ஞாயிறு, 21 மார்ச், 2021

தொப்பை, தொங்குதல்

 ஓரிடத்தில் முட்டி வெளிவந்து ஏனைச் சுற்றுவட்டப் பகுதிகளில் உட்பொதிவாக உள்ள ஒரு பொருளைக்  குறித்த சொற்கள் தமிழில் "தொ"  என்ற முதலெழுத்திலும் அதற்கு வருக்கமான எழுத்துக்களிலும்  தொடங்குவதைக் கண்டறிவதில் தொல்லை ஒன்றுமில்லை.  இதற்கு எடுத்துக்காட்டாக ஒருபொருளைச் சுட்டிக் காண்பிக்க வேண்டுமெனில் இருக்கவே இருக்கிறது தொப்பி.   தொ என்ற எழுத்திலே தொடங்கும் இன்னொரு சொல் "தொப்பை" என்பது ஆகும்.  ஒரு மனிதனின் தொந்தி  அல்லது தொங்குவயிறு.  முட்டி ஓரிடத்தில் திரண்டு வெளிப்பட்டுக் காண்புறும்.  அதனால்  அது தொப்பை எனப்பட்டது.

உடல்பருத்தவர்கள் எல்லாப்  பகுதிகளிலும் அளவாகச் சுவரைப்போல மேடுகளின்றிப்  பருத்திருப்பதில்லை. அங்கிங்கெனாதபடி எங்காவது சிலவிடங்களில் சதைபருத்து இருக்கும். கொழுப்பும் சதையென்ற குறிப்பில் அடங்கும். இவ்வாறான பருமனை பழந்தமிழர் தொம்மை என்று குறித்தனர். அளவாக இல்லாமல் வெளித்தொங்கும் பருமன்.  பிற்காலத்தில் இச்சொல்லின்  விழேடத் தன்மையை மக்கள் மறந்தமையினால்,  தொம்மை என்பது பொதுப்பொருளில் வழங்கி இப்போது வழக்கில் அல்லது புழக்கத்தில் பெரும்பாலும் இல்லையாகிவிட்டது.  தொப்பை, தொம்மை என்ற பதங்களை ஒப்பிட்டு அறிக.   தொம்பை மாலை என்ற வழக்கும் நோக்கற்பாலது.

பந்தியின்போது பலருக்குச் சமைக்கப்பட்டுள்ள சோறு ஓரிடத்தில் துணியால் மூடப்பெற்றுப் பரப்பி வைக்கப்பட்டிருக்கும்.   இது தொகு ( தொகுத்து அல்லது சேர்த்துவைத்து) பரப்பி வைக்கப்பட்டமையின்   "தொகு+ பரம் " > தொகும்பரம் >  தொம்பரம் எனப்பட்டது.  இக்காலங்களில் நல்ல ஏனங்கள் கிட்டுவதால் இது குறைந்துவிட்டது.

தொகுத்தல் என்பது ஓரிடத்தில் சேர்ந்திருப்பது, அல்லது சேர்த்துவைப்பதுதான் --  தொ என்று தொடங்குவது காணலாம்.  தொகு என்பதில் கு என்பது வினையாக்க விகுதியாய் வருகிறது.   பகு, வகு, நகு என்று பல சொற்களில் வந்து இது வினைச்சொல் நீர்மை அடையும்.  தொகு> தொகை: எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலியன. 

தோம்பு என்ற சொல்  தொகு : தோ.  முதல்நீண்டது.  பகு>பா> பாதி என்பதிலும் நீட்சி. சித்திரவேலைப்பாடு போல நிறங்களுடன் சொலிப்பது நாகம் என்னும் மலைப்பாம்பு. நகு>  (ஒளிவீசுதல்: )  நகு+அம் = நாகம், நகர்தல் என்ற சொல் தொடர்புடையது.   தோம்பு என்பது நீர் சேர்த்துவைக்கும் பெரும்  "தொப்பை". தொம்பை என்பது குதிர் என்னும் கலம்.    தொம் > தோம் > தோம்பு என்பதிலும் இதன் தொடர்பு அறியலாம்.  தொகு+ பு > தொகும்பு> தோம்பு எனினுமாகும்.

தொம் + தி > தொந்தி.  

தொப்பூழ் , தொப்புள்.   தொப்பு+ உள்.

தொப்பாரம் -பெருமூட்டை.  பொட்டணம் (பொட்டலம்). கொப்புளமும் ஆகும்.

தொந்தி.  -- ---தொந்திப்பு இரட்டிப்பு ஆகும்.

வேறு சொற்களும் உள. இன்னொரு நாள் அளவளாவுவோம்.

மெய்ப்பு பின்னர்.


குறிப்புகள்:

[ விழேடம் என்பது விழுமிதாக எடுத்துக்கொள்ளபடும் பொருளின் தன்மை.  இதன் அடிச்சொற்கள் விழு+ எடு. அம் விகுதி. ]






கருத்துகள் இல்லை: