ஓடுதல் என்ற சொல்லில் வினைப்பகுதி "ஓடு" என்பதுதான். ஆகவே ஓடுதல் என்பதில் தல் என்பது விகுதி என்று முடிவு செய்துவிடில், ஓடு என்பது முதனிலை அல்லது பகுதி ஆகி, தெளிவாகவே உள்ளது. ஆடல் என்ற சொல்லில் ஆடு என்ற சொல்லே வினை. ஆதலின் வினைச்சொல் அதற்குரிய பொருளுடன் தனியாகவும் அழகாகவும் கிடைத்துவிடுகிறது. அல் என்பதே விகுதி.
ஆனால் சுழல் என்ற சொல்லில் அல் என்பது விகுதி என்று வைத்துக்கொண்டால் அதில் சுழு என்றொரு பகுதி மொழியில் இல்லை. (காணாமற் போய்விட்டது). விழு என்பதில் பகுதி விழு. இச்சொல் விகுதி பெறாமல், தனியே நின்று பொருளுணர்த்துகிறது. ஒப்பிட சுழு என்பது தனியே பொருளுணர்த்தவில்லை. எனினும் சுழுமுனை, சுழுத்தி என்று சொற்கள் உள்ளன.
ஆகவே சுழு என்ற ஒரு வினைச்சொல் ஒரு காலத்தில் வழங்கி, தன் தனிநின்று பொருளுணர்த்தும் ஆற்றலை இழந்துவிட்டது என்று முடிவு செய்யவேண்டும்.. ஒரு மொழியில் ஏற்பட்ட எல்லாச் சொற்களும் ஏற்பட்டு முன் வழங்கியவாறே இருந்துவிடுவதில்லை. சில இன்னும் உள்ளன. சில தம் ஆற்றலை இழந்துவிட்டன. இவ்வாறு வினைத்தன்மையை இழந்த சொற்கள் மொழியில் இன்னும் இருத்தல் வேண்டும். அவற்றை நீங்கள் தேடிக் கண்டுபிடித்தல் நன்று.
சுழு என்பது ஒரு தனிச்சொல்லாகவும் இல்லையாதலால் அதையும் அதன் பொருண்மையையும் மீட்டுருவாக்கமே செய்ய இயலும். சுழு என்பதினின்று அதனுடன் இணைந்து வேறு சொல் தோன்றியிருப்பதால் அதை ஓர் அடிச்சொல்லாகக் கொண்டு விளக்கிவிடலாம். ஆனால் அல் என்னும் வினையாக்க விகுதி பெற்ற சுழல் என்ற சொல் உள்ளது. அது முதனிலைப் பெயராகவும் சுழலுதல் என்று வந்து " சுழல்" என்பதே பகுதியாகவும் வருகிறது. சுழு என்பது தன் வினையாற்றலை இழந்தபின் அடுத்து அதற்கு ஏற்படும் வடிவமைப்பு சுழல். என்பது தானே வினையாகிவிடுகிறது. எனவே சுழலுதல் என்பது நல்ல தொழிற்பெயராய் மொழியில் ஏற்கப்பட்டுள்ளது.
சூழ் என்பது வினைப்பகுதியாகவும் உள்ளது. சூழ்தல், சூழல் என்று தல், அல் என்ற விகுதிகளை ஏற்று, ஒரு வினைப்பகுதி மொழியில் பெறும் ஆற்றல்நிலைகளைப் பெறுகின்றது. விழு , வீழ் என்ற சொற்கள் போல சுழு என்பது தனிவாழ்வு பெறாமல் வீழ் என்பதை ஒக்க சூழ் என்றுமட்டும் வடிவம் பெறுகின்றது. ஏற்கெனவே நாம் பார்த்தபடி சுழு என்பது ஓர் ஒட்டுவாழ்வு பெற்று இயல்வதை அறிந்துகொள்கிறோம். இன்று அது ஓர் அடிச்சொல் என்ற தகுதியை மட்டுமே பெறுகிறது. சுழு+ அல் > சுழல் என்பதும் தன் தொழிற்பெயர்த் தன்மை மறைந்து தானே ஒரு வினையாய் முடிகிறது. முயல்+சி என்பது முயற்சி என்று தொழிற்பெயராய் அமைந்தபின், முயற்சித்தல் என்று மீண்டும் ஒரு தொழிற்பெயராய் ஆகி முயற்சி என்பதை ஒரு வினைப்பகுதி ஆக்குவதற்கு முற்பட்டதுபோன்ற நிலையே இதுவாகும்.
சுழு > சூழ்
விழு > வீழ்
(வழு) > வாழ் (வழுத்து, வாழ்த்து )
( அழு) > ஆழ் ( மேலிருந்து கீழாக உட்செல்வது) அழுந்து, அழுத்து, ஆழ்தல்.
(குழு ) > கூழ் அடிப்படைப் பொருள் : ஒன்றாக ஒட்டியிருப்பது.
(உழு) > ஊழ் [ உள் > உழு }
இவற்றின் வளர்ச்சியும் பொருண்மையும் அவ்வளவு எளிதில் வெளித்தெரிவதில்லை. ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். இதைத் தான் தொல்காப்பியர் ஒரே தொடரில் " விழிப்பத் தோன்றா" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
உடல்நலம் காக்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக