செவ்வாய், 24 செப்டம்பர், 2024

மழுங்குணி. மழுங்குனி, மழுகுதல்.

 இன்று மழுங்குணி என்ற சொல்லையும் தொடர்புடைய சிலவற்றையும் கவனிப்போம்.

மழுங்குணி என்ற சொல் மழுங்குதல் என்ற வினைச்சொல்லினின்று வந்தது என்பது பெரிதும் ஆராயமலே தட்டுப்படுவது ஆகும். மழுங்கு என்பதனோடு உண் என்ற துணைவினையும் இணைந்து இகர விகுதி பெற்று இச்சொல் அமைகின்றது. உண் என்பது உள் என்பதன் திரிபே ஆகும்.  உட்கொள்வது , ஆயிருப்பது  என்பவெல்லாம் இவற்றின் பயன்பாட்டு நெறிகாட்டிகளாகும்.

பேச்சில் இது மழுங்குனி என்று ஒலிப்புறுகிறது. இது : " மழுங்கு நீ" என்பதிலிருந்து அமைந்தும் இருத்தல்  கூடுமாதலின் இருபிறப்பி  ஆகும், அவ்வாறாயின் இது பழம்நீ என்பது போலும் ஓர் அமைப்புடைய சொல்லாகும். பழம்நீ > பழநி என்றும் கூறுவர்.

மழுகுதல் என்ற வினையே பெரும்பாலும் சங்க இலக்கியத்தில் காணப்பெறுகிறது. பின்னர் இது இடையில் ஒரு மெய்யெழுத்துப் பெற்று மழுங்குதல்  ஆயிற்று.  மெழுகுதல், அழுகுதல் என்பன போல அமைந்த சொல்லே மழுகுதல். பொருண்மையில் ஏதும் வேறுபாடு ஏற்படவில்லை. விழு> விழுங்கு எனற்பாலவற்றில் பொருண்மை வேறுபாடு வந்துள்ளமை கண்டுகொள்க.

மழுங்குணி என்பது இந்தியில் பப்பு என்பதுபோலும் ஒரு நகைத்தாக்குச் சொல்லாகும், இது மங்கிணி என்றும் திரியும்.  இது இடைக்குறையும் திரிபும்  ஆகும்,  ழுகரம் குறைந்தது.   குகரம் கிகரம் ஆனது.  தெலுங்கில் மங்கு என்று இன்னும் சுருங்கியுள்ளது. மழுங்குணிமாங்கொட்டை என்பதும் அது,  எள்ளிநகையாட்டுச்சொல்.

மழுக்கம் எனின் அறிவின்மை. அறிவுக் கூர்மை இன்மை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

கருத்துகள் இல்லை: