திங்கள், 29 மார்ச், 2021

களைக்கொட்டும் களைக்கொத்தும்

 மேற்படி இரு சொல்வடிவங்களும் சரியானவை தாம்.

கொட்டு என்பது சற்று வன்மையையும் கொத்து என்பது குறைவான வலிமையுடன் குத்துவதையும் பண்டை குறித்திருத்தல் வேண்டும் என்று தெரிகிறது.  ஆனால் இன்று இவ்விரு பதங்களிடையே நிலவும் வேறுபாடும் மறைந்து  இரண்டும் ஒருசொல்லேபோல் மக்களிடை வழங்குகின்றன.

எனவே  "-ட்டு" என்று முடியும் சொற்கள் திரிந்து "த்து" என்று முடிவுறின்-- பொருள் வேறுபடாவிடில் -  அவற்றைப் போலி என்றே கொள்ளுதல் வேண்டும். திரிந்து வேறுபொருள் குறித்தலுற்றவை பல.  ஓர் எடுத்துக்காட்டு:

முட்டு  >  முத்து.   ( முட்டி வெளிவருவது என்பது அடிப்படைப் பொருள்).

முத்து > முத்தம் என்றும் சொல் தோன்றியிருப்பதால்,  முத்து என்பதும் முத்தம் என்பதும் மென்மைத் தொடுதல்.  முட்டு என்பது வன்மைத் தொடுதல் என்பது அறிக.  அடிப்பொருள் தொடுதலே.

நத்து நட்டு என்பவும் ஆய்வுசெய்யற்குரியவை.  நத்துதல் -  மெல்ல ஒட்டிச் செல்லுதல் குறித்தது.  நத்து > நத்தை : இது மென்மையாய் ஒட்டி நகரும் உயிரி. நட்டு என்பது எச்சமாயினும்,  நடு > நட்டு என்று வந்து,  வன்மையே குறிக்கும்.

இவ்வேறுபாடுகட்குக் காரணம் யாதெனின் வன்மை மென்மையே.  ஆயினும் இரண்டும் வல்லின எழுத்துக்கள் பயின்றன என்பதிலோர் ஒன்றுபாடு இருப்பினும் அவை தம்முள் ஒன்று வன்மையும் இன்னொன்று மென்மையும் உடையனவாகும் என்பதறிக.

டகரம் காட்டும் வன்மை, இட்டு - பட்டு என்பவற்றிலும் ( எச்ச வடிவிலும் அல்லாத வினைப்பகுதி வடிவிலும் ) அறியலாம்.  இத்து, பத்து என்பவற்றில் வல்லொலி தாழ்வடைந்தது அறிக.

ஆகவே வல்லொலிகளைக் மிகுவல்லொலி தாழ்வல்லொலி என்று பிரித்து உணரவேண்டிய நிலை ஏற்படுகிறது.

அறிந்து மகிழ்க.

மறுபார்வை பின்.

கருத்துகள் இல்லை: