வெள்ளி, 15 மே, 2020

நுண்ணுயிர் கொரனாவிடம் மனிதன் தோற்பானோ?

முன்னூ  றாயிரத் தின்மேல் அழிந்தனர்
இந்நாள் இதுவே உலகப் பெரும்போர்
எந்நாள் இருள்முகில் நீங்குமோ அறியோம்
நன்னாள் புவிமேல் நண்ணுதல் அரிதே.

அறிந்ததும் இலையே முன்னிது வகிலம்
தெரிந்து விலகிடப் பட்டறி விலதே
பரிந்து பேசிடும் தாயொடு தந்தையர்
இழந்து தவிப்பவர் எல்லை மிகுந்தனர்

தமிழறிந்  திலங்கிய தகைசால் பெரியோர்
இமிழ்கடற் கப்பால் இருந்தனர் பலபேர்
குமிழ்பல முளைத்த மகுட  முகிப்புழு
உமிழ்நஞ்   சூடுரு வியதோ அறியோம்.

வழக்கம் போல வந்திலர்  அன்னவர்
இளக்கம் அடைந்தது என்மனம் இவணே
துலக்கம் பெற்றிவ் வுலகினைப் பேண
கலக்கம் விலக்கும் கரைகண் காணுமோ?

கண்ணுறக் காணா நுண்ணுயிர் தன்னொடு
மண்ணர  சன்மனி தன் தொடுத் திடுபோர்
விண்ணவர் நகைக்க வியன்புவி திகைக்க
மன்னவன் மனிதன் தன்னிலை தாழ்வனோ?


பதப்பொருள்:

முந்நூறாயிரம் -  3 இலட்சம்
இருள்முகில் - கார்முகில், கருமேகம்.
(முன்னர் காரிருள் என்பதில் மாற்றம்)
நண்ணுதல் - வருதல். நெருங்குதல்
அறிந்ததும் இலையே முன்னிது வகிலம் -அகிலம்
முன் இது அறிந்தது இல்லை.
பட்டறிவு - அனுபவம்
எல்லை மிகுந்தனர் - தாங்கும் எல்லையைக்
கடந்துவிட்டனர்
இலங்கிய - விளங்கிய
தகைசால் - நற்பண்பு நிறைந்த.
இமிழ்கடல் - அலையோசைக் கடல்
மகிடமுகி - கொரனாவைரஸ் (நோய்நுண்மி)
இளக்கம் - வலிமை இழந்த நிலை, நெகிழ்வு
புழு - இங்கு நோய்நுண்மி.
துலக்கம் - தெளிவு. ஒளி
மண்ணரசன் -  பூமியை ஆளும் மனித வருக்கம்.
(ஓருமை பன்மைக்கு நின்று பொருள் உணர்த்தல்)
விண்ணவர் - உயர்ந்தோர்.  விண் - உயர்வு.
வியன் - விரிந்த
மன்னவன் மனிதன் -  நிலைபேறு உடையவனான
இம் மனிதன்.
தன் நிலைபேற்றினை இழந்து வீழ்வானோ?
(போர் தொடுப்பவன் மனிதன், அவனே வீழ்வானோ?
நோய்நுண்மி வீழாதோ? என்பது ).

மண்ணரசன் தொடுத்த போரில் தன் ஆட்சி இழந்து
வீழ்வானோ என்று முடிக்க.

மன் என்பது நிலைபேறு குறிக்கும்.  அரசன் என்ற
சொல்லின் இக்கருத்து இல்லை. அதனால் மன்னன்
என்ற சொல் பெய்து முடிக்கப்பட்டது.





கருத்துகள் இல்லை: