சனி, 21 செப்டம்பர், 2024

சம்பல் சம்போ என்னும் சொற்கள்.

 இது ஒருவகைத் துவையலைக் குறிப்பதாகத் தற்கால அகராதிகள் சொல்கின்றன. சம் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களை அரைத்துச் சேர்த்துக் குழப்புதல். இது தம் என்ற பன்மைச் சொல்லின் வெளிப்பாடு. தம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட மனிதரைக் குறிக்கும். இது திரிந்து சம் ஆகி ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்சேர்க்கையைக் குறித்தது. பல் என்பது பல்பொருள் குறிப்பதாகவே இருத்தலால்,  சம் என்பது சேர்த்தல் என்று கொள்ளவேண்டும்.

இதன் ஆய்வினை மூலச்சொல்லிலிருந்து தொடர்ந்தால் இன்னும் பொருள் சிறக்கும்,  மூலச்சொல் ஆவது அண் என்பது,  அடுத்திருத்தல் என்பது அண் என்பதன் பொருள். அண் > சண் ,  எனவே  அடுத்தடுத்துச் சேர்த்தல் என்ற பொருள் வருகிறது.  பல் என்பது பல்பொருள் என்பதால் சண்பல் > சம்பல் என்று சொல்லும் பொருளும் பொருந்திவிடுகின்றன. சம்பல் என்பது திரிசொல் ஆகிறது.

சண்பு > சம்பு - இது இயல்பான திரிபே ஆகும்,

சம்பல் என்பது விலைமலிவையும் குறிப்பதாகச் சொல்வர்.  இப்பொருளில் இச்சொல் இதுகாலை வழங்கவில்லை,  ஆனால் இதை நாம் எளிதில் உணர முடிகிறது.  அதே பொருள் அடுத்தடுத்துச் சந்தைக்கு வருமானால் விலை வீழ்ந்து விடும், இதற்கும் பொருள் சரியாகவே உள்ளது.

சம்பு என்பது  அடுத்தடுத்து மக்கள் வணங்கும் தேவர்களாய் இருத்தலால், அவர்களுக்கும் இச்சொல் பொருந்துகிறது. ஒன்றன்பின் இன்னொரு தேவரை வணங்கத் தடை எதுவும் இருந்ததில்லை.  சிவன், விட்ணு, பிரமன் (பெருமான்), அருகன், சூரியன் ஆகியோர் இவ்வாறு வணங்கப் படும் தேவர்கள்  ஆவர்.

அண் என்ற மூலம்,  மக்கள் அடுத்துச் சென்று வணங்குதலையும் மற்றும் மக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வணங்குதலையும் ஒருங்கே குறிக்கவல்லது ஆகும்.  ஆகவே சம்போ (மகாதேவா) என்பது  மக்கள் அண்மிச்சென்று வணக்கம் செய்தற் குரிய தேவன் என்று பொருள்படும் சொல்லாகிறது.

இதுவே சொல்லலமைப்புப் பொருளாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்புபின்னர்.

Edited on 22092024 0559


கருத்துகள் இல்லை: