வெள்ளி, 6 மே, 2022

உலோகம் என்ற சொல்லுக்கு இன்னொரு காரணம்.

 உலோகம் என்பது இருபிறப்பி என்பதை உணர்ந்துகொள்ளச் சொல்லில் உள்ளமைந்த காரணங்கள் இருக்கின்றன.  இது கடினமன்று.

அதிலொரு காரணம்.  இரும்பை உலையில் இட்டு உருக்கி எடுப்பர். அதன்பின் அது அடிக்கப்பட்டு வேண்டிய உருவினை அடைவிப்பர். அதன்பின்னரே அது   இறுதியுருவிலும் பயன்பாட்டிலும் ஓங்குவதாகும்.   ஓங்குதலாவது, இங்கு இறுதிநிலை பெறுவது.

உலை + ஓங்கு + அம் =   உலை ஓகு அம்  > உல் ஓகு அம் =  உலோகம் ஆகும்.

இன்னோர் ஆய்வும்  இதை ஒட்டியதே.  அதனை இங்கு வாசிக்கலாம்.

https://sivamaalaa.blogspot.com/2018/05/blog-post_15.html

அயம், அயில் என்பன அது அயலிலிருந்து வந்தது என்பதைக் காட்டுகிறது.  இந்த இரும்படிக்கும் இடங்கள் குடியிருக்கும் வீடுகட்கு அருகிலில்லாமல்  அயலில் வைக்கப்பட்டிருந்தன என்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும்.  இந்த அயற்கருத்துக்கு அதுவும் ஒருகாரணமாக,  அல்லது அதுவே ஒரு காரணமாக இருந்திருத்தலும் கூடும். எவ்வாறாயினும் அயன்மைக் கருத்து உள்ளடங்கிய சொல் இதுவாகும் என்பதில் ஐயமில்லை. இரும்பைக் கண்டு வியந்தது ஒரு காரணமாக இருக்கும்.  ஐ -  வியப்பு.   ஐ >  ஐ+ அம் > ( ஐகாரக் குறுக்கமாகி )  அ+ அம் > அயம் எனலும் பொருந்தும்.  இரும்பு புடமிட்டுச் செய்யப்படும் சித்த மருந்து " அயச்செந்தூரம்"  ஆனது.

இரும்புக்கு இறைப்பற்று வழிகளில் வேலையில்லை ஆதலால்,  இச்சொல்லுக்கு பூசாரிகளிடம் வேலையில்லை.

அடித்து  ( அடிச்சு)  உருவு தரபட்ட தன்மையால்,   அடிச்சு>  அச்சு என்ற அமைந்தது இடைக்குறை ஆகும்.

ஓகு+ அம் >  ஓகம் என்பது போலும் அமைப்புகள் முன் பழைய இடுகைகளில் விளக்கப்பட்டுள்ளன. இவைபோல்வன இவண் மீண்டும் விளக்கப்படவில்லை

உலை என்ற சொல்லின் ஐ விகுதி, ஓங்கு என்பதில் ங்,  கு என்பதில் இறுதி  உ இவை ஒழிக்கப்பட்டாலே சொல் அமைப்புறும். சொல்லமைப்பாளர்கள் இவற்றை வைத்துக்கொண்டு மாரட்டிப்பதில்லை என்பதைப் பலமுறை கூறியுள்ளோம்.  மூலம் அல்லது சொல்லடிகளே இருத்திக்கொள்ளப்பெறும்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

கருத்துகள் இல்லை: