாம்.   தய+ அங்கு = தயங்குஆகும்.  இதைத் தய + அம் + கு என்றோ த + அ + கு என்றோ பகுத்தும் பொருளுரைத்தல் எளிதே. 

இதை விரித்தல் விழையோம்.  தய+ ஆர் = தயார் ஆனது தெளிவு.

தயார் இது தொடராமை நிலையாதல். தொடரப் பொறுத்தல்


தட்டச்சுப் பிறழ்வுகள் கவனம் பின்.




கருத்துகள் இல்லை: