திங்கள், 23 செப்டம்பர், 2024

புத்தகம், புஸ்தகம், புக்

 புத்தகம், புஸ்தகம், புக் (ஆங்கிலம்) என்பவற்றினை ஆய்வு செய்வோம்.

ஆங்கிலச் சொல்லான  புக் என்பது நெடுங்காலமாக ஐரோப்பிய மொழிகளில் பயின்று வழங்கி, ஒருவேளை பொக்ஜொன் என்ற இந்தோ ஜெர்மானியச் சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்தோ ஐரோப்பிய வேர்ச்சொல் அகராதி  போகோ என்ற சொல்லை முன்வைக்கிறது. மரங்களிலிருந்து கிடைப்பனவே புத்தகங்களுக்கு ச்  செய்பொருள்களாக இருந்துள்ளன என்று சொல்லுவர்.

இது இப்படி இருக்க, இச்சொற்களுக்கு நேரான தமிழ்ச்சொற்களை உருவாக்க முனைந்தவர்களும்  ஆங்கிலச் சொற்களுக்கு ஒலியொற்றுமை உடைய சொற்களைப் படைக்க முயன்றுள்ளனர் என்றும் நாம் காண்கிறோம்.  எடுத்துக்காட்டு: பாராளுமன்றம் என்ற சொல் பார்லிமன்ட் என்ற பிரஞ்சு மொழிச் சொல்லுக்கு ஈடான ஒலிப்பினை உடையதாய் உள்ளது.  "டாங்க்"  என்ற சொல்லும் தாங்கி என்ற சொல்லுடன் ஒலியொருமை உடையதாய் உள்ளது. இன்னும் பல சொற்கள் உள்ளன.  பின்னும் படைத்தளிக்க இயலும்.

புத்தகம் என்ற சொல்,  புதை என்ற சொல்லிலிருந்து ஏற்பட்டது என்பதே உண்மை.  புதை என்றால் வெளித் தெரியாதபடி உள்ளடங்கியிருத்தல்; உட்பொதிந்திருத்தல் என்பதே பொருண்மை ஆகும். புதை என்பதன் அடிச்சொல் புத் என்பதே. புத் ஐ > புதை. இது போல் அமைந்த இன்னொரு சொல்: கத் ஐ > கதை. புதைத்தல், கதைத்தல் என்பன வினைச்சொற்கள் கத்து, கதறு என்பன இதன் மற்ற வடிசொற்கள்.

புதை + அகம் > புத்தகம் ஆகும்,

புத்தகங்களில் பொதிந்திருப்பவை அல்லது புதைந்திருப்பவை  பல என்பது வெளிப்படை.  

பொதி + அகம் > பொத்தகம் > புத்தகம் எனினுமாம்.

பற்பல விடயங்களும் உட்பொதிந்திருக்கும் மரவிழைக் கட்டு.

புதை பொதி என்பன ஒருபொருட் சொற்கள்.

புஸ்தகம் என்பது த் என்ற வல்லொலியை மெல்லிதாக்கப் புகுத்தப்பட்ட ஒலிப்பு ஆகும். இது அயலுக்கு ஏற்ற வடிவம்.

புக் என்ற ஆங்கிலம் புத்தகம் என்பதனோடு ஒலியொருமை உடையது என்றாலும் ஒன்று தமிழ்; இன்னொன்று ஐரோப்பியச் சொல். இவற்றின் ஒலியொருமை முயன்று ஆக்கப்பட்டது. இதில் சொற்கடத்தல் ஒன்றும் இல்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

கருத்துகள் இல்லை: