வியாழன், 25 மார்ச், 2021

தேவர் என்ற பன்முகப் பயன்பாட்டுச் சொல்.

தேவர் என்ற பட்டப்பெயர் உள்ளவர்கள் பலர் தமிழ்நாட்டில் உள்ளனர்.

தேவலர் -   தேவர் :  தேவர் என்ற சொல் தமிழ்நாட்டுக்கு நெருங்கிய இடங்களில் தேவலர் என்றும் வழங்கியுள்ளது.  வலர் என்பது வல்லவர்கள்  என்றும் பொருள்தரும் சொல்.  வலர் என்பது லகர ஒற்றொழிந்த இடைக்குறைச் சொல்.. எழுத்துத் திரிபுகளை மட்டும் கருத்தில் கொண்டு இச்சொல்லுக்குப் பொருள் கூறுவதாயின்,  தேவலர் என்பதே தேவர் என்று குன்றி ( சுருங்கி) நிற்கின்றது என்று முடிக்கவேண்டும்.

இதற்குப் பொருள் கூறுவது :  தே - இறைவனின்,  வலர் -  வலிமை அல்லது அருளை உடையவர்கள் என்று சொல்லலாம்.  பூசைகள் பண்ணி மக்களை ஆற்றுப்படுத்தியர்கள் என்பது அப்போது பொருள் ஆகிவிடும். ஆனால் இந்த வேலையை ஒரு கூட்டத்தினராக மேற்கொண்டவர்கள் அல்லது "பார்த்தவர்கள்" - பார்ப்புகள் அல்லது பார்ப்பன மக்களே ஆவர்.  வெள்ளைக் காரர்கள் அவர்கள் எழுதிய நூல்களில் Devas என்று  இவர்களையே குறிப்பிட்டதாகத் தெரிகிறது. இதை மறுப்போருமுண்டு.

ஆனால் இக்குறிப்பு அல்லது அடைகளுடன்   (தேவலர்)  வெளிமாநிலங்களில் காணப்படுவோர் தம் வாழ்க்கைத் தொழிலாக நெசவு மேற்கொண்டவர்களாகத் தெரிகிறது.  தொடக்கத்தில் நெசவே செய்து பின்னாளில் தமிழர் படைகளில் சேர்ந்து படைஞர்களாகி அரசரால் அங்கீகாரம் பெற்றிருக்கலாம். அவர்களும் தேவர் என்ற பட்டத்துக்கு உரியவர்களே.

தமிழ்நாட்டில் உள்ள எல்லாச் சாதியினரும் எந்த வரலாற்றுக் குறிப்புகளையும் தம்முடன் வைத்துக்கொண்டவர்கள் அல்லர். ஆகையால் குறிப்புகளின்றி எதையும் மறுப்பது ஒப்புவது அரிதே ஆகும். 

தேவர்கள் - முருகப்பெருமான் காலத்தில்:

"செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த" என்று  எட்டுத் தொகையில் வருவதால் தேவலர் என்ற சொல்  அதற்கு முன் "தேய்வலர்"  என்று இருந்திருக்கலாம்.  அவ்வாறாயின் தேய் -  எதிரிகளைத் தேய்த்து அழிப்பதில்,  வலர் - வல்லவர்கள் என்று பொருள் கொள்ள வழிகிடைக்கும்.  இதை விளக்கிப் பொருள்கூறுவதில் வெற்றி பெற்று விட்டார்களாயின்,   வரலாற்றுக்கு முந்திய முருகப்பெருமான் காலத்திலிருந்தே இவர்கள் "தேவர்கள் "  அல்லது அச்சொல்லின் முந்திய சொல்வடிவங்களின் மூலம் அறியப்பட்டுவந்தனர் என்ற உறுதியான வரலாற்றுவன்மை கிடைத்துவிடும்.  இவர்களில் வரலாறு படித்தவர்கள் இதற்கான முயற்சிகளைக் கொள்வுறுத்தல் வேண்டும். போர்க்களத்திலே எதிரிப்படைஞர்களில் பிடிபட்டவர்களை (கைதிகளை ) வெட்டிக் கொல்லும் தொழிலை இவர்கள் செய்திருக்கலாம் என்று தெரிகிறது. ( "களம் படக், கொன்று தேய்த்த "  என்ற தொடரைக் கவனிக்க ). கைதிகளைப்போர்ப்படை நகர்வின் போது வைத்திருக்க முடியாது.  ஆதலின் அவர்கள் வெட்டிக்கொல்லப்பட்டனர்.  படை  எதிரி யூருக்குள் புகுந்த  போது அங்கு இருந்த பெண்களைக் கொல்லவில்லை. இப்பெண்களே "கொண்டிமகளிர்". இவர்களைப் பற்றிய செய்திகள் இன்னோர் இடுகையில் உண்டு.

திருவள்ளுவருக்குத் தேவர்ப் பட்டம் அல்லது பெயர்

திருவள்ளுவருக்குப் பல  பெயர்கள் இருந்ததாகத் தெரிகிறது. இவற்றுள் எதுவும் இயற்பெயர் என்று கூறுவதற்கில்லை.  "தேவர்" என்பது இவரது பெயர்களில் ஒன்றாகத் தமிழிலக்கியம் தெரிவிக்கிறது.  இது இவர் அரசவைத் தலைமைப் புலவர் என்பதைக் குறிக்கிறது. தேன் வரப் பாடுபவர் என்ற பொருளில்,  தே + வர(ப் + பாடுவ)ர்"  என்ற பாராட்டானது குறுகி "தேவரர்" என்றும் தேவர் என்றும் ஆகியுமிருக்கலாம்.  இதை அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களே அறிந்திருப்பர்.

தே என்பது கடவுள் என்று பொருள் தருமாதலின்,  தே+ வரர் > தேவர், அதாவது கடவுள் அருள் அடைந்தவர் என்றும்  வரம் பெற்றவர் என்றும் பொருள் கூறுதலும் ஆகும்.

சமண முனிவர்களுக்கும் தேவர்ப்பட்டம்  உண்டாதலின், தேவர் என்ற பட்டமுடையோரில் சமணராயிருந்து பின்னர் சைவரானவர்களும் இருக்கலாம். தமிழ்ப் புலவர்களில் சிலர் திருவள்ளுவர்  சமணரென்றும் வேறுசிலர் இவர் சைவரென்றும் கூறியுள்ளனர்.  சீவக சிந்தாமணி ஆசிரியரும் தேவர் என்ற பட்டமுள்ளவர்.  (திருத்தக்கதேவர்).

தேவர் என்ற சொல்லின் இன்னொரு வடிவம் , முன்னிலையில் "தேவரீர்" என்று வரும். நீங்கள் என்று சொல்லாமல் "தேவரீர்" என்று மடல்களில் எழுதுதலும் முன்னைய நூற்றாண்டுகளில் இருந்திருப்பதாகத் தெரிகிறது.  ஆகையால் இது ஒரு பாராட்டுப் பட்டம், பணிவுகாட்டும் பட்டம் என்றும் சாதி ப்பெயர் அன்று என்றும் கூறுவர்.

முப்பத்து முக்கோடி தேவர்கள்

கோடி என்பது பல்பொருள் ஒரு சொல்.  இது புதுத்துணியையும்  குறிக்கும். " மந்திரக் கோடி உடுத்து" என்ற வழக்கையும் நோக்கவும்.  கோடி என்றால் புதுமை என்று திவாகர நிகண்டு கூறுகிறது. பிங்கலந்தை நிகண்டின்படி இது முடியில் அணியப்படும் மாலை ( அல்லது துணியாலான அலங்காரம்) குறிக்கும்.  கோடித்தல் என்பது அலங்கரித்தல், அழகுபடுத்தல் என்று பொருள்தரும் வினைச்சொல். பெருங்கதையில் கோடித்தல் அன்ன கோடுசால் வையம் என்னும் தொடர் உள்ளபடியால், இது அமைத்தல், உருவாக்கம் செய்தல் என்றும் அர்த்தமுள்ளது. எனவே கோடிதேவர் என்பது அலங்காரம் செய்த தேவர்கள் என்றே பொருள்படும்.  வினைத்தொகை. இது மூத்த தேவர்களால் செய்யப்பட்டது. இவர்கள் மூ கோடி தேவர்கள்  மூத்த ( சீனியர்) அலங்காரம்செய் தேவர்கள்.

இது நெசவுக்கலை வளர்ந்து  துணிகளால் அலங்காரம் செய்யும் கலை தொடங்கியபின் நடந்த ஏற்பாடு.  இங்கு  குறித்த தேவர் எனப்பட்டோர் முன் கூறிய தேவலர்கள். ( இடைக்குறை -  தேவர்கள்).   இது திருமண மண்டபமுன் கோடிக்கப்பட்டது .  ( கடிமண்டப முன் கோடிப்ப -  காஞ்சிப்புராணம்). அலங்காரத் துணிகள் கிடைக்காத போது பூக்களையும் பயன்படுத்தி இருக்கலாம்.  அல்லது கலந்தும் அலங்கரித்திருக்கலாம்.  இது பொருள் கிட்டுதற்கேற்ப நடைபெறுவது.  ( வாழை இலை கிட்டாமல் சீனாவின் உணாத்தாளில் பிரசாதம் வழங்குதல் போல).  பின் மண அலங்காரம் இறைவணக்க இடங்களிலும் பரவிற்று. இது இயல்புதான்.

இத்தகு அலங்காரம் வளைவான இடங்களில் கவனித்து வைக்கப்பட்டது. "கோடு சால்"  வளைந்த இடங்களில் நிறைய வைக்கப்பட்டது. வையம் ( உலகம்) என்பது வைத்த மக்கள் என்று பொருள்படும்.  இவை குறிப்புகளாகவே நூல்களில் தரப்பட்டவை.  இங்கு சால் என்பது  நிறைய என்று பொருள்பட்டு, இரட்டுறலாக நெசவாளனாகிய துளுவ சாலியன் வைத்தான் என்று மறைவாகக் கூறி உணரவைக்கிறது. இச்சாலியனே தேவலனும் ஆவான்.

ஒருவன் மந்திரி ஆனபின் ஒரு மதிப்புப் பட்டத்தை ( கௌரவ)  பெற்று விடலாம். அதற்குமுன் அவன் இயல்பான மனிதனே.  சாதிகள் என்பவை பிற்காலத்தவை. மனித வளர்ச்சி நூலின்படி காட்டுவாசி, கடல்வாசி, மாலைவாசி என்று அலைந்து திரிந்தவன் தான்.  அதனால்தான் தமிழ் இலக்கிய வழக்கில் நால்வகையான நிலங்கள் கூறப்படுகின்றன. " நானிலம்" என்றால் உலகம் - நான் கு வகை நிலம். அவ்வளவுதான். எல்லாம் அங்கே அடங்கிவிட்டது.

மாலானவர் அணி பொன்னாடை தந்து மகளைத் தந்து

ஆலாலம் ஈந்தது தோலாடை சுற்றும் அரன் தனக்கே.

இந்தப் பாடலில் புராணப் பாவலர் என்ன சொல்கிறார் என்றால்:

சிவபெருமான் பழைய கடவுள். அவர்காலத்தில் எல்லோரும் தோலாடைதான் சுற்றிக்கொண்டு காட்டில் திரிந்தார்கள். அப்புறம் வந்தார் திருமால். பொன்னும் மணியும் பீதாம்பரமும் அணிந்தார்கள்.  பால்கடல் திருமாலுடன்தான் கொள்வனை கொடுப்பனை!  ஏன் ஏன் என்பீரோ. நல்ல துணி அணிந்தவுடன் பால்கடல் கூட சாதியை உண்டாக்கிக்கொண்டு பெண் கொடுக்கவில்லை!!   சாதிகள் என்பவைக்கு அடிப்படை பொருளியல்தான்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



 

கருத்துகள் இல்லை: