வியாழன், 14 மே, 2020

மூர்க்கமும் முறுக்கும்

கடுமை என்ற சொல்லின் பொருளைப் பார்ப்போம்.   "கடு"  என்பது தொட்டுப்பார்க்கும்போது ஒரு பொருள் நெகிழாமலும் அமுங்காமலும்  திடமாக இருப்பதையே குறிப்பதாகிறது.  பொருளில் கடினம் அல்லது கடுமை இருக்கின்றது என்று சொல்கின்றோம்.  அதனால்தான் உண்பொருளாகிய கடலைக்கு அப்பெயர் ஏற்பட்டது. இச்சொல் ஏற்பட்ட விதம்:

கடு >  கடு + அல் + ஐ >  கடலை

என்பதுதான்.

கடு என்ற உரிச்சொல்லில் அல் விகுதியும் ஐ விகுதியும் இணையவே, கடலை என்ற சொல் தோன்றுகிறது.  கடு என்பது  கடு அல் என்று இணைக்கப்படும்போது சொல் நீட்டமாகிறது. இவ்வாறு மிகுவதால் அல் என்பதை விகுதி என் கின்றோம்.  மிகுதிதான் விகுதி.  இது சொல்லின் மிகுதி.
மிஞ்சு என்பது விஞ்சு என்றாவது போல் மிகுதி என்பது விகுதி என்று திரிவதால் அல் என்பதை விகுதி எனலாம்.  ஆனால் இங்கு இன்னொரு விகுதியான ஐ என்பது இணைக்கப்படாதாயின் வேறுபொருள் ஆகிவிடும். ஆதலின் ஐ வரவேண்டும். அப்போதுதான் கடலை ஆகும். இல்லாவிட்டால் கடல் என்று நின்று வேறுபொருள் ஆகிறது.  வேறுபொருள் ஆயினும் ஆகவில்லை எனினும் இடையில் நிற்கும் விகுதியை  இடைநிலை என்ற இன்னொரு பெயரால் வழங்குவது நன்று என்று தோன்றுகிறது. நினைத்த எல்லையை அடையாதவரை இடைவரவுகளை இடைநிலை என்று கொள்வது நல்ல கொள்கையாகும். இதில் சரி-தவறு என்பதினும் வசதியே குறிக்கோள் ஆகும்.

கடு என்பதில் கடினம் அல்லது திடத்தன்மை மட்டுமே பொருளன்று.  கடு என்பது வேகத்தையும் குறிக்கும். இன்னும் பல்வேறு பொருள் உள்ளன. அவற்றை நீங்கள் அகரவரிசைகளில் கண்டுகொள்ளலாம்.  வேகமாக அல்லது விரைவாக ஓடும் விலங்காகிய குதிரைக்குக் கடுமா என்ற பெயரில்லை. அது புலி, யானை, அரிமா என்னும் சிங்கம் முதலியவற்றைக் குறிக்கும். மான் என்னும் மென்மை விலங்குக்கு முரணாக அரிமாவிற்குக் கடுமான் என்ற பெயருள்ளது அறிக. ஆனால் கடுக என்பது விரைய என்றே பொருள்தரும்.

சொற்களில் பலபொருள்  இருக்கக்கூடும் என்பதை மனத்திலிருத்தவே இதைக் கூறினோம்.  இப்போது மூர்க்கம் என்ற சொல்லுக்கு வருவோம்.

மூர்க்கம் என்பது  எதையும் விடாமல் நின்று மிகுதி காட்டும் தன்மையையே குறிக்கிறது. விட்டுக்கொடுத்துப் போவதே சாலச்சிறந்த தந்திரமான தன்மை என்று பிறர் நினைக்கையில், விடாமைபற்றும் தன்மையையும் மூர்க்கம் என்று சொல்லலாம்; சிலர் அத்தன்மையை மடமை என்றும் கொள்ளலாம் ஆதலின், இதற்கு மடமை என்ற பொருளும் ஏற்பட்டது. மிகுசினம், கடுங்கோபம் என்பவும் இச்சொல்லுக்கும் பொருளாகக் கூறப்படும்.

முறுகுதல் என்ற சொல்லுக்கும் விரைவு, முதிர்தல், மிகுதல், செருக்குதல் என்னும் பொருள்கள் உள்ளன. முறுக்குதல் என்பதற்கும் இதை ஒட்டிய பொருள் வரும். இவற்றின் பகுதி அல்லது முதனிலை "முறு" என்பதாகும்.

முறு எனற அடியே மூர் என்று திரிந்தது.  ஆனால் மூர்த்தி என்ற சொல்லுக்கும் இதற்கும் தொடர்பில்லை.  அந்த மூர் வேறு. இந்த மூர் வேறு.

முறு மூர் என்ற இவ்வலைக்குள் அகப்பட்ட பகுதிகள் விரைவு, மிகுதி, சினமிகை,  செருக்குதல் என்ற பொதுப்பொருள் உடையன.  ஆகவே முறு, மூர் என்பன நுண்பொருள் வேறுபாடு உடையனவே.  இவற்றின் முந்திய மூலவடி முல் என்பது. அதனை ஈண்டு விளக்கவில்லை.

அடிப்படையில் இப்பகுதிகள் கடுமை அல்லது கடினம் காட்டுபவை.

எனவே, இதன் முடிபு  முறு என்பதே மூர் என்று திரிந்தது. என்னும்போது முல் என்பதும் மூர் என்று திரியும்.  அப்பன், அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என்னும் உறவுகள் போல்வன. ஆதலின் இன்னொருவர் முல் மூல் என்பதே மூலமெனினும் பேதமின்மை அறிக.

-------------------------------------------------------------------

அடிக்குறிப்புகள்


பெயர்தல் :  பெயர் > பேர் > (பே{ர்})+ து+ அம்) > பேதம்.
மிகு> விகு+ஆர்+அம் > விகாரம்.  மிகுந்து வேறுபடல், வேறுபாடு. ஆர் - நிறை(வு.) சொற்பொருள் மிகுதியினால் வேறுபடல். வழக்கில் பொதுவாக
வேறுபடுதல்.

தட்டச்சுப்பிறழ்வுகள்: மறுபார்வை பின்
  

கருத்துகள் இல்லை: