புதன், 17 மார்ச், 2021

அதிகம். அதிகம்.

 உங்கள் வீட்டிலிருந்த வாறே வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.  சற்று தொலைவில் தண்ணீர் பெருகிநிற்பது தெரிகிறது. நீங்கள் காண்பது சில மரங்களுக்கும் புல்வெளிக்கும் அப்பால். தண்ணீர் அங்கேதானே கிடக்கிறது. ஒன்றும் இடரில்லை என்று ஒருவாறு உங்கள் மனம் அமைதிகொள்கிறது. அது ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் கிடக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்..

கொஞ்ச நேரம் வேறு சில வேலைகளை முடித்துவிட்டு  மீண்டும் வெளியில் பார்க்கிறீர்கள்.. உங்கள் மனத்துள் எதை ஓர் எல்லையாய்க் கருத்திக்கொண்டு இருந்தீர்களோ அந்த எல்லையைக் கடந்து நீர் மேலேறிக்கொண்டிருக்கிறது. அப்போது நீங்கள்   அது இகந்துவிட்டது என்று சொல்கிறீர்கள்.

இகந்துவிட்டது என்றால் என்ன?  தமிழ்தான்.  ஆனால் இன்று இயல்பான பயன்பாட்டில் இல்லாத சொல்.  எங்கோ இலக்கியத்தில் நம் நற்பேற்றின் காரணமாக நாம் இன்னும் காணமுடிந்த சொல்.

அது இகந்துவிட்டது.  அது இக அம் >   அதிகம்.  மிக்க எளிமையாக, அதாவது வகர உடம்படுமெய் உள்ளே புகாமல் வந்த சொல்.  அந்த மெய்யெழுத்து வந்திருந்தால் அது + இக + வ் + அம் = அதிகவம் என்று வந்திருக்கும்.   இன்னும் ஓர் உடம்படுமெய்யைப் புகுத்தி  அது + வ்  + இக + வ் + அம் =  அதுவிகவம்! ஏன் இத்தனை உடம்படுமெய் வரவேண்டும்.  இரண்டு உடம்படுமெய்களை ஒரே சொல்லில் புகுத்தினால் காசா கிடைக்கிறது.  வேறு வேலை இல்லையா?  வெட்டு,  வெட்டு.  அது + இக + அம் >  அத் + இக + அம் >  அதிகம்!!  அது என்பதிலிருந்து தொத்திக்கொண்டிருந்த உகரத்தையும் வீசி எறிந்துவிட்டோம்.

சுருக்கமான ஒரு சொல்.

அது என்ற சுட்டுப்பெயருடன் சேர்ந்து அமைந்த அருமையான சொல்.

இங்கு என்பதை எடுத்து, அதற்குள் இருந்த ங் என்ற எழுத்தை எறிந்துவிட்டால்,  இங்கு என்பது இகு ஆகிவிடும்.  இப்போது இகு என்பதன் இறுதி உகரத்தை எடுத்து ஓர் பேரொலியுடன் வீசுங்கள்.  அத் + இக் + அம் =  அதிகம்!!

ஆங்கு கிடந்த நீர் பெருகி இங்கு வந்துவிட்டது.  நமக்குத் தேவையில்லாத நீர் வீட்டுக்குள் வரப்பார்க்கிறது.  இது அதிகம் தான்.

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில்  ................

(பாரதி பாடலின் சில வரிகள் ).

சுட்டுப்பெயர்களைக் கொண்டு அமைக்கப்பட்டு  து,  அம் முதலியன இணைந்த இச்சொல் அழகாகவே இருக்கிறது.

அதிகவம்,  அது இக வி அம் >  அதுவிகவம் என்றெல்லாம் வரவேண்டியதை இப்படி வெட்டலாமா என்றால் கவலை வேண்டாம், உலகத்தில் நீங்கள் பெயர் வைக்கத் தொடங்காத பல பொருள்கள் பற்பல கலைத்துறைகளில் உள்ளன. அவற்றில் சிலவற்றுக்கு இப்புதுப்பதங்களைப் பெயர்களாக்கிவிடலாமே.  என்ன நட்டம்? 

இன்று அதிகமானது கொரனாதான் என்பன நம் இந்தியத் தாளிகைகள்.

அறிக மகிழ்க.

கொரனாவிற்குக் கவலை கொள்க. செயலில் இறங்குக.

மெய்ப்பு பின்னர்.

மெய்ப்பு    1227 11122021 பார்க்கப்பட்டது


கருத்துகள் இல்லை: