சனி, 20 மார்ச், 2021

சாய், சமர்ப்பித்தல்

 ஓர் அரசு அதிகாரியிடம் போய் ஒன்றை வாய்மொழியாய்த் தெரிவித்து, எனக்கு உதவுங்கள் என்று வேண்டிக்கொள்ளலாம்.  அவரும் அவசரத்தில் சரி சரி என்று புகன்றுவிட்டுப் போய்விடக்கூடும். அவர் ஒன்றும் செய்யாமல் ( மறந்து) விட்டார் எனில், இன்னோர் அதிகாரியிடம் கூறுகின்ற போது,  வாயால் சொல்லிக்கொண்டிருந்தால் ஆகாது, எழுதிக்கொடுங்கள் என்று அவர் கேட்டால் அதையும் செய்தால் அப்போது அது மனுவாகிறது.   மன்னுதல் எனில் நிலையாக  இருத்தல். இங்கு நிலையாக முன்வைத்தல்.  வாய்ச்சொற்கள் சுவடின்றி மறைந்துவிடும்.  எழுத்து கொஞ்சநாள் நிற்கும்.  ஒரு தாளில் எழுதிக் கொடுக்க, அது மனு ஆகிறது.  ஒரு மனுவுக்கு இருப்புக்காலம் வாய்மொழியினும் நீண்டதாகும்.

ஞானம் வாய்க்குமொருமனு வெனக்கிங் கில்லாமை யொன்றினையும் என்றார் தாயுமான சுவாமிகள்.  

மன்னுதல் :  ஏவல்வினை: மன்னு.   மன்னு என்பது முதனிலைத் தொழிற்பெயர். மன்னு என்பது  மனு என்றது இடைக்குறை.    என்னும் > எனும் என்ற தொகுத்தல் போலவே.

நிலையாக இருக்கும் காலம் என்பது பொருளுக்குப் பொருள் வேறுபடும். நிலையானது என்றால் உலகம் முடியும் வரை நிலையானது என்பது பொருளன்று.

ஒரு மனுவை  அலுவல்மேலாளர் ஒருவர்முன் கிடத்துதலே சமர்ப்பித்தல்.   இது அமர்த்தல், அமர்த்துதல், அமர்ப்பித்தல் > சமர்ப்பித்தல் என்று  அமைகிறது.  அகர வருக்கம் சகர வருக்கமாகும்.  இதற்கு எடுத்துக்காட்டு:  சமர் > சமர்,  அமைத்தல் > சமைத்தல் என்று பல.  பல இடுகைகளில் இது கூறப்பட்டுள்ளது. ஒரு தாளில் எழுதுங்கள், மனப்பாடம் செய்துகொள்ளுங்கள்.

சில  இறைப்பற்று உய்விப்பாளருக்குச் சாய் என்ற சொல் வழங்கும். எடுத்துக்காட்டு:  சாய்மாதா.     ஆய் - சாய்.    இது தாய் ,  அதாவது பற்றின் ஊற்று என்று பொருள்படும்.  இது அயலிலும் சென்று நன்கு வழங்குவது.


கருத்துகள் இல்லை: