ஞாயிறு, 14 மார்ச், 2021

ஆன்மீகத்தில் "சாக்கிரம்" : கேவலக்கிடை.

 ஆன்மாவென்பது இவ்வுலகில் உடலுடன் கூடி வைகும் காலத்தில் பல அவத்தைகளில்  ( அவஸ்தை அல்லது துன்பங்களில் ) ஆழ்ந்து தவிக்கிறது.  அது உயிர்த்த குழந்தையாய்க் கருவில் வளரும் காலத்தில் ஓர் அவத்தையில் துவள்கிறது.  அதிலிருந்து நீங்கி வெளிவருகையில் பிறப்பு என்று  ஓர் அவத்தையில் அழுகிறது.   இவ்வாறு ஏழு அவத்தைகள் உள்ளன. இறுதியில் மரண அவத்தையும் நரக அவத்தையும் வந்துவிடுகின்றன. இத்தகு அவத்தைகளையெல்லாம் வென்று  அது பேரான்மாவாகிய இறைவனை அடையவேண்டுமே!  இவ்வேழும் ஆன்மா கடந்து செல்லவேண்டிய படிநிலைகள் என்பர்.

ஆன்மா இவ்வுலகில் உடலுடன் உள்ள போது அது மூன்று நிலைப்பாடுகளை உடையதாகிறது. இவை சாக்கிரம்,  சொப்பனம்,  சுழுத்தி என்பனவாகும்.

உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்பது  குறள்.   உறங்கச் செல்லும் மனிதன் சாவினில் கிடப்பவன் போலாகிறான்.  அதனால் ஆன்மீக நெறியில்  இதனைக் கேவலக்கிடை  என்றனர். அதனின்று மீளுதலும் அதிலடங்கும்.  

கேவலம் என்பது  :  கேடுவலம்.  அதாவது கேடு வலிமைபெற்ற நிலை.  கிடை என்பது கிட+ ஐ = கிடை,   அதாவது கிடத்தல்.   கேடுவலமென்பதில் டுகரம் கெட்டுக் கேவலம் என்ற சொல் அமைந்தது.  இதுபோன்ற இன்னொரு சொல்:  பீடு+ மன் = பீமன்> வீமன்.  கேடு+ து >  கேது ( நிழற்கோள்) என்பதும் அறிக. கெடு என்பதைப் பகுதியாய்க் கொண்டு  டுகரம் கெட்டு விகுதி பெற்று  முதல் நீண்டதெனினும் அமையும்.

தூங்கச் சென்றவன். தூங்கி அதனின்று விழித்தெழவில்லையென்றால் மரணத்துட் படுகின்றான்.  (மரண அவத்தை).   தை என்பது விகுதி.  அவம் = கேடு. அவம் + தை =  அவத்தை > அவஸ்தை.  அவமாவது : அவிந்து கெடுதல். இனி, அவி > அழி  போலியும் ஆகும்.  சொல்லமைப்பில் அவம் என்பது அவிதல் வினையினின்று தோன்றியிருப்பினும்  பின் சொற்பயன்பாட்டில் ( வழக்கு) அஃது கேடு என்னும் பொதுப்பொருளில் வழங்கியுள்ளது  மொழியில்  இயல்பு ஆகும். "நாணம் அவம்"  என்னும்போது  நாணம் கெடுக என்பதே பொருள். நாணம் நீராவியில் அவிந்திடுக என்பது  பொருந்தாது.  அப்படிக் கூறினும் அதற்கு ( நாணம் ) விலகுக என்றே பொருள்கொள்ளவேண்டும்.

இந்தக் கேவலக்கிடையே சாக்கிரம். சாவுக்குக் கிடத்தல்  என்றிதனைப் புரிந்துகொள்ளுங்கள்.  சா + கிட + அம் >  சாக்கிடம் > சாக்கிரம்.  டகரத்துக்கு ரகரம் போலியாகும். அதாவது டகரம் ரகரமாய்த் திரியும்.   எடுத்துக்காட்டு: மடி > மரி.

இவ்வாறே திரிந்த போதும் நுண்பொருள் வேறுபாடு எய்திய சொற்கள் : இடு > இரு.  இரண்டும் இகரச் சுட்டடிச் சொற்கள்.  இடுவது ஒன்றை ஓரிடத்தில் இருத்துவது.  பொருள் இடப்படுமிடத்து இருக்கும். அட என்பதே அர,  அரே, ஹரே என்றெல்லாம் திரிந்தது. சோப்டா > சோப்ரா.  இவ்வாறு பல சொற்கள் கிட்டும்.  அவற்றுள் செல்லாது திரும்புவோம்.  விடி > விரி.  விடிதல் ஒளி விரிதல்.  உணவிற் சில விடுதலே விரதம்.   விடு> (விடதம் )> விரதம்.  இன்னொரு வழியில்:  விடு> விரு > விரதம்.  அது  : இடைநிலை. அம் விகுதி. பழைய இடுகைகளிற் காண்க. 

சாக்கிரமென்பது அழகிய திரிசொல்.  கருத்து : சாவிற் கிடத்தல் போலும் நிலை.  கேவலமான நிலையிற் கிடத்தல்.   விழித்தெழும் வரையில் ஐம்புலன் களும் இறந்தவன் அடைந்த நிலையிற்போலுமே துன்புறுவன.  ஆதலினால் கேவலம் ஆயிற்று.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

முகக் கவசம் அணிந்து

இடைவெளி கடைப்பிடித்து

நோயைத் தடுத்துக்கொள்ளுங்கள்.

இங்கு ஆய்வு செய்த சொல் சாக்கிரம்.  இது சாகரம் என்று காணப்படின்

திருத்தி வாசிக்கவும். வழுவிருப்பின் திருத்தப்பெறும்.  நன்றி/

எழுத்துப் பிழை இருப்பின் வருந்துகிறோம்.

 

கருத்துகள் இல்லை: