வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

பசியார்தல்

ப்ரெக்ஃபஸ்ட்  (breakfast)  என்பதற்குப்  பேச்சுத் தமிழில் ஒரு சொல் உள்ளது. இலக்கியத் தமிழில் என்றால் தேடிப்பார்க்கவேண்டும்.  வகுப்பறை வாத்தியார் "காலையுணவு" என்று மொழிபெயர்க்க அவாவுறுகிறார். அது மன நிறைவு அளிக்குமானால், நண்பகல் உணவு (மதிய உணவு), இரவுணவு என்றெல்லாம் தேவைக்கேற்ப விரிக்கலாம்.
ஸெலாமத் பாகி (சலாம், சலாமத்) என்ற மலாய்க்கு காலை வணக்கம் என்று சொல்வது சரி.  அது  போலவா?
ஆனால், "பசியார" என்ற தொடர் , இலக்கிய வழக்குப் பெறாவிட்டாலும் .............. நாம் தேடிப்பார்க்கவேண்டும்,

குறளில், "ஏதிலார்  ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை" என  பசியார்தல் வந்துள்ளது. ( ?) ஆர்தல்- ‍ உண்ணுதல். 
பசி ஆர்தல்  -  பசிக்கு  ‍ உண்ணல். கு  என்னும் வேற்றுமை  உருபு  தொக்கு  நின்ற   வேற்றுமைத்  தொகை.

பசி என்பதும் ஆர்தல் என்பதும் தமிழில் உள்ளவையே.  சேர்த்துப் பசியார்தல் என்று    சொல்வதில் தவறில்லை 

தமிழ் அகர வரிசைக்காரர்கள் " நாட்சோறு" என்கிறார்கள். ஆனால் இது மணமக்களுக்கு மணவினைக்குமுன் ஊட்ட்டும் உணவையும் குறிக்குமாம். பொதுப்பொருளில் "பசியார்வது" என்றும் பொருள்படுமாம்.

பசியாறுவது என்பது சரியில்லை. பசி(யை) ஆற்றிக்கொள்வது எனல் அமையும்.
எனினும் இது ஒரு சொன்னீர்மையை இழந்துவிடுகிறது.  மேலும்  ஆறுவது எனின்  தானே ஆறுவது.  ஆறுவதைப் பிறவினையாக்கி  ஆற்றுவது என்றாலே  அமைந்திடும்

பசியார்கிறேன் என்பதை இறந்த காலத்தில் சொல்வதானால், பசியார்ந்தேன் என்று சொல்லவேண்டும்.   ஆனால் இவ்வடிவம் வழக்கில் இல்லை.  சேர் > சேர்ந்தேன், ஊர் > ஊர்ந்தேன், தேர்> தேர்ந்தேன், கூர் > கூர்ந்தேன், நேர் > நேர்ந்தேன் ( நேர்ந்துகொண்டேன்) என்று வருதலால், ஆர் > ஆர்ந்தேன் என்றுதான் வரவேண்டும்.  பசி ஆரினேன் என்பது பேச்சுவழக்கு விதிவிலக்கு போலும்..

கருத்துகள் இல்லை: