{ சுல் என்ற மூலச்சொல்லை ப் பற்றி : இது இம்முன்னுரைக்கும் பின்னர் எழுதப்பெறும். }
தமிழில் இன்னும் தொல்பழங்காலத்து மூலச்சொற்கள் கிடைப்பதானது ஒரு வகையில் நமது பாக்கியமே ஆகும். தமிழின் மூலச்சொற்கள் ஆய்வில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட அருந்தமிழ்ப் புலவர்களின் ஆய்வு நூல்கள் எல்லாமும் நம்மை வந்தடைந்துவிடவில்லை. எடுத்துக்காட்டாக இலங்கை ஞானப்பிரகாச அடிகளாரின் சொல்லாய்வுகள் வெளியீடு 1940க்கு முன் வெளிவந்ததாகத் தெரிகிறது. இந்த வெளியீடுபற்றிய சில குறிப்புகள் சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த புதிய உலகம் இதழொன்றில் குறிக்கப்பட்டுள்ளன. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தாருக்கு இவ்வாய்வு முழுதும் கிடைத்துள்ளதா என்று தெரியவில்லை. மறைமலையடிகளாரிடம் ஒரு நூற்படி ஆசிரியரால் தரப்பட்டது என்று தெரிகிறது. இந்த நூற்படி ஒரு வேளை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கக் கூடும். இது இன்னும் கிடைக்கிறதா என்பதும் தெரியவில்லை. இதற்குமுன் புலவர்கள் சிலர் சுட்டடிச் சொல் ஆய்வில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அவர்களின் ஆய்வுகள் கிடைக்கவில்லை. யாரிடமாவது இருக்கலாம். வேங்கடராஜுலு ரெட்டியாரின் சொல்லாய்வுகள் இப்போது கிடைக்கவில்லை. இவர் தம் நூலொன்றில் "எழுதருகை " என்ற பழந்தமிழ்ச் சொல்லே " எச்சரிக்கை" என்று திரிந்ததாக ஆய்ந்து வெளியிட்டிருந்தார். அரியபல ஆய்வு முடிவுகளை இவர் வெளியிட்டிருந்ததாகத் தெரிகிறது. இவர்தம் நூல்கள் இங்குக் கிட்டவில்லை.
( சொல்: எச்சரிக்கை. ஒப்பீடு: முடிச்சறிக்கை - முச்சறிக்கை ( டிகரம் மறைந்த சொல் . ழ - ட போலி எ-டு: பாழை - பாடை, அயல்திரிபு: பாஷை)
பிற்காலத் தமிழர் என்போர் பெரும்பாலும் தமிழார்வம் மற்றும் மொழியறிவு குன்றிய ஒரு கூட்டத்தாரே என்று நாம் கருத்து மேற்கொள்ளலாம். இவர்கள் தம்முள் கலாய்த்துக்கொள்ளும் குணம் உடையார். தம் முன்னோர் தந்த அறிவுச்செல்வங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் திறம் உள்ளவர்கள் என்று எண்ணத்தோன்றவில்லை. சென்ற இரு நூற்றாண்டுகளில் வெளிவந்த பல நூல்களே இல்லாதனவாயின. திரைப்படங்களில் மிக்க ஆர்வமுடையார் தமிழர் என்ற போதும் "காளமேகம்" என்ற திரைப்படத்தின் நிழற்படிகள் இப்போது கிட்டவில்லை. இதை வெளியிட்டவர்கள் காளமேகப் புலவரின் வாழ்க்கை வரலாற்றினை ஆய்ந்து இக்கதையை எழுதியிருந்ததாகத் தெரிகிறது. இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர்களால் பல பழைய நுல்கள் அச்சிட்டு வெளிடப்பட்டன. இவற்றுக்காக நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் உடையோம் என்க. அகராதிகள் -( அகரவரிசைகள்) தொகுத்தமைக்கும் அவர்கட்கு நம் நன்றி.
தென்றிசைக் கலாநிதியான சாமிநாத ஐயரின் உழைப்பு இல்லாதிருந்தால் இற்றைக்கு உலவும் பழந்தமிழ் நூல்கள் பல கவனிப்பாரற்று ஒழிந்திருக்கும்.
அன்பர்கள் ஒருசிலர் செய்யும் விளம்பர ஒலிகளால் தமிழைப் பற்றிய ஆர்வம் மிக்கிருப்பதாக நீங்கள் எண்ணினால், இது ஒரு சிறு கூட்டத்தாரின் எழுச்சிக்குரல்களே ஆகும். அவ்வப்போது இவ்வொலி எழுச்சிகள் ஏற்பட்டாலும் பின்னர் அவற்றால் பெரும்பயன் ஒன்றும் விளைதல் இல்லை. அரவங்கள் அடங்கிவிடுகின்றன. சென்ற இருநூறு ஆண்டுகட்குள் தனிப்பட்ட முயற்சிகளால் வெளிவந்து மாய்ந்துவிட்டனவாகத் தோன்றும் வெளியீடுகள் எவையும் மறுவெளியீடு கண்டனவென்று கூறற்கியலவில்லை. இக்கூட்டத்தாரே வெளியிட்ட சிலவற்றையும் வாசிப்பாரில்லை.
இப்போது கூகிளின் ஆதரவினால் இங்கு வெளியிடப்பட்ட ஆய்வுகள் பல உங்களுக்கு இலவசமாகக் கிட்டுகின்றன. இவை எப்போதும் கிட்டவேண்டும் என்பதே நமது அவா எனினும் அவர்களுக்குப் பணச்செலவு ஏற்படுதலால் இவை எவ்வளவு காலம் இவ்வாறு கிட்டுமென்பதை அறிந்துரைக்க இயலவில்லை.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக