செவ்வாய், 30 மார்ச், 2021

குடைவு, குடம், குடை, குகை,

{இதைச் சுருக்கமாக எழுதவேண்டியிருந்ததால்,  சில புரியாமல் இருந்தால் பின்னூட்டமிடுங்கள். விளக்குவோம். நன்றி. }


 குடு > குடை > குடைவு என்ற சொல்லைப் பார்த்தபின் தான் தெளிவே பிறக்கும். குடு என்பது ஓர் அழகுமிக்க அடிச்சொல். ஒரு குடத்தின் எல்லைகள் சுற்றிவந்து தொடங்கிய இடத்திலே முடிந்து வளையமாய்ப் பொருந்துதலைக் காணலாம். அடிப்பகுதி வளையம் சிறுத்தும் இடை பெருத்தும் வாய்ப்பகுதி மீண்டும் சிறுத்த கண்ணறியாத இடைவெளியும் இல்லாத வளையங்கள் குடத்தில் உள்ளன. குடவாய் வழியாகக் கைவிட்டால் அது ஒரு குடைவமைப்பு என்று தெரிந்துகொள்கின்றோம்.  இதேபோலும் ஒரு குடைவு ஒரு கற்குன்றில் இருந்தால் அது குகை என்றாகிறது.    குடை > குகை.  இது ஓர் உயிர்மெய் எழுத்துத் திரிபின்மூலம் அமைந்த சொல். இதுபோலும் திரிபுகள் வெளிப்படையாகத் தெரியாதவை.  குடை என்று மழைக்கு நாம் பிடிக்கும் துணைப்பொருளும் கைபிடி மேலாகும்படி பிடித்தால் குடைவைக் கண்டுகொள்ளலாம். அதை நிமிர்த்திப் பிடிக்க அது கூரைபோல் மழைநீரிலிருந்து நம்மைக் காக்கின்றது. ( இருபுறமும் சாய்வாகவும் நடுவில் மேலெடுத்தும் கூராக அமைக்கப்படுவது கூரை. )

குடை > குகை என்பது  அகு>  அடு என்பதுபோலும் திரிபு.   கு என்பது சேர்விடக் குறிப்புச் சொல்.  தமிழில் வேற்றுமை உருபுமாகும். அடு என்ற சொல்லில் டுகரம் குகரம்போல் செயல்பட்டது.  இதை நேரம் கிட்டும்போது விளக்குவோம்.

குடு என்பதன் முந்து வடிவம் குள் என்பதுதான்.   குள் -  குடு.  இதுவேபோல் குள்> குகையாகும்.  பள் > பகு என்றாகும்:  பள்ளம் ( நிலப்பிளவு).  பள் > பகு  ( பிளவாக்குதல்.  ) பள் > படு > படுகை என்பதும் பள்ளமே  ஆகும். இத்தன்மைபோல் குள் > குடை;  குள் > குகையாகும்.  இரண்டிற்கும் அடி ஒன்றுதான்.

குள் > குளம் என்பதில் நீர் சென்று சேர்விடம் என்பதை அறிவிக்க,  கு முன்னரே வந்து நிற்கிறது. தொடங்கிடமும் சேர்விடமும் குளத்தைச் சுற்றிவர ஒன்றாகிவிடுகிறது. இருவகையிலும் பொருத்தமே. நீர் பெரும்பாலும் குளத்தின் உள்ளிருப்பதால்  கு + உள் =  குள் > குளம் என்று அறியமுடிகிறது. ஈருகரங்களில் ஒன்று வீழ்ந்தது சொல்லாக்க நெறியாகும். இவ்வாறு ஒவ்வொரு தமிழ்ச்சொல்லும் ஒரு திரைக்காவியம்போல் கதையன்றோ சொல்கிறது.

"அந்தப் பெண் பேரழகி" என்னலாம்.  அழகையும் அழகின்மையையும் வரணித்துச் சொல் என்று குறுக்குசாவல் செய்தால் ஒரு சாட்சி எப்படிச் சொற்களால் உரைக்க இயலாதோ,  அப்படியே சொல்லமைவில் உள்ளீட்டுக் கவின்மையை கிளக்க - விளக்க முடிவதில்லை. இருப்பினும் அறிய முயல்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

சில திருத்தங்கள் :  2141-31032021



திங்கள், 29 மார்ச், 2021

களைக்கொட்டும் களைக்கொத்தும்

 மேற்படி இரு சொல்வடிவங்களும் சரியானவை தாம்.

கொட்டு என்பது சற்று வன்மையையும் கொத்து என்பது குறைவான வலிமையுடன் குத்துவதையும் பண்டை குறித்திருத்தல் வேண்டும் என்று தெரிகிறது.  ஆனால் இன்று இவ்விரு பதங்களிடையே நிலவும் வேறுபாடும் மறைந்து  இரண்டும் ஒருசொல்லேபோல் மக்களிடை வழங்குகின்றன.

எனவே  "-ட்டு" என்று முடியும் சொற்கள் திரிந்து "த்து" என்று முடிவுறின்-- பொருள் வேறுபடாவிடில் -  அவற்றைப் போலி என்றே கொள்ளுதல் வேண்டும். திரிந்து வேறுபொருள் குறித்தலுற்றவை பல.  ஓர் எடுத்துக்காட்டு:

முட்டு  >  முத்து.   ( முட்டி வெளிவருவது என்பது அடிப்படைப் பொருள்).

முத்து > முத்தம் என்றும் சொல் தோன்றியிருப்பதால்,  முத்து என்பதும் முத்தம் என்பதும் மென்மைத் தொடுதல்.  முட்டு என்பது வன்மைத் தொடுதல் என்பது அறிக.  அடிப்பொருள் தொடுதலே.

நத்து நட்டு என்பவும் ஆய்வுசெய்யற்குரியவை.  நத்துதல் -  மெல்ல ஒட்டிச் செல்லுதல் குறித்தது.  நத்து > நத்தை : இது மென்மையாய் ஒட்டி நகரும் உயிரி. நட்டு என்பது எச்சமாயினும்,  நடு > நட்டு என்று வந்து,  வன்மையே குறிக்கும்.

இவ்வேறுபாடுகட்குக் காரணம் யாதெனின் வன்மை மென்மையே.  ஆயினும் இரண்டும் வல்லின எழுத்துக்கள் பயின்றன என்பதிலோர் ஒன்றுபாடு இருப்பினும் அவை தம்முள் ஒன்று வன்மையும் இன்னொன்று மென்மையும் உடையனவாகும் என்பதறிக.

டகரம் காட்டும் வன்மை, இட்டு - பட்டு என்பவற்றிலும் ( எச்ச வடிவிலும் அல்லாத வினைப்பகுதி வடிவிலும் ) அறியலாம்.  இத்து, பத்து என்பவற்றில் வல்லொலி தாழ்வடைந்தது அறிக.

ஆகவே வல்லொலிகளைக் மிகுவல்லொலி தாழ்வல்லொலி என்று பிரித்து உணரவேண்டிய நிலை ஏற்படுகிறது.

அறிந்து மகிழ்க.

மறுபார்வை பின்.

ஞாயிறு, 28 மார்ச், 2021

ஊர்மக்கள் யாவரும் அடையும் முருகப்பெருமான்.

 ஏதேனும் செய்வடி வேலவனே --- நேற்று

நீதானே என்னுளம் பாதிகொண்டாய்!

காதேனும் உன்னிசை கேட்கவேண்டும் --- என்

காலே    உன்பால்கொண்டு சேர்க்கவேண்டும்.


மாதோடும் வாராமல் வேலோடும் வந்தாலும்

நாதேடிப் புகழ்பாடும் நாயகன் நீ ---- இதில்

சூதேதும் இல்லையே சுந்தரப் பங்குனி

ஊரோடும் அடைவது உனையன்றி யார்?




படம்:  உதவியவர் - திரு. கருணாநிதி ஜீ


பொருள்:

ஏதேனும் செய்வடி வேலவனே ---  எனக்கு எதாவது ஓர் உதவி செய்,  முருகப்பெருமானே;

நேற்று நீதானே என்னுளம் பாதிகொண்டாய் ---     முன் தினம் எனது மனத்தினில் ஒரு பகுதியை  எடுத்துச் சென்று விட்டாய்; ( இதயத்து மறுபாதி தவிப்பில் உள்ளது),

காதேனும் உன்னிசை கேட்கவேண்டும் --- எடுத்துச் சென்ற பின்னர் ஒன்றும் நிகழவில்லை;  ஆகையால் உன் இசை என் செவிகளிலாயினும் வந்து படவேண்டுமே;

என் காலே    உன்பால்கொண்டு சேர்க்கவேண்டும்.  --(  நீ இருக்கும் தொலைவில் வந்து உனைக்காண,) என் கால்கள் என்னைக் கொண்டுபோகவேண்டும்; அவற்றுக்கோ வலுவில்லை.  அதற்கு நீ அருள்புரிக ) .  இவற்றுள் எதுவும் நடைபெறவில்லை என்பது.

மாதோடும் வாராமல் -- நீ வள்ளியோடு கூடி என் இடத்தை அடையாமல்,

வேலோடும் வந்தாலும் ---  வேல்மட்டும் கொண்டு இவ்விடத்தை அடைந்தாலும்; ( வேலோடும் - உம் வருவதால் மயிலினோடும் என்று இயைக்க).

நாதேடிப் புகழ்பாடும் நாயகன் நீ ----  என் நாவினால் தினமும் துதித்துத் தேடி  நான் ஏத்தி இசைப்பது நாயகன் ஆன உன்னைத்தான்;

இதில் சூதேதும் இல்லையே --- இச்செயலில் மாறுபாடுகள் எவையும் இல்லை அல்லவோ?

சுந்தரப் பங்குனி  ---  அழகு காட்டும் இந்தப் பங்குனி மாதத்தில் , 

ஊரோடும் அடைவது உனை--- ஊர்மக்கள் யாவரும் மொத்தமாகக்  கண்டு ஆனந்திப்பதும்  உன்னைத்தான்;

அன்றி யார்?  --  இப்போது முருகனாகிய உன்னையன்றி வேறு யாரையுமில்லை .

(ஆகவே எனக்கும் அவ்வருளைத் தருவாயாக  என்றவாறு).

தலைப்பில் "ஊர் முழுதும்" என்றால்  ஊர்மக்கள் அனைவரும் என்றும் ,

"  அடையும்" -  அருளைப் பெறும் என்றும் அறிக.

இப்பாடலின் உள்ளடியான கருத்து, ஊரில் அனைவரும் பங்குனி உத்திரத்தில் பற்றுடன் நின்று அவன் அருளை  அடைந்தனர் என்பதுதான். இப்பாடல் வரிகள் யாம் சிந்திக்காமல் தாமே வழிந்தன.  அவற்றின் பொருளை யாம் எழுதியபின் உணர்ந்து கொண்டேம். உணர்ந்தவாறு பொருளைத் தந்துள்ளேம். இது அவனருளைப் பளிச்சிடுகிறது. முருகன் புகழ் வாழ்க. எல்லாப் புகழும் முருகப் பெருமானுக்கே.  





சனி, 27 மார்ச், 2021

பங்குனி உத்திரத்தில் வேலன் வருவான்

 

பங்குனி உத்திர    மென்றால் --- நம்

பாரெங்கும்  வந்திடும்  வேல்முரு கன் தனை,

தங்கிடு வீட்டிலென் போமே ---  ஒளித்

தங்க நிறத்தட்டில் உண்டிடச் சொல்வோம்.


உறவினர்  நட்பினர் வந்து  ---- உடன்

உட்கார்ந்தும் நின்றுமே சாமிகும் பிட்டுத்

திறமுடன் செய்யலங் காரம் --- கண்டு

தீராத பற்றொடும் சேர்ந்தாடி உய்வார்!  


வள்ளி   யுடன்வடி  வேலன் ---  வர

வாசலி லும்வரை ஓவியக் கோலம்

சொல்லவும் கூடுமோ சூழல் --- எல்லாம்

சுந்தர மாக்கிடும் உந்தும் மனத்தில்.


பங்குனிப் பங்கினைச் செய்வோம் ---  பால்

பொங்கிடும் மாலைகள் எங்கணும் பூக்கள்

தங்கி மணந்தரும் வாழ்வும் ----  அணி

மங்கலம் மாட்சி மனைமுழு தோங்கும்.


படம் : உதவியவர்  திரு கருணாநிதி ஜீ.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்








வியாழன், 25 மார்ச், 2021

தேவர் என்ற பன்முகப் பயன்பாட்டுச் சொல்.

தேவர் என்ற பட்டப்பெயர் உள்ளவர்கள் பலர் தமிழ்நாட்டில் உள்ளனர்.

தேவலர் -   தேவர் :  தேவர் என்ற சொல் தமிழ்நாட்டுக்கு நெருங்கிய இடங்களில் தேவலர் என்றும் வழங்கியுள்ளது.  வலர் என்பது வல்லவர்கள்  என்றும் பொருள்தரும் சொல்.  வலர் என்பது லகர ஒற்றொழிந்த இடைக்குறைச் சொல்.. எழுத்துத் திரிபுகளை மட்டும் கருத்தில் கொண்டு இச்சொல்லுக்குப் பொருள் கூறுவதாயின்,  தேவலர் என்பதே தேவர் என்று குன்றி ( சுருங்கி) நிற்கின்றது என்று முடிக்கவேண்டும்.

இதற்குப் பொருள் கூறுவது :  தே - இறைவனின்,  வலர் -  வலிமை அல்லது அருளை உடையவர்கள் என்று சொல்லலாம்.  பூசைகள் பண்ணி மக்களை ஆற்றுப்படுத்தியர்கள் என்பது அப்போது பொருள் ஆகிவிடும். ஆனால் இந்த வேலையை ஒரு கூட்டத்தினராக மேற்கொண்டவர்கள் அல்லது "பார்த்தவர்கள்" - பார்ப்புகள் அல்லது பார்ப்பன மக்களே ஆவர்.  வெள்ளைக் காரர்கள் அவர்கள் எழுதிய நூல்களில் Devas என்று  இவர்களையே குறிப்பிட்டதாகத் தெரிகிறது. இதை மறுப்போருமுண்டு.

ஆனால் இக்குறிப்பு அல்லது அடைகளுடன்   (தேவலர்)  வெளிமாநிலங்களில் காணப்படுவோர் தம் வாழ்க்கைத் தொழிலாக நெசவு மேற்கொண்டவர்களாகத் தெரிகிறது.  தொடக்கத்தில் நெசவே செய்து பின்னாளில் தமிழர் படைகளில் சேர்ந்து படைஞர்களாகி அரசரால் அங்கீகாரம் பெற்றிருக்கலாம். அவர்களும் தேவர் என்ற பட்டத்துக்கு உரியவர்களே.

தமிழ்நாட்டில் உள்ள எல்லாச் சாதியினரும் எந்த வரலாற்றுக் குறிப்புகளையும் தம்முடன் வைத்துக்கொண்டவர்கள் அல்லர். ஆகையால் குறிப்புகளின்றி எதையும் மறுப்பது ஒப்புவது அரிதே ஆகும். 

தேவர்கள் - முருகப்பெருமான் காலத்தில்:

"செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த" என்று  எட்டுத் தொகையில் வருவதால் தேவலர் என்ற சொல்  அதற்கு முன் "தேய்வலர்"  என்று இருந்திருக்கலாம்.  அவ்வாறாயின் தேய் -  எதிரிகளைத் தேய்த்து அழிப்பதில்,  வலர் - வல்லவர்கள் என்று பொருள் கொள்ள வழிகிடைக்கும்.  இதை விளக்கிப் பொருள்கூறுவதில் வெற்றி பெற்று விட்டார்களாயின்,   வரலாற்றுக்கு முந்திய முருகப்பெருமான் காலத்திலிருந்தே இவர்கள் "தேவர்கள் "  அல்லது அச்சொல்லின் முந்திய சொல்வடிவங்களின் மூலம் அறியப்பட்டுவந்தனர் என்ற உறுதியான வரலாற்றுவன்மை கிடைத்துவிடும்.  இவர்களில் வரலாறு படித்தவர்கள் இதற்கான முயற்சிகளைக் கொள்வுறுத்தல் வேண்டும். போர்க்களத்திலே எதிரிப்படைஞர்களில் பிடிபட்டவர்களை (கைதிகளை ) வெட்டிக் கொல்லும் தொழிலை இவர்கள் செய்திருக்கலாம் என்று தெரிகிறது. ( "களம் படக், கொன்று தேய்த்த "  என்ற தொடரைக் கவனிக்க ). கைதிகளைப்போர்ப்படை நகர்வின் போது வைத்திருக்க முடியாது.  ஆதலின் அவர்கள் வெட்டிக்கொல்லப்பட்டனர்.  படை  எதிரி யூருக்குள் புகுந்த  போது அங்கு இருந்த பெண்களைக் கொல்லவில்லை. இப்பெண்களே "கொண்டிமகளிர்". இவர்களைப் பற்றிய செய்திகள் இன்னோர் இடுகையில் உண்டு.

திருவள்ளுவருக்குத் தேவர்ப் பட்டம் அல்லது பெயர்

திருவள்ளுவருக்குப் பல  பெயர்கள் இருந்ததாகத் தெரிகிறது. இவற்றுள் எதுவும் இயற்பெயர் என்று கூறுவதற்கில்லை.  "தேவர்" என்பது இவரது பெயர்களில் ஒன்றாகத் தமிழிலக்கியம் தெரிவிக்கிறது.  இது இவர் அரசவைத் தலைமைப் புலவர் என்பதைக் குறிக்கிறது. தேன் வரப் பாடுபவர் என்ற பொருளில்,  தே + வர(ப் + பாடுவ)ர்"  என்ற பாராட்டானது குறுகி "தேவரர்" என்றும் தேவர் என்றும் ஆகியுமிருக்கலாம்.  இதை அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களே அறிந்திருப்பர்.

தே என்பது கடவுள் என்று பொருள் தருமாதலின்,  தே+ வரர் > தேவர், அதாவது கடவுள் அருள் அடைந்தவர் என்றும்  வரம் பெற்றவர் என்றும் பொருள் கூறுதலும் ஆகும்.

சமண முனிவர்களுக்கும் தேவர்ப்பட்டம்  உண்டாதலின், தேவர் என்ற பட்டமுடையோரில் சமணராயிருந்து பின்னர் சைவரானவர்களும் இருக்கலாம். தமிழ்ப் புலவர்களில் சிலர் திருவள்ளுவர்  சமணரென்றும் வேறுசிலர் இவர் சைவரென்றும் கூறியுள்ளனர்.  சீவக சிந்தாமணி ஆசிரியரும் தேவர் என்ற பட்டமுள்ளவர்.  (திருத்தக்கதேவர்).

தேவர் என்ற சொல்லின் இன்னொரு வடிவம் , முன்னிலையில் "தேவரீர்" என்று வரும். நீங்கள் என்று சொல்லாமல் "தேவரீர்" என்று மடல்களில் எழுதுதலும் முன்னைய நூற்றாண்டுகளில் இருந்திருப்பதாகத் தெரிகிறது.  ஆகையால் இது ஒரு பாராட்டுப் பட்டம், பணிவுகாட்டும் பட்டம் என்றும் சாதி ப்பெயர் அன்று என்றும் கூறுவர்.

முப்பத்து முக்கோடி தேவர்கள்

கோடி என்பது பல்பொருள் ஒரு சொல்.  இது புதுத்துணியையும்  குறிக்கும். " மந்திரக் கோடி உடுத்து" என்ற வழக்கையும் நோக்கவும்.  கோடி என்றால் புதுமை என்று திவாகர நிகண்டு கூறுகிறது. பிங்கலந்தை நிகண்டின்படி இது முடியில் அணியப்படும் மாலை ( அல்லது துணியாலான அலங்காரம்) குறிக்கும்.  கோடித்தல் என்பது அலங்கரித்தல், அழகுபடுத்தல் என்று பொருள்தரும் வினைச்சொல். பெருங்கதையில் கோடித்தல் அன்ன கோடுசால் வையம் என்னும் தொடர் உள்ளபடியால், இது அமைத்தல், உருவாக்கம் செய்தல் என்றும் அர்த்தமுள்ளது. எனவே கோடிதேவர் என்பது அலங்காரம் செய்த தேவர்கள் என்றே பொருள்படும்.  வினைத்தொகை. இது மூத்த தேவர்களால் செய்யப்பட்டது. இவர்கள் மூ கோடி தேவர்கள்  மூத்த ( சீனியர்) அலங்காரம்செய் தேவர்கள்.

இது நெசவுக்கலை வளர்ந்து  துணிகளால் அலங்காரம் செய்யும் கலை தொடங்கியபின் நடந்த ஏற்பாடு.  இங்கு  குறித்த தேவர் எனப்பட்டோர் முன் கூறிய தேவலர்கள். ( இடைக்குறை -  தேவர்கள்).   இது திருமண மண்டபமுன் கோடிக்கப்பட்டது .  ( கடிமண்டப முன் கோடிப்ப -  காஞ்சிப்புராணம்). அலங்காரத் துணிகள் கிடைக்காத போது பூக்களையும் பயன்படுத்தி இருக்கலாம்.  அல்லது கலந்தும் அலங்கரித்திருக்கலாம்.  இது பொருள் கிட்டுதற்கேற்ப நடைபெறுவது.  ( வாழை இலை கிட்டாமல் சீனாவின் உணாத்தாளில் பிரசாதம் வழங்குதல் போல).  பின் மண அலங்காரம் இறைவணக்க இடங்களிலும் பரவிற்று. இது இயல்புதான்.

இத்தகு அலங்காரம் வளைவான இடங்களில் கவனித்து வைக்கப்பட்டது. "கோடு சால்"  வளைந்த இடங்களில் நிறைய வைக்கப்பட்டது. வையம் ( உலகம்) என்பது வைத்த மக்கள் என்று பொருள்படும்.  இவை குறிப்புகளாகவே நூல்களில் தரப்பட்டவை.  இங்கு சால் என்பது  நிறைய என்று பொருள்பட்டு, இரட்டுறலாக நெசவாளனாகிய துளுவ சாலியன் வைத்தான் என்று மறைவாகக் கூறி உணரவைக்கிறது. இச்சாலியனே தேவலனும் ஆவான்.

ஒருவன் மந்திரி ஆனபின் ஒரு மதிப்புப் பட்டத்தை ( கௌரவ)  பெற்று விடலாம். அதற்குமுன் அவன் இயல்பான மனிதனே.  சாதிகள் என்பவை பிற்காலத்தவை. மனித வளர்ச்சி நூலின்படி காட்டுவாசி, கடல்வாசி, மாலைவாசி என்று அலைந்து திரிந்தவன் தான்.  அதனால்தான் தமிழ் இலக்கிய வழக்கில் நால்வகையான நிலங்கள் கூறப்படுகின்றன. " நானிலம்" என்றால் உலகம் - நான் கு வகை நிலம். அவ்வளவுதான். எல்லாம் அங்கே அடங்கிவிட்டது.

மாலானவர் அணி பொன்னாடை தந்து மகளைத் தந்து

ஆலாலம் ஈந்தது தோலாடை சுற்றும் அரன் தனக்கே.

இந்தப் பாடலில் புராணப் பாவலர் என்ன சொல்கிறார் என்றால்:

சிவபெருமான் பழைய கடவுள். அவர்காலத்தில் எல்லோரும் தோலாடைதான் சுற்றிக்கொண்டு காட்டில் திரிந்தார்கள். அப்புறம் வந்தார் திருமால். பொன்னும் மணியும் பீதாம்பரமும் அணிந்தார்கள்.  பால்கடல் திருமாலுடன்தான் கொள்வனை கொடுப்பனை!  ஏன் ஏன் என்பீரோ. நல்ல துணி அணிந்தவுடன் பால்கடல் கூட சாதியை உண்டாக்கிக்கொண்டு பெண் கொடுக்கவில்லை!!   சாதிகள் என்பவைக்கு அடிப்படை பொருளியல்தான்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



 

செவ்வாய், 23 மார்ச், 2021

வெளியூர் சென்றவர்கள் வீடு

 வீட்டினிலே இருந்தவர்கள் வெளியூர் சென்றார்

விரைவினிலே திரும்புவதே  உறுதி  என்றார்

நாட்டிலயல் நாட்டிலிந்த உலகம் எங்கும்

நலிவுசெய வந்துவிட்ட கொரனா தன்னால்

கூட்டிலுறு புழுவேபோல் வெளியோர் நாட்டில்

மாட்டினரே மனையகமே திரும்பார்  ஆனார்,

வீட்டினையே புகைப்படத்தில் விழித்து நோக்கின்

விழுமரமும் கழிபொருளும்  தவிக்கின் றாரே!




 

ஞாயிறு, 21 மார்ச், 2021

தொப்பை, தொங்குதல்

 ஓரிடத்தில் முட்டி வெளிவந்து ஏனைச் சுற்றுவட்டப் பகுதிகளில் உட்பொதிவாக உள்ள ஒரு பொருளைக்  குறித்த சொற்கள் தமிழில் "தொ"  என்ற முதலெழுத்திலும் அதற்கு வருக்கமான எழுத்துக்களிலும்  தொடங்குவதைக் கண்டறிவதில் தொல்லை ஒன்றுமில்லை.  இதற்கு எடுத்துக்காட்டாக ஒருபொருளைச் சுட்டிக் காண்பிக்க வேண்டுமெனில் இருக்கவே இருக்கிறது தொப்பி.   தொ என்ற எழுத்திலே தொடங்கும் இன்னொரு சொல் "தொப்பை" என்பது ஆகும்.  ஒரு மனிதனின் தொந்தி  அல்லது தொங்குவயிறு.  முட்டி ஓரிடத்தில் திரண்டு வெளிப்பட்டுக் காண்புறும்.  அதனால்  அது தொப்பை எனப்பட்டது.

உடல்பருத்தவர்கள் எல்லாப்  பகுதிகளிலும் அளவாகச் சுவரைப்போல மேடுகளின்றிப்  பருத்திருப்பதில்லை. அங்கிங்கெனாதபடி எங்காவது சிலவிடங்களில் சதைபருத்து இருக்கும். கொழுப்பும் சதையென்ற குறிப்பில் அடங்கும். இவ்வாறான பருமனை பழந்தமிழர் தொம்மை என்று குறித்தனர். அளவாக இல்லாமல் வெளித்தொங்கும் பருமன்.  பிற்காலத்தில் இச்சொல்லின்  விழேடத் தன்மையை மக்கள் மறந்தமையினால்,  தொம்மை என்பது பொதுப்பொருளில் வழங்கி இப்போது வழக்கில் அல்லது புழக்கத்தில் பெரும்பாலும் இல்லையாகிவிட்டது.  தொப்பை, தொம்மை என்ற பதங்களை ஒப்பிட்டு அறிக.   தொம்பை மாலை என்ற வழக்கும் நோக்கற்பாலது.

பந்தியின்போது பலருக்குச் சமைக்கப்பட்டுள்ள சோறு ஓரிடத்தில் துணியால் மூடப்பெற்றுப் பரப்பி வைக்கப்பட்டிருக்கும்.   இது தொகு ( தொகுத்து அல்லது சேர்த்துவைத்து) பரப்பி வைக்கப்பட்டமையின்   "தொகு+ பரம் " > தொகும்பரம் >  தொம்பரம் எனப்பட்டது.  இக்காலங்களில் நல்ல ஏனங்கள் கிட்டுவதால் இது குறைந்துவிட்டது.

தொகுத்தல் என்பது ஓரிடத்தில் சேர்ந்திருப்பது, அல்லது சேர்த்துவைப்பதுதான் --  தொ என்று தொடங்குவது காணலாம்.  தொகு என்பதில் கு என்பது வினையாக்க விகுதியாய் வருகிறது.   பகு, வகு, நகு என்று பல சொற்களில் வந்து இது வினைச்சொல் நீர்மை அடையும்.  தொகு> தொகை: எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலியன. 

தோம்பு என்ற சொல்  தொகு : தோ.  முதல்நீண்டது.  பகு>பா> பாதி என்பதிலும் நீட்சி. சித்திரவேலைப்பாடு போல நிறங்களுடன் சொலிப்பது நாகம் என்னும் மலைப்பாம்பு. நகு>  (ஒளிவீசுதல்: )  நகு+அம் = நாகம், நகர்தல் என்ற சொல் தொடர்புடையது.   தோம்பு என்பது நீர் சேர்த்துவைக்கும் பெரும்  "தொப்பை". தொம்பை என்பது குதிர் என்னும் கலம்.    தொம் > தோம் > தோம்பு என்பதிலும் இதன் தொடர்பு அறியலாம்.  தொகு+ பு > தொகும்பு> தோம்பு எனினுமாகும்.

தொம் + தி > தொந்தி.  

தொப்பூழ் , தொப்புள்.   தொப்பு+ உள்.

தொப்பாரம் -பெருமூட்டை.  பொட்டணம் (பொட்டலம்). கொப்புளமும் ஆகும்.

தொந்தி.  -- ---தொந்திப்பு இரட்டிப்பு ஆகும்.

வேறு சொற்களும் உள. இன்னொரு நாள் அளவளாவுவோம்.

மெய்ப்பு பின்னர்.


குறிப்புகள்:

[ விழேடம் என்பது விழுமிதாக எடுத்துக்கொள்ளபடும் பொருளின் தன்மை.  இதன் அடிச்சொற்கள் விழு+ எடு. அம் விகுதி. ]






டெய்லர் என்ற ஆங்கிலச் சொல்

ஆங்கில மொழியில் "டெய்லர்" என்ற சொல் எப்படி உண்டானது என்பதை நம் ஆங்கில ( இந்தோ ஐரோப்பிய) மொழி வல்லுநர்கள் ஆய்வு செய்தனர். இவர்கள் ஆய்வினில் டைலர் என்ற ஆங்கிலச் சொல் "பிளவு செய்தல் "   [ Modern French tailleur), literally "a cutter," from tailler "to cut," from Late Latin or old Medieval Latin taliare "to split" ]  என்பதிலிருந்து வந்ததாக மொழிவல்லுநர் முடிவுக்கு வந்ததாக  எழுதியுள்ளனர்.  ஆனால் இவர்கள் இந்தச் சொல்லைத் தேடிப்பிடித்ததற்குக் காரணம் உண்டு.  அதை அவர்கள் குறிப்பிடவில்லை.  இதன் உண்மைக் காரணம்,      வேட்டி என்ற சொல் வெட்டுதல் என்பதிலிருந்து தமிழில் வந்துள்ளது.  துணி என்ற சொல் துணித்தல்  ( துண் > துண்டு;  துண் > துணி ) என்பதிலிருந்து வந்துள்ளது.  இதை மனத்துக்குள் பின்புலமாக வைத்துக்கொண்டே  tailler என்ற  வெட்டுதல் கருத்திலிருந்து வந்தது என்று கூறிப்போயினர்.  தையல்காரன் துணியை வெட்டித்தான் தைக்கிறான்.   ஆனால் வெட்டுவது என்பது அவன் தைப்பதற்கு மேற்கொள்ளும் முன்னோடிச் செயலே அன்றி அதன் இறுதிச் செயலன்று.  இறுதி நோக்கம் தைப்பதுதான்.  நீங்கள் டெய்லரைப் பார்க்கச் செல்வது துணியை வெட்டுவதற்கு அன்று.  அதைத் தைத்து வாங்குவதற்குத் தான்.  ஆகவே வெட்டும் செயலானது துணி, வேட்டி என்பதற்குப் பொருந்துமே தவிர, தைப்பதற்குப் பொருந்தாது.

தமிழில் தைத்தல் என்ற வினைச்சொல் இருப்பதை அவர்கள் மறைத்துவிட்டனர்.  அல்லது ஓர் உள்ளடியாக வைத்துக்கொண்டனர்.

டெய்லர் என்ற சொல்,  தையல் என்ற தமிழிலிருந்து அமைந்த சொல்.

தையல் >  தையலர் >  டைலர் ஆகிவிடும்.

அவர்கள் இந்தியாவிற்கு வந்தபின் அமைத்துக்கொண்ட சொல்லே தையலர்,  அல்லது டெய்லர்.  தையலர்> தைலர் என்பதில் யகர ஒலி விடுபட்டது.

இச்சொல் ஆங்கிலத்தில் 1832ல் இருந்து காணபட்டதாக அவர்களே சொல்கிறார்கள். தையல் என்ற சொல்லுடன் அர் விகுதி சேர்ந்து அமைத்துக்கொண்ட சொல்லே தை(ய)லர்!!

நாரெங்ஆ என்பது ஓரஞ்ச் அல்லது ஆரஞ்ச் ஆனதுபோலத்தான்.


மெய்ப்பு பின்னர் 




தென்னாடு என்றாலே சண்டைக்களம்.

 தென்னாட்டுப் போர்க்களங்கள் என்றொரு நூலை, பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் எழுதினார். தனித்தனிச் செய்யுள்களை வாசிக்குங்கால் தென்னாட்டில் பலப்பல போர்கள் நடைபெற்றுள்ளன என்பதை அறிந்துகொள்ள முடிந்தாலும், இந்த நூலை வாசிக்கும்போதுதான் போரே ஓர் இணையற்ற ஈடுபாடாகத் தமிழ் மன்னர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது நம்முன் ஒரு திரைப்படம்போல் கொண்டுநிறுத்தப்படுகிறது என்னலாம். போரைத் தொழிலென்றே கூறுவதுமுண்டு.

வாழ்க்கை இவ்வாறு ஓடியதால்,  தமிழர்களிடை மிகப்பெரிய ஒற்றுமைக்கேடு மலைபோல் வளர்ந்திருந்தது என்பது தெளிவாகின்றது.

போர்மறவரிடைப் பல தரநிலைகளும் படிநிலைகளும் நிலவியபடியால் மொத்தமாகத் தமிழரிடைப் பெரியவர்,  அதற்குக் கீழுள்ளவர்,  அதற்கும் கீழுள்ளவர் என்று ஏற்றத் தாழ்வுகள் தோன்றி  அவை போர் முடிந்துபோனபின் முடிந்துவிடாமல் இன்றளவும் தொடர்ந்தன. இவற்றுள் பல சாதிகளாக மாறிவிட்டன.

தென்னிலம் என்ற சொல்லே தமிழில் "போர்க்களம்" என்ற பொருளைத் தருகிறது.   பல ஊர்கள் "கோட்டைகள்" என்ற அடைமொழி பெற்றுள்ளன. எடுத்துக்காட்டு:  புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை,  கள்ளிக்கோட்டை,  கந்தருவகோட்டை, பாளையங்கோட்டை  என்பன காண்க.  இவையெல்லாம் வீரத்தை ஒருபுறம் முன்வைத்தபோதும்  விரிசல்களையும் விரித்துவைத்தன.

தென்னிலம் போர்க்களம் ஆதலால் போர்கள் பெருந்தொழில்கள் ஆயின.

அறிக மகிழ்க.



சனி, 20 மார்ச், 2021

சாய், சமர்ப்பித்தல்

 ஓர் அரசு அதிகாரியிடம் போய் ஒன்றை வாய்மொழியாய்த் தெரிவித்து, எனக்கு உதவுங்கள் என்று வேண்டிக்கொள்ளலாம்.  அவரும் அவசரத்தில் சரி சரி என்று புகன்றுவிட்டுப் போய்விடக்கூடும். அவர் ஒன்றும் செய்யாமல் ( மறந்து) விட்டார் எனில், இன்னோர் அதிகாரியிடம் கூறுகின்ற போது,  வாயால் சொல்லிக்கொண்டிருந்தால் ஆகாது, எழுதிக்கொடுங்கள் என்று அவர் கேட்டால் அதையும் செய்தால் அப்போது அது மனுவாகிறது.   மன்னுதல் எனில் நிலையாக  இருத்தல். இங்கு நிலையாக முன்வைத்தல்.  வாய்ச்சொற்கள் சுவடின்றி மறைந்துவிடும்.  எழுத்து கொஞ்சநாள் நிற்கும்.  ஒரு தாளில் எழுதிக் கொடுக்க, அது மனு ஆகிறது.  ஒரு மனுவுக்கு இருப்புக்காலம் வாய்மொழியினும் நீண்டதாகும்.

ஞானம் வாய்க்குமொருமனு வெனக்கிங் கில்லாமை யொன்றினையும் என்றார் தாயுமான சுவாமிகள்.  

மன்னுதல் :  ஏவல்வினை: மன்னு.   மன்னு என்பது முதனிலைத் தொழிற்பெயர். மன்னு என்பது  மனு என்றது இடைக்குறை.    என்னும் > எனும் என்ற தொகுத்தல் போலவே.

நிலையாக இருக்கும் காலம் என்பது பொருளுக்குப் பொருள் வேறுபடும். நிலையானது என்றால் உலகம் முடியும் வரை நிலையானது என்பது பொருளன்று.

ஒரு மனுவை  அலுவல்மேலாளர் ஒருவர்முன் கிடத்துதலே சமர்ப்பித்தல்.   இது அமர்த்தல், அமர்த்துதல், அமர்ப்பித்தல் > சமர்ப்பித்தல் என்று  அமைகிறது.  அகர வருக்கம் சகர வருக்கமாகும்.  இதற்கு எடுத்துக்காட்டு:  சமர் > சமர்,  அமைத்தல் > சமைத்தல் என்று பல.  பல இடுகைகளில் இது கூறப்பட்டுள்ளது. ஒரு தாளில் எழுதுங்கள், மனப்பாடம் செய்துகொள்ளுங்கள்.

சில  இறைப்பற்று உய்விப்பாளருக்குச் சாய் என்ற சொல் வழங்கும். எடுத்துக்காட்டு:  சாய்மாதா.     ஆய் - சாய்.    இது தாய் ,  அதாவது பற்றின் ஊற்று என்று பொருள்படும்.  இது அயலிலும் சென்று நன்கு வழங்குவது.


கொண்டிகளும் கொட்டிகளும். போர்க் கொள்வனை

போருக்கு முந்தின களிப்பாட்டம் 

அரசர்கள் காலத்தில் போர்கள் மிகுந்த முன்னேற்பாடுகளுடனும் பூசைபோடுதல் மாலையணிதல், கள்ளருந்துதல், உணவுகள் பரிமாறுதல், குளியல்கள், கோலாகலங்கள் ஆகியவற்றுடனும் நடைபெற்றன. போருக்குப் போய் மடியும் நிகழ்வுகளும் பல.  மீண்டுவருதல் மறுபிறவிதான்.   ஆகவே போர்மறவர்கள் எல்லா விதங்களிலும் நுகர்ந்து மகிழுமாறு அரச அதிகாரிகள் பார்த்துக்கொண்டனர். இவ்வாறில்லையாயின் படைக்கு ஆள்கிட்டுவதும் குதிரைக்கொம்பு  ஆகிவிடும்.  

இயலாமை அரசன்

போதுமான உணவு இருப்பு இல்லாத நிலையில் போர் தம்மீது சுமத்தப்பட்டுத் தவிக்கும் அரசனின் நிலை வேறு.  சவுக்கடி கொடுத்தாவது படையில் பலரையும் பணியவைத்துப் போருக்குத் துணியவைக்க வேண்டியும் அவ்வரசனின் நிலைமை கட்டாயம் ஆகிவிடும்.  இது தமிழ அரசன், சீன அரசன், யப்பானிய அரசன் , வெள்ளைக்கார அரசன் என்ற பாகுபாடின்றி யாவர்க்கும் பொதுப்பாடமாகுமன்றி ஒரு புதுப்பாடமன்று.  அவர்களை இப்போது போரில்லாக் காலத்தில் தாக்கி எழுதுவதில்  ஒரு பயனும் இல்லை.  வரலாறு மீண்டும் மீண்டும் அதே பாடத்தைப் புகட்டவல்லது என்பது ஓர் ஆங்கில அமுதமொழி. History repeats itself. (English ).

சமையல்,  ஆக்கிகள் > ஆச்சிகள்

படை நகரும்போது ஒரு சமையல்காரப் படையும் பின்னே நகரவேண்டும்.  போர் ஆயுதங்களைக் கொண்டுசெல்லும் வழிகள் எப்போதும் திறந்தே இருக்கவேண்டும்.

ஆக்கிப் போடுகிறவர்கள்  ஆக்கிகள்  அல்லது  ஆச்சிகள் எனப்பட்டனர்.  க - ச போலியாகும்.  ஆய்ச்சிகள் என்பது வேறுசொல் எனினும் அதுவும் திரிந்து ஆச்சி என்று குழப்பமுண்டாக்கலாம்.  சிறைபிடிக்கப்பட்ட கைதிகளைக் கொண்டு உணவு சமைத்துண்ணல் சற்று ஆபத்தானது.  உலகில் போர்கள் பல செய்த புகழின் உச்சியில் இன்றுமுள்ள ஒரு படைத்தலைவருக்கு நஞ்சிடப்பட்ட இறைச்சி தரப்பட்டு அவர் சின்னாட்களில் மறைந்தார். பெயர் யாதும் குறிப்பிடப் படாது.

வெற்றி பெற்ற மன்னன் பெண்டிரொடு நுகர்ச்சி:

போரில் வெற்றியடைந்த மன்னன் தோற்ற நாட்டிலிருந்து பெண்களைக் கொண்டுவந்து தக்க இடத்தில் சிறைவைப்பான். இந்தப் பெண்கள் மன்னனின் படையணிகட்குச் சமர்ப்பணம்  ஆகிவிடுவர்.  சிறந்த அழகியை அவன் வைத்துக்கொள்வான்.  இவ்வாறு அட்டிலா த ஹன் என்று வரலாறு கூறும் ஒரு ஹான் இனத்துப் போர்ப்புயலோன்  ஒரு கைதிப்பெண்ணை அணுகிய ஞான்று,  அவன் அவளால் கொல்லப்பட்டான்.  சீனாவிலிருந்து ஹங்கேரி வரை நெடுந்தொலைவு படைநடத்திய ஈடு இணையற்ற மறவன், இப்படியா மடியவேண்டும்?  இவ்வாறும் நிகழ்ந்ததுண்டு வரலாற்றில். வெற்றியடைந்த ஒவ்வொரு போரிலும் அவன்றன் நுகர்ச்சி நிறைவேற்றிய அழகிகள் அனந்தம்.


கொண்டிகள்  - கொட்டிகள்

 இவ்வாறு சிறைபிடிக்கப்பட்ட பெண்கள் " கொண்டிமகளிர்" எனறு தமிழில் கூறப்பட்டனர். இவர்களை ஆடவைத்து அரசியல் அதிகாரிகள் களிப்பதுண்டு. இவர்கள் ஆட்டத்துக்கு மேளம் கொட்டியவர்கள் " கொட்டிகள்"   எனப்பட்டனர். போர்முடிந்த நிலையில் புகுந்த இவர்களும் ஆங்காங்கு ஏனை மக்களுடன் வாழ்ந்தனர். இவர்கள் அந்நாளையச் சிறையதிகாரிகளின் அரவணைப்பில் தனிப்படுத்தப் பட்டுக் குடிகளிடைக்  குடியமர்ந்தனர். 

அயல் நாட்டுப் பெண்கள் உள்நாட்டு மக்களிடைக் கலப்பாவதற்குப் போர்களே பெரிதும் உதவின. அழகிய  நிறப் பெண்டிரை நிரவி வாழ்விக்கப் போர்கள் சிறந்த வழிமுறைகளைத் தந்தன.  தனித்தனியாகப் போய் அயல் அழகிகளைப் பெண்கேட்டால் கிட்டுமா என்ன?

அறிக மகிழ்க.


குறிப்புகள்

கொண்டவிடு ரெட்டிகள் --புவனகிரி வேளமாக்கள் என்போர் போல  இடையிடையே விஜயநகரப் பேரரசுக்கு  (கிருஷ்ணதேவராயர்) எதிராகக் கிளர்ச்சி செய்தவர்கள். .

கொள் + தி:  கொண்டி.  ( கொள்ளப்பட்டோர் -  கைது செய்யப்பட்டவர்கள்.) கொண்டவிடு:  கைது செய்து பின் விடுவிக்கப்பட்டவர்கள்.


மெய்ப்பு பின்னர்.

முகக் கவசம் அணிந்து

இடைத்தொலைவு கடைப்பிடிக்க.


வெள்ளி, 19 மார்ச், 2021

இம்மா என்ற தொடர்

 இம்மா என்பது  இ + மா என்ற இருசொற்கள் கொண்ட தொடர்.

இ = இங்கு , இது சுட்டுச்சொல்.   (ஓரெழுத்துச்சொல்).

மா என்பது அளவு என்று பொருள்தரும் ஓரெழுத்துச்சொல். ஒரு மா நிலம் என்பதில் மா என்பது ஒரு நில அளவையைக் குறிக்கிறது.  இப்போது மா என்னும் கணக்கில் நிலம் அளக்கிறார்களா என்று தெரியவில்லை.  ஏக்கர் (acre) என்ற ஆங்கிலச் சொல் புழங்கப்படுகிறது.  மா என்பது பெரிது என்றும் பொருள்தருவது.  மாமனிதர் என்ற தொடரில் இப்பொருள் வெளிப்படுகிறது.  மா என்பது மகா ( மஹா ) என்ற பொருளில் வருவதும் ஆகும்.

இம்மாஞ்  சோறு சாப்பிட்டாள் -  வாக்கியம்.  இம்மா : இந்த அளவு (கைகளால் அளவைக் காட்டுவார்கள்).  இப்படிப் பேசுவோர்  மூத்தோர் சிலர். இப்போது இத்தகு தொடர் வழக்கில் மிகக் குறைந்துவிட்டது.

பேச்சு வழக்கில் vவரும் இது  இவ்வளவு தெளிவாகப் பொருள் தரினும்  இ ( இந்த )  மா( அளவு) என்பவை உண்மையில் இலக்கியங்களில் மிக்க வழக்குடையவையே  ஆகும்.

மாதிரி என்பது  அளவாகச் செய்யப்பட்டது என்ற பொருளில் வரும் கூட்டுச் சொல்.   திரித்தல் -  மாற்றமாகச் செய்தல்.  பெரிதைச் சிறிதாக்குவதும் சிறிதைப் பெரிதாக்குவதுமான மாற்றான ஆக்கங்கள்.  மாதிரி உருவம், மாதிரிப் பொம்மை எனக் காண்க.

மற்ற தொடர்புடைய இடுகைகள்:

மகம் :  https://sivamaalaa.blogspot.com/2014/02/makam-star-name-derivation.html

மகம்  மாகம்  https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_97.html 

இவற்றையும் வாசித்தறிக.


---------------------------------------------------------------------------------------------------

நோயிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்.

நம் நேயர்களில் மூத்தோர் அதிகம்.  யாவரும் நலமுடன் இருக்க

இறைவனை இறைஞ்சுகிறோம்.

மெய்ப்பு  பின்னர்.


மற்றவை:

ட > ஷ :  https://sivamaalaa.blogspot.com/2019/01/blog-post_63.html

கத்திரிக்கோல்:  https://sivamaalaa.blogspot.com/2015/05/blog-post_16.html


பிறகடனம் புறகடனம் ப்ரகடனம்.

 "ப்ரகடனம்" என்ற சொல்லினை அறிவோம். இதற்கு வேறு விளக்கங்களும் இருக்கலாம் என்றாலும் நாம் வெறுமனே அந்த மொழி, இந்த மொழி என்று தடுமாறாமல் மூலச்சொற்களை  ஆராய்ந்தறிவோம்.  அதுவே சொல்லமைந்த  கருமூலத்தைச் சுட்டவல்லது ஆகையினால்.

ஒன்றை நாம் வெளியிடுவதானால் அது அக்கருத்துத்  தோன்றிய இடத்தினின்று புறப்பட்டுச் சில எல்லைகளைக் கடந்து அப்பால் செல்லுகிறது என்று அறிதல் உண்மைகாண்டற்கு வழிசெய்யுமென் றறிக.   எல்லை,  வகுக்கப்படாத எல்லையும் ஆகலாம்.   (காண்டல் = காணுதல்)

எனவே நாம் முதலில் "கட " என்ற சொல்லின்பால் கவனத்தைச் செலுத்தவேண்டும்.  இது கட+ அன் + அம் > கடனம் ஆகிறது.  ஒரு சொல்லாக்கத்தில் வரும் இடைநிலையானது வெறும் சொல்லமைவுக்கு வழிசெய்யும் இடைச்சொல் ஆகலாம்,  அல்லது அதற்கு ஒரு பொருளும் இருக்கலாம்.  இருந்தால் அதுவும் நன்றே எனலாம். 

அன் என்ற பகுதிச்சொல் அனைத்து என்ற சொல்லில் இருப்பதனால்,  இடைநின்ற -   யாவருமறிந்திடக் கடந்து சென்ற ஒரு செய்தி என்றபடி வைத்துக்கொள்ளலாம்.  அம் என்ற இறுதிநிலை,  அமைவு குறிக்கும் விகுதி ஆகும்.

பிரகடனம் என்ற சொல்லில் ."கடனம்: என்ற சொல்பகுதி  தெளிவாகவே பொருண்மையுடன் மிளிர்கின்றது.  ஒருவன் கடன்வாங்கினால் அதைத் திருப்பிக் கொடுத்தே ஆகவேண்டியது அவனின் கடமை என்ற பொருளில் "கடன்" என்ற சொல் வழங்கிவருவது நாம் அறிந்தது.  அந்தக் "கடன்" எனற்பால சொல்லுடன் இந்தக் கடனம் என்ற சொற்பகுதியும் தொடர்புடையதாய் நிற்றல் நம் தேடுகையை எளிதாக்குகிறது என்பதும் குறிப்பிடத் தக்கதாம்.

இனிப் ப்ர, பிர என்ற முன்னியைந்த சொல்லுக்கு வருவோம்.   இது பிற, புற என்ற இரண்டுக்கும் பொருந்தி வருகிறது.  வீட்டின் அல்லது செய்தி தோன்றிய இடனுக்கும் புறத்தே செல்வது,  பிறரிடம் செல்வது  அதாவது பிறரறியச் சொல்லப்படுவது என்று இருவகையிலும் இது பொருந்துவதாகிறது.  ப்ர என்பது ஒரு முன்னொட்டு என்று முன்னர் முடிபு பெற்றிருப்பினும், அத்தகு முடிபினால் நம் ஆய்வுச்செலவு பாதிக்கப்படாது நின்றமை காண்க.

இவ்வாய்விடுகையை முடித்து நிறுத்தும் உத்தி கருதி,  யாம் இங்கு "புற" என்பதைத் தேர்வு செய்வாம்.  ஆயினும் பிற எனற்பாலதும் பொருந்துவதே. இதை வாசிப்போர் இவற்றுள் எதையும் முற்பகுதியாய்க் கொள்க.  அதனால் பங்கமொன்றும் இல்லையாதல் உணரற் பாலது.

புற பிற என்பன நீங்கப் பிர என்று வந்தது வழக்கில் மெலித்தல் என்பதே உண்மை.  இடையினப் படுத்தி ஒலி மெலித்தலாம்.

எந்தச்  செய்தியும் அல்லது நிகழ்வும் பிறரையும் கடந்து புறத்தே செல்லவேண்டும்.  அப்போதுதான் அது பரவும், இச்சொல்லமைவு அதனைத் தெளிவுபடுத்துகிறது.  பிற புறம் என்ற இரண்டும் ஈண்டு குலவுகின்றன. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


Cursor jumps to unknown spots whilst editing.

Will review.

Any error pl inform us. Thank you.

மெய்ப்பு: 20032021






புதன், 17 மார்ச், 2021

அதிகம். அதிகம்.

 உங்கள் வீட்டிலிருந்த வாறே வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.  சற்று தொலைவில் தண்ணீர் பெருகிநிற்பது தெரிகிறது. நீங்கள் காண்பது சில மரங்களுக்கும் புல்வெளிக்கும் அப்பால். தண்ணீர் அங்கேதானே கிடக்கிறது. ஒன்றும் இடரில்லை என்று ஒருவாறு உங்கள் மனம் அமைதிகொள்கிறது. அது ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் கிடக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்..

கொஞ்ச நேரம் வேறு சில வேலைகளை முடித்துவிட்டு  மீண்டும் வெளியில் பார்க்கிறீர்கள்.. உங்கள் மனத்துள் எதை ஓர் எல்லையாய்க் கருத்திக்கொண்டு இருந்தீர்களோ அந்த எல்லையைக் கடந்து நீர் மேலேறிக்கொண்டிருக்கிறது. அப்போது நீங்கள்   அது இகந்துவிட்டது என்று சொல்கிறீர்கள்.

இகந்துவிட்டது என்றால் என்ன?  தமிழ்தான்.  ஆனால் இன்று இயல்பான பயன்பாட்டில் இல்லாத சொல்.  எங்கோ இலக்கியத்தில் நம் நற்பேற்றின் காரணமாக நாம் இன்னும் காணமுடிந்த சொல்.

அது இகந்துவிட்டது.  அது இக அம் >   அதிகம்.  மிக்க எளிமையாக, அதாவது வகர உடம்படுமெய் உள்ளே புகாமல் வந்த சொல்.  அந்த மெய்யெழுத்து வந்திருந்தால் அது + இக + வ் + அம் = அதிகவம் என்று வந்திருக்கும்.   இன்னும் ஓர் உடம்படுமெய்யைப் புகுத்தி  அது + வ்  + இக + வ் + அம் =  அதுவிகவம்! ஏன் இத்தனை உடம்படுமெய் வரவேண்டும்.  இரண்டு உடம்படுமெய்களை ஒரே சொல்லில் புகுத்தினால் காசா கிடைக்கிறது.  வேறு வேலை இல்லையா?  வெட்டு,  வெட்டு.  அது + இக + அம் >  அத் + இக + அம் >  அதிகம்!!  அது என்பதிலிருந்து தொத்திக்கொண்டிருந்த உகரத்தையும் வீசி எறிந்துவிட்டோம்.

சுருக்கமான ஒரு சொல்.

அது என்ற சுட்டுப்பெயருடன் சேர்ந்து அமைந்த அருமையான சொல்.

இங்கு என்பதை எடுத்து, அதற்குள் இருந்த ங் என்ற எழுத்தை எறிந்துவிட்டால்,  இங்கு என்பது இகு ஆகிவிடும்.  இப்போது இகு என்பதன் இறுதி உகரத்தை எடுத்து ஓர் பேரொலியுடன் வீசுங்கள்.  அத் + இக் + அம் =  அதிகம்!!

ஆங்கு கிடந்த நீர் பெருகி இங்கு வந்துவிட்டது.  நமக்குத் தேவையில்லாத நீர் வீட்டுக்குள் வரப்பார்க்கிறது.  இது அதிகம் தான்.

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில்  ................

(பாரதி பாடலின் சில வரிகள் ).

சுட்டுப்பெயர்களைக் கொண்டு அமைக்கப்பட்டு  து,  அம் முதலியன இணைந்த இச்சொல் அழகாகவே இருக்கிறது.

அதிகவம்,  அது இக வி அம் >  அதுவிகவம் என்றெல்லாம் வரவேண்டியதை இப்படி வெட்டலாமா என்றால் கவலை வேண்டாம், உலகத்தில் நீங்கள் பெயர் வைக்கத் தொடங்காத பல பொருள்கள் பற்பல கலைத்துறைகளில் உள்ளன. அவற்றில் சிலவற்றுக்கு இப்புதுப்பதங்களைப் பெயர்களாக்கிவிடலாமே.  என்ன நட்டம்? 

இன்று அதிகமானது கொரனாதான் என்பன நம் இந்தியத் தாளிகைகள்.

அறிக மகிழ்க.

கொரனாவிற்குக் கவலை கொள்க. செயலில் இறங்குக.

மெய்ப்பு பின்னர்.

மெய்ப்பு    1227 11122021 பார்க்கப்பட்டது


திங்கள், 15 மார்ச், 2021

சுழுத்தி.- சொற்பொருள் காணுதல்.

 இப்போது சுழுத்தி என்ற ஆன்மீகச் சொல்லின் பொருளை அறிந்துகொள்ள முற்படுதல் ஏற்புடைத்து.   காரணம் : சுழுமுனை என்பதை நாம்  முன் ஓர் இடுகையில் கண்டிருத்தலின்.


சுழுமுனை நாடி

https://sivamaalaa.blogspot.com/2021/03/blog-post_8.html


சுழுத்தி என்னும் சொல்லில் அதன் பகுதி அல்லது முதனிலை  "சுழு" என்பதாகும்.  தி என்பது விகுதி அல்லது இறுதிநிலை. இதனைப் பின்னொட்டு என்றும் சொல்லலாம்.  தமிழ்மொழியின் இயல்பு யாதென்றால் தனக்கு வேண்டிய பொருளை உணர்த்த  விகுதிகளைப் பெரும்பாலும் சொல்பகுதியின் பின்னில் இணைத்து  அவ்வாறு வந்த புதிய சொல்லால் குறித்தல் என்பதை அறிக. முன்னொட்டுகளால் புதுச் சொல்லாக்கம் விளைத்தல் இந்தோ ஐரோப்பிய மொழிகளில் பெருவரவு  ஆகும். தமிழிலும் இவ்வாறு சொல்லாக்கம் செய்தல் உண்டெனினும் அது குறைவே ஆகும்.  முன்னொட்டுப் பெற்றமைந்த சில சொற்கள் :  அல்வழி,  அல்திணை( அஃறிணை),  இல்பொருள்  ( இல்பொருளுவமை), இல்வசம் ( இலவசம், இதில் இல் என்பது இலவானதில் அகரம் இடைநிலை ) (விலை இன்றி வசமாதல் ),  ஆகாயம்  (  ஆ+ காயம்: காயம் என்பது சூரியன் நிலவு முதலியன காயும் ( ஒளிவீசும் )அகண்டவெளி   ------ எனச் சில காண்க.

உடலுடன் கூடிவாழும் ஆன்மா அல்லது ஆத்துமா ஐந்து நிலைப்பாடுகளை  உடையதென்பர்.  இவற்றுள் சாக்கரத்தை முன் ஓர் இடுகையில் விளக்கியிருந்தோம். இவற்றை அறிந்துகொள்ள முனையும் போது ஒரு சொல்லின் அமைப்பு அர்த்தத்திலிருந்து   வேறுபட்டு  முன் கருதப்படாத ஒரு பொருளுக்கு அது பயன்படுத்தப் படலாம் என்பதை நினைவில் இருத்திக்கொள்ளவேண்டும்.  எடுத்துக்காட்டாக,  நல்ல மணம் என்று பொருள்படும் நாற்றம் என்ற சொல் இன்று தீய வீச்சத்திற்குப் பயன்படுத்தப் படுகிறது.  இனி, முற்காலத்தில்  ஒரு பெண்ணின் வீட்டில் போய் அங்கு  "பதிந்து" வாழ்ந்தவன் ( வீட்டுக்கு மாப்பிள்ளை போல என்பர்) ,  இன்று  பதி - தலைவன்,  ஆள்பவன் என்ற பொருளில் அறியப்படுகிறான். பதிதல் என்ற சொல் பொதிதல், பதுங்குதல் மற்றும் வதிதல் என்ற சொற்களுடன் பிறப்பியல் தொடர்புடைய சொல்லாவது அறிக. ( பதி, பொதி, பது, வதி )   பதி என்பதில் பெண்வழி ஓங்கிய வாழ்வுமுறையில் அவள் தலைமைக்குட்பட்டோன் என்று பொருள்படுதல் காண்க.   இன்று ஆண் ஆதிக்கமே நிலைபெற்றுள்ளது. பதி என்பதன் பொருளும் மாறிவிட்டது. 

சுழுத்தி என்பது சுழு> சூழ் என்ற அடியில் தோன்றிய சொல்லாகும். உறக்கம் என்பதில் ஆன்மாவிற்கு பெருமை சேர்ப்பது ஒன்றுமில்லை.  யோகம், தியானம், நிட்டை என்ற செயல்களை நோக்க,  உறக்கத்தில் ஆன்மாவுக்கு ஒரு பெருமைதரத் தக்க அமைவு ஏதுமில்லை.  அதனால் சாக்கிரத்தைக் கேவலக் கிடை என்றனர். இதே காரணத்துக்காக சுழுத்தியும் சைவசித்தாந்தத்தில் கேவலச் சுழுத்தி என்றும் சொல்லப்படுகிறது. உறக்கத்துக்குச் செல்லும்போதும் அதிலிருந்து மீளும்போதும் சாக்கரம், சொப்பனம், சுழுத்தி,  துரியம்,  துரியாதீதம் என்ற நிலைகளில் ஒன்றில் ஆன்மா நிலவும் என்பது சிவயோகியர் கூறுவதாகும். இவற்றில் ஒவ்வொன்றையும் ஒரு நிலை என்று அறிந்து கொள்க.

ஆன்மாவைச் சூழ்ந்துகொள்ளும் நிலைகளில் ஒன்று சுழுத்தி.  சுழு> சூழ்.  இது விழு> வீழ் என்பதுபோலும் சொல்லமைப்பு என்பதை அறிந்து கொள்க.  சொல்லமைந்து கழிபல ஆண்டுகள் ஓடியபின்னர்,  புதிய விளக்கங்களும் கருத்துகளும் சொல்லில் இணைந்துகொள்ளும் என்பதும் அறிக.  இது ஒரு காரண இடுகுறிப் பெயர்.  இச்சொல் மூலம் நாமறிவது, உறக்கம் ஒருவனைச் "சூழ்ந்துகொள்கிறது" என்பது;  அதுபோலவே உறக்கம் ( மெய்யறிவின் உறக்கம்) அவனது ஆன்மாவையும் சூழ்ந்துகொள்கிறது. அதுவே அவனுக்குக் கேவலக்கிடையாகவும் ஆகிவிடுகிறது.  சுழுத்தியும் கேவலச் சுழுத்தி ஆகிவிடுகிறது. 

[  உடல் உறங்குதல் போல் ஆன்மா உறங்கினால்  ஆன்மாவின் அறிதிறன் மழுங்கிவிடும் அல்லது இல்லையாகி விடும்.   அதுவே  ஆன்மாவின் வலம் ( வலிமை)   கெட்டநிலை.  " வலிமை கெட்டுக் கிடத்தல் :  வலம் கெட்டுக் கிட :  கெடு வலம் கிட >  கே வலம் கிட >  கேவலக்கிடை ஆனது .  கேவலக்கிடை பழிப்பிற்குரியது  ]  

யாம் இவற்றை எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் முழுத் தந்நினைவுடன் தான் எழுதிக்கொண்டிருக்கிறேம்  (~றோம்). இருந்தாலும் இவ்வுலகமும் இவ்வாழ்வும் யாம் இருப்பதும் நீங்கள் இருப்பதும் அப்புறம் நாம் அனைவரும் இன்னும் 100 ஆண்டுகளில் இல்லாமற் போய்விடுவதும் எல்லாமே மெய் அன்று.  எல்லாம் ஒரு கனவு போலத்தான். இல்லாமற் போய்விடுவது எப்படி மெய் ஆகும்? எல்லாம் பொய்!! எம் கொள்ளுத்தாத்தா எங்கே?  எம் கொள்ளுப் பாட்டி எங்கே?  எல்லாம் தொலைந்துவிடுதல் கண்டீரோ?

முற்றறிவு மூலம் நாம் கண்டுகொண்டது உண்மை. முற்றறிவுக்கு இறையருள் வேண்டும்.  அஃதில்லையானால் அது சிற்றறிவுதான். இப்போது முற்றறிவு இல்லை: நம்மில் எவரும் இராமலிங்க சுவாமிகள் போலவோ தாயுமானவர் போலவோ  அறிதல் முற்றுறப் பெற்றோமில்லை.  

அவர்கள்: [அறிவுஅறி கின்ற அறிவு நனவாம்] நனவில் நின்றனர். அவர்கள் தம் ஆத்துமீகத் தெளிவில் நின்று ( இது அறிவு) அறிகின்ற மெய்ப்பொருள் ( முற்று அறிவு) நனவு எனப்படும். நம் நனவு என்று நாம் கொள்வது ஒன்றும் ''நனவில்லை". நம் அறிவு ஒரு கனவுதான்!! காரணம் நம் "அறிவு" அறியாமையாகிவிட்டது. ( ஒரு நிலையற்றதை நிலை என்று எண்ணியிருத்தல் புல்லறிவாண்மை , கேவலம். புல்லறிவாண்மை பல வகையாகலாம். அவற்றுள் நிலையற்ற ஒன்றை நிலையானது என்று எண்ணுவது ஒன்று. ) . நம் தரவினை நாம் "அறிவு" என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது அறிவு அன்று; அது அறியாமை. ஆகவே கனவு. உடல்உறக்கமின்றியே கனவிற் பட்டோம். விழித்துக்கொண்டே கனவில் உள்ளோம், வீழ்ந்தோம். ) நம் அறிவு நமது அறியாமையை உணர்ந்துகொண்டிருந்தால் அது சுழுத்தி. சூழ்ந்துள்ள பொய்யறிவு. விழித்துக்கொண்டிருந்தாலும் நம்மைச் சூழ்ந்துகொண்டுள்ளது. உடல்கொள் உறக்கத்திலும் நீங்கியபாடு இல்லை. விழிப்பிலும் நம் நிலை உறக்கம் ஆகிவிடுகிறது. அறிவு உண்மையறிவாய் விடில் - மெய்ப்பொருள் கண்டுவிடில் அது துரியம் எனப்படும். இந்தச் சூழ்தெளிவின்மையைத் துருவி அப்பால் சென்றடைந்தோம் எனில் : துருவு > துரு+ இ + அம்> துரியம். திருமந்திரம் பாடல்: 2206:

அறிவுஅறி கின்ற அறிவு நனவாம்

அறிவுஅறி யாமை அடையக் கனவாம்
அறிவுஅறி அவ்அறி யாமை சுழுத்தி

அறிவுஅறி வாகும் ஆன துரியமே.

ஒரு கனவினை நனவென்று கிடந்துழலுதலே சுழுத்தி என்னும் அறியாமை. சுழுத்தியில் அறிவு அறியாமை கொண்டுள்ளது. அது திருந்திய மெய்ந் நிலை துரியம். ஆன்மாவைச் சூழ்ந்துள்ளமையின் சுழுத்தி என்ற சொல் அமைந்தது.

( அறிவு அறியாமை கொண்டுள்ளது. இங்கு அறிவு என்றது ஆன்மாவுக்குள் அடங்கியுள்ள அறிகருவியை. The natural instrument which is in your soul that functions to lead you to spiritual knowledge enabling you to be in a state of "nanavu" .

அறியாமை - இது அறிவின் இயலாமை, ஆகவே அறிகருவி இயங்காமையின் விளைவு. the effect of the "instrument " not functioning. )

( கனவு is the setting in which அறியாமை resulted ).

{A very famous politician, when he was a young man , became a sanyasin and eventually reached Kasi. He saw others meditating and he too meditated. But he felt and realised nothing. He came to the conclusion that there was no god. The truth is that he never reached the "nanavu" state. He was all the time in "kanavu". His spiritual instrument of true knowledge was never functioning, he never went beyond........)

ஆன்மா என்பது உள்ளிருப்பது. சுழுத்தி நிலையை ஆன்மா அடைகிறது. ( consequential ) உங்களுக்கு ஆன்மாவைத் தனித்து நிறுத்தும் திறம் இல்லை. ஆன்மாவின் நிலை நீங்கள் அறியாதது. உங்கள் நிலை கனவுதான்.

கனவுநிலை தாண்டி ஆன்மீகப் பயிற்சியில் ஆழ்ந்து அப்போது அறியாமை தலையிட்டு இறையை நெருங்க உங்களால் இயலாmai உற்றபோது அது சுழுத்தி. அதைத் துருவிச் சென்று இறையை அண்டிவிட்டால் அது துரியம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

Some corrections made . Explanations added.
7.32am - 16032021.
மீள்பார்வை செய்யப்படும்

குறிப்பு:


துரியாதீதம் - ஆன்மா அடையும் நிலைகளில் மூலாதாரத்தில் ஒடுங்குதல்..



ஞாயிறு, 14 மார்ச், 2021

ஆன்மீகத்தில் "சாக்கிரம்" : கேவலக்கிடை.

 ஆன்மாவென்பது இவ்வுலகில் உடலுடன் கூடி வைகும் காலத்தில் பல அவத்தைகளில்  ( அவஸ்தை அல்லது துன்பங்களில் ) ஆழ்ந்து தவிக்கிறது.  அது உயிர்த்த குழந்தையாய்க் கருவில் வளரும் காலத்தில் ஓர் அவத்தையில் துவள்கிறது.  அதிலிருந்து நீங்கி வெளிவருகையில் பிறப்பு என்று  ஓர் அவத்தையில் அழுகிறது.   இவ்வாறு ஏழு அவத்தைகள் உள்ளன. இறுதியில் மரண அவத்தையும் நரக அவத்தையும் வந்துவிடுகின்றன. இத்தகு அவத்தைகளையெல்லாம் வென்று  அது பேரான்மாவாகிய இறைவனை அடையவேண்டுமே!  இவ்வேழும் ஆன்மா கடந்து செல்லவேண்டிய படிநிலைகள் என்பர்.

ஆன்மா இவ்வுலகில் உடலுடன் உள்ள போது அது மூன்று நிலைப்பாடுகளை உடையதாகிறது. இவை சாக்கிரம்,  சொப்பனம்,  சுழுத்தி என்பனவாகும்.

உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்பது  குறள்.   உறங்கச் செல்லும் மனிதன் சாவினில் கிடப்பவன் போலாகிறான்.  அதனால் ஆன்மீக நெறியில்  இதனைக் கேவலக்கிடை  என்றனர். அதனின்று மீளுதலும் அதிலடங்கும்.  

கேவலம் என்பது  :  கேடுவலம்.  அதாவது கேடு வலிமைபெற்ற நிலை.  கிடை என்பது கிட+ ஐ = கிடை,   அதாவது கிடத்தல்.   கேடுவலமென்பதில் டுகரம் கெட்டுக் கேவலம் என்ற சொல் அமைந்தது.  இதுபோன்ற இன்னொரு சொல்:  பீடு+ மன் = பீமன்> வீமன்.  கேடு+ து >  கேது ( நிழற்கோள்) என்பதும் அறிக. கெடு என்பதைப் பகுதியாய்க் கொண்டு  டுகரம் கெட்டு விகுதி பெற்று  முதல் நீண்டதெனினும் அமையும்.

தூங்கச் சென்றவன். தூங்கி அதனின்று விழித்தெழவில்லையென்றால் மரணத்துட் படுகின்றான்.  (மரண அவத்தை).   தை என்பது விகுதி.  அவம் = கேடு. அவம் + தை =  அவத்தை > அவஸ்தை.  அவமாவது : அவிந்து கெடுதல். இனி, அவி > அழி  போலியும் ஆகும்.  சொல்லமைப்பில் அவம் என்பது அவிதல் வினையினின்று தோன்றியிருப்பினும்  பின் சொற்பயன்பாட்டில் ( வழக்கு) அஃது கேடு என்னும் பொதுப்பொருளில் வழங்கியுள்ளது  மொழியில்  இயல்பு ஆகும். "நாணம் அவம்"  என்னும்போது  நாணம் கெடுக என்பதே பொருள். நாணம் நீராவியில் அவிந்திடுக என்பது  பொருந்தாது.  அப்படிக் கூறினும் அதற்கு ( நாணம் ) விலகுக என்றே பொருள்கொள்ளவேண்டும்.

இந்தக் கேவலக்கிடையே சாக்கிரம். சாவுக்குக் கிடத்தல்  என்றிதனைப் புரிந்துகொள்ளுங்கள்.  சா + கிட + அம் >  சாக்கிடம் > சாக்கிரம்.  டகரத்துக்கு ரகரம் போலியாகும். அதாவது டகரம் ரகரமாய்த் திரியும்.   எடுத்துக்காட்டு: மடி > மரி.

இவ்வாறே திரிந்த போதும் நுண்பொருள் வேறுபாடு எய்திய சொற்கள் : இடு > இரு.  இரண்டும் இகரச் சுட்டடிச் சொற்கள்.  இடுவது ஒன்றை ஓரிடத்தில் இருத்துவது.  பொருள் இடப்படுமிடத்து இருக்கும். அட என்பதே அர,  அரே, ஹரே என்றெல்லாம் திரிந்தது. சோப்டா > சோப்ரா.  இவ்வாறு பல சொற்கள் கிட்டும்.  அவற்றுள் செல்லாது திரும்புவோம்.  விடி > விரி.  விடிதல் ஒளி விரிதல்.  உணவிற் சில விடுதலே விரதம்.   விடு> (விடதம் )> விரதம்.  இன்னொரு வழியில்:  விடு> விரு > விரதம்.  அது  : இடைநிலை. அம் விகுதி. பழைய இடுகைகளிற் காண்க. 

சாக்கிரமென்பது அழகிய திரிசொல்.  கருத்து : சாவிற் கிடத்தல் போலும் நிலை.  கேவலமான நிலையிற் கிடத்தல்.   விழித்தெழும் வரையில் ஐம்புலன் களும் இறந்தவன் அடைந்த நிலையிற்போலுமே துன்புறுவன.  ஆதலினால் கேவலம் ஆயிற்று.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

முகக் கவசம் அணிந்து

இடைவெளி கடைப்பிடித்து

நோயைத் தடுத்துக்கொள்ளுங்கள்.

இங்கு ஆய்வு செய்த சொல் சாக்கிரம்.  இது சாகரம் என்று காணப்படின்

திருத்தி வாசிக்கவும். வழுவிருப்பின் திருத்தப்பெறும்.  நன்றி/

எழுத்துப் பிழை இருப்பின் வருந்துகிறோம்.

 

கோவிட் நீங்க ஆலயப் பிரார்த்தனை

 கோவிடென் றெண்ணும்  மகுடமுகி நோய்த்தொற்று

மேவிடும் என்னும்  அகடுவருத் தச்சமுண்டே!

ஆயினும் உள்ளில் சிவராத்திரி போற்றிடுமே

தாயென  மன்னும் சிவதுர்க்கை ஆலயமே.









கோவிடென்றெண்ணும் - கோவிட் என்று  அறியப்பட்ட
கணக்கிடப்பட்ட எனினுமாம். முன் வந்த இவ்வகை நோய்கள்
இதற்குப் பெயரிட்ட போது கணக்கிடப்பட்டன என்று அறிக.

அகடு வருத்து அச்சம் -  வயிற்றை வருத்திடும் பயம்.

உள்ளில் - கோவிலுக்குள் ( அழைக்கப்பட்டோரை வைத்து) 

மன்னும் -  நிலைகொள்ளும்.


காணொளி - உதவியவர்:   திருமதி சி. லீலா

வியாழன், 11 மார்ச், 2021

தமிழ் மூலச்சொற்கள்

{ சுல் என்ற மூலச்சொல்லை ப் பற்றி :  இது இம்முன்னுரைக்கும் பின்னர் எழுதப்பெறும். }

தமிழில் இன்னும் தொல்பழங்காலத்து மூலச்சொற்கள்  கிடைப்பதானது  ஒரு வகையில் நமது பாக்கியமே ஆகும்.  தமிழின் மூலச்சொற்கள் ஆய்வில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட  அருந்தமிழ்ப் புலவர்களின் ஆய்வு நூல்கள் எல்லாமும் நம்மை வந்தடைந்துவிடவில்லை. எடுத்துக்காட்டாக இலங்கை ஞானப்பிரகாச அடிகளாரின் சொல்லாய்வுகள் வெளியீடு  1940க்கு முன் வெளிவந்ததாகத் தெரிகிறது.  இந்த வெளியீடுபற்றிய சில குறிப்புகள் சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த புதிய உலகம் இதழொன்றில் குறிக்கப்பட்டுள்ளன.  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தாருக்கு  இவ்வாய்வு முழுதும் கிடைத்துள்ளதா என்று தெரியவில்லை. மறைமலையடிகளாரிடம் ஒரு நூற்படி ஆசிரியரால் தரப்பட்டது என்று தெரிகிறது.  இந்த நூற்படி ஒரு வேளை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கக் கூடும்.  இது இன்னும் கிடைக்கிறதா என்பதும் தெரியவில்லை.  இதற்குமுன்  புலவர்கள்  சிலர் சுட்டடிச் சொல் ஆய்வில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.  அவர்களின் ஆய்வுகள் கிடைக்கவில்லை. யாரிடமாவது இருக்கலாம்.  வேங்கடராஜுலு ரெட்டியாரின் சொல்லாய்வுகள்  இப்போது கிடைக்கவில்லை. இவர் தம் நூலொன்றில்  "எழுதருகை " என்ற பழந்தமிழ்ச் சொல்லே " எச்சரிக்கை" என்று திரிந்ததாக ஆய்ந்து வெளியிட்டிருந்தார்.  அரியபல ஆய்வு  முடிவுகளை இவர் வெளியிட்டிருந்ததாகத் தெரிகிறது. இவர்தம் நூல்கள் இங்குக் கிட்டவில்லை.

(  சொல்:   எச்சரிக்கை.  ஒப்பீடு:   முடிச்சறிக்கை -  முச்சறிக்கை (  டிகரம் மறைந்த சொல் . ழ - ட போலி  எ-டு: பாழை -  பாடை,   அயல்திரிபு:  பாஷை)

பிற்காலத் தமிழர் என்போர் பெரும்பாலும் தமிழார்வம் மற்றும் மொழியறிவு குன்றிய ஒரு கூட்டத்தாரே என்று நாம் கருத்து மேற்கொள்ளலாம். இவர்கள் தம்முள் கலாய்த்துக்கொள்ளும் குணம் உடையார்.   தம் முன்னோர் தந்த அறிவுச்செல்வங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் திறம்  உள்ளவர்கள் என்று எண்ணத்தோன்றவில்லை. சென்ற இரு நூற்றாண்டுகளில் வெளிவந்த பல நூல்களே இல்லாதனவாயின. திரைப்படங்களில் மிக்க ஆர்வமுடையார் தமிழர் என்ற போதும்  "காளமேகம்" என்ற திரைப்படத்தின் நிழற்படிகள் இப்போது கிட்டவில்லை.  இதை வெளியிட்டவர்கள் காளமேகப் புலவரின் வாழ்க்கை வரலாற்றினை ஆய்ந்து இக்கதையை எழுதியிருந்ததாகத் தெரிகிறது.   இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர்களால் பல பழைய நுல்கள் அச்சிட்டு வெளிடப்பட்டன.  இவற்றுக்காக நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் உடையோம் என்க.  அகராதிகள் -( அகரவரிசைகள்)  தொகுத்தமைக்கும்  அவர்கட்கு நம் நன்றி.

தென்றிசைக் கலாநிதியான சாமிநாத ஐயரின் உழைப்பு இல்லாதிருந்தால் இற்றைக்கு உலவும் பழந்தமிழ் நூல்கள் பல கவனிப்பாரற்று ஒழிந்திருக்கும். 

அன்பர்கள் ஒருசிலர் செய்யும் விளம்பர ஒலிகளால்  தமிழைப் பற்றிய ஆர்வம் மிக்கிருப்பதாக  நீங்கள் எண்ணினால்,  இது ஒரு சிறு கூட்டத்தாரின் எழுச்சிக்குரல்களே ஆகும்.  அவ்வப்போது இவ்வொலி எழுச்சிகள் ஏற்பட்டாலும் பின்னர் அவற்றால் பெரும்பயன் ஒன்றும் விளைதல் இல்லை. அரவங்கள் அடங்கிவிடுகின்றன.  சென்ற இருநூறு ஆண்டுகட்குள் தனிப்பட்ட முயற்சிகளால்  வெளிவந்து மாய்ந்துவிட்டனவாகத் தோன்றும் வெளியீடுகள் எவையும் மறுவெளியீடு கண்டனவென்று கூறற்கியலவில்லை.  இக்கூட்டத்தாரே வெளியிட்ட சிலவற்றையும் வாசிப்பாரில்லை.

இப்போது கூகிளின் ஆதரவினால் இங்கு வெளியிடப்பட்ட ஆய்வுகள் பல உங்களுக்கு இலவசமாகக் கிட்டுகின்றன. இவை எப்போதும் கிட்டவேண்டும் என்பதே நமது அவா எனினும் அவர்களுக்குப் பணச்செலவு ஏற்படுதலால் இவை எவ்வளவு காலம் இவ்வாறு கிட்டுமென்பதை  அறிந்துரைக்க இயலவில்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

திங்கள், 8 மார்ச், 2021

சுழுமுனை நாடி

 யோகம் என்பது முந்துவடிவில் ஓகம் என்றிருந்தது. இது வெள்ளப் பெருக்கையும் மக்கட் பெருக்கத்தையும்  குறித்தது.  பழைய தமிழ்நூல்களிலும் வந்துள்ளது. உள்ள நலமும் உடல் நலமும் பெருக்கம் அடைதற்கான ஈடுபாடுகளையும் குறிக்கும்.  இறைவனுக்கும் பற்றனுக்கும் உள்ள தொடர்பின் பெருக்கத்தையும் குறிக்கும்.  அடிப்படைக் கருத்து "பெருக்கம்" என்பதுதான். 

இந்தச் சொல்லுக்கான அடிச்சொல் ஓங்கு என்ற வினைச்சொல்.  இதுவும் பெருகுதல், மிகுதல் என்று வருவதுதான்.  ஓங்கு என்ற வினைச்சொல்லில் கு என்பது வினையாக்க விகுதி. இதை விலக்கிவிட்டால் மிச்சமிருப்பது ஓ - ஓம் என்பதுதான்.  இங்கு ஓ+ கு > ஓங்கு என்று விளக்கி,  இடையில் ஒரு மெய் தோன்றியது எனினும்  ஓம்+கு > ஓங்கு என்று நிறுத்தி இறுதி மகர ஒற்று ம்>ங் எனத் திரிந்தது எனினும் ஒன்றுதான்.  எவ்வாறும் விளக்கலாம்.  ஒ ஓ முதலியவை ஓசை, ஒலி என்பவற்றின் மூலச்சொல் ஆகும்.

  அகர வருக்கத்   தொடக்கத்துச் சொற்கள்  யகர வருக்கங்களாகவும் மாறும்.  எடுத்துக்காட்டு:  ஆனை >  யானை.  ஆண்டு >  யாண்டு.  இவ்வாறே  ஓகமென்பது யோகமாயிற்று.  ஓசனை > யோசனை என்பதும் காண்க.


பதஞ்சலி யோகம்

சிதம்பரத்தில் வாழ்ந்து யோகசூத்திரம் செய்த பதஞ்சலி முனிவர்,  மாமூலரின் மாணவர் என்று அறியப்படுகிறது.  மாமூலரிடமிருந்து தாம் அறிந்த யோகமுறைகளைப் பற்றிய நூலை இவர் இயற்றினார்.  ஆன்மாவைக் கூடுவிட்டுக் கூடுபாய்தல் என்று சொல்லப்பெறும் இடமாற்றம் செய்யும் உள்ளடிகளை மாமூலர்  முற்றறிந்து செயல்படுத்தி நெடுநாள் உயிரொடு உலவினார். இவர் அளித்த உயர் செல்வங்களாகிய ஆன்மிக அறிவை பதஞ்சலி உள்ளிட்ட இவர் மாணாக்கர்கள் பரப்பினர்.  மாமுலரின் பாடல்கள் திருமந்திரம் என்ற நூலில் உள்ளன.  

உடலைப் பற்றிய பல மறைதிறவுகளைத் தமிழர்கள் நெடுநாட்களாக அறிந்திருந்தனர். இதைக்கூறிய பல நூல்கள் மறைந்துவிட்டன.  சிலவே இன்னும் கிடைக்கின்றன. சிவஞான  போதமுதலியவை இன்னும் நிலவுதலால் அவற்றை அறிந்துகொண்டு விளக்கம் பெற முயற்சி செய்தல் நம் கடனாகும்.


சுழுமுனை 

சுழுமுனை நாடி பற்றிய உண்மையைத் தமிழர்கள் எக்காலத்திலிருந்து அறிந்திருந்தனர் என்பது தெரியவில்லை.  மிகப்பழங்காலச் செய்திகள் தொன்ம வடிவிலிருப்பன,  அதனால் இத்தகு ஆன்மிக அறிவு நம் நினைவுகட்கு அப்பாற்பட்ட தொல்பழங்காலத்திலிருந்தே வந்துகொண்டிருக்கிறது என்று நாம் முடிபு கொள்ளலாம்.

சுழுமுனை என்ற சொல்லுக்குப் பிற வடிவங்களும் உள்ளன. இவற்றை ஈண்டு விரித்துக் கூறலியலாமை உன்னுக.  தொகுப்பு இதுவே.  அவற்றுள் சுழிமுனை என்பதுமொன்று.  சுழுமுனை என்ற சொல் சுழுனை>  சுழுனா என்று திரியும்.  இதில் மு கெட்டு னை என்பது னா என்று நீண்டது.   இதற்கு நடுநாடி என்ற பெயரும் உள்ளது.   இடகலை,  பிங்கலை இரண்டிற்கும் நடுவில் இருப்பதால் இது இப்பெயர் பெற்றது.  பெரியபுராணம் இதைப் பிரம்மநாடி என்றே குறிக்கிறது.   பெருமம் அல்லது பெரிதான நாடியும் பெருமான் உறையும் நாடியும்  ஆகும்.   பிரம்மம் -  இறைமை.  திருமந்திரம் இதனை மூலநாடி என்று குறிக்கிறது.  இடப்புறத்திருப்பதால்  இடகலை,  இடை என்றும் வரும். நடுவைகிய சுழுமுனைக்குப் பின் எண்ணப்படுவதால்,  பின் கலை > பிங்கலை ஆயிற்று.  இங்கு  னகர ஒற்று  ஙகர ஒற்றானது சந்தித் திரிபு.   பின்பு + அம் =  பிம்பம் என்பது  இத்தகு ஒலித்திரிபே. பின்>பிந்தி என்பதும் அறிக.


சுழுமுனை என்றால் பிற நாடிகளால் சூழப்பெற்று அவற்றுள் முன் நிற்பது  சுழு -  முன் - ஐ..  ஐ என்பது விகுதியாதலோடு,  மேன்மையும் குறிக்கும். பழங்காலத்தில் " உயர்வுப் பொருள்" குறித்த ஐ விகுதி உள்ளபடியால் வெறுமனே விகுதியாதல் அன்றி உயர்வுடையது என்று பொருள்தருதலுமாம்.

சூழ் வினைச்சொல்.  சூழ் + அல் = சுழல். சூழ்ந்து வீசும் காற்று. முதலெழுத்து குறுகி விகுதி பெற்றுப் பெயர்ச்சொல் ஆனது. இலக்கணத்தில் தொழிற்பெயர் ஆனது.  அதாவது ஒரு வினையிலிருந்து அமைந்த பெயர்.  இதில் வினை - சூழ்(தல்).

சுழுமுனை என்பதில் முன்+ஐ என்று இறுதிப்பாதியை விளக்காமல், முனை (தல்)  - முன் நின்றிடுதல் என்று கொண்டு விளக்கினும் அது.

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்,  தமிழ் என்பதற்கு 100 பொருள் கூறிப் பாட,  பாரதிதாசன் எழுந்துபோய் அவரை அணைத்துக்கொண்டாராம். புலமைப்பேறு உடையோர் இங்ஙனம் விளக்கலாம்.  யாம் தருவது சுருக்க விளக்கம், தமிழில் மகிழவே.


கலை:

கலை என்பது இந்நாடிகள் உடலில் கலந்து உள்ளவை என்பதைத் தெரிவிக்கிறது..  கல + ஐ  என்பது  வகர உடம்படு மெய் பெற்று கலவை என்றும்  கல + ஐ > கல் + அ + ஐ > கல்+ ஐ என்று அகரம் கெட்டு லகர ஒற்றுடன் ஐ புணர்ந்து கலை என்றும் வரும். இதன் மூலச்சொல் குல் என்பது.   கலந்திருத்தலாவது இணைந்து இருத்தல். ஓரிடத்திருத்தல். குல் > குலவு: ஓரிடத்திருந்து தொடர்பு பழகுதல். குல் > குலை :  வாழைக்குலை.   திராட்சைக் குலை.  குல் என்பதன் பொருளும் இணைந்திருத்தலே  ஆகும்.  குல் >கல். கல்லும் பாறையும் இணைந்து திரண்டு, மணல்போல் சிதறலாக இல்லாமல் கிடைக்கிறது. இவ்ற்றின் உதவியால் கலை என்ற சொல்லின் திறமறிக. 

இந்தக் "கலை" வேறு.  கல்வியுடன் தொடர்புடைய கலை ( இசைக்கலை,  நடனக் கலை) போல்வன வேறு .  ஒன்று சேராமல் கலைத்து விடும் "கலை" என்ற வினைச்சொல் வேறு.   இவை அமைந்த விதமும் பொருண்மையும் வெவ்வேறாம்.


நாடி:

நாடிகள் பத்து என்ப.  ஆகவே  " பதின்மநாடிகள்"  "தசநாடிகள்"  என்று கூறுதலும் அமையும்.

நாடி என்பது உடலில் நடப்பட்டது போலும் இணைந்திருப்பது.  நடு(தல்) + இ > நாடி,  முதனிலை நீண்டு திரிந்த தொழிற்பெயர்.  தொழிற்பெயர் என்பது ஒரு வினைச்சொல்லிலிருந்து அமைந்த பெயர்ச்சொல்.  தொழில் என்பது செய்கை அல்லது வினையைக் குறிக்கிறது. நாடி என்பதில் இ விகுதி. படி+ஆம் = பாடம் என்று அம் விகுதி பெற்று முதல் நீண்டு அமைதல். 

மாடி என்ற சொல்லும் காண்க.  மடுத்தல் என்பது வினை.  ஒவ்வொரு மாடிக்கும் அல்லது நிலைக்கும் மேல்தரைகள் பக்கச்சுவர்களுடன் சேர்ந்து இருக்கும்.  இச்சேர்வின் காரணமாக,  மடு> மடு+ இ > மாடி என்று முதலெழுத்து நீட்சி பெற்று இகர விகுதியும் பெற்று  "  மாடி" என்ற சொல் அமைந்தது. இது நாடி போல்வதான சொல்லமைப்பு.  தரை அல்லது நிற்கும் பரப்பு,  மடித்து மடித்து மேலெழுப்பியது போலுமிருப்பதால்,  மடி> மாடி என்றும் விளக்கலாம். அப்போதும் அது முதலெழுத்து நீண்டு விகுதி பெற்ற சொல்லே. 

இதுகாறும் கூறியவற்றால் சுழுமுனைக்குப் பெயர் அமைந்த விதம் அறிந்தீர்.

அறிக.மகிழ்க.

மெய்ப்பு  பின்பு.

முகக் கவசம் அணிந்து

இடைவெளி கடைப்பிடிக்க.





ஞாயிறு, 7 மார்ச், 2021

சில சொல்லியல் நெறிமுறைகள், தத்துவங்கள். சுழு> சூழ்

 ஓடுதல் என்ற சொல்லில் வினைப்பகுதி   "ஓடு"  என்பதுதான்.  ஆகவே ஓடுதல் என்பதில்  தல் என்பது விகுதி என்று முடிவு செய்துவிடில், ஓடு என்பது முதனிலை அல்லது பகுதி ஆகி,   தெளிவாகவே உள்ளது.  ஆடல் என்ற சொல்லில் ஆடு என்ற சொல்லே வினை.  ஆதலின்  வினைச்சொல் அதற்குரிய பொருளுடன் தனியாகவும் அழகாகவும் கிடைத்துவிடுகிறது.   அல் என்பதே விகுதி.

ஆனால் சுழல் என்ற சொல்லில்  அல் என்பது விகுதி என்று வைத்துக்கொண்டால் அதில் சுழு என்றொரு   பகுதி மொழியில் இல்லை. (காணாமற் போய்விட்டது). விழு என்பதில் பகுதி விழு.  இச்சொல் விகுதி பெறாமல், தனியே நின்று பொருளுணர்த்துகிறது.   ஒப்பிட சுழு என்பது தனியே பொருளுணர்த்தவில்லை. எனினும்  சுழுமுனை,  சுழுத்தி என்று சொற்கள் உள்ளன.

ஆகவே சுழு என்ற ஒரு வினைச்சொல் ஒரு காலத்தில் வழங்கி,  தன் தனிநின்று பொருளுணர்த்தும் ஆற்றலை இழந்துவிட்டது என்று முடிவு செய்யவேண்டும்..  ஒரு மொழியில் ஏற்பட்ட எல்லாச் சொற்களும் ஏற்பட்டு முன் வழங்கியவாறே இருந்துவிடுவதில்லை.  சில இன்னும் உள்ளன.  சில தம் ஆற்றலை இழந்துவிட்டன. இவ்வாறு வினைத்தன்மையை இழந்த சொற்கள் மொழியில் இன்னும் இருத்தல் வேண்டும்.  அவற்றை நீங்கள் தேடிக் கண்டுபிடித்தல் நன்று.

சுழு என்பது ஒரு தனிச்சொல்லாகவும் இல்லையாதலால்  அதையும் அதன் பொருண்மையையும் மீட்டுருவாக்கமே செய்ய இயலும். சுழு என்பதினின்று அதனுடன் இணைந்து வேறு சொல் தோன்றியிருப்பதால்  அதை  ஓர் அடிச்சொல்லாகக் கொண்டு விளக்கிவிடலாம்.  ஆனால் அல் என்னும் வினையாக்க விகுதி பெற்ற சுழல் என்ற சொல் உள்ளது.  அது முதனிலைப் பெயராகவும்  சுழலுதல் என்று வந்து " சுழல்" என்பதே பகுதியாகவும்   வருகிறது.   சுழு என்பது தன் வினையாற்றலை இழந்தபின் அடுத்து அதற்கு ஏற்படும் வடிவமைப்பு சுழல். என்பது தானே வினையாகிவிடுகிறது. எனவே சுழலுதல் என்பது நல்ல தொழிற்பெயராய் மொழியில் ஏற்கப்பட்டுள்ளது.

சூழ் என்பது வினைப்பகுதியாகவும் உள்ளது.  சூழ்தல்,  சூழல் என்று  தல், அல் என்ற விகுதிகளை ஏற்று,  ஒரு வினைப்பகுதி மொழியில் பெறும் ஆற்றல்நிலைகளைப் பெறுகின்றது.  விழு , வீழ் என்ற சொற்கள் போல சுழு என்பது தனிவாழ்வு பெறாமல்  வீழ் என்பதை ஒக்க சூழ் என்றுமட்டும் வடிவம் பெறுகின்றது.  ஏற்கெனவே  நாம் பார்த்தபடி  சுழு என்பது ஓர் ஒட்டுவாழ்வு பெற்று இயல்வதை  அறிந்துகொள்கிறோம்.  இன்று அது ஓர் அடிச்சொல் என்ற தகுதியை மட்டுமே பெறுகிறது. சுழு+ அல் > சுழல் என்பதும் தன் தொழிற்பெயர்த் தன்மை மறைந்து தானே ஒரு வினையாய் முடிகிறது.  முயல்+சி என்பது முயற்சி என்று தொழிற்பெயராய் அமைந்தபின், முயற்சித்தல் என்று மீண்டும் ஒரு தொழிற்பெயராய் ஆகி முயற்சி என்பதை ஒரு வினைப்பகுதி ஆக்குவதற்கு முற்பட்டதுபோன்ற நிலையே இதுவாகும்.

சுழு >  சூழ்

விழு > வீழ்

(வழு) > வாழ்   (வழுத்து,   வாழ்த்து )

( அழு) >  ஆழ்  ( மேலிருந்து கீழாக உட்செல்வது)   அழுந்து, அழுத்து, ஆழ்தல்.

(குழு ) > கூழ்   அடிப்படைப் பொருள் : ஒன்றாக ஒட்டியிருப்பது.

(உழு) > ஊழ்   [ உள் > உழு }

இவற்றின் வளர்ச்சியும் பொருண்மையும் அவ்வளவு எளிதில் வெளித்தெரிவதில்லை.  ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். இதைத் தான் தொல்காப்பியர் ஒரே தொடரில் " விழிப்பத் தோன்றா" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

உடல்நலம் காக்க.



புதன், 3 மார்ச், 2021

இருட்டு இல்லை ஆனால் திருட்டோ?

 We do not know whether this is a drama or a real incident from one of the countries in South East Asia.


இருட்டு நேரமாகத் தெரியவில்லை

திருட்டும் நடக்குமோ.

இன்னொரு நாட்டில்.


உதவி யாரும் செய்தனரோ

உண்மை அறியோம். 


செவ்வாய், 2 மார்ச், 2021

தமிழ் ஆங்கில இலக்கியங்கள் ஒப்பீடு

 தமிழிலக்கியம் ஆங்கில இலக்கியத்தினின்று சற்று வேறுபட்டதென்பதைத் தமிழறிஞர்கள் நன்கு உணர்ந்து எழுதியுள்ளனர். இரண்டு இணையற்ற பேராசிரியர்கள் இதைத் தங்கள் முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு வரைவுகள் சமர்ப்பித்தனர். இவர்களுள் தனிநாயக அடிகளார் மேலை மொழிகள் பலவும் கற்று அறிந்த பெரும்புலவர். தம் வாழ்க்கைத் தொழிலில் இலத்தீன் முதலிய  மேலை மொழிகளைத் தினமும் பயன்படுத்தும் வசதிகளை உடையவராய் இருந்தார்.

இவர்கள் கூறினார்கள் என்பதற்காக அன்றி,  நாமே ஆங்கில இலக்கிய வகுப்பில் சென்று படிக்கும்போது,  இயற்கையைத் தனிப் பாடுபொருளாக வைத்துப் பாடிய பல கவிஞர்களைக் காண்கின்றோம். அத்தகைய கவிதைகளைத் தமிழில் அண்மைக் காலத்துத் தமிழிலக்கியங்களிலன்றிக் காண முடிவதில்லை. ஆற்று வெள்ளம் என்று எடுத்துக்கொண்டால்,  "ஆற்று வெள்ளம்போல் பாயும் உன்பால் எனக்குள்ள காதல்" என்று தமிழ்க்கவி பாடுவான்.  இது அப்பொருளை ஓர் உவமையின் பொருட்டுப் பயன்படுத்திக் கொண்டதே அன்றி வேறில்லை.  ஷெல்லி முதலியோர்  சருகுகள் இலைகள் முதலியவை காற்றில் புரள்வதைத் தனிப்பொருளாய்ப் பாடினர். இயற்கையை இவ்வாறு தனிமேடையில் வைத்துப் பொருட் கலப்பின்றிப் பாடிய கவிதைகள் தமிழில் தேடிப்பிடிக்கவேண்டும்.  ஆகவே இயற்கை தனிப் பாடுபொருளாய் அமைதல் அருகி நிற்பதால் அதை ஓர் இலக்கியப் பண்பாடாய்க் கருத  இயலவில்லை.   

இயற்கையுடன் மனிதன் என்றும் சமமாக நிற்க இயலாது.   மகுடமுகி (கொரனா )  நோயில் பலர் மடிந்துவிட்டனர்.  ஆனால் அதனால் இயற்கைக்கு ஒன்றுமில்லை.  எப்போதும்போல் காலைக் கதிரவன் செவ்வொளியைச் செலுத்திக் கடற்பரப்பில் எழுகின்ற காட்சியில் எந்த மாற்றமும் இல்லை. மனிதன் இயற்கையின் ஒரு பகுதிதான்.  அதை ஆள்வதாக அவன் நினைத்துக் கொண்டாலும்  இயற்கைக்கு உட்பட்டு அவன் மாய்பவன் தான்.  அவன் செய்யும் காதல் உட்பட்ட எந்தத் தொழிலும்  அவன் இயற்கையின் கொத்தடிமை என்பதையே மெய்ப்பித்துக் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.

நோயினின்று காத்துக்கொள்ளுங்கள்.

ஒரு தட்டச்சுப் பிழை திருத்தப்பட்டது.

எழுத்து பிழைகளைச் சுட்டிக்காட்டி உதவுங்கள்.

நன்றி.



திங்கள், 1 மார்ச், 2021

அழைக்கும் வடிவச் சொற்கள்

  விளிச்சொற்கள் என்பவை அழைக்கும் அல்லது கூப்பிடுவதற்கான சொற்கள்.  கந்தனே,  அம்மையே என்ற சொற்களில் ஏ வருகிறது.  இது விளித்தல் அல்லது அழைத்தலைக் குறிக்கிறது.

மலையாள வழக்கில் விளித்தல் என்ற சொல் அன்றாட வழக்கில் அல்லது பயன்பாட்டில் உள்ளது.  தாய்த்தமிழிலே விளித்தல் என்றால் அகரவரிசை பார்த்துத்தான்  அறிந்துகொள்வர் நம் தமிழர்.  அந்நூலை வைத்துப் பார்க்கும் தமிழர் குறைவு.  இன்று இணையம் இருப்பதால் ஒருவேளை அதில் பார்த்து அறிகின்றனரோ அறியோம்.  அவ்வாறு பார்க்கின் நாம் மகிழற்குரியதே ஆகும்.

வேற்றுமை என்பது ஓர் இலக்கணக் குறியீடு. நாயைக் கடித்தான் எனில்,  இவ்வாக்கியத்தில் வரும் ஐ (  நாயை) ஒரு வேற்றுமை உருபு.  இலத்தீன், சமத்கிருதம்  ஆகியவற்றிலும் வேற்றுமையும் அதற்கான உருபுகளும் உண்டு.

கந்தா  வந்தருள்  என்ற வாக்கியத்தில்  கந்தா என்று அழைத்துப் பேசியதால் அது விளிவேற்றுமை.  கந்தனே என்பதும் விளிவேற்றுமை.  (ஏ) - முன் கூறினோம்.

சமத்கிருதத்தில்  விளியில் அன் முதலிய விகுதிகள் தவிர்க்கப்பட்டு விளியாகும்.

வரதனே.   வரதே   இங்கு அன் விகுதி இல்லையாயிற்று.

பரதனே  பரதே  இதுவுமது.

புனிதனே   புனிதே  இதுவுமது.

அம்மொழியில் அன் விகுதி வருதல் இல்லை.  விதிவிலக்காய் வரின் கண்டுகொள்க.

வனிதை :   வனிதையே (தமிழ்)    வனிதே ( அயல்).

லலிதை:    லலிதையே  லலிதாவே    -  லலிதே!

பெண்பால் ஐ விகுதி கெட்டது.  லலிதா என்பதும் விளியே ஆயினும் எழுவாய் வடிவம்போல் உலகவழக்கில் வரும்.

அன், அள் முதலிய தமிழுக்குரியன. 

லலிதையே.  லலிதே என்ற இரண்டிலும் ஏ என்ற விளி வருகிறது.  அயலில் பெண்பால் ஐ விகுதி தவிர்க்கப்பட்டது.  ஆண்பாலுக்கும் அவ்வண்ணமே முடியும்.

அறிக மகிழ்க.

உடல்நலம் காத்துக்கொள்க.

மெய்ப்பு பின்