ஞாயிறு, 28 மார்ச், 2021

ஊர்மக்கள் யாவரும் அடையும் முருகப்பெருமான்.

 ஏதேனும் செய்வடி வேலவனே --- நேற்று

நீதானே என்னுளம் பாதிகொண்டாய்!

காதேனும் உன்னிசை கேட்கவேண்டும் --- என்

காலே    உன்பால்கொண்டு சேர்க்கவேண்டும்.


மாதோடும் வாராமல் வேலோடும் வந்தாலும்

நாதேடிப் புகழ்பாடும் நாயகன் நீ ---- இதில்

சூதேதும் இல்லையே சுந்தரப் பங்குனி

ஊரோடும் அடைவது உனையன்றி யார்?




படம்:  உதவியவர் - திரு. கருணாநிதி ஜீ


பொருள்:

ஏதேனும் செய்வடி வேலவனே ---  எனக்கு எதாவது ஓர் உதவி செய்,  முருகப்பெருமானே;

நேற்று நீதானே என்னுளம் பாதிகொண்டாய் ---     முன் தினம் எனது மனத்தினில் ஒரு பகுதியை  எடுத்துச் சென்று விட்டாய்; ( இதயத்து மறுபாதி தவிப்பில் உள்ளது),

காதேனும் உன்னிசை கேட்கவேண்டும் --- எடுத்துச் சென்ற பின்னர் ஒன்றும் நிகழவில்லை;  ஆகையால் உன் இசை என் செவிகளிலாயினும் வந்து படவேண்டுமே;

என் காலே    உன்பால்கொண்டு சேர்க்கவேண்டும்.  --(  நீ இருக்கும் தொலைவில் வந்து உனைக்காண,) என் கால்கள் என்னைக் கொண்டுபோகவேண்டும்; அவற்றுக்கோ வலுவில்லை.  அதற்கு நீ அருள்புரிக ) .  இவற்றுள் எதுவும் நடைபெறவில்லை என்பது.

மாதோடும் வாராமல் -- நீ வள்ளியோடு கூடி என் இடத்தை அடையாமல்,

வேலோடும் வந்தாலும் ---  வேல்மட்டும் கொண்டு இவ்விடத்தை அடைந்தாலும்; ( வேலோடும் - உம் வருவதால் மயிலினோடும் என்று இயைக்க).

நாதேடிப் புகழ்பாடும் நாயகன் நீ ----  என் நாவினால் தினமும் துதித்துத் தேடி  நான் ஏத்தி இசைப்பது நாயகன் ஆன உன்னைத்தான்;

இதில் சூதேதும் இல்லையே --- இச்செயலில் மாறுபாடுகள் எவையும் இல்லை அல்லவோ?

சுந்தரப் பங்குனி  ---  அழகு காட்டும் இந்தப் பங்குனி மாதத்தில் , 

ஊரோடும் அடைவது உனை--- ஊர்மக்கள் யாவரும் மொத்தமாகக்  கண்டு ஆனந்திப்பதும்  உன்னைத்தான்;

அன்றி யார்?  --  இப்போது முருகனாகிய உன்னையன்றி வேறு யாரையுமில்லை .

(ஆகவே எனக்கும் அவ்வருளைத் தருவாயாக  என்றவாறு).

தலைப்பில் "ஊர் முழுதும்" என்றால்  ஊர்மக்கள் அனைவரும் என்றும் ,

"  அடையும்" -  அருளைப் பெறும் என்றும் அறிக.

இப்பாடலின் உள்ளடியான கருத்து, ஊரில் அனைவரும் பங்குனி உத்திரத்தில் பற்றுடன் நின்று அவன் அருளை  அடைந்தனர் என்பதுதான். இப்பாடல் வரிகள் யாம் சிந்திக்காமல் தாமே வழிந்தன.  அவற்றின் பொருளை யாம் எழுதியபின் உணர்ந்து கொண்டேம். உணர்ந்தவாறு பொருளைத் தந்துள்ளேம். இது அவனருளைப் பளிச்சிடுகிறது. முருகன் புகழ் வாழ்க. எல்லாப் புகழும் முருகப் பெருமானுக்கே.  





கருத்துகள் இல்லை: