ஞாயிறு, 22 மே, 2022

மின் குளிர் காற்றிருக்க, வேண்டுமோ தென்றல்?

அடுக்குமாடி வீட்டு அம்மா பாடுவது:

மின்பனிக் காற்று ஏற்றலும்

தென்றலை மறுத்தலும். 


அறுசீர் விருத்தம்


வானிலே உலவி  வந்து

தரையொடு தடவிக் கொண்டு

கானிலே கொடியும்  ஆடக்

கடுமரம்  தழுவி ஓடி

மேனிலை அடுக்கு வீட்டுக்

கதவிடை மிதந்து மோதி,

யானுளேன் அவண்ம றந்தாய்

என்னகம் வழுவி   னாய்நீ


மின்பனிக் காற்றின் இன்பம்

மேனியை முத்தம் செய்ய,

அன்பனில்  லாத  வேளை

நண்புபோல்  வந்த தென்றல், 

என்பொடு தசையும் தொட்டாய்

என்னவோர் தீரம் கொண்டாய்,

உன்படை கொள்ளேன் நானே

என் கடை அடைத்து மீண்டேன்.

உரை:

யானுளேன் - நான் உள்ளேன்.

வழுவினாய் -  பிழை செய்தாய்

கானிலே கொடியும்  ஆட -  காட்டில் கொடிகள் ஆட

கடுமரம்  தழுவி ஓடி -  கடுமையான மரங்களையும் தழுவி

மேனிலை அடுக்கு வீட்டு  - அடுக்கு மாடி வீட்டில்

கதவிடை மிதந்து மோதி,-  கதவில் வந்து மோதி

யானுளேன் அவண்ம றந்தாய்  நானிருந்த இடத்தின் தன்மை மறந்து,

என்னகம் வழுவி   னாய்நீ  -  என்வீட்டுக்குள் தவறிவிட்டாய்



மின்பனிக் காற்றின் இன்பம் -  " ஏ.சி.க்காற்று சுகம்"

மேனியை முத்தம் செய்ய,--  என் மேனியில் சுகம் தர

மேனியை முத்தம் செய்ய,-- ( வருணனை)

அன்பனில்  லாத  வேளை  --

நண்புபோல்  வந்த தென்றல்,    நண்பு -  தோழமை ,காட்டி வந்த தென்றல்

என்பொடு தசையும் தொட்டாய்---- வந்து என்னைத் தொட்டுவிட்டால்.

என்னவோர் தீரம் கொண்டாய்,----  ( அடாவடிக் தனத்தைக் கூறுகிறது)

உன்படை கொள்ளேன் நானே--   படை-  மேல்படுவதை

என் கடை அடைத்து மீண்டேன்.  கடை -  கதவு என்பதாம்.


படங்கள்









படித்து மகிழ்க.

மீள்பார்வை பின்.

கருத்துகள் இல்லை: